Pages

01 September 2012

முகமூடி - சோடாமூடிமிஸ்கின் தமிழ்சினிமாவுக்கு கிடைத்த மகத்தான இயக்குன ஆளுமை. அவருடைய படங்கள் இருபது வருடங்கள் கழித்து பள்ளிகளின் பாடத்திட்டங்களில் சேர்க்கும் அளவுக்கு சிறப்பானவை. இருபது வருடங்கள் கழித்து உலகமே கொண்டாடுகிற அளவுக்கு மிக சிறந்த படங்களை இயக்கி மிரட்டக்கூடியவர். அன்னார் படங்களை தென் மற்றும் வடை கொரியாவில் திருட்டு டிவிடியில் பார்த்து சுட்டு சுட்டு படமெடுக்கிறார்களாம்.

நாமெல்லாம் இருபது வருடங்களுக்கு முன்பே அதாவது சமகாலத்தில் வாழ்ந்து தொலைப்பதால் அவருடைய படங்களை இப்போதே பார்க்க வேண்டிய துர்பாக்கியநிலைக்கு ஆளாகியிருக்கிறோம். அவருடைய சமீபத்திய படமான முகமூடியைக்கூட அந்த வரிசையில் சேர்க்கலாம்.

இந்தப்படம் ஒரு சூப்பர் ஹீரோ படம் என்று விளம்பரங்களில் சொல்லிவிட்டதால் ஒரு சூப்பர் ஹீரோ சூப்பரான சூப்பர் ஹீரோ ஆகிறான். முதல் பாதியில் பேன்ட்டுக்கு மேலே ஜட்டியும் இரண்டாவது பாதியில் அதுவும் இல்லாமலும் வருகிறான். அதாவது முகமூடியில்லாமல் குங்பூ சண்டைபோட்டு டாஸ்மாக்கில் சரக்கடித்து பாட்டுப்பாடி தண்டச்சோறு தின்னும் சூப்பர் ஹீரோ! ஊருக்குள் வேலைவெட்டியில்லாமல் சூப்பராக சுற்றுகிறார். அப்படிப்பட்ட சூப்பரான சூப்பர் ஹீரோவான சூப்பர் ஹீரோ முகமூடி போட்டுக்கொண்டு சூப்பர் ஹீரோவாகி சூப்பராக ஊருக்கு நல்லது செய்கிறார். இதுதான் படத்தின் கதை. புரியவில்லையென்றால் மிஷ்கினுக்கே போன் போட்டு கேட்டுக்கொள்ளவும்.

இதற்கு நடுவில் அவன் காதலிக்கிறான். குங்பூ மாஸ்டரிடம் கேட்டு ஃப்ளாஸ்பேக்கில் நடந்ததை தெரிந்துகொள்கிறான். நல்ல நல்ல ஆணிகளை பிடுங்குவதற்காக சுத்தியல் வைத்திருக்கும் மலையாளத்துக்கார வில்லனை பழிவாங்குகிறான். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வாமல் காத்து அதர்மத்தின் கொறவளியை கடித்து துப்புகிறான்.

இந்தப் படத்தில் ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வருகிற அந்த அற்புதமான தருணம் படத்தினை சர்வோதயா தேச லெவலுக்கு நம்மை இட்டு செல்லுகிறது. ஹாலிவுட்டே காணாத காட்சி அது. சூப்பர் ஹீரோ என்னதான் சூப்பரான ஹீரோவாக இருந்தாலும் அவருக்கும் சுச்சா,கக்கா மாதிரியான இயற்கை உபாதைகள் வருவது இயல்புதானே. இருட்டுநேரத்தில் ஹீரோயின் எதற்காகவோ ஒரு காருக்கு பின்னால் மறைந்து அமர்ந்திருக்க எங்கிருந்தோ ஓடிவரும் சூப்பர் ஹீரோவுக்கு சுச்சா வர காருக்கு அருகில் போய் பேண்டை அவுக்கிறார். என்னாச்சி என ஒளிந்திருந்த ஹீரோயின் எட்டிப்பார்க்க.. எதையோ பார்க்க கூடாததை பார்த்துவிடுகிறார். ஹீரோ காட்டிய எதையோ கண்டு ஹீரோயினுக்கு உணர்ச்சி பொங்க காதல் பொங்கிவிடுகிறது. ஹீரோயினுக்கு காட்டிய அதை இயக்குனர் நமக்கு காட்டவில்லை. காட்டியிருந்தால் படம் இன்னும் பல உச்சங்களை தொட்டிருக்குமோ என்னவோ...

நந்தலாலா என்கிற படம் கிகிஜிரோ என்கிற பாரின் மொழிபடத்தின் அப்பட்டமான காப்பி என்று ஊரே தூற்றியபோது, மிஷ்கின் சொன்னார்.. என்னுடைய குரு அகிரா குரோசாவாவும், டாக்காஷி கிட்டானோவும்தான். கிட்டானோவுக்கான ட்ரிபூட்தான் அந்தப்படம் என்றார். ட்ரீபூட்டுக்கும் காப்பிக்கும் வித்தியாசம் தெரியாத இந்த நாட்டில் எப்படிதான் வாழ்வதோ என சலித்துக்கொண்டு தன் கையிலிருந்த மைக்கால் தன் தலையில் அடித்துக்கொண்டார்.

மிஷ்கினால்தான் ட்ரிபூட் என்கிற சொல்லே தமிழனுக்கு தெரியவந்தது. அவருடைய மற்ற படங்களை போல இல்லாமல் இந்த சிங்கிள் படத்தில் பல படங்களுக்கு ட்ரிபூட் செய்திருக்கிறார். பேட்மேன், ஸ்பைடர்மேன், ட்ரங்கன் மாஸ்டர், ஐபிமேன்2, சின்சிட்டி, கிக் ஆஸ், பைசென்ட்டனியல்மேன், ஷெர்லாக் ஹோம்ஸ், ஏதோ மோகம் ஏதோ தாகம் (ஷகிலா நடித்தது), அஞ்சரைக்குள்ள வண்டி (ஷகிலா நடிக்காதது) என எண்ணற்ற படங்களுக்கு ஒரே படத்தில் ட்ரிபூட் செய்திருப்பதற்காக தமிழ்நாடே அவருடைய திசைபார்த்து வணங்கவேண்டும். அவரை நிற்கவைத்து வரிசையில் போய் மாலை போடவேண்டும்.

சில இடங்களில் அது என்ன படத்துக்கான ட்ரிபூட் என்கிற கன்ப்யூசன் நமக்கு வந்துவிடக்கூடாது என்கிற ஒரே காரணத்திற்காக அவரே ஹின்ட்டுகளும் கொடுத்து விடுகிறார். டார்க் நைட் படத்தில் ஆஸ்கார் விருது வென்ற கேரக்டர் ஜோக்கர். கிளைமாக்ஸில் படத்தின் மலையாள கொள்ளைகார வில்லனான நரேன் ஜோக்கரை இமிடேட் செய்கிறார். அது நடக்கும்போதே இன்னொரு காட்சியில் சூப்பர் ஹீரோவின் நண்பர்கள் ஜோக்கர் வேடம் போட்டுக்கொண்டு ஏதோ செய்கிறார்கள். அடடா!

ஒரு காட்சியில் மம்மி டெக்ஸ்டைல் என்கிற பெயர்கொண்ட ஒரு மஞ்சப்பை காட்டப்படுகிறது. அது மம்மி படத்திற்கான ட்ரிபூட் என்று நானாகவே கண்டுபிடித்தேன்! வாரே வாஹ்!

எனக்கு பின்னால் அமர்ந்திருந்த அறிவே இல்லாத ரசிகன்தான் லூசு போல.. டேய் அந்த மிஸ்கின் வீட்லக்குற டிவிடி ப்ளேயர அடிச்சி உடைங்கடா என கத்தி கூச்சல் போட்டுக்கொண்டிருந்தான். ப்ளடி ஃபூல்ஸ்! அதாவது ரத்தங்கசியும் முட்டாள்கள்

படத்தில் ஒரு விஞ்ஞானி வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான கிரிஷ்கர்னாட் அந்த விஞ்ஞானி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். முன்னர் ஒருமுறை அவரை கவர்னராக்கி நக்மாவுக்கு அப்பாவாக்கி காமெடி பண்ணிருப்பார் ஷங்கர். இதில் இவருக்கு விஞ்ஞானி வேடம். சூப்பர் ஹீரோ வீட்டு மொட்டைமாடியில் குடிசை போட்டு ரோபோட்டிக் ஆராய்ச்சிக்காக பழைய உடைந்துபோன ரேடியோவின் சர்க்யூட் போர்டுக்கு சால்ட்ரிங் வைக்கிறார்! வீட்டுக்குள்ளயே ரோபோ பண்ணை வைத்து ஈமுகோழிபோல நிறைய ரோபோக்களை செழிப்பாக வளர்க்கிறார். இது சூப்பர் ஹீரோ படம் மட்டுமல்ல சைன்ஸ்ஃபிக்சன் படமும் கூட என்பது அப்போதுதான் புரிகிறது. ஆனால் அதுபுரியாத தமிழ்சமூகம் படம் முடிந்த பின் காரி காரி துப்புகிறது! ச்சே!

இந்தப்படத்தை வெறும் சூப்பர் ஹீரோ படம் என்கிற ஒற்றை பரிமாணத்தில் அணுகுதல் தவறு. இது ஒரு சூப்பர் ஹீரோயிச,ரொமான்டிக்,டிடெக்டிவ்,காமெடியான,சென்டிமென்ட் ஓவரான ,த்ரில்லரில் அடங்கிய, ஆன்மீக, எம்ஜிஆர் போட்ட குங்பூ வித் மிக்ஸிங் ஆஃப்தி ரிட்டர்ன் ஆஃப் தி டிராகன் அன்ட் பேட்மேன் இன்ட்டூ கிறிஸ்டோபர் நோலன் பார்த்தா தூக்குல தொங்குவான் திரைப்படம். டோன்ட் மிஸ் இட்!

மொத்தத்தில் இந்த முகமூடி ஒரு சோடாமூடி என்று சொன்னால் அது மிகையாகாது.

தலைப்பு உதவி - இயக்குனர் மிஸ்கின்.