Pages

01 January 2013

கோலிவுட் 2012

கோடியாய் கோடியாய்,சம்பளம் கொடுத்து, சூப்பர் டூப்பர்களைப் போட்டு படமெடுக்கலாம். ஏகப்பட்ட மெகாஹிட் படங்கள், கொடுத்த இயக்குனர் இயக்கலாம். உலகில் எங்குமில்லாத தொழில்நுட்ப கலைஞர்களை வரவழைத்து உபயோகிக்கலாம். அயல்நாடுகளின் எந்தப்பகுதியிலும் போய் படம்பிடித்துவரலாம்.

ஆனால், கோலிவுட்டில், ஒரு ஸ்மால் ஹிட்டு கொடுப்பது அத்தனை சுலபமல்ல.

தமிழ்நாட்டின், கடைக்கோடி ரசிகனுக்கும், ஞானம் வந்துவிட்டது. இனி அவனை அவ்வளவு சுலபமாக ஏமாற்றமுடியாது. (நிறையவே கஷ்டப்படவேண்டும்!)

போலியான, ஜாலாக்கு ஜோலக்குகளை, காட்டி ஏமாற்றிய காலமெல்லாம் மலையேறிப்போச்சு! அரைத்த மாவை அரைத்தால் அடிதான் விழும்.

யதார்த்தபடமோ, மசாலாபடமோ, காமெடி படமோ,இல்லை த்ரில்லரோ,நிறைய சுவாரஸ்யமும், திரைக்கதையில், கொஞ்சமாவது புத்திசாலித்தனமும் வேண்டும்.

புதுமையும், சுவாரஸ்யமும், இல்லையென்றால், அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகர்களின் படமும், வந்த வேகத்தில் குப்பைத்தொட்டிக்கு கடாசப்படும் என்பதை தமிழ்ரசிகர்கள் கோலிவுட்டுக்கு உணர்த்திய ஆண்டு 2012!

சகுனி,பில்லா,மாற்றான்,முகமூடி,அரவாண், ,தனுஷின் 3, பேரரசு WIN திருத்தணி, மாதிரியான மெகாபட்ஜெட் கொடுமைகளை, வெளிவந்த இரண்டாம் நாளே ஓட ஓட அடித்து விரட்டினர். நீர்ப்பறவை, மெரீனா, கிருஷ்ணவேணி பஞ்சாலை, தோனி, மாதிரியான, அறிவுரைகளின் ஓவர்டோஸ்களுக்கும், அதோகதி தான்.

ரசிகனை மதிப்பவனுக்கு வெற்றி நிச்சயம்.

உன்னிடம் கடின உழைப்பும் புதுமையும் இருக்கிறதா, இந்தப்பிடி வெற்றியை..! என அள்ளித்தர தயாராயிருக்கிறான் ரசிகன். கோலிவுட் பிதாமகன்களுக்கு 2012 கற்றுக்கொடுத்திருப்பது அதைதான். இத்தனை ஆண்டுகளும் வெட்டி ஹீரோயிசம், அரைகுறை ஆடைகளோடு, உலாவரும், மக்கு ஹீரோயின்கள், ஏய் ஏய்!, என்று, கத்திக்கொண்டே, அரிவாள் சுழற்றிய, டாடாசுமோ வில்லன்களையும் காட்டி, ஏமாற்றிய பழைய பருப்புகள் இனி இங்கே வேகாது!

பீட்சா,நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்,அட்டக்கத்தி, மாதிரியான, வித்தியாச படங்கள் நம்பிக்கை தந்தன. மசாலா படங்களுக்கான, மார்க்கெட் சரிந்த போது, துப்பாக்கி வந்து காப்பாற்றியது. தெலுங்கு இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி, ஒரு சின்ன ஈயை வைத்துக்கொண்டு, கோலிவுட்டின் அசகாயசூரர்களையே தோற்கடித்தார்.

ஏகப்பட்ட, புத்தம் புது இயக்குனர்களின், புதிய சிந்தனைகள் வியக்கவைத்தன. கிடைத்த பட்ஜெட்டில், கிடைத்த தொழில்நுட்ப கலைஞர்களை, வைத்துக்கொண்டு மெகாஹிட் படங்களை கொடுத்தனர்.

டிஜிட்டல் சினிமாவினை, மிகச்சிறப்பாக, பயன்படுத்திக்கொண்டது, நம்மூர் இளைஞர்கள்தான்.

ஹரிஷங்கர்,பாலாஜி மோகன், கமலக்கண்ணன், லட்சுமி ராமகிருஷ்ணன் , பா.ரஞ்சித் , மகிழ் திருமேனி, கார்த்திக் சுப்புராஜ் , பாலாஜி தரணீதரன் என கைநிறைய நம்பிக்கைகள்.

இந்த ஆண்டின், முதல் பாதி முழுக்க, வெறும் தோல்விகளை, மட்டுமே கொடுத்து படுத்த படுக்கையாய் கிடந்தது கோலிவுட். இந்த இளம் இயக்குனர்களின் வருகையும் அவர்களுடைய புதிய சிந்தனைகளும் முயற்சிகளும் ''தமிழ்சினிமா தப்பிச்சிக்கும் பாஸ்'' என்கிற எண்ணத்தை கொடுத்தது!

இதுமாதிரியான, நல்ல மாற்றங்கள், நடந்தாலும் இன்னொரு பக்கம், நம்முடைய ஹீரோ அளவுக்கதிகமாக குடிக்க ஆரம்பித்திருக்கிறான்.

எப்போதும் டாஸ்மாக்கிலேயே பழியாய் கிடக்கிறான். அங்கேதான் வாழ்க்கையின் முக்கிய முடிவுகளை எடுக்கிறான். தோல்வியோ மகிழ்ச்சியோ அங்கேதான் பாட்டுபாடுகிறான். சொல்லப்போனால் வில்லன்கள் கூட குடிப்பதில்லை.

குடி என்பது, ஹீரோயிசத்தின் அடையாளமாகிவிட்டது! குவாட்டர் என்பது சந்தானம் மாதிரியான, காமெடியன்களால் நம்மிடையே சகஜமாகிறது. சமூகத்தை பிரதிபலிக்கிறான், என்று சொல்லிகடந்து போகமுடியவில்லை. அடுத்த ஆண்டாவது, இது மாறவேண்டும், என பாடிகாட் முனீஸ்வரனை வேண்டிக்கொள்வோம்.

முன்பைவிட, படம் வெளியான, சிலமணிநேரங்களில், திருட்டு டிவிடி தயாராகி மின்னல் வேகத்தில் ரசிகனை சென்றடைந்தது. இணையதளங்களில், 5.1 தரத்தில் ஆன்லைனிலேயே, படம் பார்க்கும் வசதிகள் கிடைத்தன. யூடியுபில், பல படங்கள் முழுமையாக பார்க்கக் கிடைத்தன. தொலைக்காட்சிகளில், தினந்தோறும் ஏகப்பட்ட திரைப்படங்கள் போடப்படுகின்றன. தியேட்டரில், டிக்கட் விலை, ராக்கெட் வேகத்தில் ஏறியது. இருந்தும், தமிழ்ரசிகன், தொடர்ந்து, தியேட்டருக்கு வந்து படம் பார்க்கவே செய்கிறான். முதல் மூன்றுநாளிலேயே, சில படங்கள் பல கோடிகளை குவித்தன. அடுத்த ஆண்டு தமிழ்சினிமாவில் டிடிஎச் புரட்சிக்கு வித்திட்டிருக்கிறார் உலகநாயகர். வழக்கம் போல,இப்போது அதை எதிர்க்கிற சினிமாக்காரர்கள், அடுத்த ஆண்டு முடிவில், அதை ஏற்றுக்கொண்டு, அதைப் பின்பற்றுவார்கள் என்றே தோன்றுகிறது!

இந்த ஆண்டுக்கான, டாப்டென் படங்களை, பட்டியலிட நினைத்து, ஒரு பட்டியலை தயார் செய்திருக்கிறேன்.

இந்த பத்து படங்களும், வசூல் ரீதியில் மட்டுமே, டாப் டக்கர் கிடையாது. தொழில்நுட்பம் சார்ந்தும், புதிய சிந்தனைகளின் அடிப்படையிலும் இன்னும் சில காரணிகளாலும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. நண்பன், கும்கி, வேட்டை, கலகலப்பு மாதிரியான படங்கள் இதில் இல்லாமல் போயிருக்கலாம், அதனாலேயே, அந்தப்படங்கள், தரத்தில் குறைந்தவை என சொல்லிவிடமுடியாது.

அதனால்.... போதும்பா.. மூச்சு வாங்குது. (எந்த படத்துக்கும் ரேங்க் கிடையாது.. படம் வெளியான மாதங்களின் வரிசையில்தான் பட்டியல்)

OKOK ஒருகல்ஒருகண்ணாடி

அதே கதை, அதே சந்தானம், அதே காமெடி.. ஆனாலும், இயக்குனர் ராஜேஷுக்கு, தமிழ் ரசிகர்களை எங்கே அடித்தால், விழுந்து விழுந்து சிரிப்பார்கள், என்கிற ரகசியம் தெரிந்துவிட்டது . அதன் பலன் ஓகேஓகேவிலும்.. படத்தை பார்த்து தமிழ்நாடே விழுந்து விழுந்து சிரித்தது. பேரன் உதயநிதி ஸ்டாலின் நடித்த, படமென்பதால், தாத்தா கலைஞர் கூட, ஆட்சி கைவிட்டுப்போன கவலையை மறந்து, ஒரு இரண்டரை மணிநேரம் விலா நோக சிரித்திருப்பார்.வழக்குஎண் 18/9valaku en 189

ஏகப்பட்ட விருதுகளை, ஏற்கனவே குவிக்க ஆரம்பித்துவிட்ட, திரைப்படம். எக்கச்சக்க, சமூக பிரச்சனைகளை, ஒரே படத்தில், போட்டு திணித்திருந்தார் பாலாஜி சக்திவேல். (கொஞ்சம் ஜாஸ்தியாகிடுச்சோ பாஸ் என்று கூட தோன்றியது) வறியவர்களின் சிக்கலான வாழ்க்கையை அதன் இயல்போடு படமாக்கியிருந்தார். அதோடு, மிடில் கிளாஸ் குழந்தைகளின், அதுவும் பெண் குழந்தைகளின், போக்கினை நன்றாகவே காட்சிப்படுத்தியிருந்தார். விருதுப்படம்!


thadaiyara thaakka தடையறதாக்க

அருண்விஜயின் ராசியோ என்னவோ! மிகச்சிறந்த படமாகவே இருந்தும், யார்கண்ணிலும் படாமல், தியேட்டர்களில், வந்ததும் தெரியாமல், போனதும் தெரியாமல், காணாமல் போனது. இந்த ஆண்டில் வெளியான பாராட்டப்பட வேண்டிய ஒரே ஆக்சன் படம் இதுதான். அருண்விஜய்க்கு பதிலாக அஜித்தோ விஜயோ நடித்திருந்தால் மெகாஹிட் ஆகியிருக்கலாம். அருண்விஜய் கூட மிக சிறப்பாகவே நடித்திருந்தும் படம் சரியாக போகவில்லை. இயக்குனர் மகிழ்திருமேனி தமிழ்சினிமாவின் மிகமுக்கியமான இயக்குனராக வருவார் பாருங்க.. இதுவரை படம் பார்க்கவில்லையென்றால் டிவிடி வாங்கி பார்க்கவும்.


nan e நான்ஈ

தெலுங்கில், பல மெகாஹிட்களை, கொடுத்த இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி. இந்த முறை, ஒரு தம்மாத்தூண்டு ஈயையும், கன்னட நடிகர் ஒருவரையும், வைத்துக்கொண்டு இந்தியா மொத்தத்தினையும் கலக்கினார். முழுமையான ஈடுபாடும்,அர்ப்பணிப்பும் இருந்தால், ஈயை வைத்துக்கூட, சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்க முடியுமென நிரூபித்தார். இந்த ஈ நம்மூர் ஹீரோக்களுக்கே கிலீயாக அமைந்தது.


madhupana kadai மதுபானக்கடை

இது, சூப்பர் ஹிட் படம் கிடையாது. ஏன், ஹிட்டு கூட கிடையாது. நான், படம் பார்த்த தியேட்டரில், மொத்தமே பத்துபேரோ, பதினைந்து பேரோதான். படமே அந்த திரையரங்கில் ஒருவாரம் கூட போகவில்லை. இருந்தும் இது ஒரு மிகமுக்கியமான முயற்சி. ஹாலிவுட் பாணி, இன்டிபென்டென்ட் திரைப்படம். அதோடு கதையே இல்லாமல் வெறும் சம்பங்களை கோர்த்து தமிழ்நாட்டின் குறுக்கு வெட்டுத்தோற்றத்தை காட்சிபடுத்தியிருந்தார் கமலக்கண்ணன். படத்தின் ஒரிஜினல் டிவிடி விற்பனைக்கு கிடைக்கிறது. குடிப்பழக்கம் தமிழ்நாட்டை என்ன பண்ணி வைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள விரும்பும் எவரும் கட்டாயம் காண வேண்டிய படம்.


attakkathi copy அட்டக்கத்தி

ஆடிபோனா ஆவணி இவ ஆள மயக்கும் தாவணி.. என ஊரே பாடிக்கொண்டு திரிந்தது. வித்தியாசமான கதை சொல்லல், படமாக்கல், யதார்த்தமான நடிகர்கள், புதுமையான களம் , ஏடாகூடமான இசை என அனைவரையும் வெகுவாக கவர்ந்த படம். இன்னும் கூட, சிறப்பாக படமாக்கியிருக்கலாமோ, என்றும் நினைக்க வைத்தாலும், அறிமுக இயக்குனரான ரஞ்சித், தனக்கு கிடைத்த மிகச்சிறிய பட்ஜெட்டில் சிறப்பான படத்தையே எடுத்திருந்தார். இந்த ரூட்டுல அடுத்த படத்தில் நிறைய பண்ணுவார் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது


Sundarapandiyan சுந்தரபாண்டியன்

மெகாசீரியல்களின், வருகைக்கு பின், குடும்ப திரைப்படங்கள்(!) முற்றிலுமாக அழிந்துவிட்டன. இதுவும் கூட குடும்பப்படம்தான், என்றாலும், அதற்கு நடுவில் காதல், துரோகம், சதி மாதிரியான விஷயங்களை மிகசரியான கலவையில் கொடுத்து ஹிட்டடித்தார் சசிகுமார். என்ன படம் முழுக்க நிறைய சாதிப்பெருமைகள் பேசுகிற காட்சிகள் , அதை தவிர்த்திருக்கலாம். அதோடு கிளைமாக்ஸ் ரத்தகளறி சுத்தமாக இந்த படத்தினுடைய கேரக்டருக்கு செட்டாகவேயில்லை.


pizza பீட்சா

‘நாளைய இயக்குனர்’ நிகழ்ச்சி, மூலமாக, இயக்குனராக அறிமுகமாகும் இரண்டாவது இளைஞர் கார்த்திக் சுப்புராஜ். குறும்படங்கள் எடுத்து எடுத்து, அது கொடுத்த பயிற்சியில், குறும்படமாக எடுத்துவிடக்கூடிய, ஒரு குட்டிக்கதையை மிகசிறப்பாக, எதிர்பாராத திருப்பங்களுடன், நம்மை பயமுறுத்தி, கடுப்பாக்கி, அட என்று ஆச்சர்யபட வைத்தார். விஜய் சேதுபதியின் சிறப்பான நடிப்புக்காக, படத்தை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.

Thuppaki


துப்பாக்கி

தன்னுடைய, ஹீரோயிச கிரீடத்தை, நண்பனிலேயே கழட்டி வைத்துவிட்டார் இளையதளபதி விஜய். ஆனால் அதுகூட ஷங்கர் படமென்பதால் அப்படியிருக்கும்ப்பா என்றவர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார். துப்பாக்கியில், தன்னுடைய, வருங்கால அமெரிக்க ஜனாதிபதி கனவையெல்லாம், தூக்கிப்போட்டுவிட்டு, தன் இயல்பான துடிப்போடு எல்லோர்க்கும் பிடித்த பக்கத்துவீட்டு பையனைப்போலவே நடித்திருந்தார். தமிழ்ரசிகன் கொண்டாடு கொண்டாடுனு கொண்டாடிட்டான்ல.. இந்தவருடத்தின் அதிக வசூலை வாரிகுவித்த படம் இதுதானாம்.. விஜய் இதையே கன்டினியூ பண்ணினார்னா நமக்கு நல்லது! இன்னொரு சுறாவை, வேட்டைக்காரனை, இந்த நாடு தாங்காது சாமியோவ்!


naduvula konjam pakkatha kaanom நடுவுலகொஞ்சம்பக்கத்தகாணோம்

இன்னொரு சிரிப்பு படம்தான் இதுவும். ஆனால், படம் முழுக்க நம்மை சிரிக்க வைக்கணுமே, என்று தமிழ்சினிமாவின் க்ளிஷேவான சேஷ்டைகள் எதையுமே பண்ணாமல், என்னாச்சி, ப்பா பேய் மாதிரி இருக்காடா மாதிரியான சில வசனங்களையும்,ஹீரோ மண்டையின் மெடுலா ஆம்லகேட்டாவையும்(!), மட்டுமே, நம்பி படமெடுத்து, அசத்திய இளைஞர்களின் படம்.காணமல் போன யதார்த்த ஜன ரஞ்சக தமிழ் சினிமாவை, எளிய பாணியில் கண்டுபிடித்துக் கொடுத்த படம்.


(சினிமொபிட்டா இணையதளத்துக்காக எழுதியது)