Pages

29 January 2013

குதிரை வாலி தயிர்ச் சோறு!


இந்த உணவுகளையெல்லாம் இதற்கு முன்பு கேள்விப்பட்டதோ பார்த்ததோ கூட கிடையாது. கிராமத்து பின்னணியில் வாழ்ந்து நகரத்தில் பஞ்சம்பிழைக்கிறவர்களுக்கு இவை குறித்து ஓரளவு தெரிந்திருக்கலாம். பிறந்ததிலிருந்தே நகரங்களுக்குள்ளேயே சுற்றுகிறவர்களுக்கு குதிரைவாலி தயிர்சோறு என்கிற பெயரெல்லாம் அமானுஷ்யம்தான்.

குடியரசு தினத்தன்று லயோலா கல்லூரியில் பூவுலகின் நண்பர்கள் முந்நீர் விழவு என்கிற பெயரில் கருத்தரங்கம் மற்றும் உணவு திருவிழா ஒன்றை நடத்தினார்கள். வாழைத்தண்டு சாறு, இனிப்பும் புளிப்புமாக பானகம், ருசியான சோளதோசை, காரசாரமான நாட்டுக்கோழி வறுவல், ச்சில்லுனு குதிரை வாலி தயிர் சோறு, அசத்தலான சாமை சோறு, வரகு நிலக்கடலை சோறு, மாப்பிள்ளை சம்பா சாம்பார், புளிபோட்ட மீன்குழம்பு... என விதவிதமான ஐட்டங்களைப்போட்டு அசத்தியிருந்தார்கள்.

காலையிலேயே தண்ணீர் தனியார்மயமாதல் உள்ளிட்ட பிரச்சனைகளை பேசுகிற கருத்தரங்களுடன் தொடங்கிவிட்டது இந்த நிகழ்வு. மாலை ஐந்துமணிக்கு மேல்தான் கலைநிகழ்ச்சிகள் மற்றும் உணவு திருவிழா என்று அறிவிக்கப்பட்டிருந்தது. நம் வழக்கப்படி சாப்பாடுபோடுகிற மாலை வேளையில்தான் விழாவுக்கு சென்றேன். அடியனைப்போலவே பலரும் ''ஏன்ப்பா நிஜமாவே நாட்டுக்கோழிதான் போடுவாங்களா இல்ல பிராய்லர்கோழிதானா'' என்று அரங்கத்துக்கு வெளியே விசாரித்தபடி காத்திருந்ததை பார்த்தபோதுதான் நான் தனி ஆள் இல்ல என்பதை உணரமுடிந்தது.

இதற்கு நடுவே தெலுங்கானா விவகாரத்தை முன்வைத்து லயோலா கல்லூரியிலேயே இன்னொரு கருத்தரங்கமும் நடப்பதாக ஒரு துண்டு பிரசுரத்தை நண்பர் கொடுத்தார். அந்தப்பக்கம் எட்டிப்பார்த்தால் ஒரே ஏமாண்டி செப்பண்டி இக்கடா அக்கடா என தெலுங்கில் பேசுகிற குரல்கள் கேட்டது. மதியத்திலிருந்து ஒன்றுமே சாப்பிடாமல் விரதமிருந்து உணவுதிருவிழாவுக்கு வந்திருந்ததால் அப்படியே யூ டர்ன் அடித்து இயற்கை உணவு அங்காடிகள் வைத்திருந்த கடைகளில் நோட்டம் விட்டேன். நிறைய இயற்கை உணவு பொருட்கள் இருந்தாலும்.. எல்லாமே ஓவர் ரேட்டு!

பிரபல பெண் போராளிகளும் புரட்சியாளர்களும் கவிஞர்களுமான (என்னா காம்பினேஷன்!) கவிதா முரளிதரன்,கவின்மலர்,லிவிங்ஸ்மைல் வித்யா, சந்திரா தங்கராஜ், நிலவுமொழி போன்றவர்களையும், புரட்சிபத்திரிகையாளர்களான அண்ணன் அருள் எழிலன், சவுக்கு ஷங்கர், சுகுணா திவாகர், கார்ட்டூனிஸ்ட் பாலா, பாரதி தம்பி, மாலதி என இன்னும் சிலரையும் பார்த்து ஆசி பெற்றேன்.

மணி 6. புத்தர் கலைக்குழுவின் பறையிசையில் டமால் டமால் என பூமி அதிர தொடங்கியது. சொய்ங் சொய்ங் பாடல் மூலமாக புகழ்பெற்றுள்ள ‘மகிழினி மணிமாறன்’ பறையடித்தபடி நடனமாடிக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் அவரும் அவருடைய குழுவினரும் மூச்சுவிடாமல் சுழன்று சுழன்று நடனமாடியதை பார்த்த அனைவருக்குமே தலைசுற்றல் உண்டாகியிருக்கும்.

என்னா எனர்ஜி என்னா ஸ்பீடு.. கலாமாஸ்டர் சொல்வதைப்போல நிஜமாவே.. கிழி கிழி கிழி.. நாம் அனைவருமே வாழ்க்கையில் ஒருமுறையாவது இந்த பறையிசை நடனத்தை பார்க்க வேண்டும். என்ன ஒரு கொண்டாட்டம் பாஸ்...

ஆனால் பாவம் மகிழினி மணிமாறன். ஒருமணிநேரத்துக்கு மேலாக நடனமாடி முடித்த பின்பு மேலும் ஒருமணிநேரம் மேடையில் பாட்டு பாடிக்கொண்டிருந்தார். அதுவும் தொடர்ச்சியாக கேப் விடாமல்.... பார்க்கவே பாவமாக இருந்தது. ஒருவாய் சோடாவாச்சும் வாங்கிகுடுங்கலே என்று கேட்கவேண்டும் போல இருந்தது.

விகடனில் ஆறாம்திணை தொடர் எழுதிவரும் இயற்கை டாக்டர்.சிவராமன் இதுபோன்ற இயற்கை உணவு திருவிழாவின் தேவை குறித்தும், நம்முடைய உணவு பழக்க வழக்கங்களில் என்னென்ன மாற்றங்கள் வேண்டும் என்பது பற்றியும் உரையாற்றினார். அதோடு இயற்கை உணவுகளை வாரம் ஒருமுறையாவது சாப்பிட வேண்டும் என்று வலியுறுத்திக்கூறினார். அவரைத்தொடர்ந்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் நம்முடைய மண்ணும் விவசாயமும் எப்படி அழிந்துகொண்டிருக்கிறது என்பது பற்றி நிறைய பேசினார்.

அவர்கள் பேசிமுடிக்க.. வேறென்ன சாப்பாடுதான். அடித்துபிடித்து நமக்கு ஒரு தட்டை வாங்கிக்கொண்டு க்யூவில் நின்றால்.. வரிசையாக மேலே இரண்டாவது பத்தியில் குறிப்பிட்டிருந்த எல்லா உணவுகளும் வேண்டிய அளவு கொடுக்கப்பட்டது.

விழா அறிவிப்பு துண்டுபிரசுரங்களில் குறிப்பிட்டதுபோல நாட்டுக்கோழி குழம்புக்கு பதிலாக நாட்டுக்கோழி வறுவலும், பொறிச்ச மீனுக்கு பதிலாக புளிபோட்ட மீன்குழம்பும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. விழாக்குழுவினர் இதுகுறித்து ஆய்வு செய்து அடுத்த முறை சரியாக துண்டுபிரசுரத்திலும் தட்டிலும் ஒரே ஐட்டத்தை போடவும்.

நம்மோடு வந்திருந்த நண்பர் ‘’என்னங்க கோழிகொழம்புனு ஆசையா வந்தேன்.. எனக்கு மீன்கொழம்பு புடிக்காதுங்களே’’ என்று சோகத்தோடு பேசி சொல்லவொண்ணா துயரத்துக்கு ஆளானார். நமக்கு அந்த துயரமெல்லாம் கிடையாது. மகிழ்ச்சியாக சாப்பிட்டேன்.

திணைபொங்கல் ருசி இதை எழுதும்போதே இனிக்கிறது. குதிரைவாலி தயிர் சோறு மிகவும் பிடித்தது. நாட்டுகோழி வறுவலும் அளவாய் புளிசேர்த்து நல்ல காரசாரமான மசலா சேர்த்த மீன்குழம்பு சோறும் குட் காம்பினேஷன்.(படிக்கும்போதே நாக்கு ஊறுமே!)

சோளதோசைதான் முயற்சி செய்ய முடியவில்லை. முதலில் கிடைத்த ஐட்டங்களையே செம காட்டு காட்டியதால் சிறிய வயிற்றில் இடமில்லை. அடுத்த ஆண்டு ஒரு கை பார்த்துவிட வேண்டியதுதான். (அடுத்த ஆண்டு பீஃப் உண்டு என்று பேசிக்கொள்கிறார்கள்!)

சாப்பிட்ட உணவுகளை எப்படி சமைத்து என்கிற சமையல்குறிப்புகள் அடங்கிய கையேடு ஒன்றையும் கொடுத்தார்கள். ஆனால் அதில் குறிப்பிட்டுள்ள கிராமிய உணவுப் பொருட்கள்தான் எங்கே கிடைக்கும் என்பதுதான் தெரியவில்லை. எங்கயாச்சும் கிடைக்குமாருக்கும்.

ஒரு தட்டு உணவுக்கு 230 ரூபாய் வரை செலவானதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் நுழைவுகட்டணம் 200 ரூபாய்தான் வசூலிக்கப்பட்டது. எப்படி கட்டுபடியாகுதோ தெரியவில்லை. இருப்பினும் இதுபோன்ற உணவு திருவிழாவை அடிக்கடி குறைந்தது மூன்றுமாதங்களுக்கு ஒருமுறை கூட நடத்தலாம்.

இன்று இயற்கை உணவுகளை தினமும் சாப்பிடுவதெற்கெல்லாம் பல லட்சங்கள் மாத சம்பளமாக பெற்றால்தான் முடியும் என்கிற நிலை. அதிலும் ஆர்கானிக்கெல்லாம் யானைவிலை ஒட்டக விலை. அதனால் ஏழை எளிய நடுத்தர மக்களும் இந்த இயற்கை உணவின் சுவையை உணர இதுமாதிரி விழாக்கள் ஒருவாய்ப்பாக அமையுமே.

விழா அமைப்பாளர்களில் எனக்கு தெரிந்த நண்பர்களான வக்கீல் சுந்தர்ராஜன், டாக்டர் சிவராமன், வெற்றிசெல்வன், சுந்தர்ராஜன் மற்றும் பூவுலகின் நண்பர்கள் அனைவருக்கும் இப்படியொரு நிகழ்வை நடத்தியமைக்கு நன்றிகள்.

****


பின்குறிப்பு – முன்பு ஒருமுறை சென்னையில் மாட்டிறைச்சி திருவிழா நடத்துவது குறித்து ஃபேஸ்புக்கில் சில முற்போக்கு எழுத்தாளர்கள் காரசாரமாக பேசிக்கொண்டார்கள். பலமாதங்களாகிவிட்டது இன்னமும் அதற்கான எந்த முயற்சிகளும் நடைபெறுவதாக தெரியவில்லை. யாராவது முன்னின்று நடத்தினால் நன்றாக இருக்கும். என்னைப்போன்ற நூற்றுக்கணக்கான மாட்டுக்கறி பிரியர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு நிறைய சாப்பிட்டு சிறப்பு செய்வோம்.