Pages

07 February 2013

கூடையில் என்ன பூ?


நாளுக்கு நாள் குஷ்பு மீதான மரியாதை அதிகரித்தவண்ணமிருக்கிறது. அது நமக்கே அச்சம் தரக்கூடிய அளவுக்கு வளர்ந்துவருகிறது. குஷ்புவின் சமகால பேட்டிகள் எல்லாமே ஒரு தேர்ந்த அரசியல்வாதியின் லாவகத்தோடு, ஏடாகூடமான கேள்விகளுக்கும் கழுவுற மீனில் நழுவுற மீனாக தப்பிச்செல்லும் அபார ஆற்றலையும் கொண்டதாக இருக்கிறது. அரசியல் தந்திரம்தான் என்றாலும் அது நாள்பட ரசிக்கும்படி மாறிக்கொண்டிருப்பதே நம் அச்சத்துக்கு காரணம்.

ஆங்கில ஊடகங்களுக்கு திராவிட இயக்கத்தின் முகமாக குஷ்பூ ஏற்கனவே மாறிவிட்டார். இதை உடன்பிறப்புகள் எப்படி பார்க்கிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் அவர்களாலே கூட இதை மறுக்கவோ மறைக்கவோ முடியாது. குஷ்பூவின் ஆங்கிலப்புலமையும் திமுகவின் கொள்கைகளை செயல்பாடுகளை சாதனைகளை கலைஞர்பாணியில் எடுத்துரைக்கிற பாங்கும் அவருடைய தோற்றமும் கூட ஆங்கில ஊடகங்களுக்கு அல்வாவை போல அமைந்திருப்பதாக அவதானிக்கலாம். உண்மையோ பொய்யோ! திமுகவின் மற்ற யாரையும் விட அக்கட்சியின் மேல் அதன் தலைவரின் மேல் அளவில்லா அன்பும் பற்றும் ஈடுபாடும் கொண்டவராக தன்னை வெளிபடுத்திக்கொள்கிறார் குஷ்பூ.

எத்தனையோ நடிகர் நடிகையர்கள் தேர்தல் சமயத்தில் மட்டும் தலைகாட்டி துட்டை வாங்கிக்கொண்டு ஓட்டு கேட்டு தெருத்தெருவாக அலைந்து நடித்து ஒய்ந்து தேர்தலுக்கு பின் தன் வேலையை பார்க்க போய்விடுவதே வாடிக்கை. ஆனால் குஷ்பூ மட்டும்தான் அவர் சார்ந்த கட்சி ஒரு மகத்தான தேர்தல் தோல்வியை சந்தித்த பின்னும் கூட அதே இடத்தில் நீடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. (வடிவேலுவைப்பற்றி இங்கே நினைத்துப்பார்க்க வேண்டும்) அதோடு குஷ்பு தன்னை முழுமையான திராவிட இயக்க தொண்டனாக (வேறு வார்த்தைகள் இருக்கிறதா?) திமுகவின் மிகமுக்கிய அங்கமாக மாற்றிக்கொண்டிருப்பது ஆர்வத்தை அதிகரிக்கிறது.

இந்த வார விகடனில் வெளியாகியிருக்கிற குஷ்புவின் பேட்டியே இதற்கு நல்ல உதாரணம். அழகிரியா ஸ்டாலினா நீங்கள் யார்பக்கம் என்று நிருபர் திரும்ப திரும்ப வெவ்வேறு விதமாக கொக்கிபோடுகிறார். ஆனால் எதற்கும் அஞ்சாத குஷ்புவோ தலைவர் எவ்வழியோ நானும் அவ்வழியே என்று ஜோராக நழுவுகிறார். அதோடு அழகிரியை அண்ணன் என்று அன்போடு அழைத்து எப்பக்கமும் சேதாரமின்றி அரசியல் காய்களை அஞ்சாமல் நகர்த்துகிறார். அடுத்த தேர்தலில் போட்டியிடுவீர்களா என்கிற கேள்விக்கு அவர் கொடுத்திருக்கிற பதிலே அலாதியானது (விகடன் வாங்கி படித்துப்பாருங்கள்). எனக்கு பயமென்றால் என்னவென்றே தெரியாது என்று நம் முதல்வர் பாணியில் பஞ்ச் டயலாக் கூட உண்டு.

திமுகவில் நடக்கிற வாரிசு அதிகாரப்போட்டியில் குஷ்பு ஒரு டார்க் ஹார்ஸாக இருப்பாரோ என்று கூட தோன்றுகிறது. திமுகவில் சகலரோடும் நட்பு பாராட்டுபவராகவும் யாரையும் பகைத்துக்கொள்ளாமலும் எதிர்ப்புகளில்லாமல் உயருகிறார். அவருடைய அபரிமிதமான வளர்ச்சி உடன்பிறப்புகள் சிலருக்கு எரிச்சலூட்டினாலும் ஒருகட்டத்துக்கு மேல் குஷ்பூவையும் சக உபியாக ஏற்றுக்கொள்ள பழகிவிட்டதாகவே தோன்றுகிறது. இணையமெங்கும் குஷ்புவை முன்வைத்து அதிமுகவினர் தொடுக்கிற விமர்சனங்களை புறங்கையால் தகர்த்து செல்கின்றனர் உடன்பிறப்புகள்.

கலைஞரும் கூட குஷ்புவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாகவே அவருடைய மேடை நடவடிக்கைகள் காட்டுகின்றன. திமுகவின் எல்லா மேடைகளிலும் குஷ்புவுக்கு ஒரு நாற்காலி ஒதுக்கப்படுகிறது. அது தலைமைக்கு மிக நெருக்கமான நாற்காலியாகவே எப்போதும் அமைந்துவிடுகிறது. HISTORY REPEATS ITSELF என்று யாரோ சொன்னதற்கிணங்க.. எதுவும் நடக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. நமக்கும் திமுகவுக்கும் இது புதுசில்ல.. பழகினதுதான்.