Pages

12 March 2013

தற்கொலை செய்து கொள்வது எப்படி?
குளித்துமுடித்து ‘’கடவுளே இந்தப்படமாச்சும் நல்லாருக்கணும்.. இந்தவருஷம் பூரா அலெக்ஸ்பாண்டியன் தொடங்கி ஆதிபகவன் வரைக்கும் நமக்கு ஏழரை சனி புடிச்சு ஆட்டுது.. இப்படியே போச்சுன்னா படம் பார்த்து பார்த்து கண்ணு ரெண்டும் அவிஞ்சிடும் போலருக்கு.. இந்தபடமாச்சும் நெஞ்சுக்கு நிறைவா இருக்கணுமே?’’ என்று வேண்டிக்கொண்டு திரையரங்குக்கு செல்கிறீர்கள்.

பார்க்கிங் 45, டிக்கட் 120, பாப்கார்ன் 50 என கொண்டுபோன 200ஐ பிடுங்கிக்கொண்டு பெரிய மனதோடு மீதி 5ரூபாயை கொடுக்கிறார் தியேட்டர்காரர். அந்த ஐந்துரூபாயை பொக்கிஷமாக வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு அவருடைய பெருந்தன்மையை நினைத்து வியந்து பாக்கெட்டில் போட்டுக்கொள்கிறீர்கள். படம் தொடங்க பத்து நிமிடம் முன்பே உள்ளே போய் ஜபர்தஸ்தாக அமர்ந்தும் விடுகிறீர்கள்.
உங்கள் பக்கத்தில் ஏதோ ஒரு கெட்ட வாடை வருகிறது. சகிக்க முடியாத துர்நாற்றம். இடதுபக்கம் திரும்பி பார்த்தால் அருகில் ஒரு கடுங்குடிகாரர். அவர் உங்களையே உற்று உற்று பார்த்துக்கொண்டிருக்கிறார். உங்களுக்கு பேஜாராக இருக்கிறது. கண்களாலேயே கற்பழிப்பதுபோல உணருகிறீர்கள்.

‘’டேய் யார்ரா நீ என்னை ஏன்டா இப்படி பாக்குற.. அவனா நீயி? நான் ஆம்பளைடா! ஐயாம் ஏ பாய்? என்னை ஏன்டா நமீதாவ பாக்குறாப்ல பாக்குற?’’ போன்ற விநோத எண்ணங்கள் உங்கள் ஆள்மனத்திலே உண்டாகிறது. அது அவனுடைய போதைக்கு பயந்து வெளிமனதில் அடங்கிவிடுகிறது. வாயை மூடிக்கொண்டு திரையில் ஓடுகிற விளம்பரங்களை ரசிக்கிறீர்கள். நுரையீரலை பிழிந்து தார் எடுத்துக்கொண்டிருக்கிறார் ஒருவர். ‘’பிற்றுநோய் கொடியது’’ என்று கீச்சுக்குரலில் யாரோ விபரீதமாக பேசிக்கொண்டிருக்கிறார்.

வாயில் சாந்தி சூப்பரும் மானிக்சந்தும் போட்டு குதப்பிக்கொண்டேயிருக்கிறார் குடிகாரர். அதை புளிச் புளிச் என உங்கள் மேல் சாரல் அடிக்கிற வகையில் முன்சீட்டின் பின்புறம் துப்புகிறார். துர்நாற்றம் வேறு! போதாக்குறைக்கு வண்டை வண்டையாக கமென்ட் அடித்துக்கொண்டேயிருக்கிறார். உங்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. வேறு ஒரு காலி இடத்தில் சென்று அமர்ந்துகொள்கிறீர்கள்.

அந்த சைத்தான் கீ பச்சே விடாமல் துரத்திக்கொண்டு வந்து உங்கள் பக்கத்தில் மீண்டும் அமர்ந்துகொள்கிறது. நீங்கள் அவரை பார்க்காதது போல அமர்ந்து படத்தில் கவனத்தை செலுத்துகிறீர்கள். ஆனால் அந்த நபர் உங்களுடைய தோளை தட்டி கூப்பிடுகிறார். ‘’சா........ர்... சார்.. உங்களைதான் சா....ர்’’

‘’திரும்பி மட்டும் பார்த்துடாதடா கோவாலு’’ என்று நினைத்தபடி திரையையே பார்க்கிறீர்கள்.

‘’த்தா..தே..$%#%% பசங்க என்னசார் சரக்கு விக்குறானுங்க.. போதையே இல்ல.. நீங்களாச்சும் கேக்க கூடாதா’’ என்கிறார். பேசாமல் இருக்கிறீர்கள்.

மீண்டும் உங்களுடைய பின்மண்டை அல்லது பொடனியில் தட்டி.. ‘’நீங்களாச்சும் கேக்க கூடாதா சார்’’ என்கிறார்.

‘’நான் யாருங்க இதையெல்லாம் கேக்க..’’ .

‘’கேக்கணும்சார்.. ஒவ்வொருகுடிமகனும் கேக்கணும்..’’ என்கிறார்.

‘’சார் எதுக்கு என்கிட்ட வம்புபண்றீங்க..’’

‘’இல்ல சார் உங்களை பார்த்தா ரொம்ப டீசன்டா இருக்கு.... அதனாலதான்..’’

‘’சார் படம் பார்க்க வந்திருக்கேன் ப்ளீஸ் தொந்தரவு பண்ணாதீங்க..’’

‘’நாங்க என்ன வட சுடவா வந்திருக்கோம்.. இல்ல சார் நீங்க கேக்கணும்சார்..இதையெல்லாம் தட்டிக்கேக்கணும்சார்..’’

‘’என்னங்க நீங்க.. நான் மேனேஜர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ண வேண்டியிருக்கும்’’

‘’அத தாண்டா நானும் சொல்றேன்.. டே நீ கேக்கலனே வேற யாருடா.. கேப்பா.. கேளுடா.. இப்ப கேளு..போடா போயி அந்த டாஸ்மாக் மேனேஜர்கிட்ட கேளு’’

‘ஹல்ல்ல்லோ.. டா போட்டுலாம் பேசாதீங்க.... அவ்ளோதான்’’

‘’என்னடா.. வேணும்னா டி போட்டு பேசட்டுமா.. நீ கேளுடி.. செல்லம்.. நீ கேளுடி’’

அவரை அடிக்க கையை ஓங்கும் முன்பே உங்கள் முகத்தில் பளார் என யாரோ அறைந்தது போல பிரமை. எழுந்த கை இறங்கிவிடுகிறது. ஆனாலும் உங்களுக்கோ கோபம் உச்சத்தை அடைகிறது. போய் தியேட்டர் மேனேஜரிடம் புகார் பண்ண எத்தனிக்கிறீர்கள். அதற்குள்ளாகவே டிக்கட் கிழிப்பவர் வந்துவிடுகிறார். அவரிடம் நீங்கள் புகார் செய்ய.. ‘’சார் கம்முனு படம் பாருங்க சார்..’’ என்று டிக்கெட் கிழிப்போன் மிரட்டுகிறார்.

குடிகாரர் இப்போது முகத்தை டீசன்டாக வைத்துக்கொண்டு.. திரையில் கவனத்தை செலுத்துகிறார். அப்பாடா ஒழிஞ்சது சனியன் என நீங்களும் திரையை பார்க்கிறீர்கள். படம் தொடங்குகிறது. முதல் ஷாட்.. பவர் ஸ்டார் கோணல் மானலாக முகத்தை வைத்துக்கொண்டு.. ஈஈஈஈஈ என்று சிரிக்கிறார். காமெடியாம். பிறகு அவர் டேன்ஸ் ஆட ஆட..

உவ்வ்வேக்... குடிகாரர் உங்கள் மீது வாந்தி எடுத்தும் விடுகிறார். இந்த முறை உங்களுக்கு கோபம் உச்சகட்டத்தை நெருங்குகிறது. நேராக போய் மேனேஜரிடமே கம்ப்ளைன்ட் செய்கிறீர்கள்.

இந்த முறை கடுங்குடிகாரர் வெளியேற்றப்படுகிறார். ஆனால் அவரோ போகும் போது உங்களை பார்த்து சிரித்துக்கொண்டே போகிறார். ‘’நான் உனக்காக வாசல்லயே வெயிட் பண்ணுவேன்.. நீ வா வெளியே.. டேய் உன்னை சும்மா விடமாட்டேன்டா’’ என்று சிரிக்கிறார். உங்களுக்கு பயமாக இருந்தாலும்.. இப்போது டிக்கட் கிழிப்பவர் துணைக்கு வந்துவிட்டதால்.. ‘’டே போடா..நான் யார் தெரியுமா’’ என்று தவ்லத் காட்டுகிறீர்கள். டாய்லெட் போய் உடைகளை கழுவி... சுத்தம் பண்ணி..

மீண்டும் திரையில் பார்வையை திருப்பி..படத்தில் கவனத்தை குவிக்கிறீர்கள்.

இரண்டரை மணிநேரத்துக்கு பிறகு...

படம் முடிகிறது. வெளியே அந்த குடிகாரன் உங்களுக்காகவே காத்திருக்கிறான். இப்போது போதை தெளிந்திருக்கிறது. ‘’சார் சாரி சார்.. உங்களை நான் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணிட்டேன்..என்னை மன்னிச்சிடுங்க.. நேத்துதான் இந்தப்படம் பார்த்தேன்.. அந்த கடுப்புலதான் கன்னாபின்னானு குடிச்சிட்டேன்.. அதான் இப்படிலாம் நடந்துகிட்டேன் போல.. ஐயாம் வெரி டீசன்ட் ஃபெலோ ஒன்லிசார்.. சீ மை கிரெடிட் கார்ட் டெபிட்கார்ட்’’ என்று அமைதியாக பேசுகிறான்.

உங்கள் கண்களில் ஆனந்த கண்ணீர் பொங்குகிறது.

‘’சார் நீங்க என்ன சார் டிஸ்டர்ப் பண்ணிங்க.. உள்ள ரெண்டரைமணிநேரம் கேப் விடாம அவனுங்க பண்ணானுங்க பாருங்க டார்ச்சர்.. அதைவிட இதெல்லாம் ஒன்னுமேயில்ல சார்.. உண்மைல நீங்க தெய்வம் சார்.. நீங்க ஒருத்தர்தான் சார் என்மேல வாந்தி எடுத்தீங்க.. ஆனா உள்ள ஒரு பத்து இருபது பேர் படம் எடுக்கறேனு.. முடியல சார்.. எனக்கு தலையெல்லாம் சுத்துது.. லேசா பைத்தியம் பிடிக்கறாப்ல இருக்கு.. ஒரு கட்டிங் சாப்டுவமா’’ என்று சொல்ல.. தூரத்தில் டாஸ்மாக் உங்களுக்காகவே மட்டமான சரக்குடன் வாவா என்கிறது.


STATUTORY WARNING -

புகைப்பழக்கம் புற்றுநோயை உண்டாக்கும்
குடி குடியை கெடுக்கும் குடும்பத்தை அழிக்கும் - ஆனால்
ஒன்பதுல குரு போன்ற படங்கள் அதை விட ஆபத்தானவை.


நன்றி - www.cinemobita.com