Pages

19 March 2013

பரதேசி

இப்படியொரு பின்னணியில் ஒரு படம் எடுக்க முடிவெடுத்தமைக்காக... நாம் பேசமறந்த நம்முடைய அடிமை வரலாற்றை, ஆவணப்படுத்த நினைத்தமைக்காக... இயக்குனர் பாலாவுக்கு முதலில் நன்றிகள்.

அதோடு, அவருடைய ஆவலை நிறைவேற்றுவதற்காக, காடுமேடெல்லாம் சுற்றி மொட்டையடித்து தாடி வளர்த்து, பட்டினி கிடந்து, படாதபாடுபட்டு, இயக்குனரின் நாயடி பேயடிகளை வாங்கிக்கொண்டு, நடித்தவர்களுக்கும் நன்றிகளும் அனுதாபங்களும். படத்தினை சிறப்பாகக் கொண்டுவர கஷ்டபட்டு பணியாற்றிய ஒவ்வொரு தொழில்நுட்ப கலைஞருக்கும் உளமார்ந்த நன்றிகள். பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

இதுமாதிரியான முயற்சிகளுக்கான தேவையை இப்படம் நமக்கு உணர்த்தியிருக்கிறது. இதுபோன்ற கதைக்களங்களை தொடர்ந்து கோலிவுட்டில் திரைபடமாக்க முன்வரவேண்டும் என்கிற அவாவும் கூடவே உண்டாகிறது. அதேசமயம் இப்படிப்பட்ட திரைப்படங்கள் அதற்குண்டான முனைப்புடனும் பொறுப்புணர்ச்சியோடும் எடுக்கபட வேண்டுமே என்கிற அச்சமும் கூடவே எழுகிறது!

காரணம் பரதேசி நல்ல முயற்சி என்கிற வகையில் பாராட்டத்தக்கதே. என்றாலும் இப்படம் அது பேசுகிற வரலாற்றுக்கு நேர்மையின்றி போதிய ஆராய்ச்சிகளின்றி மேம்போக்காக சொல்லப்பட்டிருப்பதும், திரைக்கதையமைப்பிலும் மேக்கிங்கிலும் இதுவும் இன்னொரு படம் என்கிற அளவிலேயே வந்திருப்பதும்தான் வேதனை தருவதாக இருக்கிறது. ஒரு நல்ல முயற்சியை பாராட்டுகிற வேளையில், ஒரு சினிமாவாக அதன் குறைகளை சுட்டிக்காட்டாமல் மௌனித்திருப்பதை காட்டிலும் கொடுங்குற்றம் எதுவுமே இருக்க முடியாது.

அதோடு இது ஒன்பதுல குருவோ, கண்ணா லட்டு தின்ன ஆசையாவோ இல்லை! இது தமிழ்சினிமாவின் சமகால ரட்சகரும் வருங்கால பிதாமகரும் கோடம்பாக்கத்தை உய்விக்க வந்த புண்ணியாத்மாவுமான பாலாவின் பரதேசி. கோலிவுட் கொத்தடிமைகள் அவருடைய சாட்டையடிக்காக முதுகு காட்டி தவமிருக்கிறார்கள் என்பதை யாராவது மறுக்கவும் முடியுமா.

1939 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் காலத்து தமிழ்நாட்டில், படம் தொடங்குகிறது. சாலூர் என்கிற கிராமம். அங்கே வாழும் சாதாரண மக்கள். பத்து பதினைந்து குடிசைகள் காட்டப்படுகிறது. மொத்த ஊருமே அவ்வளவுதானா? அந்த மக்கள் என்ன தொழில் செய்கிறார்கள்? அது தலித்துகளின் சேரியா? அல்லது சமத்துவபுரம் மாதிரியா? தலித்துகளாக இருந்தால் உயர்ஜாதியினர் எங்கே வாழ்கிறார்கள்? என்பது மாதிரியான அடுத்தடுத்த கேள்விகளும் எழுகின்றன. ஆனால் அவை எதற்கும் பதில் இல்லை. அது சினிமாவுக்காக உருவாக்கப்பட்ட ஒரு செட்டுபோட்ட கிராமம்! அந்த கிராமத்தில் நிறைய மக்கள் வாழ்கின்றனர். தட்ஸ் ஆல்.

இந்த ஊர் மக்கள், திடீரென ஒருநாள், தேயிலை தோட்டங்களுக்கு கொத்தடிமைகளாக, மூட்டை முடிச்சோடு, கிளம்பிவிடுகின்றனர். ஆனால் அதற்கான காரணம் படத்தில் முதல் பாதி முழுக்கவே இல்லை. படத்தின் ஜீவனே அந்த ஒற்றை ‘காரண’த்தில்தான் இருக்கிறது. ஆனால் படத்தில் அது எப்படி காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.

ஆரம்ப காட்சிகளில், அந்த ஊரில் ஒரு திருமணம் நடக்கிறது. அந்த மக்களில் பாதிபேர் கள்ளு குடித்து, குத்தாட்டம் போடுகிறார்கள். நன்றாக விருந்து சாப்பிடுகிறார்கள். அதுவும் போதாதென்று மனநலம் குன்றியும் குன்றாமலும் இருக்கிற (முந்தைய பாலா பட நாயகர்களை போன்ற) ஒரு நாயகனை பந்தியில் சோறுபோடாமல் அவமதிக்கிறார்கள். அவன் அழும்போது, கைகொட்டி, சிரித்து மகிழ்கிறார்கள்.

கிணற்றில் தண்ணீர் எடுக்கும்போதும் ஊர் பெண்களுக்கு ஜாலிக்கு குறைச்சலில்லை. தண்ணீர் பஞ்சமும் இல்லை. தவிர ஆங்காங்கே, ஆடு மாடுகளோடு, ஜூனியர் ஆர்டிஸ்டுகள் நடந்துபோகிறார்கள். டூயட் பாடல் மூலமாகத்தான் அந்த ஏரியாவில் விவசாயம் கிடையாதென்பதை புரிந்துகொள்ள முடிகிறது!

ஆனாலும், மகிழ்ச்சிக்கு கொஞ்சமும் குறைவில்லாத கிராமமாகவே சாலூர் இருக்கிறது! அங்கே, யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. சொல்லப்போனால் படம் பார்க்கும் நாமே கூட அந்த கிராமத்துக்கே சென்றுவிடலாமா என்கிற அளவுக்கு நல்ல ரசமான, ரசனையான கிராமம் அது!

அங்கே, பணத்துக்கான தேவையோ, பரதேசி பிழைப்புக்கான வறுமையோ, பஞ்சமோ, பட்டியினியோ, எதுவுமே இல்லை என்பதை காட்சிகளால் நாமாகவே புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், கிராமத்து மக்களோ யாரோ ஒரு கங்காணி வந்து தேயிலை தோட்டத்தில் வேலை, நல்ல கூலி, விடுப்பு,கறிசோறு என்று சொன்னதும் மூட்டை முடிச்சோடு அடுத்த நாளே பரதேசம் கிளம்புவதுதான் உலக நெருடல்.

சரி, ஒருவேளை அதிக கூலி கிடைக்கிறது, சொகுசான வாழ்க்கை கிடைக்கிறது என்கிற காரணங்களுக்காக பேராசைப்பட்டு, கங்காணியோடு, அந்த மக்கள் சென்றனர் என்று வைத்துக்கொள்வோம், ஏற்கனவே இருந்த நல்ல அல்லது மகிழ்ச்சியான வாழ்க்கையை விட்டுவிட்டு, பணத்துக்கு ஆசைப்பட்டு பேராசையால் இந்த கங்காணியிடம் வீழ்ந்தனர் என்று புரிந்துகொள்ளலாம், அப்படி புரிந்துகொண்டால் இத்திரைப்படம் அந்த நொடியிலேயே முடிந்துபோய்விடுகிறதில்லையா? பேராசை பெருநஷ்டம்! இதான் நீதி... என்பதாகப் போயிருக்கும்!

அதற்கு பிறகு அந்த மக்கள் தொடர்ந்து 48 நாட்கள், தமிழகத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலைக்கு ராப்பகலாக நடந்து கொண்டேயிருக்கிறார்கள். உண்மையில் கன்னியாகுமரியிலிருந்து கிளம்பி சென்னக்கு நடைபயணம் தொடங்கினால் எத்தனை நாள் பிடிக்கும் என்பதை இங்கே கருத்தில்கொள்வது முக்கியம், போகட்டும்.

படம் நடப்பது 1939தானே.. அக்காலகட்டத்தில், 48 நாட்களாக நடக்கிற, அந்த மக்களின் பாதையில் ஒரு கோயிலோ, ஒரு வீடோ, ஒரு நகரமோ, வேறு மனிதர்களோ இல்லாமல் போனது ஆச்சர்யம்தான். எங்கு பார்த்தாலும் காய்ந்த பொட்டல்காடுகள் மட்டுமேதான் அந்தகாலத்தில் இருந்திருக்கும் போல...!

ஆனாலும் 48 நாட்களும் ஒரே மாதிரியான காய்ந்து போன நிலத்திலேயே நடப்பதெல்லாம் பாலா படத்தில்தான் நடக்கும். ஒளிப்பதிவாளரும், வைட் ஆங்கிளில், வெவ்வேறு மாதிரியான லொக்கேஷன்களாவது காட்டியிருக்கலாம். ஒரே ஷாட் நாலைந்து முறை ரிப்பீட் அடிப்பதைப்போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை. அதோடு அடிமைகளாக நடக்கிற ஆண்களுக்கு தாடி மட்டும் நீளமாக வளர தலைமுடி மட்டும் வளராமல் போயிருப்பதையெல்லாம் சுட்டிக்காட்டுவது சரியாக இருக்காது. போகட்டும்.

ஒரே ஊரில் ஒன்னுமண்ணாய் பழகியவர்கள், (முந்தைய காட்சிகளின் வழி அந்த மக்களெல்லாம் ஒருவருக்கொருவர் உறவினர்கள் என்பதையும் நாமாகவே புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது) பஞ்சம் பொழைக்கும் பயணத்தில், ஒருவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று தெரிந்தும், அவரை அப்படியே போட்டுவிட்டு திரும்பிகூட பார்க்காமல் பயணத்தைத் தொடர்கிறார்களாம்! கிராமத்து ஏழை மனிதர்கள்! (பணத்தாசை பிடித்த மனிதாபிமானமற்ற ஜனங்களாக, இருப்பார்கள் போல! இதைத்தான் எரியும் பனிக்காடு சொன்னதா?)

கங்காணி மிரட்டினானாம். ஒரு சிறிய குரலைக் கூடவா வெளிக்காட்டாமாட்டார்கள்! அந்த மக்கள்! இவ்வளவுக்கும் இது நடப்பது பாதி பயணத்தில்தான். தாங்கள் கொடூரமான ஒரு வில்லனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறோம் என்பதும் கூட தெரியாது! இருந்தும் இயக்குனர் பாலாசார் சொல்லிவிட்டதாலேயே அந்த துணை நடிகர்களும் சிறிய எதிர்ப்பையும் வெளிப்படுத்தாமல் தங்கள் பயணத்தை தொடர்கிறார்கள். வேறு வழியில்லை இடைவேளை விட்டாக வேண்டுமே! ஆக்சன் படமாக இருந்தால் இன்டர்வெல்லில் பதற வைக்கவேண்டும்! அழுவாச்சி படம் என்று முடிவெடுத்துவிட்டதால், கதற வைக்கவேண்டிய, கட்டாயமாக இருக்க கூடும்!

இடைவேளை வரைக்கும், என்ன கதை, என்பதை நிச்சயமாக யாராலும் சொல்ல முடியாது. நாஞ்சில் நாடனின் இடாலக்குடி ராசா கதையை முதல் முக்கால் மணிநேரக்கதைக்காக பயன்படுத்தியிருக்கிறார் பாலா. (ஆனால் படத்தின் கதை திரைக்கதையெல்லாம் அவரே எழுதியதாம்.. டைட்டிலில் போட்டாங்க!). நாஞ்சில் நாடனின் மிக முக்கியமான சிறுகதை அது. எப்போது படித்தாலும் கண்கள் கலங்கிவிடும். பந்தியிலிருந்து விரட்டப்படுகிறவனின் வலியை வேதனையை உணர வைக்கிற கதை அது. அதை, எந்த அளவுக்கு மகா மட்டமாக படமாக்க முடியுமோ அந்த அளவுக்கு மோசமாக படமாக்கியிருக்கிறார் பாலா.

முதல் இரண்டு முறை, ராசாவின் காதலியான அங்கம்மா, ஹீரோவை விளையாட்டுத்தனமாக பந்தியிலிருந்து விரட்டுகிறாள். மூன்றாவது முறை கிராமத்து ஜனங்களால் விரட்டப்படுகிறான். அவன் அழுதபடி ராசா வண்டிய வுட்டுடுவான்.. என்று சொல்லிக்கொண்டே நடக்கிறான். ஜனங்கள் சிரித்து மகிழ்கிறார்கள். அட என்னங்கடா? கதையாக படிக்கும் போது அனுபவித்த வேதனையை காட்சியில் ஒரு சதவீதம் கூட உணர முடியவில்லையே. சரி, இதுவும் போகட்டும்.

முதல் பாதி, முழுக்க, இப்படி போகிறதா? இரண்டாம் பாதியில், தேயிலை தோட்டத்துக்கு வருகிறது படம். அங்கே இங்கிலீஸ் துரைக்கு ஹாய் டார்லிங் சொல்லுகிற அளவுக்கு ஜாலியான பெண்கள் வேலை பார்க்கிறார்கள். அடடே!

கதைப்படி, படத்தின் நாயகனையும், தேயிலைத்தோட்டத்து இன்னொரு நாயகியையும் நாயகனின் நண்பனும், அவனுடைய மனைவியையும், தவிர்த்து வேறுயாருக்கும் அந்த தேயிலைத் தோட்டத்தில் ஏதும் பிரச்சனைகள் இருப்பதாகத் தெரியவில்லை. அவரவர் வேலையை அவரவர் பார்த்துக்கொண்டு குடியிருப்புகளில் வாழ்கிறார்கள். தப்பியோடுகிறவர்களுக்கு மட்டும்தான் கால் நரம்பை வெட்டி விடுகிறார்கள்.

மற்றபடி, கூலியை ஏமாற்றி, அங்கேயே கொத்தடிமைகளாக வைத்துக்கொள்வதும், அட்டைக் கடியில் கஷ்டப்பட்ட தொழிலாளர்கள் நிலையும், தொற்றுநோயால் மொத்தமாக அம்மக்கள் மாண்டுபோவதும், கால்நரம்புகள் வெட்டப்பட்ட நிலையிலும் தொடர்ந்து உழைக்கிற மக்கள், குழந்தை தொழிலாளர்கள், மருத்துவ வசதிகளின்றி இருப்பது மாதிரியான விஷயங்களும் நல்ல முறையில் படம் பார்க்கிற யாரையும் அசைத்துப்பார்க்கிற வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

படம் இப்படி அங்கிட்டும் இங்கிட்டுமாக போய்க்கொண்டிருக்க, பாலா என்ன நினைத்தாரோ, திடீரென தன்னுடைய ஹிந்துத்வா முகத்தை வெளிக்காட்டுகிறார். தேயிலை தோட்டத் தொழிலாளர்களிடையே மதமாற்றம் எப்படி செய்யப்பட்டது என்பதை காமெடியாகச் சொல்கிறேன் என அருவருக்கத்தக்க வகையில் காட்சிப்படுத்துகிறார். தன்ஷிகா மரணப்படுக்கையில் மருத்துவரை நாடி வருகிறார். அந்த நேரத்தில் அவரை மதமாற்றம் செய்ய முயற்சிப்பதாக காட்சி வைக்கப்படுகிறது.

நிச்சயமாக, பிரிட்டிஷ் காலத்தில், மருத்துவம் மற்றும் கல்வியின் பெயரால், மதமாற்றங்கள் நடைபெற்றன என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், எங்குமே மதம் மாற மறுத்தவர்கள் யாருக்கும் கல்வியோ, மருத்துவமோ, மறுக்கப்பட்டதில்லை. தலித் மக்களுக்கான கல்வியையும், மருத்துவத்தையும் கொடுத்தது கிறிஸ்தவ மிஷனரிகள்தானே! அதை மறுக்கமுடியுமா? அவர்கள் கொடுத்த கல்வி, அம்மக்களில் எத்தனை பேரின், வாழ்க்கைச் சூழலை மாற்றியிருக்கிறது! அதைமறுக்கமுடியுமா.

தன்னுடைய கதை, என்று டைட்டில் கார்டில் போட்டுக்கொண்டாலும் இது மருத்துவர் பி.எச்.டேனியல் எழுதிய ரெட் டீ நாவலின் பாதிப்பில் எடுக்கப்பட்ட படம்தான் என்பதை இயக்குனர் நிச்சயமாக மறுக்கமாட்டார் என்றே நினைக்கிறேன். அந்த பி.எச்.டேனியல் யார் என்று பாலாவுக்கு தெரிந்திருக்காது போல.. மலைக்காடுகளில் தேயிலைதோட்டங்களில் வேலைபார்க்கிற ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்த்து அவர்களுடைய உரிமைகளுக்காக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சங்கம் அமைத்து போராடியவர் என்பதும் பாலாவுக்கு தெரிந்திருக்காதோ என்னவோ! அவரும் கிறித்தவர்தான். அவரும் மருத்துவர்தான். அவருடைய நாவலை திரைப்படமாக்கும்போது அவருக்கு மிக நன்றாகவே மரியாதை செய்திருக்கிறார் இயக்குனர் பாலா. அவருடைய பரிசுத்த ஆவி பாலாவை மன்னிக்கட்டும்.

படத்தில், காரணமேயில்லாமல் ஆஜராகும் அந்த கிறிஸ்தவ மருத்துவரும், அவருடைய மனைவியும் ஒரு பாடலும் பாடி, குத்தாட்டமும் போடுவதெல்லாம், என்ன வகையான (ஏ) மாற்றுசினிமா இது என்கிற கேள்வியை எழுப்புகிறது. இப்படி படத்தில் ஏகப்பட்ட சிக்கலும் குழப்பங்களும் பதிலில்லாத கேள்விகளும் நிறைந்திருக்க, இதெப்படி ஒரு முழுமையான நல்ல படமாக இருக்க முடியும்? இதை எப்படி உலகத்தரம் என்று கொண்டாட இயலும்?

படத்தின், மிகமுக்கியமான குறை ஜிவி பிரகாஷின் மிகமிக மோசமான இசை. பாடல்கள் மிகமிகசுமார் என்றால். பின்னணி இசை குப்பை. படத்தில் பல காட்சிகளுக்கும் தேவை நிறையவே மௌனமும் அமைதியும்தான். ஆனால் அந்த இடத்தில் ஜஜாங் ஜஜாங் என இரைச்சலை கொட்டி கடுப்பேற்றுகிறார். படத்தின் பெரும்பாலான காட்சிகளில் இதுவே!

படத்தின் இன்னொரு பிரச்சனை, நாயகியாக நடித்திருக்கும் வேதிகாவின் கேவலமான நடிப்பும், அவருடைய மேக்கப்பும். தமிழ்நாட்டில் கருப்பான பெண்கள் யாருமே கிடைக்கவில்லையா? சரி வேதிகாவையேதான் போடவேண்டும் என்றால் அவருக்கு நல்ல மேக்கப்மேனை பயன்படுத்தி கறுத்தபெண்ணாக காட்டியிருக்க வேண்டாமா.. எர்வாமேட்டினை முகத்தில் தடவியதுபோலவே வருகிறார் அம்மையார். அதோடு அவர் செய்கிற அஷ்டகோண சேஷ்டைகள் சகிக்கவில்லை ரகம். பாலா படமென்றாலே நாயகன் அரைலூசாகவும் நாயகி முழு லூசாகவும் இருந்தே ஆகவேண்டுமா என்ன? படத்தின் நாயகனுக்கும் நாயகிக்கும் அக்காலத்தமிழ் உச்சரிப்பு சுத்தமாக வரவில்லை. அதோடு இருவருக்குமான குரல் அதைவிட மோசம்.

படத்தின் மூன்று ஆறுதல்கள் அதர்வாமுரளியின் நடிப்பும், செழியனின் கேமராவும் ராசாவின் பாட்டியாக வருகிற அந்த கூன்விழுந்த மூதாட்டியும்தான்! மூவரும் நிறைவாக செய்திருக்கிறார்கள். அதர்வா முரளி உயிரை கொடுத்து நடித்திருக்கிறார். அவருக்கு பாராட்டுக்கள். அந்த பாட்டியின் துடிப்பான நடிப்பும் உடல்மொழியும் பாட்டிம்மா ஐ லவ்யூ என்று சொல்லவைக்கிறது. நாஞ்சில் நாடனின் வசனங்கள் சிறப்பு.

பரதேசி, நிச்சயமாக மோசமான, மட்டமான, படமில்லை. குப்பையுமில்லை. ஆனால் மிகமிக சுமாராக, இயக்கப்பட்ட, ஒரு சாதாரண திரைப்படமே. ஒரு எம்ஜிஆர் திரைப்படத்தில் இருக்கிற எல்லா கமர்ஷியல் அம்சங்களும் இப்படத்திலும் உண்டு. மனிதாபிமானமே இல்லாத வில்லன்கள், குடித்துவிட்டு பெண்களை கற்பழிக்கும் கொடூரன்கள், விரட்டி விரட்டி நாயகனை காதலிக்கு காதலி, துரோகமிழைக்கும் வஞ்சக நரிகள் என எல்லாமே உண்டு. எம்ஜிஆர் மட்டும்தான் இல்லை. அவர் இருந்திருந்தால் அந்த மக்களை காப்பாற்றியிருப்பார். நல்ல வேளை அவர் இறந்துவிட்டதால் தமிழ்சினிமாவில் முதன்முறையாக நாயகன் தன் நிலையை அதே யதார்த்ததுடன் ஏற்றுக்கொள்வதாக படம் முடிவது நமக்கு புத்தம் புதிது. அதற்காக இயக்குனரை பாராட்டலாம்.

எந்த வித ஆராய்ச்சியுமில்லை. எடுத்துக்கொண்ட கதைக்கு கொஞ்சமும் நேர்மையில்லை. திரைக்கதையெங்கும் ஏகப்பட்ட ஓட்டைகள். மிகமிக தவறான முறையில் நம்முடைய ரத்தந்தோய்ந்த வரலாறு சொல்லப்பட்டிருக்கிறது. தொழில்நுட்ப ரீதியிலும் சறுக்கலே. இவைதான் இப்படத்தின் பிரச்சனை. படத்தில் சில முகத்திலறையும் காட்சிகளும் துடுக்குத்தனமான வசனங்களும் மட்டுமே போதுமென்று பாலா நினைத்திருப்பார் போல.. மன்னிக்கனும்

பாலாசார்… உங்கள் பரதேசியிடம் உண்மையில்லை. அவன் போலித்தனங்களால் கட்டமைக்கப்பட்டவன். தப்பானவன்

(www.cinemobita.com இணையதளத்துக்காக எழுதியது.)