Pages

23 April 2013

பாவம் சார் உங்க வொய்ஃபூ!

ஒரு திரைப்படத்தை காண இவ்வளவு கொடுமைகளையும் அவமானங்களையும் எந்த ரசிகனும் சந்தித்திருக்கமாட்டான். எத்தனை ஏச்சுகள் எவ்வளவு பேச்சுகள். மூச்சு முட்ட வாங்கின ஒவ்வொரு அடியும் இன்னமும் வலிக்கிறது. இத்தனை அடிகளையும் மிதிகளையும் அவமானங்களையும் சந்தித்தும் நம்மால் அந்த உன்னதமான காவியத்தை காணமுடியாமல் போவதன் பின்னிருக்கும் வலியை ஜெயமோகன் மாதிரியான உணர்வுள்ள வசனகர்த்தாவால் மட்டும்தான் வார்த்தைகளால் வடிக்க முடியும். உஃப்ப்ப்..

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோனன் டிக்கன்ஸ் என்பவர் ஒரு புத்தகத்தை தேடி பல ஆண்டுகள் அலைந்தாராம். பதினாறாயிரம் கிலோமீட்டர்கள் அலைந்து ப்ரோக்கன் தி ஹெல் என்கிற புத்தகத்தை கண்டுபிடித்தாராம். பிரஞ்சு பழங்குடி இனத்தவர்களின் புரட்சி பத்தின ஏதோ புரட்சிகர புத்தகமாம். அதை படித்தே தீரவேண்டும் என்று வெறியோடு அலைந்து திரிந்து 12 ஆண்டுகள் கழித்து கண்டுபிடித்தாராம் ஜோனன் டிக்கன்ஸ்.

புக்கு கைக்கு கிடைக்கும்போது குடும்பம், சம்பாத்தியம், சந்தோஷம் எல்லாவற்றையும் தொலைத்திருந்தார். ஆனால் அந்தப் புஸ்தகப்பிரதியை வாங்கிய கணம், ''இந்த நிமிடம் உலகிலேயே மகிழ்ச்சியான மனிதன் நான்தான். இந்த மகத்தான பிரதியை அச்சாக்கி... வரும் தலைமுறைகளுக்குத் தந்துவிட்டு, நான் செத்துப்போய்விட்டால், அதைவிடச் சந்தோஷம் வேறு என்ன இருக்க முடியும்' என்ற டிக்கன்ஸ், அதை உடனே செய்தார்!

இந்த ஜோனன் டிக்கன்ஸ் போலவேதான் எப்படியாவது அந்த மகத்தான திரை ஓவியத்தை தரிசித்துவிட வேண்டும். அதை பற்றி நாலுவரி.... நாலேவரி நம்முடைய இணையதளத்தில் எழுதிவிடவேண்டும். அதை வருங்கால சந்ததிகளுக்கு தந்துவிட்டு செத்துபோய்விட்டால் அதைவிட சந்தோஷம் வேறு என்ன நமக்கு இருக்கமுடியும் என்றெல்லாம் நினைத்து அந்தப்படத்தை பார்க்க தீர்மானித்திருந்தேன்.

சிலபல மாதங்களுக்கு முன் முதன்முதலாக அந்தப்படம் குறித்த போஸ்டர்களை பார்த்தபோதே தீர்மானித்துவிட்டேன் இதை எப்பாடுபட்டாவது பார்த்துவிடுவது என்று. எவர்க்ரீன்ஸ்டார் என்கிற அந்த அடைமொழியும் படத்தின் போஸ்டர் டிசைனும் அதன் நாயகனும் என்னை ஈரோ ஈர் என்று ரொம்பவே ஈர்த்துவிட்டனர்.

தொடர்ந்து ஒவ்வொரு நாளும் படம் குறித்த பல்வேறு விதமான படங்களுடன் தினத்தந்தியில் விளம்பரங்கள் வரும். அதை பார்த்து பார்த்து ஆசையோடு படம் வரும் நாளுக்காக காத்திருந்தேன். ஒரு நல்ல நாளில் படத்தின் டிரைலர் வெளியிடபட்டது.

உதடெல்லாம் லிப்ஸ்டிக்கு முகமெல்லாம் ரோஸ்பவுடர் என அழகுசுந்தரமாக காட்சியளித்த அந்த சோலார்ஸ்டார் ஹீரோவை பார்க்க கண்கோடி வேண்டும். என்ன அழகு! அவர் பேசிய பஞ்ச் வசனங்களை கேட்டு பக்கத்து சீட்டு தோழர் காதில் ரத்தம் வடிய அமர்ந்திருந்தார்! என் காதிலும் ரத்தம் கசிந்திருக்கிறது எனக்குதான் தெரியவில்லை. அப்படியே டிரைலரில் மூழ்கிவிட்டேன் போல! வொய் ப்ளட்.. சேம் ப்ளட் என்று சிரித்துக்கொண்டோம். டிரைலருக்கே காதில் ரத்தம் என்றால் படத்தை பார்த்தால் எப்படியிருக்கும் என்பதையெல்லாம் சொல்லத்தேவையில்லை.

சகலதுவாரங்களிலும் ரத்தம் கசிய நேரும் ஆபத்திருந்தும் நான் ஏன் அந்தப்படத்தை பார்க்க நினைத்தேன்.. ஏன் ஏன் ஏன்?
எங்கோ அமெரிக்காவிலும் ஆஸ்திரேலியாவிலும் இருக்கிற கடைக்கோடி தமிழ் வாசகனுக்காக என் உயிரையும் பணயம் வைக்க துணிந்தேன்.

( இப்படியெல்லாம் கஷ்டப்பட்டு உழைக்கிற தமிழ் எழுத்தாளனுக்கு ஒரு பொறை பிஸ்கட்டு கூட வாங்கிதராத தமிழ்சமூகம்தான் இது என்றாலும் வேறு வழியில்லை நம்மவலைதளத்தில் கட்டுரை ஏற்றி பலநாளாகிவிட்டதால் எதையாவது எழுதவேண்டுமே.)

சரி இப்படியாக படத்தின் டிரைலரும் பிறகு வந்த பாடல்களும் படம் பார்க்கிற ஆர்வத்தை வெறியாக மாற்றிவிட்டன. சென்றவாரம் அந்தப்படம் வெளியானது. அநியாயம் பாருங்கள். அன்றைக்குத்தான் என் வீட்டு பூனைக்கு பிரசவம். அதனால் பயங்கர பிஸியாகிவிட்டேன். படம் பார்க்க முடியவில்லை. படம் வெளியாகி ஒருநாள் ஆகியும் நம்முடைய விமர்சனம் வராததால் நம்முடைய கொலைவெறி வாசகர்கள் கடுப்பாகிவிட்டனர்.

வாசக நண்பர்களான அமெரிக்காவை சேர்ந்த அர்னால்ட் ஸ்வாச்சனேக்கர், ஆஸ்திரேலியாவில் பொட்டிக்கடை வைத்திருக்கும் சத்யா, ஜப்பானை சேர்ந்த ஜாக்கிசான், பாகிஸ்தானை சேர்ந்த யாரோ முஷாராப்போ என்னவோ பெயர்... அதுகூட நினைவில்லை. மேலும் தென்னாப்பிரிக்காவிலிருந்து ஜாக் காலிஸ், டெல்லியிலிருந்து ஏதோ சிங்.. கன்மோகனோ ஜின்போகனோ. ஏதோ பெயர். பிரதமராம். இப்படி ஏகப்பட்ட பேர் போனில் அழைத்து சார் படம் பார்த்தாச்சா.. உங்க விமர்சனம் எப்போ போடுவீங்க.. எப்போ போடுவீங்க என்று ஒரே டார்ச்சர்.

ஃபேஸ்புக்கில் பத்தாயிரம் பேர்.. ட்விட்டரில் ஆறாயிரம் ப்ளாகில் ஒரு ஐந்தாயிரம் என ஒரு நாற்பாதாயிரம் பேரை காத்திருக்க வைப்பது எவ்வளவு தவறு. அதனால் சனிக்கிழமை மாலை படம் பார்க்க முடிவெடுத்தோம்.

நானும் தோழர் குஜிலிகும்பானும் படம் பார்க்க உதயம் தியேட்டருக்கு விரைந்தோம். ஆனால் அன்பார்சுனேட்லி அந்தப்படம் அங்கே திரையிடப்படவில்லை என்று தியேட்டர்காரர் சொன்னார். ஆனால் தியேட்டரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. நான்குகாட்சிகள் என்கிற செய்தியும் இடம்பிடித்திருந்தது.

‘’என்னங்க போஸ்டர் போட்டிருக்கு.. நான்குகாட்சிகள்னு வேற கொட்டை எழுத்துல போட்டிருக்கு, படம் போடலைனு பொய்சொல்றீங்க.. ஐ வில் கோடு கன்ஸ்யூமர் கோர்ட்.. வில் ரைட் இன் தி இந்து.. டெக்கான் க்ரானிக்கிள்.. டாய்லெட் டோர்.. யூ நோ ஐயாம் ஏ ஃபேமஸ் ரைட்டர்.. ஆய் ஊய்’’ என்று சவுண்ட் விட்டார் குஜிலிகும்பான்.

‘’அப்படிதான் சொல்வோம் எங்க இஷ்டம்.. நீ என்ன பெரிய மயிரா.. போடா வெண்ணை.. ________ (சென்சார்ட்) இங்கயே நின்ன தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன் ஓடிடு’’ என்று அன்போடு எங்களை விரட்டினார் தியேட்டர்காரர்.

அவருடைய நியாயமான கோபத்தை புரிந்துகொண்டு கண்ணில்வந்த கண்ணீரை துடைத்தபடி ‘’நன்றி பிரதர்.. இப்படி டீசன்டா முதல்லயே சொல்லிருந்தா நாங்க போயிருப்போம்ல... இப்ப பாருங்க ராஜா எப்படி வண்டிய வுட்றானு’’ என்று தன்னுடைய அறச்சீற்றத்தை அக்குளில் வைத்து அமுக்கிக்கொண்டு கிளம்பினார் குஜிலிகும்பான். நானும் அவரை பின்தொடர்ந்தேன்.

‘’ப்ரோ நீங்க அவன போட்டு பொளந்திருக்கணும்’’ என்றேன்.

‘’எனக்கும் ஆசைதான்..ப்ரோ.. வீட்டுக்குபோய் ஃபேஸ்புக்ல அவனதிட்டி நாலு ஸ்டேடஸ்... ட்விட்டர் நாலு ட்விட்டு.. வெப்சைட்ல ஒரு சீரியஸ் பதிவுகள்னு போட்டு அவனை நாறடிக்கறேன் பாரு.. யாருகிட்ட பச்சாப்பையன்.. என்னோட எழுத்தாயுதம்பத்தி தெரியல ப்ரோ.. ’’ என்று வீரமாக பேசினார். எனக்கு அப்படியே மயிர்க்கூச்செரிந்தது.

படம் பார்க்க வந்தோமில்லையா? உதயத்தில்தான் இல்லை.. சரி வேறு தியேட்டர் இருக்கிறதா என்று ஆன்லைனில் தேடினால் தேவி கருமாரியில் 6.30 ஷோ ஓடுவதாக தகவல் கிடைத்தது. ராஜாவின் வண்டி நேராக அங்கே பறந்தது. விர்ர்ர்ர்...

தேவி கருமாரி திரையரங்கின் வாசலிலேயே பேய்க்கூட்டம். அய்ய்யோ இந்த படத்துக்கு டிக்கட் கிடைக்காது போலிருக்கே என மனம் பதறுகிறது. நம் வாசக நண்பர்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறோம் என்பது புரியாமல் இதயம் படபடக்கிறது. த்த்த்த்தெய்வமே....

குஜிலிகும்பான்தான் ‘’ப்ரோ யூ டோன்ட் வொர்ரி நான் இருக்கேன்ல என்னோட எழுத்தாளர்ன்ற இன்ப்ளூயன்ஸ் யூஸ் பண்ணி இரண்டு டிக்கட் எப்படி உஷார் பண்ணிட்டு வரேன் பாருங்க’’ என்று கூட்டத்துக்குள் புகுந்து தலைமறைவானார்.

கூட்டத்துக்குள் புகுந்தவர் வெளியே வரவேயில்லை. அரைமணிநேரம் கடந்திருக்கும். கடுப்பாகி கவுண்டர் அருகில் சென்று பார்த்தால் இங்கேயும் குஜிலி தியேட்டர் காரரோடு தகராறு செய்துகொண்டிருக்கிறார். இந்த எழுத்தாளர்களோடு எப்போதுமே இப்படித்தான்! ‘’குஜிலி ப்ரோ வாட் ப்ராப்ளம்’’ என்றேன்.

‘’நத்திங் ப்ரோ.. திஸ் மேன் நாட் கிவ்விங் டிக்கட்யா’’ என்றார்.

‘’ஓமைகாட்.. தியேட்டர்கார் தியேட்டர்கார் ஏன் இவருக்கு டிக்கட் தரமாட்டேன்றீங்க.. ‘’

தியேட்டர்கார் எங்கள் இருவரையும் ஏதோ மென்டல் ஆஸ்பத்தி பேஷன்ட்ஸைப்போல பார்த்துவிட்டு... ‘’பாஸ் உங்களை பார்த்தா படிச்சவர் மாதிரி இருக்கு..’’ என்று தொடங்கினார். எனக்கு பெருமையாகிவிட்டது. குஜிலியை பார்த்து சிரித்தேன். குஜிலியோ இருடி உனக்கும் இருக்கு என்பதுபோலவே பார்த்தார்.

நான் சட்டையை சரிசெய்துகொண்டு ‘’ யெஸ் சொல்லுங்க’’

‘’இவர் கேக்கற படத்துக்கு டிக்கட் குடுக்க முடியாத நிலைமைல இருக்கோம். ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க..’’

‘’ஏன் சார். இவருக்கு வயசில்லையா.. அந்தஸ்தில்லையா.. அழகில்லையா.. பர்சனாலிட்டி இல்லையா.. என்ன இல்லை ஏன் இவருக்கு டிக்கட் தரமாட்டேனு சொல்றீங்க’’

‘’யோவ் லூசு மாதிரி உளறாதய்யா..’’ என்றார் தியேட்டர்காரர். குஜிலிக்கு செம சிரிப்பு அடக்கி கொண்டு என்னை பார்த்தார்.

‘’அப்புறம் ஏன்ங்க அவருக்கு டிக்கட் குடுக்க மாட்டேனு சொல்றீங்க.. இது அநியாயம் இல்லையா.. அவர் யார் தெரியுங்களா ஃபேமஸ் தமிழ் ரைட்டர்’’ என்றேன்.

‘’அது சரிங்க.. இந்த படத்துக்கு இதுவரைக்கும் யாருமே டிக்கட் எடுக்கல.. நீங்கதான் முத ஆளு.. இரண்டு பேருக்காகலாம் படம் ஓட்ட முடியாதுங்க’’ என்றார் தியேட்டர் காரர்.

‘’சார் ஆனா பாருங்க நாங்க இந்த படத்தை பார்த்தே ஆகணும்.. இல்லாட்டி போனா எங்க வாசகர்கள் கோச்சிப்பாங்க..எங்களை கேவலமா திட்டுவாங்க.. ரோட்ல போனா கல்லை வுட்டு அடிப்பாங்க’’ என்றேன்.

(குஜிலி சத்தமில்லாமல் காதோரம் வந்து ‘’இல்லாட்டியும் இப்படிலாம் பண்ணுவாங்கதானே ப்ரோ’’ என்றார்.)

எனக்கு கடுப்பாகி ‘’சார் ப்ளீஸ் டிக்கட் குடுங்க.. இந்த சமூகத்துக்காக குடுங்க.. இந்த தேசத்துக்காக குடுங்க.. இந்த நாட்டு மக்களுக்காக குடுங்க ப்ளீஸ்.. உங்க கால்ல வேணாலும் விழறோம்’’ என்று கதற ஆரம்பித்தேன்.

‘’அதெல்லாம் எங்களுக்கு தெரியாதுங்க.. ஒரு பத்துபேராச்சும் வந்தாதான் டிக்கட் குடுப்போம் ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க.. வேணும்னா இன்னும் கால்மணிநேரம் இருக்கு.. அப்படி ஓரமா ஒருத்தர் நிக்கறார் பாருங்க அவரோட வெயிட் பண்ணுங்க’’ என்றார்.

‘’அவர் யார் சார்..?’’

‘’அவரு உங்களுக்கு முன்னால இந்தப்படத்தை பார்க்க வந்தவரு.. அவரும் பத்துபேர் வரட்டும்னு வெயிட்டிங்ல இருக்கார்’’

‘’ஓக்கே ஓக்கே’’ என்று சொல்லிவிட்டு குஜிலியும் நானும் அந்த நபருக்கு அருகில் போய் நின்றோம். அவர் எங்களை பார்த்து புன்னகைத்தார். அவரை எங்கோ பார்த்த நினைவு... நம்ம வாசகராக இருக்கும் என்றார் குஜிலி. இருக்கும் இருக்கும் என்று நானும் புன்னகைத்தேன்.

‘’நாங்கதான் பாவப்பட்டவங்க.. இந்த படத்துக்கு விமர்சனம் எழுதணும்னு பார்க்க வந்திருக்கோம்.. நீங்க யார் சார்..?’’ என்றார் குஜிலி. அந்த நபர் ‘’நான் இந்த படத்துல நடிச்சிருக்கேன் சார்’’ என்றார்.

‘’ஓ என்ன கேரக்டர்’’

‘’நான்தான் சார் படத்தோட ஹீரோ..’’

இரண்டுபேருக்குமே ஷாக். சார் அப்படீனா நீங்கதான் இந்த படத்தோட டைரக்டர் &$%&%&*ஆ?

‘’ஆமாங்க அது நானேதான்’’

‘’அப்படீனா அந்த நடிகையோட ஹஸ்பன்ட்தானே நீங்க.. படத்தோட தயாரிப்பாளர் உங்க மனைவிதானே’’

‘’அட அதுநான்தான்ங்க.. ஏன்ங்க இவ்ளோ சந்தேகப்படறீங்க.. வேணும்னா ட்ரைலர்ல வர வசனத்தை பேசிக்க்காட்டட்டுமா’’ என்று பயமுறுத்த.. குஜிலி நடுநடுங்கிவிட்டார்.

‘’ஐடி ப்ரூஃப் அட்ரஸ் ப்ரூஃப்லாம் வேணாங்க... நம்புறோம்.. லிப்ஸ்டிக் போடாததால அடையாளமே தெரியல.. அவ்ளோதான்’’ என்றேன்.

‘’அதுபாருங்க ஆடியன்ஸ் ரியாக்சன் பாக்கலாம்னு மாறுவேஷத்துல வந்தேன்.. அதான் உங்களால கண்டுபுடிக்க முடியல... இந்தாபாருங்க மச்சம்’’ என்றார்.

இதுக்குமேல் இவரோட பேசுவது ஆபத்து என்பதை உணர்ந்து குஜிலி வாங்கபாஸ் ஒரு தம் போடுவோம் இவரோட ரெண்டு நிமிஷம் பேசினதுக்கே தலை கிர்ர்ர்னுருக்கு என்று என்னை அந்தப்பக்கமா இழுத்தார்.

பின்னாலேயே இவரும் வர.. அவருக்கும் தம்மும் டீயும் ஆர்டர் பண்ண.. ‘’சார் என் படத்தை பார்க்க தகிரியமா வந்திருக்கீங்க.. டீக்கு நானே காசுகுடுக்கறேன்’’ என்று பெருந்தன்மையாக காசுகொடுத்தார்.

அரைமணிநேரம் கழித்து மீண்டும் கவுண்ட்டருக்கு சென்றோம். சார் உங்க மூணுபேரைத்தவிர்த்து யாரும் வரலை.. அதனால ஷோ கேன்சல் என்றார் டிக்கட்கார்.

இருவருக்குமே பெரிய ஏமாற்றம்.. சோகமாக வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். போகும்போது அந்த நடிக இயக்குன தயாரிப்பாளர்
‘’சார் உங்களை பார்த்தா பாவமாருக்கு.. ச்சே என்னை மன்னிச்சிடுங்க’’ என்றார்.

‘’ஆக்சுவலி உங்க மனைவிய நினைச்சாதான் பாவாமாருக்கு சார்.. போய் அவங்க கிட்ட மன்னிப்புக்கேளுங்க... இப்படியே படமெடுத்து அவங்களை மொத்தமா கொன்னுடாதீங்க’’ என்று கடுப்போடு சொன்னார் குஜிலி.. அவர் இப்படியெல்லாம் பேசி நான் பார்த்ததேயில்லை. அப்படியே ஷாக்காகிட்டேன். இருவரும் பைக்கை முறுக்கிக்கொண்டு கிளம்பினோம்.