Pages

02 July 2013

ஓர் ஆழ்கடல் அனுபவம்
ஆர்ப்பரிக்கும் கடலை கிழித்துக்கொண்டு பாய்கின்றன இரண்டு படகுகள். படகுக்கு எட்டு பேர் என மொத்தமாக பதினாறு பேர். சூரியன் அப்போதுதான் கொட்டாவி விட்டபடி எட்டிப்இபார்க்கிறான். நேரம் காலை ஆறுமணி. இடம் பாண்டிச்சேரி அரிக்கமேடு.

SCUBA DIVING என்கிற ஆழ்கடல் நீச்சலில் முதன்முதலாக ஈடுபடப்போகிற ஆர்வகுறுகுறுப்போடு படகில் அமர்ந்திருந்தேன். ஆழ்கடல் நீச்சல் பயிற்சியாளரும் டெம்பிள் அட்வென்ச்சர்ஸ் நிறுவனத்தின் தலைவருமான அர்விந்திடம் பேட்டி எடுக்கலாம் என்று முடிவானபோது.. ‘’பாஸ் அந்த பேட்டியை ஏன் ஆழ்கடலிலேயே எடுக்க கூடாது’’ என்றார் குறும்புக்கார இளைஞரான அர்விந்த். அந்த யோசனை பிடித்திருந்தது. பாண்டிச்சேரிக்கு புறப்பட்டோம். களத்தில்...ம்ஹும், கடலில் இறங்கினோம்.

ஒருநாள் முழுக்க கடுமையான பயிற்சி. இரவெல்லாம் தூக்கமேயில்லை. முந்தைய நாள் முழுக்க நீச்சல்குளத்தில் தரப்பட்ட ஸ்கூபா டைவிங் குறித்த பயிற்சிகள், அறிவுறுத்தல்கள், மூச்சுப்பயிற்சி, சைகைகள், எப்படி நீந்துவது என எல்லாமே தலைக்குள் அடுக்கடுக்கான தகவல்களை அலை அலையாய் அடித்துக்கொண்டிருந்தது.

இதோ கடலை நோக்கிய பயணம் துவங்கிவிட்டது. கடலுக்கு நடுவே படகு செல்ல செல்ல... பாண்டிச்சேரி நகரின் எழிலான தோற்றமும் நிலப்பகுதிகளும் கொஞ்ச கொஞ்சமாக மறைய தொடங்குகிறது. சுற்றிலும் தண்ணீர்... தண்ணீர்... தண்ணீர் மட்டும்தான். எனக்கு லேசாக தலை சுற்றுவதைப்போலவும் வயிற்றை கலக்குவதைப்போலவும் வாந்தி வருவதாகவும் உணர்கிறேன். படகு வேறு அதிவேகமாக மேலும் கீழும் குலுங்கி குலுங்கி அச்சத்தை அதிகமாக்குகிறது.

ஒரு குறிப்பிட்ட இடத்தில் படகு நிறுத்தப்படுகிறது. நீண்ட மஞ்சள்நிற கயிற்றோடு இணைக்கப்பட்ட ஒரு துருப்பிடித்த நங்கூரம் கடலுக்குள் வீசப்படுகிறது. வீசப்பட்ட இடத்திலிருந்து சற்று தள்ளி போய் படகு ஆடிக்கொண்டே நிற்கிறது. அலைகளின் வேகத்தில் அது நிற்கிறதா அல்லது சென்றபடி இருக்கிறதா என்பதை யூகிக்க முடியவில்லை. ஆனால் ஆட்டம் ரொம்பவே அதிகம்.
என்னோடு வந்திருந்த பதினாறு பேரும் தங்களுடைய கவசங்களையும் உபகரணங்களையும் எடுத்து வேகவேகமாக அணிந்துகொள்கின்றனர். பதினாறு பேரில் ஆறுபேர் ஆழ்கடல் நீச்சலுக்கான லைசென்ஸ் பெற பரிட்சை எழுதவந்தவர்கள். PRACTICAL எக்ஸாம். கடலின் ஆழத்திற்கு சென்று சில பயிற்சிகளை சரியாக செய்தால் மதிப்பெண்கள் கொடுக்கிறார்கள்.

மாணவர்களில் ஒருவர் இன்னொருவருக்கு காற்று நிரப்பப்பட்ட அதிக எடைகொண்ட சிலிண்டரை கவசத்தோடு பொருத்துவதற்கு உதவுகிறார். ‘’அதிஷா நீங்களும் ரெடியாகுங்க..’’ என்கிறார் அர்விந்த். அவருடைய குரல் அசரீரியாய் கேட்கிறது. எங்கள் அனைவருக்கும் முன்பாக சகல உபகரணங்களோடு கடலில் குதித்திருந்தார் அர்விந்த்.

நானும் என்னுடைய WET SUIT ஐ எடுத்து அணிந்துகொள்கிறேன். அணிந்ததும் உடலில் வெப்பம் பரவுகிறது. BCD என்கிற காற்று நிரப்பவல்ல உடை கவசம். கண்ணாடியோடு இணைந்த மூக்கை அடைக்கிற முகமூடி. என்னுடைய முதுகிலும் 20கிலோ எடைகொண்ட சிலிண்டர். சிலிண்டரோடு இணைக்கப்பட்ட ரெகுலேட்டரின் ஒருமுனையை வாய்க்குள் விட்டு இணைத்துக்கொள்கிறேன். இனி பேச்சுக்கு தடை.. சைகைகளால் மட்டும்தான் சகல உரையாடலும்.

கால்களில் ஸ்கூபா பூட்ஸ் அணிந்து அதற்குமேல் FINS எனப்படும் துடுப்புகளைப்போன்ற காலணிகளை மாட்டிக்கொள்கிறேன். கிட்டத்தட்ட ஒரு கடல்கன்னியைப்போல மாறியாகிவிட்டது. இனி கடலில் இறங்கவேண்டியதுதான் பாக்கி.

எனக்கு முன்பே தயாராயிருந்த பத்துபேர் வரிசையாக ஒவ்வொருவராக படகிலிருந்து தலைகீழாக விழத்தொடங்கினர். உடலுக்கு பின்னால் இணைக்கப்பட்டிருக்கிற கவசம் ப்ளஸ் சிலிண்டர் எடையை தாங்குவதற்காக இப்படி ஒரு ஏற்பாடு. சும்மாவா முப்பது கிலோ அல்லவா?

‘’என்னது தலைகீழா விழணுமா? நான் மாட்டேன்..’’ பதறிப்போகிறேன். ‘’ஒன்னும் ஆகாதுங்க.. பிசிடி கவசத்துல இருக்கிற அடைக்கப்பட்ட காற்று தலைகுப்புற விழுந்தாலும் உங்களை நேரா மிதக்க வைக்கும் டோன்ட் வொரி, அதோட உங்க உடம்போடு இருக்குற எடை தண்ணீருக்குள் தனியாகத்தான் மிதக்கும். அந்த எடையை நீங்க உணரமாட்டீங்க’’ என்று தைரியம் சொல்லி குதிக்கச்சொல்கிறார் அர்விந்த்.

பயத்தை தூக்கி பக்கெட்டில் போட்டுவிட்டு ஒன்...டூ... த்ரீ.. ஜம்ப் என தலைகீழாக பின்னோக்கி கடலுக்குள் தொபுக்கடீர் என விழுகிறேன். குபுக் குபுக் என்கிற ஒலி மட்டும்தான் சில நொடிகளுக்கு கேட்டது.. வாயில் உப்புக்கரிக்கிறது. உடலெங்கும் ஜில்லென தண்ணீர் பட்டு சிலிர்க்கிறது.

எதையும் பார்க்க முடியவில்லை. சுற்றிலும் தண்ணீர்.. கால்கள் வானத்தை பார்த்திருக்க... தலை கடலுக்குள் மூழ்கியிருக்க..

‘’அவ்ளோதான்டா அதிஷா... நீ காலி’’ என்று மனது படபடக்க... எல்லாமே சில நொடிகள்தான். தானாகவே ஒரு குட்டிக்கரணமும் போட்டு தலைமேலே கால்கீழே என்கிற சகஜநிலைக்கு திரும்பிவிட்டேன். எனக்கு ஒன்னும் ஆகலை என்கிற உற்சாகம் ஒருபக்கம். கடலில் மிதக்கிற த்ரில் இன்னொருபக்கம்.

அர்விந்தும் நானும் கடலில் மிதந்துகொண்டிருந்தோம். அவரும் சகல கவசங்களையும் காற்றடைத்த சிலிண்டரையும் சுமந்துகொண்டிருந்தார்.

‘’ஓக்கே போலாமா’’ என்று சைகையில் கேட்கிறார். சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு... சரி என்பதற்கான கையசைப்பை காட்டினேன்.

நான் அரவிந்தின் கைகளை பற்றிக்கொள்ள, படகோடு இணைக்கப்பட்டிருந்த கயிற்றை பிடித்துக்கொண்டு உலகின் சகல தெய்வங்களையும் வேண்டிக்கொண்டு கடலில் மூழ்கினோம்.

மூழ்கியதும் சுற்றிலும் எதுவுமே தெரியவில்லை. முதலில் இருட்டு.. பிறகு கொஞ்சமாக நீலம்.. கருநீலம்.. அடர்நீலம் மட்டும்தான். உஜாலாவுக்கு மாறிவிட்ட ஒரு நீல உலகில் புகுந்திருப்பதை உணர்கிறேன். ஆனால் மூச்சுவிட முடியவில்லை. மூக்கை அடைத்துக்கொண்டிருக்கிறது முக கவசம். அதை நீக்கிவிட்டால் மூக்குவழியாக தண்ணீர் ஏறிவிடலாம். வாய்வழியாக வேகவேகமாக மூச்சு விடுகிறேன். இதயத்துடிப்பு அதிகரிக்கிறது. எதையும் பார்க்க முடியவில்லை சுற்றி என்ன இருக்கிறதென்பதை உணரமுடியவில்லை. அரவிந்தின் கைகளை மட்டுமே உணர்கிறேன்.

திருவிழா கூட்டத்தில் சிக்கிக்கொண்ட குட்டிப்பையன்கள் , திக்குதெரியாமல் தொலைந்து போய்விடுவோமோ என்கிற பயத்தில் அம்மாவின் கைகளை பிடித்துக்கொள்வதுபோல அர்விந்தின் கைகளை இறுகப் பற்றிக்கொள்கிறேன்.

கடலின் ஓங்காரம் காதுகளை கலவரப்படுத்துகிறது. கண்கள் முழுக்க அதன் நீல நிறம். கஷ்டப்பட்டு உற்றுப்பார்க்கிறேன். இப்போது அருகில் இருக்கிற அர்விந்த் மட்டும் மங்கலாகத் அலை அலையாய் தெரிய ஆரம்பிக்கிறார். அவர் எனக்கு முன்னால் வந்து.. தன் தோளில் இணைக்கப்பட்ட சிறிய அட்டையில் எழுதிய வாசகங்களை காட்டுகிறார். ‘’DON’T PANIC”

நான் சரி என்பதாக தலையை அசைக்கிறேன். கடலில் தலையை அசைத்தெல்லாம் எதையும் சொல்லக்கூடாது. சைகைகளால்தான் சொல்லவேண்டும். அர்விந்த் அதைநினைவூட்டுகிறார்.

மீண்டும் அட்டையை காட்டுகிறார். ‘’BREATH SLOWLY”. பொறுமையாக மூச்சை உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடு என்று கைகளை சிறகுகள் போல விரித்தும் அசைத்தும் சைகை மூலம் சொல்கிறார். வாய் வழியாக பொறுமையாக உள்ளே இழுத்து பொறுமையாக வெளியே விடத்தொடங்குகிறேன். அதையே பலமுறை செய்யச்சொல்கிறார். புத்தர் தன் சீடர்களுக்கு இப்படிதான் மூச்சுப்பயிற்சி கொடுத்திருப்பாராயிருக்கும். அர்விந்த் அதை என்னிடம் சொல்லும்போது முகத்தில் புன்னகையை உணர முடிந்தது.

மூச்சை இழுத்து மிகபொறுமையாக வெளியே விட விட... முதலில் மூளை அமைதியாகிறது. பிறகு உடல். சுற்றிலும் இருந்த அடர் நீலம்.. இப்போது வெளிர் நீலமாக மாறுகிறது. எனக்கு மிக அருகே சின்ன சின்ன நுண்உயிரிகள்.. பிச்சுப்போட்ட பஞ்சுபோல.. மிகமிகச்சிறிய லட்சக்கணக்கான குட்டி குட்டி உயிர்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. அரவிந்த் இப்போது மீண்டும் சைகையில் கேட்கிறார் ‘’என்ன ஓகேவா?’’. நான் சைகையில் ஓகே என்று சொல்ல.. கயிறை பிடித்தபடி ஒவ்வொரு மீட்டராக உள்ளே இறங்க ஆரம்பிக்கிறோம்.

இருமல் வருதைப்போல இருக்கிறது. வாய்க்குள் இருந்து ரெகுலேட்டரை எடுத்துவிட்டெல்லாம் இருமவோ தும்மவோ எச்சில் துப்பவோ முடியாது. ரெகுலேட்டர் வழியாகவேதான் சகலமும் நடக்கவேண்டும். ரெகுலேட்டரில் உள்ளே எதுவுமே நுழையமுடியாதென்பதால் வாய்க்குள் கடல்நீர் செல்ல வழியில்லை. ஆனால் அதன்வழியாக வாய்க்குள்ளிருந்து எதையும் வெளியேற்றும் வசதியுண்டு. இருமுகிறேன். அது காதுக்குள் அடைக்கிறது.

ஒவ்வொரு மீட்டரிலும் காதுகள் அடைத்துக்கொள்ளும். மலைமீது பயணம் செய்யும்போது காதுகள் அடைத்துக்கொள்ளுமே அதுபோல... கடலுக்குள் போகும்போது அழுத்தம்காரணமாக இப்படி ஒவ்வொரு மீட்டரிலும் ஏற்படும். அந்த நேரத்தில் மூக்கை பிடித்துக்கொண்டு வேகமாக ஒரு மூச்சுவிட்டு காதடைப்பை சரிசெய்துவிட்டு கீழே இறங்கவேண்டும். ஒவ்வொரு மீட்டராக மூக்கடைப்பை சரிசெய்தபடி வாயால் பொறுமையாக காற்றைவெளியேற்றி மீண்டும் உள்ளிழுத்து இறங்கத் தொடங்குகிறேன்.

கீழே இறங்க இறங்க இன்னொரு புதிய உலகம் மௌனமாக விரியத்தொடங்குகிறது. நம்முடைய பரபரப்போ படபடப்போ வேகமோ சப்தங்களோ இல்லாத, எல்லாமே பொறுமையாக நகர்கிற, நீரினால் சூழப்பட்ட ஒரு பேரமைதியான உலகம். அங்கே எந்த உயிரினத்துக்கும் எதற்கும் அவசரமில்லை.

எல்லாமே பொறுமையாக அதேசமயம் உற்சாகமாக வாழ்கின்றன. என்னை
உரசி செல்கிறது குட்டிமீன்களின் கூட்டம். (ஆழ்கடல் நீச்சலில் முதல் விதி... கடலில் எதையும் தொந்தரவு செய்யக்கூடாது என்பதே!) அதனால் அசையாமல் அவை நகர்வதற்காக காத்திருக்கிறோம். கீழே கடலின் தரை தெரிகிறது. களங்கமற்ற தரை. அதில் சில கொடிகள் நீண்டும்... சில தாவரங்கள் மண்டியும் கிடக்கின்றன.

நேற்றுவரை டிஸ்கவரி, நேஷனல் ஜியாக்ரபிக் சேனல்களில் பார்த்ததை இப்போது நேரடியாக அனுபவிக்கிற பரவசத்தை சொல்லித் தீராது. பொறுமையாக தரையை நோக்கி இறங்குகிறோம். இப்போது முன்பைவிட காது அதிக வேகத்துடனும் எவ்வளவு அழுத்தி மூச்சு விட்டாலும் அடைப்பு நீங்காமல் காதில் லேசான வலியும் உண்டாகிறது.

ஒவ்வொரு மீட்டரிலும் அர்விந்த் பொறுப்பாக என்னிடம் விசாரிக்கிறார். சைகையில் ‘’ஓக்கேவா..’’ சைகையில் ‘’ஒகே’’. மீண்டும் இறங்குகிறோம். தரையில் மண்டியிட்டு அமர்கிறோம். ஸ்கூபா டைவிங்கில் கடல் தரையில் மண்டியிட்டுதான் அமரவேண்டும்.
அழகான வண்ணவண்ண மீன்கள் தரையிலும் மேலும் நீந்தி செல்கின்றன. தாவரங்கள் காற்றில் ஆடுவதைப்போல ஸ்லோமோசனில் ஆடிக்கொண்டே இருக்கின்றன. பிரமாண்டமான மீன்தொட்டிக்குள் உட்கார்ந்திருப்பதைப்போல இருந்தது. ஒரே அலைவரிசையில் ஒரு மிகபிரமாண்டமான ஒலி... காதை நிறைக்கிறது.

அர்விந்த் போகலாமா என்று கேட்கிறார். சரி என்கிறேன். அவரது கையைபிடித்து மீண்டும் மேலெழ... இந்த முறை அப்படியே கடலின் தரைக்குமேல் அரைமீட்டர் உயரத்தில் நீந்த ஆரம்பிக்கிறோம். பொறுமையாக அதேசமயம் சிறகு முளைத்து மெதுவாக பறப்பதைப்போல உணர ஆரம்பிக்கிறேன். மீண்டும் ஆர்வத்தில் வேகவேகமாக கால்களை உதைக்க ஆரம்பித்தேன்.. அர்விந்த் தன்னுடைய அட்டையில் ஏதோ எழுதிக் காட்டுகிறார். நெருங்கிப் பார்க்கிறேன். ‘’SLOWLY”!

பொறுத்தார் பூமி ஆள்வாரோ இல்லையோ, கடலுக்குள் போய்விட்டால் எவ்வளவுக்கெவ்வளவு பொறுமையாக இருக்கிறோமோ அந்த அளவுக்கு நம்மால் கடலில் இயல்பாக அதிக நேரம் இருக்க முடியும். மெதுவாக கால்களில் இணைந்திருந்த ஃபின்ஸை ஆட்டி ஆட்டி நீந்த ஆரம்பிக்கிறோம். பறந்துசெல்வதைப்போலவே இருக்கிறது.

நாங்கள் பிடித்துக்கொண்டிருந்த கயிறை விட்டுவிட்டு தனியாக சில மீட்டர்கள் கடலின் எழிலை கண்டு ரசித்தபடி நீந்த ஆரம்பித்தோம். வழியெங்கும் வண்ண மீன்கள், தாவரங்கள், நுண்ணுயிரிகள், பாறைகள் என தொலைக்காட்சிகளில் மட்டுமே கண்டுரசித்த ஆழ்கடலின் அதிசயங்கள். கிட்டத்தட்ட கால்மணிநேரமாவது திரிந்திருப்போம். (கடலுக்குள் சென்றபிறகு காலம் குறித்த பிரக்ஞை இல்லாதிருந்ததை வெளியே வந்தபின்தான் உணர முடிந்தது).

சிலநிமிடங்கள் சுற்றியபிறகு... அர்விந்த் மேலே போகலாம் என்பதற்கான சைகையை காட்ட.. மேல்நோக்கி கிளம்பினோம். பொறுமையாக ஒவ்வொரு மீட்டராக கயிறைப்பிடித்து மேலே ஏற ஆரம்பித்தோம். ‘’இங்கேயே நிரந்தரமா இருந்திட முடியாதா’’ என்கிற ஏக்கம் மனதைக் கவ்விக்கொண்டது. மூக்கு மட்டும் மஞ்சளாக உடலெல்லாம் வெள்ளிநிறத்திலிருந்த ஒரு குட்டி மீன் என்னை வழியனுப்புவதுபோல, கயிற்றுக்குப் பக்கத்திலேயே எங்களோடு வந்ததைப் பார்க்க சிலிர்ப்பாக இருந்தது.

மேலே ஏறிவந்தோம். பழைய அதே பரபரப்பான உலகம். படகின் எஞ்சின் சப்தம். ‘’வந்தாச்சு’’ என்கிற மற்ற நண்பர்களின் உற்சாக குரல்.
மீண்டும் படகில் ஏறி அமர்ந்தபின்னும் பொறுமையாக மூச்சுவிட்டுக்கொண்டிருந்தேன். என்னை சுற்றி எல்லாமே பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்க நான்மட்டும் ஆழ்கடல் நினைவில் இன்னமும் பொறுமையாக மூச்சுவிட்டுக்கொண்டிருக்கிறேன். பொறுமையாக... மெதுவாக.. உள்ளே இழுத்து.. மெதுவாக வெளியே விட்டுக்கொண்டு... ஒரு தியான வகுப்பிலிருந்து வந்ததுபோல...!

இம்முறை படகு கடல் அலைகளால் வேகமாகவே ஆடினாலும் என்னால் அதை அதன் போக்கில் ஏற்றுக்கொள்ள முடிந்தது.
நிச்சயமாக ஸ்கூபா டைவிங் சாகச விளையாட்டு கிடையாது. அதை, நம் மனதை ஒருநிலைப்படுத்துகிற எத்தனையோ வகை தியானங்களில் ஒன்றாகக் கருதலாம். அதோடு நாம் கொஞ்சமும் அறிந்திடாத முற்றிலும் மாறுபட்ட ஒரு உலகத்தை நமக்கு அறிமுகப்படுத்திவைக்கும்.

நம்முடைய வாழ்க்கையை விலகி நின்று ஏன் இப்படி ஒரு அசுர வேகத்தில் பயணிக்கிறோம் என்கிற புரிதலையும் உண்டுபண்ணும்.
ஆழ்கடல் நீச்சல் என்பது வெளிப்பார்வையில் கடலுக்குள் நிகழ்த்தப்படும் சாகசம் என்றாலும், அது நம் மனதின் ஆழத்தில் மிகநல்ல அதிர்வலைகளை உண்டாக்க வல்லது. வாழ்க்கையில் ஒருமுறையேனும் நாம் அனைவருமே அனுபவித்துப்பார்க்க வேண்டிய அந்தப் பரவச அனுபவத்திற்கு நீங்கள் தயாரா?

****


******************************************************

சில குறிப்புகள்

*பொழுதுபோக்குக்காக பண்ணுகிற FUN டைவிங்கிற்கு நீச்சல் தெரிந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை.

*பத்துவயதுக்கு மேற்பட்ட நல்ல உடல்நிலையில் இருக்கிற யாரும் ஸ்கூபா டைவிங் செய்ய இயலும்.

*உடல்நிலை குறித்த சகல விபரங்களும் பெறப்பட்ட பின்பே டைவிங் செய்ய இயலும், உங்கள் உடல்நிலையில் பயிற்சியாளருக்கு திருப்தியில்லை என்றால் மருத்துவரின் சான்றிதழ் அவசியம்.

*பிப்ரவரி, மார்ச், அக்டோபர் ஆகிய மாதங்கள் ஸ்கூபா டைவிங்குக்கு ஏற்றது என்றாலும், மற்ற மாதங்களிலும் முயற்சி செய்யலாம்.

*நீச்சலின் போது அணிந்துகொள்கிற வெட் சூட் , நியோப்ரீன் என்கிற வேதிப்பொருளால் நெய்யப்பட்டது. கடலின் ஆழத்துக்கு செல்ல செல்ல குளிரத்தொடங்கும் அந்தநேரத்தில் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ள இந்த உடை உதவுகிறது.

*OPENWATER DIVING LICENSE க்கு நான்குநாள் பயிற்சி தரப்படுகிறது. இந்த லைசென்ஸ் இருந்தால் உலகின் எந்த மூலையிலும் நீங்கள் தனியாகவே பயிற்சியாளர்கள் துணையின்றி டைவிங் பண்ண முடியும். இங்கே லைசென்ஸ்பெற்று அந்தமானிலும் இலங்கையிலும் தாய்லாந்திலும் பலரும் டைவிங் செய்கிறார்கள்.

*டைவிங்கின் போது நாம் பயன்படுத்துகிற சிலிண்டரில் என்ன இருக்கும் தெரியுமா? 21%ஆக்ஸிஜன், 78% நைட்ரஜன், 1%மற்றவை. மிக ஆழமான பகுதிகளில் அதிக நேரம் நீச்சலடிக்க நைட்ராக்ஸ் NITROX என்கிற வாயுக்கலவை உபயோக்கப்படுத்தபடுகிறது. இதில் 36% ஆக்ஸிஜன் இருக்கும்.

*டைவிங்கில் லைசென்ஸ் பெற்றவராகவே இருந்தாலும் 40மீட்டருக்கு மேல் செல்ல அனுமதிப்பதில்லை. PROFESSIONAL DIVINGகில் தேர்ச்சி பெற்றவர்கள்கூட 60மீ வரைதான் செல்லமுடியும்.


***

விபரங்களுக்கு
http://www.templeadventures.com/
+91-9940-219-449 என்ற எண்ணிலோ
தொடர்பு கொள்ளலாம்.


***

(நன்றி -புதியதலைமுறை)