Pages

07 July 2013

வாத்தியார் சாமி
ஊருக்கு நடுவில்தான் பெரியவரின் சிலை இருந்தது. தோளில் துண்டு சாதாரண வேட்டி கதர் சட்டை என சாதாரணமாக காமராஜர் சிலை போல இருந்தாலும் கைகளில் மட்டும் அரிவாளோடு காணப்படும் அந்த சிலைதான் ஊருக்கே அடையாளமாக மத்தியில் நின்றது.

அது வாத்தியார் சாமி சிலை என குழந்தைகள் கூறுவார்கள். அந்த சிலை மீது காசெறிந்தால் நிறைய மார்க்கு கிடைக்கும் என்பதாக ஒரு நம்பிக்கை உலவியது. சிலையை சுற்றி எப்போதும் சில்லரை காசுகள் நிறைந்திருக்கும். அதை பொறுக்குகிற தைரியம் ஊருக்குள் யாருக்குமே கிடையாது. காரணம் பெரியவரின் படுபயங்கரமான ஃபிளாஷ்பேக்.

பல வருடங்களுக்கு முன்பு வாழ்ந்தவர் மாரப்பன் என்கிற இந்த பெரியவர். ஊருக்குள் அவருக்கு அனேக மரியாதைகளும் சலுகைகளும் இருந்தது. அதற்கு காரணம் அவர் மிகப்பெரிய வீரராக மக்கள் மத்தியில் போற்றப்பட்டார்.

அவரை பார்த்தால் எல்லோருமே எழுந்து நின்று வணங்குவார்கள். இவ்வளவுக்கும் அவர் நாட்டாமையோ எஜமானோ சின்னகவுண்டரோ கூட கிடையாது. வயதுக்கு வந்த நாளிலிருந்து வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டு திண்ணையில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரிடம் வெட்டி அரட்டை அடிக்கிற தண்டம்தான்.

அவர் சின்ன பிள்ளையாக இருந்தபோது ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் அங்கே செல்லவில்லை என்றும் அப்படி இருந்திருந்தால் இன்னேரம் நான்தான்டா ஜில்லா கலெக்டர் என்றும் பீத்திக்கொள்வார்.

இருந்தாலும் ஏன் இவருக்கு இவ்வளவு மரியாதை தெரியுமா? ''ஒருக்கா நம்மூருக்கு எம்ஜிஆர் வந்திருந்தப்ப.. நம்ம பெரிசு எம்ஜிஆரையே கெட்ட வார்த்தைல திட்டிட்டாரு...''

''அச்சசோ அப்புறம்''

''அதுவும் என்ன வார்த்தைல திட்டினாரு தெரியும்ல.. $*&%&$%* பயலேனு!''

''அடேங்கப்பா.. ஏன்ப்பா எம்ஜிஆர் வேற மதர் சென்டிமென்ட் பாக்கற ஆளாச்சேப்பா.. அம்மாவ பத்தி... அய்யயோ... புடிச்சு நறுக்கியுட்டுல்ல அனுப்பிருப்பாரு''

''அதான் இல்ல.. எம்ஜிஆரு கோவமா பார்த்தாராம்.. இவரு எம்ஜிஆரை பார்த்து ஒரு மொறை மொறைச்சதும்.. எம்ஜிஆருக்கே பயமாயி.. துண்டகாணோம் துணியக்காணோம்னு ஓடிட்டாராம்ல.. அப்பதான் இவரோட வீரம் ஊருக்கு தெரிஞ்சது..

அப்பருந்துதான் இவருக்கு மாலைதான் மானாவாரியா மரியாதைதான்.. அவரு பேர பலருக்கும் வச்சாங்க தெரியும்ல.. வாத்தியாரை வென்ற வாத்தியார்னு பட்டம் கூட உண்டுல்லா''

''அவரை எப்படியாச்சும் பழிவாங்கணும்னு எம்ஜிஆர் ரசிகருங்க திரிஞ்சாய்ங்க. அப்பதான் கலைஞரோட சண்ட போட்டுட்டு எம்ஜிஆர் வேற தனிக்கச்சி தொடங்கிருந்தாரு, அதனால பெரிசுக்கு திமுகாரங்க சப்போர்ட்டாருந்தாங்க... ஒருக்கா சீட்டு கூட கொடுக்கறேன்னாங்களாம் வேண்டாம்னுருச்சாம் பெரிசு''

அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த பெரிசு ஒருமுறை நோய்வாய்ப்பட்டு மரணப்படுக்கையில் கிடந்தார். அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமேயில்லை. அவருக்கு உதவ சென்ற மருத்துவர் ஒரு தீவிர எம்ஜிஆர் ரசிகர். அது பெரிசுக்கும் தெரியும். எங்க டாக்டர் எம்ஜிஆரை திட்டினத மனசுல வச்சு நம்மள கொன்னுடுவாரோ என்கிற பயத்தில் ஒரு உண்மையை சொன்னது.

''வைத்தியரே, நான் எம்ஜிஆர திட்டினது நெஜம்தான்.. ஆனா அது அவருக்கு கேக்கல.. நம்மூருக்கு பிரச்சாரத்துக்கு வந்தவரு வேன்ல நின்னு எல்லாருக்கும் கைகாட்டினாரு.. நான் கூட்டத்துல நின்னு டாடா காட்டிகிட்டிருந்தேன். அப்ப எவனோ ஒருத்தன் என் கால மிதிச்சிட்டான். கடுப்பாகி டே %&&%** பயலேனு திட்டினேன்.. அப்பதான் எம்ஜிஆர் எங்க பக்கம் டாட்டா காட்டிகிருந்தாரு.. லைட்டா மழை தூவவும் வண்டிக்குள்ள போயிட்டாரு. உடனே அங்கிருந்து கிளம்பிட்டாங்க, அதனால நான் சொன்னது அவரைதானு என் பக்கத்துல நின்ன பக்கிங்க நினைச்சிகிருச்சி.

அவிங்கதான் ஊருக்குள்ள போயி அண்ணன் எம்ஜிஆரை திட்டினாருனு கெளப்பி விட்டானுங்க.. அத நம்பி ஊர்க்கார பயலுகளும் என்னை வீரன்னு சொல்லிட்டானுக.. நானும் அந்த கெத்தை மெயின்டெயின் பண்ணுவோம்னு அப்படியே சொல்லிகிட்டு திரிஞ்சிட்டேன்.''

''அட நன்னாரி'' என்றார் மருத்துவர்.

''தயவு செஞ்சு இதை யாருகிட்டயும் சொல்லிடாதீங்க டாக்டர்'' என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே பெரிசின் மூச்சு நின்று போனது.

மருத்துவர்தான் தப்பான மருந்து கொடுத்து கொன்றுவிட்டார். அவரை கொல்லச்சொன்னதே எம்ஜிஆர்தான் என்று ஊருக்குள் ஒரு கதை பரவியது. அதுவரை வீரனாக மட்டுமே அறியபட்ட அந்தப் பெரிசு அதற்கு பிறகு தியாகியாக மாறியது. பெரிசு செத்துப்போன சில மாதங்களில் எம்ஜிஆரும் செத்துப்போனார்.

''தன்னை கொன்னவன சும்மா விட முடியுமா.. எப்படிபட்ட பரம்பரை வம்சம்.. ஆவியா வந்து எம்ஜியாரை போட்டுச்சுல்ல.. திட்டம போட்டு கொன்னா சும்மா வுடுமா பெரிசு, அதான் ஆத்மா சாந்தியடையாம திரிஞ்சிருக்கு. நேரம் பார்த்து சோலிய முடிச்சிருச்சில்ல.. என்று இன்னொரு கதை பரவியது. இம்முறை பெரிசு போராளியாகியது. அவருடைய சிலை ஊருக்கு மத்தியில் திறக்கப்பட்டது.

முதலில் தூக்கிகட்டின லுங்கி பல்லில் கடித்த அரிவாளோடு டெரராகத்தான் சிலைவைக்க முடிவானது. ஆனால் பெரிசு அப்படி ஒருநாளும் இருந்ததில்லை. அதனால் அவருடைய இயல்பான உடலில் ஒரு அரிவாளை மட்டும் சொருகிவைத்தனர். வாத்தியாரை கொன்ற வாத்தியார் இங்கே உறங்குகிறார் என்று சிலைக்கு கீழே எழுதிவைத்தனர். வாத்தியார் என்பதால் ஸ்கூல் வாத்தியார் என்று பிள்ளைகள் கருதி காசு போட்டு வேண்டுதல் பண்ணத்தொடங்கினர்.

ஒருமுறை ஏதோ உள்ளூர் தகராறில் ஒருவனை வெட்டி சிலைக்கு கீழே தூக்கிப்போட, அவனுடைய ரத்தம் சிலையிலிருந்து அரிவாளில் தெறித்திருக்கவும், அவனுடைய பூத உடல் அன்னாரின் காலடியில் கிடக்கவும் புதுக்கதைக்கான முடிச்சு உருவானது.

பிள்ளைக போட்ட சில்லரையை பொறுக்க வந்தவன வாத்தியார் சாமியே கொன்னுடுச்சுடே என யாரோ சொல்ல.. ஆமா அரிவாள்ல பார்த்தல்ல ரத்தகற.. சும்மாவாய்யா.. என இன்னொருவர் சொல்ல.. இப்படியே பில்டப்பை கூட்டி கூட்டி ஸ்கூலுக்கே போகாத மாரப்பன் வாத்தியார் சாமி ஆனார். அவருடைய சிலைக்கு சில்லரைகாசுகள் குவிந்தன.