Pages

05 August 2013

மௌனராகம் ரீமேக்!
‘’ஜெய் சென்ன கேசவா’’ என்று தொடைதட்டி ரயிலையே திருப்பி அனுப்புகிற பாலகிருஷ்ணா படங்கள், மஞ்சள் சட்டையும் சிகப்பு பேண்ட்டுமாக ‘’மஞ்சிகொத்தவா. கஞ்சிகித்தாவா..’’ என ஊட்டி சூட்டிங் ப்ளேசில் தொப்புள் தெரிகிற நாயகியோடு குத்தாட்டம் போடுகிற வயதான ஹீரோ, அல்லது கையில் விதவிதமான வித்யாசமான ஆயுதங்களோடு ரத்தம் தெரிக்க தெரிக்க கூறுபோடுகிற படங்கள்தான் நமக்கு அதிகமாக பரிச்சயமான தெலுங்கு சினிமா. அதுமாதிரியான திரைப்படங்களே இங்கே தொடர்ந்து டப் செய்யப்பட்டும் வெளியாகின்றன.

ஆனால் ‘’அந்தால ராட்சசி’’ படத்தை பார்த்து முடிக்கும்போது, தெலுங்கு திரையுலகம் குறித்த நம்முடைய சகல முன்முடிவுகளும் உடைந்து நொறுங்கும். அடேங்கப்பா டோலிவுட்ல இப்படி கூடவா படம் எடுக்கிறாய்ங்க என்கிற எண்ணம் தலைப்படும். அப்படி ஒரு படம் ‘’அந்தால ராக்சசி’’ (தமிழில் அழகான ராட்சசி!). அந்த அளவுக்கு மென்மையான காதலையும் அன்பே உருவான யதார்த்த மனிதர்களையும் கொண்டிருக்கிறது இத்திரைப்படம்.

படத்தின் இயக்குனர் ஹனு ராகவப்பூடி ஒரு HARDCORE மணிரத்னம் ரசிகராக இருப்பார் என்று யூகிக்கிறேன். படத்தின் ஒவ்வொரு ஷாட்டிலும் ஒவ்வொரு ஃப்ரேமிலும் லொக்கேஷனில் வசனத்திலும் பாத்திரங்களின் மேனரிசம் உடைகள் தொடங்கி சகலத்திலும் மணிரத்னம் தெரிகிறார். அதற்காகவே தென்னிந்திய சினிமாவை மணிரத்னம் ஆட்சி செய்த 90களின் துவக்கத்தை தன்னுடைய படத்தின் காலமாக வைத்திருக்கிறார்.
நாடிநரம்பெல்லாம் மணிரத்னத்தை நேசிக்கிற ஒரு ரசிகனால் மட்டும்தான் இப்படி ஒரு படத்தினை எடுக்க முடியும். படத்தின் கதையும் கூட மௌனராகம் கதையேதான்!

மௌனராகம் படத்தின் கிளைமாக்ஸ்தான் இந்தபடத்தின் இடைவேளை. இறந்து போன பழைய காதலனை மறந்துவிட்டு தன்மீது உயிராய் இருக்கிற கௌதமோடு புதிய உறவில் அடியெடுத்து வைக்கிறாள் மிதுனா. அந்த நேரத்தில் அதிர்ச்சிகரமான ஒரு தகவல் கௌதமுக்கு வருகிறது. இறந்துபோனதாக நினைத்துக்கொண்டிருந்த சூர்யா இறந்துபோகவில்லை இன்னும் உயிருடன்தான் இருக்கிறான்!
தன்னுடைய அடையாளங்களை மறைத்துக்கொண்டு சூர்யா குடிகாரனாக அவளைநினைத்து பைத்தியக்காரனைப்போல வாழ்ந்துகொண்டிருக்கிறான். எதற்காக சூர்யா இப்படி தலைமறைவானான்? கௌதம் இப்போது என்ன செய்யப்போகிறான்? மிதுனா யாருடன் சேர்ந்தாள்? என்பதை எல்லாம் பர்மாபஜார் டிவிடியில் காணலாம்.

மிதுனாவாக நடித்திருக்கிற லாவன்யா திரிபாதி நிஜமாகவே அழகான ராட்சசிதான். ஒல்லிபிச்சானாக இருந்தாலும் அக்னிநட்சத்திரம் அமலாவை நினைவூட்டுகிறார். அதோடு மணிரத்னம் படங்களில் வருவதைப்போலவே குழந்தைகளை அடிக்க ஓடும்போது நாயகனை சந்திப்பதும், முதலில் அவனை வெறுத்து திட்டுவதும்.. பிறகு அவனுக்காக கிடந்து உருகுவதும் சோக்யூட்!

தளபதி அர்விந்த்சாமியின் சாயலில் இருக்கிறார் படத்தின் ஒரு ஹீரோ ராகுல் ரவீந்திரன். இவர் சென்னை பையனாம். விண்மீன்கள் என்கிற படத்திலும் மாஸ்கோவின் காவேரி என்கிற படத்திலும் நடித்தவராம்! முதல் பாதி முழுக்க மாறாத புன்னகையும் முகமெங்கும் தவழும் அமைதியுமாக வருகிறவர் இரண்டாம்பாதியில் உண்மையை சுமந்துகொண்டு கதறியபடி திரிகிறார். சூர்யாவாக வருகிற நவீன் சந்திரா மீரா படத்தில் வருகிற விக்ரமைப்போல அழகாகவும் மேன்லியாகவும் இருக்கிறார். அதோடு அவருடைய இயல்பான நடிப்பும் மேனரிசமும் ரசிக்க வைக்கின்றன.

படம் முழுக்க ஒளியைவிட நிழலை பிரமாதமாக பயன்படுத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் முரளி. பிசி ஸ்ரீராம்-மணிரத்னம் காம்போ படங்களில் மட்டுமே பார்த்திருந்த அந்த இருட்டு மேஜிக். படம் முழுக்க நீள்கிறது. குறிப்பாக ஊட்டியில் படம்பிடிக்கப்பட்டிருக்கிற காட்சிகள் எல்லாமே அற்புதம்தான். பாசிபடர்ந்த எப்போதும் ஈரம் மிஞ்சி இருக்கிற மொட்டைமாடியும் அங்கே எப்போதும் பேசிக்கொண்டிருக்கிற காதலர்களும், தூரத்திலிருந்து குரல்கொடுக்கிற குழந்தைகளும், ஓடும் பஸ்ஸில் தாவி ஏறி காதலியிடம் வம்பு பண்ணு காதலன் என படத்தில் ரசிக்க ஏராளமான காட்சிகள்.

இளம் இசையமைப்பாளர் ராதன் படத்துக்கு நன்றாகவே இசையமைத்திருந்தாலும் இந்தப்படத்துக்கு இளையராஜா மட்டும் இசையமைத்திருந்தால் இதே படத்தை வேற லெவலுக்கு எடுத்துச்சென்றிருப்பாரோ என படம் பார்க்கும் போது தோன்றியது. மௌனராகம் படத்தின் பலமே ராஜாசார்தானே!

அனைவரும் பார்த்து ரசிக்க ஏற்றபடம்தான் என்றாலும் நீங்கள் மணிரத்னம் ரசிகராக இருந்தால் இந்தப்படத்தை நிச்சயமாக ரொம்பவே ரசிப்பீர்கள். உங்கள் நாஸ்டால்ஜியாவுக்கு சரியான தீனிபோடக்கூடியதாகவும் இப்படம் இருக்கும்.

(தெலுங்குபடங்களுக்கே உரிய எந்த அடையாளங்களும் இன்றி, இயல்பாக இனிமையாக அதிக ஆர்பாட்டமில்லாமல் எளிமையான காதலை சொன்ன இப்படத்தை தயாரித்தவர் எஸ்.எஸ்.ராஜமௌலி! பிரமாண்ட படங்கள் மட்டுமே எடுக்கிற டோலிவுட் ஷங்கர். (நான் ஈ படத்தின் இயக்குனர் என்றால் எளிதாக புரிந்துகொள்ளலாம். 2012ல் வெளியான இப்படத்தின் டிவிடி பர்மாபஜாரில் சப்டைட்டிலுடன் கிடைக்கிறது வாங்கி பார்த்து ரசிக்கலாம். )