Pages

13 August 2013

லுங்கி டான்ஸு... லுங்கி டான்ஸு...பாலிவுட் பானிபூரி மசாலாவை கோலிவுட் சரவணபவன் போண்டாவுக்குள் வைத்து திணித்து வேகவைத்துக் சாம்பாரில் முக்கி கொடுத்தால் எப்படி இருக்குமோ அப்படிதான் இருக்கிறது சென்னை எக்ஸ்பிரஸ். ஷாருக்கானை வைத்து எடுக்கப்பட்ட ஒரு மோசமான மொக்கையான லாஜிக்கேயில்லாத கிறுக்குத்தனமான தமிழ்ப்படம். ஆனால் வயிறுகுலுங்க சிரித்து சிரித்து ரசித்து பார்க்க கூடிய சூப்பர்ஹிட் ஹிந்திப்படம்.

ஷாருக்கானை அவருடைய படங்களை உங்களுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமென்றால் உங்களால் சென்னை எக்ஸ்பிரஸை நொடிக்கு நொடி ரசிக்க முடியும். ஷாருக்கானை உங்களுக்கு பிடிக்காதென்றால் ரொம்ப ரொம்ப நல்லது. இந்தப்படம் இன்னும் அதிகமாக உங்களுக்கு ரசிக்கும். உங்களுடைய இடது மூளை இயங்கவே இயங்காதென்றால் இது உங்களுக்கு நிச்சயம் அனுகூலம்தான். இப்படம் ஒரு மகத்தான காவியமாக இருக்கும்!

ஒரு மிகப்பெரிய ஸ்டார் ஆக்சன் படங்களில் நடித்தவர், படம் தொடங்கியதிலிருந்து வண்டுசிண்டுகளுக்கெல்லாம் பயப்படுகிறார். திடீரென கிளைமாக்ஸில் ஆயிரக்கணக்கானவர்களை அடித்து நொறுக்கி விஸ்வரூபம் எடுக்கிறார். பழைய ஃபார்முலாதான். அதற்கு நடுவில் முத்து படத்திலிருந்து ஒரு சீன், கில்லியிலிருந்து இரண்டு சீன், ஜப்வீமெட்டிலிருந்து நாலு சீன் என இன்னும் பல படங்களிலிருந்து நிறைய சீன்களை பொறுக்கிப்போட்டு கதை பண்ணியிருக்கிறார்கள். இருந்தாலும் படம் பார்க்கும்போது நமக்கு பிடிக்கிறது. படத்தின் கதை நம்மூர் சுபாஷ் (சத்ரியன் புகழ்!)

தங்கபலி என்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிலேயே யாரும் பெயர்வைக்கமாட்டார்கள் ஆனால் படத்தில் வருகிற நெடிதுயர்ந்த வில்லனுக்கு அதுதான் பெயர். பெருமாள் கோயில் பூசாரி பட்டை போட்டுக்கொண்டு பூஜை பண்ணுகிறார். திபெத் பக்கம் இந்தியா பார்டர் பக்கமாக இருக்கிற தமிழ்கிராமம். ஊர்பேர் கொம்பனாம்? அதுபோதாது என்று ‘விடம்பா’ என்ற பெயரில் கூட ஒரு தமிழ்கிராமம்.. ஊரில் சகலரும் ஐயர் ஐயங்கார்களாக நிறைந்திருக்கிறார்கள். இதுபோக இன்னும் பல லூசுத்தனமான லாஜிக் மீறல்கள் நிறைந்திருக்கின்றன. இருந்தும் படம் ரசிக்கிறது.

தீபிகா படுகோன் போல எப்போதும் மார்பு தெரிய மாராப்பும், தொப்புளுக்கு கீழே இரண்டு அடி தள்ளி தாவணி போட்ட பெண்ணை யாருக்குத்தான் பிடிக்காது. அவருடைய மேக் அப் கொஞ்சம் ஒல்லியான ஹேமாமாலினியையும் கவர்ச்சியான ஸ்ரீதேவியையும் நினைவூட்டுவதாக அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க எல்லா காட்சிகளிலும் வந்தாலும் பார்த்துகொண்டே இருக்கலாம் என்றுதான் தோன்றுகிறது. படத்தின் மிகப்பெரிய பலமே தீபிகா படுகோனேவின் அழகுதான். அதிலும் லுங்கி கட்டிக்கொண்டு ஆடும்போது... ம்ம் க்ளாசிக்.

ஷாருக்கானைத்தவிர வேறு யார் இந்தப்படத்தில் நடித்திருந்தாலும் இப்படம் நன்றாக இருந்திருக்காது. ஏனென்றால் இது ஷாருக்கானுக்கே ஷாருக்கானுக்கான படம். ஒவ்வொரு காட்சியிலும் ஷாருக் நிறைந்திருக்கிறார். படம் முழுக்க ஷாருக்கான் நடித்த தில்வாலே துல்ஹனியாவில் தொடங்கி மைநேம்ஈஸ் கான் வரை சகல படங்களையும் கலாய்க்கிறார்கள்.

படத்தின் வசனங்கள் அத்தனையும் அப்படியே கிரேஸிமோகன் டைப். உதாரணத்துக்கு. ‘’எல்லாரும் டிரைனை மிஸ்பண்ணிட்டு ப்ளாட்பாரத்துல நிப்பாங்க.. நான் ப்ளாட்பாரத்தை மிஸ்பண்ணிட்டு டிரைன்ல நிக்கறேன்’’ என்று ஒரு வசனம் வருகிறது. படம் முழுக்க இதுமாதிரியான ஒன்லைன்கர்கள் நிறைந்துகிடக்கிறது. எல்லாமே ரகளை ரகம்.

பச்சை பசேல் எழிலான லொக்கசேன்கள். எப்போதும் எல்லா ஃப்ரேமிலும் நிறைத்திருக்கிற நிறங்கள் என ஒளிப்பதிவாளர் கஷ்டபட்டு வேலை பார்த்திருக்கிறார். படம் முழுக்க எல்லா காட்சியிலும் ஷாருக்கான்,தீபிகா தவிர்த்து ஒரு 500பேராவது ஃப்ரேமை அடைத்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த 500 பேரில் ஒருவராக நம்முடைய மெகாசீரியல் நடிகர்கள் வந்துபோகிறார்கள் (சத்யராஜ், டெல்லிகணேஷ் உட்பட) .

படத்தில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ராகுல்காந்தியை கிண்டலடித்திருப்பது தெரிகிறது. தமிழக மீனவர் படுகொலை விஷயத்தை ஏதோ டீசல் கடத்துகிற விஷயத்தைப்போல சித்தரித்திருப்பது நெருடல்.

இந்தப்படத்தை பார்க்க ஹிந்தி தெரிந்திருக்கத்தேவையில்லை. தமிழும் கூட தெரிந்திருக்கத்தேவையில்லை. படத்திலும் காதலுக்கு மொழியே தேவையில்லை என்கிறார்கள். காமெடிக்கு கூட மொழியே தேவை இல்லை!