Pages

04 September 2013

ஸ்பென்சர் ப்ளாசாவில் ஒரு குடிகாரன்
நம்முடைய குடிமகன்களை மகிழ்விக்க தமிழக அரசு ஷாப்பிங் மால்களில் கூட டாஸ்மாக் கடைகள் திறக்கப்போவதாக ஒரு செய்தி நாளிதழில் காணமுடிந்தது. இதைப்பற்றி பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்தவண்ணமும் அச்சம் தெரிவித்தும் எழுதிய சில கருத்துமுத்துகளை பார்க்க முடிந்தது. அய்யகோ ஷாப்பிங் மால்கள் ரேப்பிங் மால்களாகிவிடுமே என்றெல்லாம் பதறிப்போய் ட்விட்டு போட்டிருந்தார் ஒரு பிரபல ட்விட்டர்.

ஷாப்பிங் மால்களில் டாஸ்மாக் என்கிற சமாச்சாரம் புதிதல்ல. ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை இளைஞர்களின் கூடாரமாக 'இருந்த' ஸ்பெனசர்ஸ் ப்ளாசாவில் ஒரு டாஸ்மாக் பார் இயங்கிக்கொண்டுதான் இருந்தது. இப்போதும் அந்த டாஸ்மாக் பார் இயங்குகிறதா என்று தெரியவில்லை. இன்று ஊரை சுற்றி ஊர்பட்ட மால்கள் உதித்துவிட்டதாலும் மௌன்ட்ரோடை துண்டாக்கி போட்டப்படும் மெட்ரோல் ரயில் பணிகளாலும் ஸ்பென்சர் பக்கம் அங்கிள் ஆன்டீஸ் தாத்தா பாட்டீஸ் எல்லாம் மழைக்கும் கூட அப்பக்கம் ஒதுங்குவதில்லை என்று கேள்விப்பட்டேன்.

மிகவும் நல்ல டாஸ்மாக் கடை அது. ஒரு ஷாப்பிங் மாலில் இருப்பதால் சரக்கு விலை அதிகமாக இருக்கும் என்கிற தவறான புரிதலாலேயே யாரும் அக்கடைப்பக்கம் வருவதில்லை. அதனால் நிறைந்த சனிக்கிழமைகளில் கூட அதிக கூட்டமிருக்காது. துர்நாற்றத்தொல்லைகள் கிடையாது. எனக்கு வாய்த்த நண்பர்களோ மிகவும் திறமைசாலிகள். குடிதான் கொஞ்சம் ஜாஸ்தி. ஒருகடை விடமாட்டார்கள் என்பதால் அக்கடை பரிச்சயமானது. அதோடு கூகிள் ஆர்குட் குரூப்ஸ் காலத்தில் அங்கே குழு உறுப்பினர் கூட்டங்கள் கூட நடந்ததுண்டு! குடித்துவிட்டு நேத்து நீ ஒரு கமென்ட் போட்டியா ரகள மச்சான் என பீத்திக்கொள்வோம்.

அளவான ஏசியும் ஆங்காங்கே ஒளிரும் சிகப்பும் நீலமும் என சிறப்பாகவே செயல்பட்ட கடை அது. கடையில் பக்க உணவுகளும் சுவையாகவே இருக்கும்.(என்னைப்போன்ற சைட்டிஷ் பட்சிகளுக்கு அதுதானே முக்கியம்). மிகப்பெரிய திரைவைத்து அதில் எந்நேரமும் ஏதாவது பாடல்காட்சிகள் ஓடிக்கொண்டிருக்கும். கிரிக்கெட் போட்டிகள் காலத்தில் மேட்ச்களும் உண்டு.

எவ்வளவு வேண்டுமானாலும் உட்கார்ந்து மொக்கை போடலாம். யாரும் நமக்குபின்னால் வந்து நின்று அன்னதானத்தில் இடம்பிடிக்கும் அவசரத்தோடு காத்திருக்க மாட்டார்கள் என்பது தனிச்சிறப்பு. ஒரு பீரை வாங்கி நான்கு பேர் குடிக்கும் வசதிகளும் உண்டு. அன்றைய மார்க்கெட் நிலவரப்படி விலைகூட மற்ற பெரிய பார்களோடு ஒப்பிடும்போது குறைவாகவே இருந்தது.

இந்த பாரின் ஒரே குறை உள்ளே சிகரட் பிடிக்க முடியாது. சிகரட் பிடிக்க மாடிகளிலிருந்து இறங்கி ஸ்பென்சர் பிளாசாவை விட்டே வெளியே வந்துதான் பிடிக்க வேண்டியிருக்கும். அதோடு ஆங்காங்கே செக்யூரிட்டிகள் இருப்பதால் குடித்துவிட்டு கலாட்டா பண்ணவும் வழியில்லை. குடித்தோமா கொஞ்ச நேரம் மொக்கைகளை போட்டோமா என்று கலைந்துவிடுவோம்.

நுங்கம்பாக்கம் பகுதியில் குடிப்பவர்களுக்கு இருக்கிற பெரிய பிரச்சனை பார்களில் குடித்துவிட்டு வெளியே வந்து பைக்கை கிளப்பி முக்கு திரும்பினால் காவல்துறை தன் கடமையை செய்யும்! ஆனால் ஸ்பென்சரிலிருந்து வெளியே வருகிறவருக்கு அப்பிரச்சனை சுத்தமாக கிடையாது.

ஸ்பென்சரிலேயே பீட்சா தொடங்கி பக்கோடா வரை பலவித உணவுகளும் கிடைக்குமென்பதால் குடித்துவிட்டு வெறும் வயிற்றோடு அல்லாடத்தேவையில்லை அங்கேயே எதையாவது வாங்கி வயிற்றை ரொப்பிக்கொண்டு வீட்டுக்கு போகலாம். ஒரே பிரச்சனை மாடிகளில் ஏறி இறங்கும்போது ஸ்டடியாக இருக்கவேண்டும். கால் இடறினால் காலன்கவ்விவிடுவான்.

இப்போதும் அக்கடை அதே இடத்தில் இயங்குகிறதா தெரியவில்லை. ஆனால் அக்கடையால் எப்போதும் யாருக்கும் எந்த தொந்தரவும் வந்ததில்லை. அதை கடைக்காரரே பலமுறை கூறியிருக்கிறார். அதனால் அரசு இப்படியொரு முடிவை எடுத்தால் யாரும் அஞ்சத்தேவையில்லை. அதோடு மோசமான குடிமகன்கள் குடிப்பதற்காக அவ்வளவு சிரமப்பட்டு மால்களில் மணிக்கு முப்பது ரூபாய் பார்க்கிங் கொடுத்தெல்லாம் வந்து குடிக்கமாட்டார்கள்!