Pages

10 March 2014

அசுணமா

நண்பர் வேல்கண்ணன் எழுதிய ‘’இசைக்காத இசைக்குறிப்புகள்’’ கவிதை நூல் விமர்சன கூட்டத்துக்கு சென்ற வாரம் சென்றிருந்தேன். கதிர்பாரதி, ஐயப்ப மாதவன் என பலரும் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் எழுத்தாளர் அமிர்தம் சூர்யாவின் பேச்சு அசத்தலாக இருந்தது. அவருடைய பேச்சில் அசுண பட்சி என்கிற சங்க காலத்துப் பறவையைப்பற்றி சொன்னார். மிகவும் சுவாரஸ்யமான பறவையாக இருந்தது.

இப்பறவை நம்முடைய பழைய இலக்கியங்களில் வருவதாக குறிப்பிட்டார். இந்த அசுணபட்சி. ‘’புகுரி’’ என்கிற புல்லாகுழலை ஒத்த இசைக்கருவியை வாசித்தால் எங்கிருந்தாலும் பறந்துவந்து பக்கத்திலேயே அமர்ந்து கேட்குமாம்! ச்சூச்சூ என விரட்டிவிட்டாலும் போகாதாம்! இந்த புகுரி இசையை அது ரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்காவது ஒரு விநாடி தப்பாக வாசித்துவிட்டால், அந்த இடத்திலேயே தன் இறக்கைகளை அடித்துக்கொண்டு அப்படியே விழுந்து செத்துப்போகும் என்று குறிப்பிட்டுச்சொன்னார்.

இப்படி ஒரு பறவை இருந்ததா இல்லையா என்கிற கேள்விகளை தூக்கி கக்கத்தில் வைத்துவிட்டு , இந்தக்கற்பனையை வெகுவாக ரசித்தேன். சின்ன வயதில் பள்ளியில் அன்னப்பறவை பற்றியும் அது தண்ணீரையும் பாலையும் பிரித்துவிடும் என்றும் படித்ததெலாம் நினைவில் வந்துபோனது! பெரும்பாலான நேரங்களில் அது கழுத்து நீண்ட வெள்ளை வாத்து என்றே கற்பனை பண்ணியிருக்கிறேன். அப்படிதான் நம்முடைய ஆட்கள் எல்லோருமே ஒவியங்களிலும் குறிப்பிட்டிருப்பார்கள்.

அசுணப்பறவை குறித்து வீட்டிற்கு வந்ததும் தேட ஆரம்பித்தேன். கூகிளிருக்க பயமேன். இப்பறவை பாடப்பெற்றதாக அமிர்தம் சூர்யா குறிப்பிட்ட கம்பராமாயணப்பாடலிலிருந்து ஆராய்ச்சியை தொடங்கினேன்.

‘’துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில், யாழ்
நறை அடுத்த அசுண நன் மாச்செவிப்
பறை அடுத்தது போலும்-என் பாஅரோ’’

(யாழ் இசையில் மகிழ்ந்து திளைக்கும் அசுணம் எனும் நல்ல விலங்கு, பறையின் வல்லோசை
கேட்டால் உயிர் விட்டுவிடும் என்பர். அதுபோல ‘நற்கவிதைகள்
கேட்டுத் திளைத்த செவிகளில் என் புல்லிய பாவின் ஓசை
வீழ்ந்ததால் கேட்டோர் துன்புறுவர் – என்பது இப்பாடலின் விளக்கம்)

இப்பாடலில் புகுரி வாத்திய கருவி பற்றியும் குறிப்பு எதுவும் இல்லை. பாட்டில் பிழை இருந்தால் செத்துப்போகும் என்பதாகவும் இல்லை. யாழிசைக்கு நடுவில் பறை இசை கேட்டால் அதிர்ச்சியில் இறந்துபோகும் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அசுண நன்மா என்று குறிப்பிட்டிருப்பதால் இது விலங்காகவும் இருக்கலாம் என்று ஒருநண்பர் சந்தேகமாக குறிப்பிட்டார். மா என்பதற்கு விலங்கு என்பதே பொருள் (அகராதியில் பார்த்துட்டேன்!). அதோடு அது பறக்கவல்லது என்பதாக குறிப்புகளும் இல்லை. என்னங்கடா இது இது பறவை இல்லையா என்று மேலும் அதிர்ச்சியாகி கூகிளாண்டவர் உதவியோடு தேடலை இன்னும் நன்றாக முடுக்கினேன்.

அசுணத்தைத் தேடப்போக ‘மாசுணம்’ என்கிற வார்த்தை தமிழில் இருப்பது தெரியவந்தது. மாசுணம் என்பது மிகவும் நீண்ட பாம்புவகையை குறிப்பதாகும் (ராஜநாகமாக இருக்கலாம்!). சிவபெருமானுக்கு மாசுணங்கங்கணன், மாசுணங்கச்சயன் என்கிற பெயர்களும் உண்டாம்! இங்கே கம்பராமாயண பாடலை நோட் பண்ணுங்க ‘’அசுண நன்மா’’ என்று அவர் குறிப்பிடுகிறார்? கன்ப்யூசிங் இல்ல!

மாசுணத்தைதான் ரிவர்ஸில் அசுண நன்மா என்று குறிப்பிடுகிறாரோ என்கிற சந்தேகமும் வர தலை சுற்றியது! ''அசுணமா'' என்பதே அதன் சரியான பெயர் என்பதும் தெரியவர மேலும் கூகிளிட… ஓர் அருமையான இணைப்பு கிடைத்தது.

http://www.gunathamizh.com என்கிற இணையதளத்தில் இந்த அசுணமா பறவையா விலங்கா? என்பது குறித்து ஒரு சின்ன ஆராய்ச்சியை ஏற்கனவே 2008லேயே செய்திருந்தார்கள்.

சங்க இலக்கியத்தில் மலைபாம்பினை மாசுணம் என்றே குறிப்பிட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். "களிறகப்படுத்த பெருஞ்சின மாசுணம்(நற்- 261.6)துஞ்சு மரங்கடுக்கும் மாசுணம் (மலைபடு- 261.)என்கிற பாடலையும் இதற்கு உதாரணமாக குறிப்பிடுகிறார்,

‘’ அசுணமா ஊர்வன இனத்தைச் சேர்ந்த மலைப்பாம்பே ஆகும்.இதனை மாசுணம் என்ற பெயரிலும் அழைத்தனர்.இலக்கியச்சொல்லாட்சிகள் அசுணமாவே மாசுணம் என்பதைப் புலப்படுத்துகின்றன.'அசுணமா யாழ் குழல் ஆகிய இனிய இசையை கவனிப்பதாக இலக்கியங்கள் இயம்புகின்றான.இன்றும் மகுடி ஓசைக்கு பாம்புகள் மயங்கும் என்ற நம்பிக்கை உள்ளது ‘’ என்பதாக குறிப்பிட்டு அசுணமா என்பது அக்காலத்து பாம்புவகை. அது இசையால் உண்டாகும் அதிர்வினால் வாசிக்கப்படும் இடத்திற்கு வரும் என்றும்.. வந்த இடத்தில் பறை இசை அதிர்வினால் அதிர்ச்சிக்குள்ளாகி மயங்கிவிழும் என்றும் புரிந்துகொள்ளலாம் என்கிறார்!

(விரிவாக இங்கே http://www.gunathamizh.com/2008/05/blog-post_02.html)

"அசுணமா"ங்கறது பாம்பா பறவையான்றதே குழப்பிகிச்சு… ஆனால் பொள்ளாச்சியை சேர்ந்த பாற்கடல் சக்தி என்கிற கவிஞர் அசுணவேட்டை என்கிற கவிதையை எழுதியிருக்கிறார்.

அதில் ''அசுணப்பறவை இசையை பிரித்தரியவல்லது!'' என்பது மாதிரி குறிப்பிட்டுள்ளார். (அன்னப்பறவை தண்ணீரையும் பாலையும் பிரிக்கிறார்ப்போல!). அனேகமாக கவிஞர்கள் மத்தியில் இந்த அசுண பட்சி மிகவும் புகழ்பெற்ற MYTH ஆக இருக்குமென்று புரிந்தது. எனக்கு அது பறக்கும் பாம்பாக இருந்திருக்குமோ என்றுகூட தோன்றியது! கற்பனைதானே...

அதுசரி அந்த புகுரி என்கிற வாத்தியக்கருவி? அதைப்பற்றி தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. புகுரி என்ற சொல்லே அகராதியில் இல்லை!(நான் பார்த்த அகராதியில்) ஒருவேளை மகுடிக்குத்தான் அப்படி பெயரோ என்னவோ…

சில கற்பனைகள் அழகானவை அதைப்பற்றி ஆராய்ச்சிகளில் இறங்குவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இதன்மூலம் தெரிந்துகொண்டேன். அசுணமா எனக்கு பட்சியாகவே இருந்திருக்கலாம்.