Pages

09 May 2014

2 ஸ்டேட்ஸ்2ஸ்டேட்ஸ் படம் பார்க்க பஜன்லால் சேட்டுகளும் அவருடைய சந்ததிகளும்தான் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். ஒரே ஆயா காயா போயா வாயா என இந்தி வாசனை.

பஞ்சாபி நாயகனுக்கும் தமிழ் நாயகிக்கும் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகி காதல்கனிய இரண்டு குடும்பங்களும் அடித்துக்கொண்டு பின் கொஞ்சி குலாவி கடைசியில் கல்யாணமாகி சுபம் போட… ஒரே நாட்டில் வாழ்கிறோம் என்பதை தவிர்த்து இந்த பழம்பெரும் கலாச்சாரங்களுக்கு எவ்விதத்திலும் தொடர்பில்லாத ஆட்கள் இப்படத்தை குதூகலித்து கொண்டாடுகிறார்கள்.

சேதன் பகத்தின் 2ஸ்டேட்ஸ் நாவலை வாசித்ததில்லை. ஜாலியான ரொமான்றிக் நாவல் என்று மட்டும் நண்பர்கள் சொல்ல கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் நாவலை படித்த யாருக்கும் படம் அவ்வளவு ப்ரியப்படவில்லை. நல்ல வேளையாக அதனாலேயே படம் எனக்கு ஒரளவு பிடித்தேயிருந்தது. நாவல் சேவல் தாவலையெல்லாம் விடுங்கள். அலியாபட்டின் அழகுக்கும் க்யூட்னஸ்க்குமே இப்படத்தை இன்னொரு முறை பாரக்கலாம்! அப்படி ஒரு முகம் அந்த பெண்ணுக்கு.. பார்த்தவுடன் ஓடிப்போய் ஒரு லவ்லெட்டரை நீட்டி அம்மையாரே ப்ளீஸ் தயவு செஞ்சு என்னை லவ்பண்ணிடுங்க இல்லாட்டி உயிர உட்ருவேன் என கெஞ்சவைக்கிற க்யூட் முகம்!

படம் முழுக்க ஃப்ரேமுக்கு ஃபேரம் அவ்வளவு மெலோட்ராமா. ஆனால் அதுகூட பார்க்க நன்றாக சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. ரொம்பநாள் ஆகிடுச்சு இப்படியெல்லாம் படம்பார்த்து. சமீபத்தில் இத்தனை அன்பும் பரிவும் சினேகமும் பாசமும் சோகமும் நிறைந்த படத்தை பார்த்த நினைவில்லை.

படம் முழுக்க பிரதான பாத்திரங்கள் எல்லோருக்கும் ஏதாவது வாழ்வாதார பிரச்சனைகள் இருக்கிறது. அது தன்னுடைய திறமையை வளர்த்து கொள்ள துடிக்கிற ரேவதியில் தொடங்கி தன் குடும்பத்தோடு ஒன்றாக இருந்தும் தனித்திருக்கிற நாயகனின் தந்தைவரைக்குமாக நீள்கிறது. அவர்கள் எல்லோருக்கும் ஒரு அழகான மனசாட்சி இருக்கிறது. எதற்கும் எந்த சந்தர்ப்பத்திலும் விட்டுகொடுத்துவிடக்கூடாது என்கிற தாறுமாறான ஈகோவும் இருக்கிறது. ஆனால் அதே மனிதர்களிடம் அன்பும் இருக்கிறது. ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒருவர் இன்னொருவருக்கு உதவ ஈகோ,கோபம்,ஆணவம் எல்லாமே கரைந்து இயல்பான அன்பு பூக்கிறது. உண்மையில் மனிதர்கள் எல்லோருமே இதையெல்லாம் கலந்து ஒரு மாதிரி காக்டெயிலாகத்தானே இருக்கிறோம். அப்படிப்பட்ட மனிதர்களையே திரையில் சந்திக்கும்போது இயல்பாகவே ஒரு உற்சாகம் வந்துவிடுகிறது. அதனால்தானோ என்னவோ பாலிவுட்டில் படம் கோடைவிடுமுறையில் சூப்பர்ஹிட்டாகி சக்கைபோடுபோடுகிறது. நூறுகோடியை தாண்டிடுச்சா? அதுதானே பெஞ்ச்மார்க்?

ஆங்காங்கே புன்னகைக்க வைக்கிற சுஜாதா பாணி ஜாலி ஒன்லைனர்களும் அந்த குடும்பமும் அவர்களுக்குள் இருக்கிற அன்னியோன்யமும் ரசிக்க வைத்தன. அதிலும் நாயகனுக்கும் அவனுடைய அப்பாவுக்குமான அந்த உறவு… முரட்டுதனமான அப்பாவை கொண்ட யாருமே டீன்ஏஜ்ஜில் கடந்திருக்க வாய்ப்புகளுண்டு. முதல் பாதியில் அர்ஜூன் கபூரின் கண்களில் துள்ளுகிற அந்தக்காதலும், அலியாபட்டின் இளமைதுடிப்பும் உற்சாகமூட்டுபவை.

படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள். அதுமட்டுமல்ல பஞ்சாபிகளையும் தமிழர்களையும் ‘’இவர்கள் இப்படித்தான்’’ என்று ஒரு சிறிய சட்டகத்துக்குள் அடைத்து நிறையவே அசிங்கப்படுத்தியிருக்கிறார்கள். என்னமோ பஞ்சாபிகள் பொழுதன்னைக்கும் குடித்துக்கொண்டும் சிக்கனை கடித்துக்கொண்டும் திரிவதாகவும், தமிழர்கள் ஆர்தடக்ஸுகள் எந்நேரமும் வெள்ளை வேட்டி சகிதம் திரிவதாகவும்... இதுபோல. ஆனால் நாளுக்கு நாள் தமிழர்களை காட்சிபடுத்துவதில் கொஞ்சம் கொஞ்சமாக படிப்படியாக பாலிவுட் முன்னேறிக்கொண்டிருக்கிறது.

அமிதாப் நடித்த அக்னீபாத் படத்தில் அவருடைய நண்பரா வருகிற மிதுன்சக்ரபோர்த்தி ஒரு தமிழராக நடித்திருப்பார். அவருடைய பெயர் கிருஷ்ணன் ஐயர் எம்.ஏ! அவ்வளவு படித்தும் எழனி விற்கிற அந்த தமிழர் ஒரு ஐயர் என்பது மிகவும் அதிர்ச்சிகரமான நகைமுரணாக இருக்கும். இன்னும் பல படங்களில் தமிழர்கள் கறுப்பாக இருப்பார்கள், பட்டை போட்டு வெள்ளை வேட்டி வெள்ளைசட்டை சகிதம் ''அய்யோ..அய்யோ.. அடே முர்கா'' என்று மட்டுமே பேசிக்கொண்டிருப்பார்கள்.

மலையாளிகளுக்கும் தமிழனுக்கும் கூட வித்தியாசம் தெரியாமல்தான் பாலிவுட்டில் படங்களெடுத்துக்கொண்டிருந்தார்கள். ஆனால் சமகாலத்தில் இந்த "பாலிவுட்டின் முட்டாள் தமிழர்கள்'' இப்போது கொஞ்சம் முன்னேறி அவ்வப்போது பேன்ட் சட்டை அணிந்து தமிழ் பாட்டெல்லாம் பாட ஆரம்பித்திருக்கிறார்கள். நிறைய படித்தவர்களாக இருக்கிறார்கள். இன்னும் சில ஆண்டுகளில் முழுவதுமாக நம்மை புரிந்துகொண்டு தமிழர்களை யதார்த்தமாக காட்சி படுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்று நம்பலாம். அதற்கான எல்லா சாத்தியகூறுகளும் இப்படத்தில் தெரிகிறது. (இதற்கு முன் காட்டியதைவிட இதில் தேவலாம் என்பதைதான் மேலே நீட்டி மொழக்கி.. ரொம்ப நீண்டுவிட்டதோ?)

இந்த கலாச்சார அசிங்கப்படுத்துதல் குறைகளையெல்லாம் கவனிக்காமல் இப்படத்தை அணுக வேண்டுமென்றால், நீங்கள் பஞ்சாபியாகவும் இல்லாமல் தமிழராகவும் இல்லாமல் பொதுவில் நடுநிலையான இந்திகாரனாக அல்லது டெசிஇந்தியனாக மாறி படம் பார்க்க வேண்டும்! அதாவது தனிப்பட்ட எந்த கலாச்சார அடையாளங்களின்றி பொது அடையாளத்தோடு படம் பார்க்க வேண்டும். உலக மயமாக்கல் அதைதானே நமக்கு சொல்லிக்கொடுக்கிறது. எந்த கலச்சார வரலாற்று பின்புலமுமற்ற அமெரிக்கா பர்கரை அதே சுவையோடு அமைந்தகரை ஸ்கைவாக்கிலும் சாப்பிட முடிகிற.. ஒரே கூரையின் கீழ் உலகம் கான்செப்ட்!

படத்தின் மய்ய பகுதியில் வருகிற குடும்ப கன்வீன்சிங் காட்சிகளின் நீளம் அதிகம்தான் என்றாலும்.. நீள நீளமான படங்கள் பார்த்து ரசிக்கிற இந்திகாரர்களுக்கு அதுதான் பிடித்திருக்கிறது! இதுமாதிரி படங்களுக்கு இசை ரொம்ப முக்கியம். அது சொதப்பினால் டவுசர் கழண்டுடும். சங்கர் எங்சான் லாய் கலக்கியிருக்கிறார்.

வித்தியாச வெறிபிடித்து அலைகிற கோலிவுட்டில் இப்போதெல்லாம் சாதாரண எளிய படங்களே வருவதில்லையோ என்று தோன்றுகிறது. குடும்பத்தோடு போய் நிறைய காமெடி, நிறைய சென்டிமென்ட், அவ்வப்போது முகம் பூக்க வைக்கிற ஜாலியான ரொமான்ஸ் அப்பா அம்மா சென்டிமென்ட் தூக்கலாகி நாலு ட்ராப்ஸ் கண்ணீர் என குடும்பப்பாங்கான படங்களை பார்த்தே பலவருஷமாகிறது. வித்தியாசமானவர்களின் காலத்தில் கடைசியாக ராஜாராணிதான் அந்த வகையில் ஆல்மோஸ்ட் குடும்ப படமாக வந்த நினைவு. அதுகூட கிட்டத்தட்டதான்… ஆனால் அதையே குடும்ப படமாக நினைத்து மக்கள் கொண்டாடினார்கள். ராஜாராணிக்கு முன்பு… மந்திரி சுந்தரி… ஒன்றும் நினைவில்லை.

வில்லன்களே இல்லாமல் கடைசியாக இதுபோல பார்த்த படம் கேப்டன் நடித்த வானத்தைபோலதான்! அதற்கு முன்பு குஷி இந்த பாணியில் மிகவும் பிடித்திருந்தது. 2ஸ்டேடஸ் கூட குஷி,பூவெல்லாம் கேட்டுப்பார்,ஜோடி வகையறா படம்தான். ஆனால் இதில் இப்படங்களின் க்ளைமாக்ஸ் தாண்டிய ஒரு கதை இருக்கிறது. அதுதான் இதை ஸ்பெஷலாக்குகிறது. குடும்பத்தோடு பார்க்க ஏற்ற சித்திரம் அவ்வளவுதான்.

படம் முடிந்து படத்தில் பங்காற்றியவர்கள் பெயர்கள் இடம்பெற்றுக்கொண்டே வந்தது. நண்பர் அதில் ஒன்றை கவனித்துவிட்டு விசாரித்தார். ‘’தமிழ்ப்பாடல்கள் – நிரஞ்சன் ஐயங்கார’னு போட்டிருக்கே யாருங்க அது!’’ என்றார். நிரஞ்சன்... நிரஞ்சன்... நிரஞ்ச்… ஒகே எனக்கு தெரிஞ்சு தமிழில் நிரஞ்சன்ற பேர்ல பாடல்கள் எழுதுபவர் பாரதியாரின் எள்ளுப்பேரன் ‘’நிரஞ்சன் பாரதி’’ ஒருத்தர்தான். அவர் தன்னுடைய பெயரை நிரஞ்சன் பாரதி என்றுதான் போட்டுக்கொண்டு பாடல்கள் எழுதுகிறார். இது அவராக இருக்கக்கூடாது.. இது வேறு யாரோ என்று மட்டும் சொன்னேன். பிறகு விசாரித்தபோது அவர் இல்லை என்றார்கள். நிம்மதியாக இருந்தது.