Pages

10 December 2014

சிக்ஸ்பேக் எழுத்தாளன்!
ஒவ்வொரு ஆண்டின் துவக்கத்திலும் எடுப்பதுபோலவே இந்த ஆண்டும் எண்ணற்ற சபதங்களை எடுத்திருந்தேன். அதில் ஒன்று மாரத்தான் ஓடுவது. மே மாதம் வரைக்குமே அதற்காக எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. எப்போதும்போலவே இம்முறையும் இந்த புத்தாண்டு சபதமும் அடுத்த ஆண்டுவரை பென்டிங்கிலேயே இருந்துவிடும் என்றே நினைத்து அப்படியே விட்டுவிட்டேன். அதற்கு ஒரு காரணம் இருந்தது. பதினைந்தாண்டுகளாக குப்பு குப்பென இழுத்த நிகோடின் அடர்ந்த என்னுடைய கருத்த நுரையீரல். அதைவைத்துக்கொண்டு லாங் டிஸ்டென்ஸ் ஒடுவதெல்லாம் சாத்தியமேயில்லை என்றுதான் பயிற்சியை துவக்கும்போதெல்லாம் தோன்றியது. (புகைப்பழக்கத்தை விட்டு கிட்டத்தட்ட இப்போது ஒன்னேமுக்காலாண்டுகளாகிவிட்டது)சில முறை ஓட முயன்று மூச்சுவாங்கி நெஞ்சடைத்து முயற்சிகளை கைவிட்டிருக்கிறேன்.

சரியாக நான்கு மாதங்களுக்கு முன்பு உறுதியாக இம்முறை என்னா ஆனாலும் பயிற்சியை முடிப்பது என்கிற வெறியோடு பயிற்சியை தொடங்கினேன். ஆரம்பத்தில் வெறும் அரை கிலோமீட்டர் ஓடுவதற்குள் கால்கள் வலிக்கும் மூச்சு முட்டும். வியர்த்து கொட்டும். இன்னும் பத்துமீட்டர் ஓடினாலும் செத்துவிழுவோம் என்றெல்லாம் அச்சம் வரும். சில சமயங்களில் மயக்கமாகி விழுந்துமிருக்கிறேன்.

ஒவ்வொரு நாளும் என்னுடனே நான் தோற்றுக்கொண்டிருந்தேன். என்னுடைய சோம்பேறித்தனமும் உடல்நிலையும் என்னை பார்த்து கொக்கானி காட்டி சிரித்தது. ஒவ்வொரு நாளும் என்னை என்னுடைய மோசமான உடல் நிலையை வெல்வதுதான் எனக்கு முன்னால் இருந்த மிகப்பெரிய சவாலாக இருந்தது.

மாரத்தான் கற்றுத்தரும் பாடமே அதுதான். ஒவ்வொரு நாளும் நீங்கள் உங்களையே தோற்கடிப்பீர்கள். முந்தைய நாளின் சாதனை அடுத்தடுத்த நாளில் முறியடிப்பீர்கள். உங்களுக்கான போட்டியாளர் மோசமான எதிரி எல்லாமே நீங்கள்தான்.

முதல் ஐந்து கிலோமீட்டர் ஓடும் வரைக்கும் ஒவ்வொருநாளும் போராட்டம்தான். ஆனால் அந்த வலியும் வேதனையும் பிடித்திருந்தது. ஒட்டுமொத்தமாக என்னை நானே எல்லாவற்றிலிருந்தும் விடுவித்துக்கொண்டு என்னை புத்தம்புதிதாக கண்டடைந்த நாட்கள் அதுதான்.
ஐந்து கிலோமீட்டரை மிதவேகத்தில் ஓட தொடங்கி போகப்போக பத்தாகி பின் பதினைந்தானது. ஒவ்வொரு அடியையும் மிகப்பொறுமையாகவும் உத்வேகத்துடனும் மகிழ்ச்சியாகவும் உற்சாகத்தோடு எடுத்து வைக்கத்தொடங்கினேன். எதிர்நீச்சல் படத்தில் காட்டப்படுபவது போல மாரத்தான் பயிற்சி என்பது அவ்வளவு சுலபமில்லை. மாரத்தான் ஓடுவதென்பது ஒரே ஒரு நாள் ஓடுவதில்லை. ஒவ்வொரு நாளும் ஓடுவது. கடந்த 125 நாட்களாக ஓடிய மொத்த தொலைவு 463.25 கிலோமீட்டர்கள் (நன்றி NIKE+ APP).

டிசம்பர் 7 சென்னை மாரத்தானில் (HALF MARATHON) ஓடினேன். 21.1 கிலோமீட்டர் தூரத்தை இரண்டு மணிநேரம் 11 நிமிடங்களில் கடந்தேன். நண்பர்கள் எல்லாம் அடேங்கப்பா சூப்பர்யா செம டைமிங். கலக்கிட்ட என்றெல்லாம் சொன்னார்கள். நான் இதுவரை ஓடியதிலேயே மிக குறைவான நேரமும் இதுதான். எனக்கு பெருமையாக இருந்தது. அடுத்த முறை இந்த கால அளவை இன்னும் குறைக்க வேண்டும் அதற்கான பயிற்சிகள் ஆல்ரெடி ஸ்டார்ட்டட்.

அதுசரி... இந்த சென்னை மாரத்தானில் எனக்கும் முதலிடம் பிடித்தவருக்குமான கால இடைவெளி எவ்வளவு தெரியுமா? மிகச்சரியாக ஒருமணிநேரமும் ஒருநிமிடமும்தான். ஆனால் நான் போட்டியிட்டது அவரோடு கிடையாது என்னோடுதான். SO, ATLAST I WON!

****