Pages

16 January 2015

ஃபேஸ்புக் பொண்ணு




உயிர்மை வெளியிட்டுள்ள என்னுடைய முதல் சிறுகதை தொகுப்பான ''ஃபேஸ்புக் பொண்ணு'' என்கிற நூலுக்கு எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதியிருக்கும் முன்னுரை இது.

****

அதிஷாவை ஆரம்பத்தில் ப்ளாக்குகளில் அவர் எழுதுகையில் படித்திருக்கிறேன். சில கட்டுரைகள் சினிமா விமர்சனங்கள் சுவாரஸ்யமாக இருந்ததை கவனித்திருக்கிறேன். பிறகு அதிஷா ஃபேஸ்புக்கில் அதிகம் தென்பட ஆரம்பித்தார். புத்தக வெளியீட்டு விழாக்களில் அறிமுகமானார். பிறகு எனக்கு நல்ல நண்பராகி விட்டார். இப்போது அனேகமாக நாங்கள் தினமும் சந்தித்துக் கொள்கிறோம். அரட்டை அடிக்கிறோம்.சுற்றுகிறோம். ஆனால் முதல் முதலில் எங்கு சந்தித்தோம் என்பது எனக்கு நினைவில் இல்லை. அதிஷாவின் சிறுகதைத் தொகுதி வெளிவருவதற்கான நிமித்தங்கள் ஓரிரு ஆண்டுகளாகவே வால் நட்சத்திரம் போல் அவ்வப்போது தோன்றினாலும் இந்த ஆண்டுதான் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் இன்னும் ஒரு எழுத்தாளர். இளமைத் துடிப்போடும் அதிஷா என்கிற வித்தியாசமான பெயரோடும்..

`லிங்கா ரிலீஸ் மாதிரி தமிழ் சமூகத்தில இதுவும் ஒரு முக்கியமான நிகழ்வு. இதுக்கு நீங்க முன்னுரை எழுதணும் பாஸ்" என்று அதிஷா கேட்டதும் வழக்கம் போல சோம்பேறித்தனத்தை மறைத்துக் கொண்டு, `எதுக்கு அதிஷா என் கிட்டப் போய்? நம்மளை விட தகுதி வாய்ந்த பலபேர் தமிழ் இலக்கியப் பரப்பில இயங்கிக்கிட்டு இருக்காங்களே?...அவங்க கிட்ட கேக்கலாமே?" என்றேன் பாவனையான பெருந்தன்மையுடன்...அதிஷாவிடமிருந்து உடனே பதில் வந்தது. ` இல்லை பாஸ் என்னோட தொகுதிக்கு நீங்கதான் முன்னுரைன்னு நான் முடிவு பண்ணிட்டேன். இது இன்னைக்கு நேத்து எடுத்த முடிவு இல்லை. ரொம்ப காலத்துக்கு முன்னாடியே எடுத்த முடிவு " என்று சொல்ல எனக்கு சீரியல் டயலாக்குகள் நினைவுக்கு வந்தன...ஒருத்தரிடம் முன்னுரை கேட்பதற்குக் கூட சரித்திர ரீதியான காரணங்கள் இருக்குமா என்கிற குழப்பத்தை அதிஷாவிடம் கேட்டபோது அதிஷா உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தியபடியே ~`எஸ் பாஸ்..இதுக்கு ஒரு ஃப்ளாஷ் பேக் இருக்கு" என்றார். ஒரு மெல்லிய மவுனம் அறையைச் சூழ அதிஷா தன்னைத் தயார் செய்து கொண்டு ஃப்ளாஷ் பேக்கை சொல்லத் துவங்கினார்....`சில ஆண்டுகளுக்கு முன்னால உரையாடல் அமைப்பு நடத்தின சிறுகதைப் பயிலரங்கில நீங்க பேசினீங்களே? நினைவு இருக்கா?."..ஆம் எனக்கு நினைவு இருந்தது...ஆனால் என்ன பேசினேன்? அதிஷா சொன்னார்.. அந்த பயிலரங்கில நான் உங்க கிட்ட ஆற்றாமையோட ஒரு கேள்வி கேட்டேன்...நீங்க நாட்டாமை மாதிரி பதில் சொன்னீங்க நினைவு இருக்கா? என்றார்...எனக்கு கொஞ்சம் பீதியாக இருந்தது..அப்படி என்ன கேள்வி அது? நான் அப்படி என்னதான் பதில் சொன்னேன்?. சமீபத்தில் பார்த்த மலையாளப் படமான ஹௌ ஓல்ட் ஆர் யூ' படத்தில் ஒரு பெண் இந்திய ஜனாதிபதியைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டதன் விளைவுதான் அந்தப் படமே....அப்படிப் பட்ட ஒரு பின்னணி இந்த தொகுதிக்கும் இருக்கும் போலிருக்கே என்று நினைத்தபடி அதிஷாவிடம், `சொல்லுங்க அதிஷா சொல்லுங்க...அன்னைக்கு என்ன நடந்துச்சு?" என்று நான் கேட்க அதிஷா மறுமொழி பகர்ந்தார்.

`பாஸ்...அன்னைக்கு நான் உங்க கிட்ட தமிழ்ல நகைச்சுவைக் கதைகள் வர மாட்டேங்குதே ஏன்?...ஏன் தமிழ்ல காமெடி ஸ்டோரீஸ் வராம இருக்கு...? அதுக்கு என்ன செய்யணும்னு கேட்டேன்..."
இதுக்கு நாம என்ன பதில் சொல்லி சமாளிச்சிருப்போம்? என்கிற பயம் மனதைக் கவ்வ `அதுக்கு நான் என்ன சொன்னேன்?" என்றேன் எச்சில் விழுங்கியவாறே...

`நீங்க எழுதுங்க அதிஷா....நீங்கதான் எழுதணும்னு சொன்னீங்க பாஸ்..அன்னைக்கு முடிவு பண்ணேன்...எழுதணும்னு முடிவு பண்ணேன்....அதுக்கு நீங்கதான் முன்னுரைன்னு முடிவு பண்ணிட்டேன் " என்று சொல்ல எனக்கு தேவர் மகன் சிவாஜி மாதிரி கண்ணீர் சுரந்தது...என் முன்னே நிற்கும் அதிஷா கமலஹாசன் போல் தெரிய `எழுதறேன்யா" என்று சொல்லி தோளைத் தட்டினேன்.
விளைவாக இம்முன்னுரையை எழுத வேண்டியதாகி விட்டது. முன்னுரை எழுதுவதன் பொருட்டு அதிஷாவின் சிறுகதைகளை மொத்தமாக படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில கதைகள் ஏற்கனவே படித்தவைதான். சில கதைகளை புதிதாக இப்போதுதான் படித்தேன். அதிஷாவின் சிறப்பாக நான் கருதும் சில விஷயங்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். முதன்மையானது அதிஷாவின் உரைநடை..வாசிப்பதற்கு இலகுவாகவும் எளிமையாகவும் இருக்கிற அதிஷாவின் மொழி படிக்கிறவனை சுலபத்தில் ஈர்க்கிறது. அனாவசிய அலங்காரங்கள் இல்லாத அதே நேரம் கதைக்குத் தேவையான அழுத்தத்தை தரத் தவறவில்லை. இவ்விதமான உரைநடை தற்போது வாசிக்கத் துவங்கும் இளம் தலைமுறையை தொடர்ந்து வாசிப்பின் பக்கம் நிலை நிறுத்துவதற்கு அவசியமானது என்று கருதுகிறேன். அது மட்டுமல்லாது வாசிப்பவனுக்கு சுவாரஸ்யத்தையும் அதிஷாவின் நடை வழங்குகிறது....எளிமையும் சரளமும் சுவாரஸ்யமும் கைவரப் பெற்ற அதிஷா மாதிரியான எழுத்தாளர்கள் பலர் உருவாவதன் வழியாகத்தான் வாசிக்கும் பழக்கத்தை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது சாத்தியமாகும் என்று தோன்றுகிறது.
அடுத்ததாக அதிஷாவின் கதைகளில் தென்படும் குழந்தைகள். அதிஷாவின் கதைகளில் நிறையக் குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். குழந்தைகளின் உலகத்தையும் நடவடிக்கைகளையும் குழந்தைகளின் மொழியையும் மனப் போக்கையும் சிறப்பாக வெளிப்படுத்தியிருப்பதற்காக அதிஷாவை பாராட்டியே ஆக வேண்டும். (அதிஷாவின் இயல்பிலேயே ஒரு சிறுபிள்ளைத் தனம் இருப்பதை கவனித்திருக்கிறேன் குழந்தை உலகத்தை இயல்பாக சித்தரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.) மரம் செடி மலை,பத்து பத்து, நீலக்கை, ஓம்புயிர் ஆகிய கதைகளில் வரும் குழந்தைகளும் நாய்க் குட்டிகளும் மிகவும் சிறப்பாகவும் உண்மையாகவும் பூச்சுகள் இன்றி இருக்கின்றனர்.
குறிப்பாக நீலக்கை கதையை இந்தத் தொகுதியின் அற்புதமான சிறுகதை எனச் சொல்லலாம். கோவையில் நிகழ்ந்த கலவரம் ஒரு சிறுவனின் வாழ்வில் நிகழ்த்திய கொடூரத்தை பளிச்சென்று மனதில் தைக்கும் விதத்தில் சித்தரிக்கிறது இந்தக் கதை...எதிர்காலத்தில் இலக்கியத்தில் அதிஷாவின் இடத்தை இப்படிப்பட்ட சிறுகதைகளே நிலை நிறுத்தும்...அது போன்ற சிறந்த படைப்புகள் அதிஷாவிடமிருந்து நிறைய வர வேண்டும் என்பது என் ஆசையும் நம்பிக்கையும் ஆகும்....

அதிஷாவின் வாழ்க்கை அனுபவங்களை ஓரளவுக்கு நான் அறிவேன். சிறுவயதிலேயே பல்வேறு விதமான செறிவான வாழ்வனுபவங்கள் அதிஷாவுக்கு வாய்த்திருக்கிறது. அதனை சரியான மொழியில் அதிஷா பகிர்வதன் மூலம் இன்னும் அவரால் நிறைய எழுத முடியும்...எழுத வேண்டும்.

சென்ற வாரம் நடந்த சென்னை மராத்தானில் அதிஷா முதல் முறையாகப் பங்கேற்று வெற்றிகரமாக தான் ஓட வேண்டிய தூரத்தை கடந்தார்...அதற்காக தான் பட்ட சிரமங்களையும், அந்தப் போட்டிக்காக எவ்வாறு தன்னைத் தயாரித்துக் கொண்டேன் என்பதையும் ஒரு சிறப்பான ஃபேஸ்புக் பதிவாக அதிஷா எழுதி இருந்தார். விடாமுயற்சியும், சலியா உழைப்பும் மன உறுதியும் அதிஷாவுக்கு இருந்ததால் அந்த வெற்றி சாத்தியமானது. இலக்கிய உலகத்தில் அதிஷாவுக்கான மராத்தான் ஓட்டம் இந்த தொகுதி என்கிற புள்ளியில் துவங்குகிறது. அவர் கடக்க வேண்டிய தூரம் கண் முன்னால் இருக்கிறது. வெற்றிகரமாக ஓடி தான் அடைய வேண்டிய இலக்கை அவர் அடைவார் என நம்புகிறேன்.
ஒரு இளம் எழுத்தாளனின் முதல் தொகுதி என்பது அவனை இனங்காட்டக் கூடியது. இந்தத் தொகுதி அதிஷாவை சரியாகவே இனம் காட்டி இருக்கிறது இவரால் அடுத்தடுத்து சிறந்த படைப்புகளை நமக்குத் தர முடியும் என்கிற நம்பிக்கையுடன், ஒரு நண்பனாக அதிஷாவுக்கு நல்வரவு சொல்லி மனமார வாழ்த்துகிறேன்

பாஸ்கர்சக்தி