Pages

13 March 2015

ஆரோவில் மாரத்தான் 2015

சென்னை மாரத்தானில் ஓடிய பிறகு நிச்சயமாக ஓடுவதை நிறுத்திவிடுவேன் என்றே நினைத்தேன். ஆனால் உடனே அடுத்த மாரத்தானுக்கு உடனே தயாராகிவிட்டேன். ஆச்சர்யம்தான். இம்முறை முந்தைய போட்டியைவிடவும் மிகக் குறைவான நேரத்தில் பந்தய தூரத்தை ஓடிக்கடக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் இரண்டு மணிநேரம் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. வேகமாக ஓட உடல் வலுவையும் கூட்ட வேண்டும் என்பதால் ஸ்ட்ரென்த் டிரெயினிங் மாதிரியான விஷயங்களை தெரிந்துகொண்டு அதையும் செய்ய வேண்டியிருந்தது. ஓடுவதற்காக மட்டுமே பஸ் பிடித்து பாண்டிச்சேரிக்கு போவேன் என்று ஒருநாளும் நினைத்துக்கூட பார்த்ததில்லை. தமிழ்நாட்டின் மிகச்சில மாரத்தான்களில் ஆரோவில் மாரத்தான் மிகவும் புகழ்பெற்றது.

ஆரோவில்லின் காட்டுப்பகுதிக்குள் அதன் எழிலை ரசித்தபடி மரநிழலில் ஜாலியாக ஓடலாம். பசுமையும் அமைதியும் நிறைந்த பாதை. அதிக கூட்டமில்லாத ஓட்டம் , ஓடிமுடித்து திரும்பிவந்தால் கடற்கரை. அங்கேயே குளித்துவிட்டு குடிக்கும் பழக்கமிருந்தால் மலிவு விலையில் மதுவும் அருந்தலாம். குளிக்கலாம். நிறைய வெளிநாட்டினரும் வெளிமாநிலத்தினரும் கலந்துகொள்ளும் ஓட்டம் இது. ஓடுவதின் இன்பத்திற்க்காகவே ஓடுவது என்பதுதான் இந்த மாரத்தானின் நோக்கம். அதனால் மெடல் கிடையாது. கடந்த பிப்ரவரி எட்டில் பல ஆயிரம் பேரோடு அடியேனும் ஓடினேன். (இந்த முறையும் அரை மாரத்தான்தான் 21.1 கி.மீ)

ஓடிமுடித்து ஊருக்கு வந்து ஒருமாதமாகிவிட்டது, எவ்வளவு நேரத்தில் ஓடினேன் எத்தனையாவது இடம்பிடித்தேன் என்பதுமாதிரி எந்த விபரமும் தெரியவில்லை. ஏதோ தொழில்நுட்ப கோளாறுகளால் தாமதாகியிருக்கிறது. இப்போதுதான் ரிசல்ட் போட்டிருக்கிறார்கள். என்னைப்போன்ற மாரத்தான் பித்தேறிய முத்துக்களுக்கு இந்த ரிசல்ட் மிகவும் முக்கியமானது. முந்தைய ரெகார்டுகளை இம்முறை முறியடிக்க வேண்டும் என்று முக்கி முக்கி இரண்டு மாதங்கள் பயிற்சி செய்திருக்கிறேன் சும்மாவா?.

கடந்த ஒருமாதமாக தினமும் ஆரோவில்லின் இணையதளத்தை திறந்து பார்ப்பதும், அவர்களுடைய மன்னிப்புக்கோரலை படித்துவிட்டு சோகமாவதும் வாடிக்கையாகியிருந்தது. இதோ இப்போது வந்துவிட்டது முடிவுகள். ஓடிய கால அளவு 1மணிநேரமும் 50 நிமிடங்களும்தான்! இது சென்ற முறை ஓடியதைவிட இருபத்தியோரு நிமிடங்கள் குறைவு. 1மணிநேரம் 45 நிமிடங்களுக்குள் ஓட்டத்தை முடிக்க நினைத்திருந்தேன், ஆனால் இது காட்டுப்பகுதியில் ஓடக்கூடிய TRAIL வகை மாரத்தான் போட்டி என்பதால் ஓடுவதில் சிரமமிருந்தது. கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்று ஓடவேண்டியிருந்தது! சென்ற முறை 2:11 , இம்முறை 1:50. என்னளவில் ட்ரிட் வைத்துக்கொள்ள ஏற்ற சாதனைதான். (அரைமாரத்தானில் ஓடியவர்கள் எண்ணிக்கை 1829 பேர்! அதில் 44வது இடத்தை பிடித்திருக்கிறேன்.)

ஏகப்பட்ட வெளிநாட்டினர் என்னோடு ஓடினார்கள், ஒரு பாரினரையாவது முந்த வேண்டும் என நினைத்திருந்தேன். காரணமெல்லாம் இல்லை. இன்னும் அதிக வேகம் ஓடுவதற்கான ஒரு உத்வேகம். நல்ல வேகத்தில் ஓடிக்கொண்டிருந்த நாலைந்து வெளிநாட்டினரை தாண்டினேன்! அதில் ஒரு அல்ப திருப்தி. பாரத்மாதாகீ ஜெ! இங்கே சென்னை மாரத்தானில் ஓடிமுடித்து வருகிறவர்களுக்கு உண்ண பர்கர் கொடுத்தார்கள். பாண்டிச்சேரி பிரஞ்சு தேசம், அங்கே பாஸ்டா பீட்சா மாதிரி ஏதாவது கொடுப்பார்கள் என்று நினைத்திருந்தேன். வெண்பொங்கலும் வடையும் டிகிரி காபியும் கொடுத்தார்கள்.

அடுத்து செப்டம்பரில் சென்னை ட்ரையல் மாரத்தானில் கலந்துகொள்ள நினைத்திருக்கிறேன். நடுவில் எதுவும் பெரிய போட்டிகள் இல்லை. அதனால் இம்முறை 21கிலோமீட்டர் தூரத்தை 90நிமிடங்களில் ஓட நினைத்திருக்கிறேன். இதை SUB90 என்கிறார்கள். அதற்கான பயிற்சிகள் தொடங்கவிட்டது. இனி ஓடவேண்டியதுதான்.