Pages

03 March 2015

சாந்தி தியேட்டர்அண்ணா சாலை சாந்தி தியேட்டர் இடிக்கப்படவிருக்கிறது. அந்த தியேட்டரில் எண்ணற்ற மொக்கைப்படங்களை பார்த்திருக்கிறேன். சிறுவயதில் மன்னன் திரைப்படம் பார்த்ததிலிருந்தே வாழ்க்கையில் இந்த தியேட்டருக்கு ஒருமுறையாவது போய்விட வேண்டும் என ஆசைப்பட்டிருக்கிறேன். அதுவுமில்லாமல் சிவாஜி கணேசனுடைய திரையரங்கம் என்பதும் ஆர்வத்தை தூண்டியிருந்தது. சென்னை வந்த பிறகு அங்கே ரெகுலர் கஸ்டமராக இருந்திருக்கிறேன்.

இத்திரையரங்கில் சில நல்ல படங்களையும் எப்போதாவது பார்த்ததுண்டு (சுப்ரமணியபுரம், சந்திரமுகி, சிவாஜி). கடைசியாக ‘’என் நெஞ்சை தொட்டாயே’’ என்கிற கொடூரமான படத்தை நாலைந்து பேரோடு (அந்த நால்வரில் படத்தின் இயக்குனரும் இருந்தார்) சாய்சாந்தியில் பார்க்க நேர்ந்தது. 2008 தொடங்கி கடந்த ஏழு ஆண்டுகளில் எப்படியும் யாருக்குமே தெரிந்திராத இதுமாதிரியான படங்கள் ஐம்பதையாவது பார்த்திருப்பேன். மொக்கைப்படம் பார்ப்பதற்கென்றே இருக்கிற திரையரங்குகளில் வுட்லேன்ட்ஸ், கிருஷ்ணவேணி,அண்ணா வரிசையில் சாந்திக்கு கடைசி இடம்தான்.

சாந்தி தியேட்டர் வாசலிலே இருக்கிற சுரங்கப்பாதையில்தான் சரோஜாதேவி கதைகள் கொண்ட மட்டிப்பேப்பர் குட்டி புக்குகள் கிடைக்கும். அதே இடத்தில் பாலியல் தொழிலும் நடந்துகொண்டிருக்கும். இந்த மேற்படி காரியங்களுக்கு யாராவது வழிகேட்டால் சாந்தி தியேட்டரைத்தான் முன்பெல்லாம் குறிப்பிடுவேன். கஞ்சா கூட முன்பு இந்த சுரங்கத்தில் கிடைத்துக்கொண்டிருந்தது. இப்போதும் கிடைக்கிறதா தெரியவில்லை.

சாந்தி தியேட்டரின் நுழைவாயிலுக்கு வலது பக்கம் ஒரு ஈரானி டீக்கடையும் டாஸ்மாக்கும் உண்டு. அதே கட்டிடத்தின் மேல்தளத்தில் முன்பு டான்ஸ் பார் ஒன்று இயங்கிக்கொண்டிருந்தது. சின்னதாக உடையணிந்துகொண்டு ஆடும் பெண்கள் மீது கத்தை கத்தையாக ஐந்துரூபாய் பத்து ரூபாய் கட்டுகளை அப்படியே விசிறி அடிக்க அரையிறுட்டில் அந்தப்பெண்கள் பாவமாக ஆடிக்கொண்டிருப்பார்கள்.

இத்தியேட்டருக்கு வருகிற இளம்வாலிபர்களில் பாதிபேர் வாசலில் இருக்கிற டாஸ்மாக்கில் தாகந்தணிந்த பின்புதான் உள்ளேயே வருவார்கள். இன்றைய மால் காவலர்கள் போல இல்லாமல் குடித்தவர்களை உள்ளே அனுமதித்துவிடுவார்கள். இதனாலேயே எந்த திரைப்படத்தையும் இந்தத்திரையரங்கில் உங்களால் நிம்மதியாக பார்க்க முடியாது. படம் ஓடிக்கொண்டிருக்கும்போதே ஓய் ஓய் என்று பின்னால் தூரத்திலிருந்து சப்தம் கேட்கும், திரும்பி பார்த்தால் இரண்டு குரூப்களுக்குள் அடிதடி ரகளையாகி சீட்டு மேல் ஏறிநின்று த்தா குத்துடா அவன புடுச்சு உட்ரா என்பது மாதிரி சப்தங்களும் சப்பு தொப்பு என அடிவிழும் ஓசைகளும் கேட்கும். ஆனால் இந்த திரையரங்கின் சிறப்பே என்ன நடந்தாலும் படத்தை நிறுத்த மாட்டார்கள், இதனால் பார்வையாளர்களும் என்ன நடந்தாலும் அதைப்பற்றி பிரக்ஞையே இல்லாமல் படம் பார்ப்பார்கள். அதற்கு பிறகு சில நிமிடங்கள் கழித்து போலீஸ் வந்துதான் பிரச்சனையை சரி பண்ணும்.

மற்ற திரையரங்குகள் போல இல்லாமல் ஒரு நீல நிற தொடர்விளக்கு சாந்தி தியேட்டரின் உட்பகுதியில் நிறைந்திருக்கும். அது நமக்கு ஒரு எரோடிக் உணர்வைத்தரும். சந்திரமுகி திரைப்படம் அங்கே பல ஆண்டுகள் ஓடியபோது, இந்தத்திரையரங்கம் காதலர்களுக்கு புகலிடமாக விளங்கியிருக்கிறது. வெறும் காதலர்கள் மட்டுமல்லாது கள்ளக்காதலர்களும் வந்து குவிவார்கள். மூலைக்கு மூலை காமக்களியாட்டங்கள் களைகட்டும். இதைபார்க்கவே அப்போதெல்லாம் நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சந்திரமுகியை பார்க்க கிளம்புவார்கள். சந்திரமுகி அல்லாத சுமாரான மொக்கைப்படங்களுக்கென்றால் சாய்சாந்திதான் சிறந்த இடம். சாந்தி தியேட்டரின் உள்ளேயே இருக்கும் குட்டிதியேட்டர். விளக்கு எரிந்தாலும் கூட இதன் மூலைகள் எந்நேரமும் கும்மிருட்டாக இருக்கும். உள்ளே நீங்கள் யாரோடு என்ன சேட்டைகள் செய்தாலும் பக்கத்து சீட்டு ஆட்களாலும் கூட பார்க்க முடியாது. இதனாலேயே காதலர்களின் மிகச்சிறந்த தேர்வாக சாய்சாந்தி விளங்கியுள்ளது.

கடைசியாக பார்த்த ‘’என் நெஞ்சைத்தொட்டாயே’’ படத்திற்கும்கூட என்னோடு வந்திருந்த மீதி இருவரும் காதலர்களே. காதலர்களை பார்த்தால் டிக்கட் காரரே கார்னர் சீட் கொடுத்துவிடுவார். அல்லது சாய்சாந்திக்கு டிக்கட் போட்டுவிடுவார். காதலர்கள் பலருக்கும் சாய்சாந்தி தியேட்டர் ஆல்மோஸ்ட் பள்ளியறையாகவே இருந்திருக்கிறது. அதிக செலவு வைக்காத சீப் அன் பெஸ்ட் பள்ளியறை. இனி அக்காதலர்கள் எங்கே போவார்கள் என்ன செய்வார்கள். எக்ஸ்பிரஸ் அவென்யூ, பீனிக்ஸ் முதலான மால்களுக்குள் நுழைந்தால் சொளையாக நானூறு ஐநூறு ரூபாயை பிடுங்கிவிடுவார்கள் என்பதை நினைக்கும்போதே நெஞ்சம் துடிக்கிறது.

திரையரங்க நுழைவாயில் எப்போதும் பெரிய கட்அவுட் அலங்கரிக்கும். அதில் கடைசியாக விக்ரம்பிரபுதான் நின்றுகொண்டிருந்தார். அதற்குமுன் யார் என்று நினைவில்லை. ரஜினியின் கட் அவுட்தான் அதிக காலம் (நான்பார்த்ததில்) இருந்தது. அதுபோலவே அங்கே டிக்கட் கவுண்டருக்கு பக்கத்தில் தியேட்டர் மேனேஜர் வொயிட் அன் வொயிட்டில் நிற்பதை அடிக்கடி பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும் உடன் வருகிறவரிடம் இவருதான் மன்னன் படத்துல வருவாரே என்று காட்டிச்சொல்வதுண்டு.

சாந்தி தியேட்டர் வாசலில் எப்போதும் சிவாஜியை நினைத்து வருந்துகிற அவருக்காக ஏங்குகிற ரசிகர்களின் பேனர்களும் போஸ்டர்களும் அலங்கரிக்கும். சிவாஜி ரசிகர்கள் கடைசியாக விக்ரம்பிரபுவுக்கு கூட போஸ்டர் ஓட்டியிருந்தார்கள். இனி அவர்களெல்லாம் எங்கே போய் போஸ்டர் ஓட்டி தங்களுடைய தாகத்தை தணித்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. இவர்களைப்போலவே அருகிலிருக்கிற அண்ணா திரையரங்க வாசலில் கமலஹாசன் ரசிகர்கள் சிலர் தொடர்ச்சியாக எதற்கெடுத்தாலும் உலக நாயகனே ஆஸ்கர் நாயகனே கண்டங்கள் கண்டுவியக்கும் என்றெல்லாம் போஸ்டர் ஓட்டுவார்கள். கடைசியாக சன்டிவியில் கமல் வாரம் கொண்டாடியபோதுகூட அதற்கும் போஸ்டர் ஓட்டி சன்டிவிக்கு நன்றி தெரிவித்திருந்தார்கள். அதிக வயதான வயோதிக சிவாஜி ரசிகர்கள் பழக்கதோசத்தில் அண்ணா திரையரங்க வாசலில் போஸ்டர் ஓட்டி குறைந்த வயதான வயோதிகத்தை நெருங்கும் கமல் ரசிகர்களுடன் மோதலாம்.

இத்திரையரங்கத்தின் பார்க்கிங் பகுதியில் சிவாஜி கணேசன் இதுவரை நடித்த அத்தனை படங்களின் பட்டியலை மொழி, வருடம், ஓடிய நாட்கள் உள்ளிட்ட விபரங்களோடு கல்வெட்டாக வெட்டி வைத்திருந்தார்கள். இனி அதை என்ன செய்வார்கள் என்று தெரியவில்லை. உடைக்காமல் எடுத்து அன்னை இல்லத்தில் பதித்துவிடுவார்களாயிருக்கும். இங்கே அந்தக்காலத்தில் சிவாஜியின் தெய்வமகன், கர்ணன், வசந்த மாளிகை முதலான திரைப்படங்கள் வெளியான நேரத்தில் எந்த அளவுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என்பதை சிலர் சொல்லியும் வாசித்தும் தெரிந்திருக்கிறேன். ச்சே அந்தகாலத்தில் நாம் இல்லையே என்று ஏக்கமாக இருக்கும்.

கர்ணன் திரைப்படம் (அதுதானா தெரியவில்லை ராஜராஜசோழனாகவும் இருக்கலாம்) வெளியான சமயத்தில் தியேட்டர் வாசலில் மிகப்பெரிய அரண்மனை போன்ற செட் வைத்திருந்தார்களாம். வெளியூரிலிருந்தெல்லாம் அந்த செட்டை பார்க்கவே ஆட்கள் வந்து குவிந்து அதன் அருகில் நின்று புகைப்படம் எடுத்துச்செல்வார்களாம். கோவையில் கூட சிலர் அந்தகாலத்துல நாங்க நடிகர் திலகம் படம் ரிலீஸ் அன்னைக்கு சென்னைல அசெம்பிள் ஆகி சாந்தி தியேட்டர்ல முதல் ஷோ பாப்போம் என்று அந்தக்கால நினைவுகளை பகிர்ந்துகொள்வதுண்டு. இத்திரையரங்கம் இடிக்கப்படுவதை கேள்விப்பட்டபோது ஒரு விஷயத்திற்காகவே வருந்தினேன். இங்கே ஒருமுறையாவது இந்தத்திரையரங்கில் ஒரு சிவாஜி படத்தையாவது அவருடைய இக்காலத்து ரசிகர்களோடு பார்த்துவிடவேண்டும் என நினைத்திருக்கிறேன். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பம் அமையவேயில்லை.