Pages

24 June 2015

கன்னட சினிமா கண்டன்டே...



தமிழ்நாட்டில் கன்னடப்படங்கள் பார்க்கிற தமிழர்கள் எண்ணிக்கை என்னோடு சேர்ந்து இருநூற்றி ஒன்றாக இருக்கலாம். அதிகம் போனால் இருநூற்றி இருபத்தி ஒன்றாக இருக்கலாம். எப்போதாவது ரீசசன் காலத்தில் சென்னையில் சில திரையரங்குங்களில் கன்னடப்படங்கள் திரையிடப்படுவதுண்டு. டோலிவுட்டும் மல்லுவுட்டும் இங்கே கோலோச்சுகிற அளவிற்கு சான்டல்வுட்டிற்கு வரவேற்பில்லை. கன்னட ஹீரோயின்களோ அதன் மொழியோ இதற்கு காரணமாக இருக்கலாம். அது எளிதில் காணக்கிடைப்பதில்லை என்பதும் காரணமாயிருக்கலாம்.

கடைசியாக மாயாஜாலிலும் சத்யத்திலும் தியேட்டரில் கன்னடபடங்கள் எப்போதாவது வெளியாகும். பார்க்க நினைத்து பார்க்க முடியாமல் போகும். முன்பு சாய்குமார் நடித்த சில கன்னடப்படங்கள் தமிழ் டப்பிங்கில் வெளியாகும். எல்லா படங்களிலும் அவர் போலீஸாக நடித்திருப்பார். கெட்டவார்த்தைகளை மானாவாரியாக வாரியிரைப்பார். கன்னட பக்திப்படங்கள் கூட அடிக்கடி டப்பிங் ஆவதுண்டு. ஆனால் அவை தெலுங்கா கன்னடமா என்று குழப்பத்தோடுதான் காட்சி தரும். எஸ்பிபி, நெப்போலியன் நடித்த சாய்பாபா படம் கூட உண்டு. அதுவும் நேரடி கன்னடம்தான்.

சில வாரங்களுக்கு முன்பு கூட முரட்டுக்கைதி என்கிற படம் வெளியாகி சக்கைப்போடு போட்டதாக தினத்தந்தியில் போட்டிருந்தார்கள். அதற்கு முன்பு தண்டுபால்யா என்கிற படத்தை கரிமேடு என்கிற பெயரில் தேனான்டாள் பிலிம்ஸ் வெளியிட்டார்கள். முன்பு ராஜிவ் கொலைவழக்கு பின்னணியில் ஒற்றைக்கண் சிவராசன், தாணுவின் கதையை சயனைட் என்று எடுத்த போதும் அது தமிழில் வெளியான நினைவு. அவ்வளவுதான் நமக்கும் சான்டல்வுட்டுக்குமான நெருக்கம். மணிரத்னம், பாலுமகேந்திரா, கமலஹாசன் என சிலர் முன்னொரு காலத்திலே அங்கே போய்வந்தாலும், இப்போதைக்கு நமக்கு 'சுதீப்' வில்லன் நடிகர்தான்.

இவை தவிர்த்து திரைப்படவிழாக்களில் திரையிடப்படும், தூர்தர்ஷனில் சப்டைட்டிலோடு போடப்படும் கறுப்புவெள்ளை கிரிஷ் கர்னாட், காசரவல்லி வகையறா படங்கள் அறிவார்ந்த சமூகத்திற்கு நெருக்கம். உபேந்திரா, சுதீப், வீரப்பன் கடத்தியதால் ராஜ்குமார், அவருடைய மகன் சிவராஜ்குமார், விஷ்ணுவர்தன் என நமக்குத்தெரிந்த கன்னட உலகம் ரொம்பவே சின்னது. அங்கே என்ன நடக்கிறது என்ன படம் எடுக்கிறார்கள் என்பதெல்லாம் ஏதோ நீலமலை ரகசியம் போலவேதான் இப்போதும் இன்டர்நெட் எராவிலும் இருக்கிறது. தமிழில் வெளியான பலபடங்களும் அங்கே கன்னாபின்னாவென்று ரீமேக் செய்யப்படுகிறது.

கன்னட லேடி சூப்பர்ஸ்டார் மாலாஸ்ரீ சென்னையை சேர்ந்தவர்தான் ஆனால் அவரை பற்றி கேள்விப்பட்டிருக்கமாட்டோம். விஜயசாந்தியைவிடவும் அதிக புகழ்மிக்க அதிரடி நடிகை. காமெடிடைம் பண்ணிக்கொண்டிருந்த கணேஷ் ''முங்காரு மலே'' என்கிற திரைப்படத்தின் வெற்றியால் இன்று உச்சம் நட்சத்திரமாக உயர்ந்திருக்கும் கதைகூட நமக்கு தெரியாது. எப்போதாவது தினகரன் வெள்ளிமலரில் இரண்டுபக்கத்தில் கன்னட சினிமா பற்றி கட்டுரைகள் எழுதுவதுண்டு. அதைத்தாண்டி தமிழ் ஊடகங்களில் கன்னட சினிமா உலகம் குறித்த கட்டுரைகளை வாசித்த நினைவில்லை. ஆனால் அங்கே புதிய அலை இயக்குனர்களின் வரவும் புதிய முயற்சிகளும் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. லூசியாவைப்போ நிறைய புதுமுக இயக்குனர்களின் கதையம்சமுள்ள கமர்ஷியல் படங்கள் வந்துகொண்டேயிருக்கின்றன.

வெவ்வேறுவிதமான மாற்றுமுயற்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கின்றன. புதிய இளைஞர்கள், வித்தியாசமான களங்கள், இதுவரை எடுத்துக்கொள்ளாத பின்னணி, படமாக்கலில் தரம் என்று இளைஞர்கள்தான் அங்கே டாப் அடித்துக்கொண்டிருக்கிறார்கள். 2014ல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன கன்னடப்படங்களில் பாதி பெரிய நடிகர்கள் இல்லாத புதிய இயக்குனர்கள் இயக்கிய புதுமுகங்களின் படங்களே.

‘’உளிடவரு கண்டன்டே!’’ (ULIDAVARU KANTANTE). சென்ற ஆண்டு துவக்கத்தில் வெளியான கன்னடப்படம். 2014ன் எல்லா டாப்டென் கன்னடப்பட பட்டியல்களிலும் இடம்பிடித்திருந்த ஹிட் இது!

இப்படத்தின் இயக்குனர் ரக்சித் ஷெட்டியை கர்நாடகாவில் கொண்டாடி கொலுவைத்திருக்கிறார்கள். தமிழில் வெளியான ஆரண்யகாண்டம் மாதிரியான வித்தியாசமான கலாபூர்வமான கமர்ஷியல் படம் இது. அதனாலேயே சான்டல்வுட்டில் தோல்வியடைந்தாலும் விமர்சகர்களின் ஏகோபித்த ஓகோபித்த ஆதரவை பெற்றது. ட்ரைலரை பார்த்துவிட்டு படம் வெளியான சமயத்தில் இப்படத்தினைக் காண பெங்களூருவுக்கு பஸ் ஏறிவிடவும் முடிவெடுத்திருந்தேன். ஆனால் பெங்களூருவில் இப்படம் சப்டைட்டிலோடு திரையிடப்படவில்லை என்பதால் திட்டம் கைவிடப்பட்டது. தெலுங்கும் மலையாளமும் காட்டுகிற ஸ்னேகத்தில் பத்துசதவீதம் கூட கன்னடம் காட்டுவதில்லை.

படத்தின் திருட்டு விசிடி கிடைக்குமா என சல்லடைபோட்டு தேடினேன். சகல எழுத்தாளர்களுக்கும் இயக்குனர்களுக்கும் திரைப்பட ஆளுமைகளுக்கும் சிடி விற்கிற பார்சன் மேனர் பஷிரிடமும் இப்படத்தின் குறுந்தகடு கிடைக்கவில்லை. பஷிரிடம் கிடைக்காத குறுந்தகடு தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இன்டுஇடுக்கிலும் கிடைக்காது. இப்படி எங்குமே அப்படம் காணக்கிடைக்காத நாளில் அப்படத்தை நண்பர் ஒருவர் எங்கோ இணையத்தில் தரவிறக்கி கொண்டு வந்து தந்தார், வித் சப்டைட்டில். ஆர்வத்தோடு படத்தை பார்க்க ஆரம்பித்தேன். நிச்சயமாக கன்னட ‘’ஆரண்யகாண்டம்’’தான் இது.

ஒரு கொலை நடக்கிறது. அதை செய்தவர் யார் என்கிற விசாரணையில் வெவ்வேறு நபர்களால் சொல்லப்படும் ஐந்து கதைகள், ரஷமோன் பாணியில் கதை வெவ்வேறு பார்வைகளில் அந்தந்த கதாபாத்திரங்களால் சொல்லப்படுகிறது. ‘’உளிடவரு கண்டன்டே’’ என்றால் AS SEEN BY THE REST என்று அர்த்தம். ஐந்து கதைகளும் வெவ்வேறு விதமான குணங்களில் நிறங்களில் திரைக்கதை அமைப்பில் வித்தியாசப்படுத்தப்பட்டு படைக்கப்பட்டிருக்கின்றன. மால்பே என்கிற எழில்மிகு கடற்கரை கிராமம்தான் பின்னணி. அங்குள்ள எளிய மனிதர்களையும் அதன் சடங்குகளையும் இசையையும் வாசனை மாறாமல் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாத்திரத்தேர்வும் என எல்லாவகையிலும் சர்வதேசத்தரம்.

இன்னும்கூட நிறைய ஜிலேபி சுற்றி படத்தை புகழலாம். போதும். மீதியை இணையத்தில் தரவிறக்கி காண்க. நல்ல அச்சு உபதலைப்புகளுடன் கிடைக்கிறது. எண்ணற்ற உலகப்படங்களினால் உந்தப்பட்டு அதே பாணியில் இப்படத்தை எடுத்திருப்பார் போல இயக்குனர். ஏகப்பட்ட உலகப்பட முன்மாதிரிகளை பார்க்க முடிந்தது. ஒரு பகுதி மொத்தமும் ‘’சின்சிட்டி’’ படத்தின் பாணியில் எடுக்கப்பட்டிருந்தது. படத்தின் வசனங்களும் பல காட்சிகளும் க்வான்டின் டாரன்டினோவின் பாதிப்பில் உருவாக்கப்பட்டிருப்பதை டாரன்டினோ ரசிகர்களால் எளிதில் உணரமுடியும். படத்தின் க்ளைமாக்ஸ் மொத்தமும் ஒரு பாடலில் வைத்திருந்ததும் பிடித்திருந்தது.

இப்படத்தின் திரைக்கதை பெரிய அளவில் பேசப்பட்டது. காரணம் படத்தின் கதை அத்தனை சிக்கலானது. இதற்கு திரைக்கதை பண்ணுவது எளிதான காரியம் இல்லை. நேர்கோட்டில் அமையாத கதை சொல்லல் வேறு! இந்த முறுக்குப்புழிகிற திரைக்கதையை எவ்வித குழப்பங்களும் இல்லாமல் கொடுத்ததற்காகவே படம் நிறைய விருதுகளையும் வென்றிருக்கிறது. படத்தின் திரைக்கதையை முழுமையாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அப்படத்தின் அலுவல் இணையதளத்திலேயே வெளியிட்டிருக்கிறார்கள். விருப்பமுள்ளவர்கள் தரவிறக்கி வாசித்துப்பார்க்கலாம். காட்சிகளை இன்னும் நன்றாக உள்வாங்கிக்கொள்ள உதவும். முடிந்தால் யுடீயுபில் படத்தின் ட்ரைலரை ஒருமுறை பார்க்கவும். அதற்குபிறகு எப்படியாவது தேடிப்பிடித்து இப்படத்தை பார்த்துவிடுவீர்கள்.

இவ்வளவு நல்ல படத்தில் நாயகன் மட்டும் திருஷ்டிபோல இருந்தார். ஓவர் ஆக்டிங் என்றும் கூட சொல்லலாம். அலட்டிக்கொள்ளாமல் நடிக்க முயற்சி செய்து ரொம்பவே அலட்டியிருப்பார். இந்த நல்ல படத்திற்கு ஏன் இப்படி ஒரு மொக்கை நடிகரை நாயகனாக பயன்படுத்தினார்கள் என்று விக்கிப்பீடியாவில் போய்த்தேடினால் அந்தாள்தான் படத்தின் இயக்குனர்! ரக்சித் செட்டி. அதனால்தான் கொஞ்சம் ஓவராக பண்ணியிருக்கிறார். அந்த இயக்குனரின் முந்தைய படங்கள் ஏதாவது தேறுமா என்று இணையத்தை துலாவினால் இதுதான் அவர் இயக்கிய முதல்படம்.

இதற்குமுன்பு அவர் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். அவர் நடித்த ‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ சூப்பர் டூப்பர் ஹிட்டாகியிருக்கிறது. ‘’லூசியா’’ படம் வெளியான அதே சமயத்தில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைபோடு போட்ட ரொமான்டிக் திரைப்படம் இது. இதில் ரக்சித் ஷெட்டிதான் ஹீரோ. இயக்குனர் வேறு ஆள்.

‘’சிம்பிள் ஆகி ஒந்த் லவ்ஸ்டோரி’’ குறித்து தேடிப்படிக்க ஆரம்பித்தால் அப்படம் உளிடவரு கண்டன்டேவை போலவே இன்னும் சுவராஸ்யமான படமாக இருந்தது. மிகக்குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம், முழுக்க புதுமுகங்கள் மட்டுமே கொண்டது.
பாக்ஸ் ஆபீஸில் பல ரெகார்டுகளை தகர்த்திருக்கிறது. இப்படத்தையும் தேடத்துவங்கினேன். கடைசியில் அந்த ‘’நண்பர் ஒருவர்’’தான் அதையும் தன்னுடைய ரகசிய இணையதளத்தின் வழி தரவிறக்கிக் கொடுத்தார். இப்படத்திற்கு சரியான சப்டைட்டில் கிடைக்கவில்லை. கிடைத்த சப்டைட்டிலில் ஆங்காங்கே மொழிபெயர்ப்பு மோசமாக இருந்தது. யாரோ ஆங்கிலம் தெரியாதவர் பண்ணின வேலைபோல. இருந்தும் படத்தை பார்த்தேன். அழகழகான வசனங்கள்தான் படத்தின் பலமே. கூர்ந்து கவனித்தால், அல்லது ரீவைன்ட் பண்ணி மீண்டும் மீண்டும் கேட்டால் வசனம் நன்றாகவே புரிந்தது.

மிகச்சில இடங்கள் தவிர்த்து. ஒரு நிமிடம் கூட அலுப்புதட்டாமல் செல்லுகிற மென்மையான காதல்கதை. இப்படியெல்லாம் தமிழில் காதல்கதைகள் எடுக்கப்படுவதேயில்லை. ROMCOM வகையறா படங்களை தமிழ்சினிமாவில் வழக்கொழிந்துவிட்டன. குட்டி குட்டியாக க்யூட்டான விஷயங்களின் கோர்வையாக புன்னகைக்க வைக்கும் காட்சிகள். எல்லாவற்றையுமே கேலியுடன் சித்தரிக்கும் ஒரு சிறுபிள்ளைத்தனம். வசனங்களில் யதார்த்தமாக தொனிக்கும் கவித்துவம். மௌனராகம் ரேவதி-கார்த்திக் மாதிரியான நாயக-நாயகியின் பாத்திரப்படைப்பு! என எல்லாமே ஈர்த்தது. இரண்டே இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்துக்கொண்டு கொஞ்சம் கூட சோர்வடைய வைக்காத இரண்டு மணிநேர சுவாரஸ்யம் இத்திரைப்படம். படத்தின் இயக்குனர் சுனி ரீமேக் உரிமையை தமிழில் யாருக்கும் தந்துவிடக்கூடாது என வேண்டிக்கொண்டேன்.

இப்படி வரிசையாக லூசியா, உளிடவரு கண்டன்டே, சிம்பிள் ஆகி ஒந்த் லவ் ஸ்டோரி என மூன்று கன்னடப்படங்கள் அடுத்தடுத்து பார்த்ததுமே மனதுக்குள் இயல்பாகவே தோன்றுமில்லையா? அடடா கன்னட சினிமாலயும் நிறைய நல்லபடங்கள் இருக்குதான் போலய்யா நாமதான் பாக்குறதில்ல என்று நினைத்து மேலும் தேடியதில் சென்ற ஆண்டு வெளியான கன்னடப்படங்களில் மெகாஹிட் ‘’உக்ரம்’’ தான் என்பது தெரிந்தது.

படம் குறித்து இணையத்தில் எல்லோருமே பாராட்டி தள்ளியிருந்தனர். படத்தின் ட்ரைலர் பார்த்தால் அதுவும் பேருக்கேற்றபடி உக்கிரமாகவே இருந்தது. இசையும் அந்த கலரும் மிரட்டியது. படத்திற்கு கேமரா மேன் ‘’பர்ஃபீ, ராசலீலா மாதிரி பெரிய பாலிவுட் படங்களுக்கு பண்ணின ரவி வர்மன்!

இப்படம் கன்னட சினிமாவின் பெருமை. ஹாலிவுட்டுக்கு கன்னடசினிமாவின் சவால் என்றெல்லாம் நிறைய விமர்சனங்கள் படிக்க கிடைத்தது. படத்திற்கான ரீமேக் உரிமைக்காக தமிழின் முன்னணி நாயகர்கள் போட்டிபோடுகிறார்கள். விஜய்கூட ரேஸில் இருக்கிறார். தெலுங்கில் பிரபாஸும், இந்தியில் சல்மானும் கூட ரீமேக் பண்ணப்போகிறார்கள் என்கிற தகவல்களும் எதிர்பார்ப்பை கூட்டின. இத்தனைக்கு இந்த படத்தில் நடித்த ஸ்ரீமுரளி ஒரு சாதாரண நடிகர்தான். ஆனால் ஒரேபடத்தில் அவர் மாஸ் ஹீரோவாகியிருக்கிறார். ஒரு கடத்தில் கைகள் நடுங்க எச்சில் விழுங்க... இதயம் படபடக்க இதுக்கு மேல தாங்கமுடியாதுடா பாத்தே ஆகணும்டா என்று உடனே இணையத்தில் தேடி அதை தரவிரக்கினேன். உபதலைப்புகளுடன் நல்ல எச்டி அச்சு கிடைத்தது.

பார்க்க ஆரம்பித்தால் காட்சி ஒன்றிலிருந்தே படம் பரபரவென பற்றி எரிகிறது. ஆஸ்திரேலியாவிலிருந்து தன்னுடைய சொந்த ஊருக்கு திரும்பிவருகிறாள் நாயகி. அவள் இந்தியாவில் காலை வைத்ததும் போட்டுத்தள்ள காத்திருக்கும் நாயகியின் அப்பாவின் எதிரிகள். அப்பாவுக்கு தெரியாமல் நாயகி வந்துவிட அவளை காப்பாற்ற சாதாரண மெக்கானிக்கான நாயகனின் உதவியை நாடுகிறார்கள். வில்லன்களிடமிருந்து நாயகியை காப்பாற்றி தந்திரமாக தப்பிச்செல்ல, ட்ரான்ஸ்போட்டர் மாதிரி காட்டுத்தீ போல் கிளம்பியது படம். நிமிர்ந்து உட்கார்ந்தால் அப்படியே போய்கிட்டிருந்த படம்... ஹீரோ ஒரு சாதாரண மெக்கானிக்காக தன் சொந்த ஊரை விட்டு வேறு ஊரில் தன் அம்மாவோடு வாழ்கிறான் என்பது தெரியவர... ஆனால் அவனுக்கு ‘’இன்னொரு பேர் இருக்கு, அவன் கோலார்ல யார் தெரியுமா’’ என்று ஃப்ளாஷ்பேக் போகும்போது அட நன்னாரிகளா பாட்ஷாடா இது என்று தோன்றி.. பிறகு அது மதுர, வேட்டைக்காரன், பகவதி என்று பயணித்து கஜேந்திராவின் சாயல்களுடன் கடைசியில் ஹீரோ ஜெயித்து… முடியல!

உக்ரம் பார்த்து இப்போது நான்கைந்து மாதங்கள் ஆகிவிட்டது. அதற்கு பிறகு கன்னடப்படங்கள் எதுவுமே பார்க்கவில்லை. பார்க்கும் ஆவலுமில்லை. லூசியா இயக்குனரின் அடுத்த படம் வரும்வரை காத்திருக்க வேண்டியதுதான் போல. அடுத்தபடத்திற்கு C10H14N2 என்று தலைப்பு வைத்திருக்கிறார், இது நிகோடினின் கெமிக்கல் நேம்! ஆர்வம் மேலோங்க காத்திருக்கிறேன்.

(தமிழ் இணைய இதழுக்காக எழுதிய கட்டுரை)