Pages

09 March 2017

ஆணுக்குப் பெண் நிகரா?



முன்பு வேலை பார்த்த அலுவலகம் ஒன்றில் மகளிர் தினத்தன்று பெண்கள் எல்லோரையும் ஒரே நிறத்தில் உடையணிந்து வர சொல்லி இருந்தார்கள். அப்படி ஒரு நாளில் அங்கே வேலைபார்த்த ஒரு ஆண் நண்பனும் (விபரம் தெரியாமல்) அதே நிறத்தில் உடையணிந்து வந்துவிட்டான். அதை அலுவலக ஆண்நண்பர்கள் கேலி பேச ஆரம்பித்தனர். அவனுமே கூட அந்த நிறத்தில் உடையணிந்து வந்ததை அவமானமாகக் கருதினான்.

திரும்பத் திரும்ப எல்லோரிடமும் ''ச்சே தெரியாம போட்டுட்டு வந்துட்டேன் பாஸ்... மதியமா வீட்டுக்கு போய் மாத்திட்டு வந்திடலாமானு இருக்கு...'' என்று சொல்லிக்கொண்டே இருந்தான். இதில் என்ன அவமானம் வந்துவிட்டது என்று எல்லோருமே கேட்டாலும் அவன் விடாமல் சொல்லிகொண்டே இருந்தவன், ஒரு கட்டத்தில் கடுப்பாகி வீட்டுக்கு கிளம்பிவிட்டான்.

அந்த நண்பனைப்போலவேதான் என்னைப்போன்ற பல ஆண்களும் பெண்களோடு தன்னை எவ்விதத்திலும் ஒப்புமைப்படுத்தி சொல்வதை எப்போதும் எந்த சந்தர்ப்பத்திலும் விரும்புவதேயில்லை. அது அவமானப்படுத்துகிற ஒரு செயலாக எப்படியோ பொதுபுத்தியில் பதிந்துவிட்டது.

இருபாலர் பள்ளிகளில் கூட பெண்களோடு ஒப்பிட்டுப் பேசுவதை பையன்கள் யாருமே விரும்புவதில்லை. பத்தாம்வகுப்புத்தேர்வில் மிகக்குறைந்த மதிப்பெண் பெற்றுவிட்டான் என்பதற்காக வருத்தமே படாத பள்ளி நண்பன் அவன். ''பக்கத்துவீட்டு பெண்ணை பார்த்தாச்சும் திருந்துடா அவ பாரு அவ்ளோ மார்க் எடுத்திருக்கா'' என்று தகப்பன் திட்டியதற்காக தற்கொலை செய்துகொண்டு செத்துப்போனான். அவனை பிணமாக கிடத்தி வைத்திருந்த அந்த நேரத்தில் ''என்ன இருந்தாலும் அவன் மானஸ்தன்டா'' என எங்கள் நண்பர்கள் எல்லாம் வியந்து பேசி இருக்கிறோம்.

வீட்டில் பெண்களை காட்டி ''இவளை நான் ஆம்பளை மாதிரி வளர்த்திருக்கேன்'' என்று சொல்வதை பெருமையாக நினைக்கிற பெற்றோர்களில் யாருமே மகனைக்காட்டி ''இவனை நாங்க பொண்ணு மாதிரி வளர்த்திருக்கோம்'' எனச்சொல்வதில்லை. நம்முடைய குழந்தை வளர்ப்பே அந்த லெவலில்தான் இருக்கிறது. தன் மகள் அப்பாவின் அண்ணன்களின் கணவனின் சட்டைகளை அணிந்துகொள்வதை எப்போதும் தாழ்வாக நினைக்காத நாம்தான், அதே பையன்கள் அக்காவின், அம்மாவின் உடைகளை அணிவதை ஒப்புக்கொள்ள மறுக்கிறோம்.

இங்கே எங்கும் எப்போதும் ஆண்களை பெண்களோடு ஒப்பிட்டுவிடகூடாது. பெண்கள் செய்கிற செயல்களை ஆண்கள் செய்துவிடக்கூடாது. அது வீட்டுவேலைகளாக இருந்தாலும் சரி... கதை கவிதை எழுதுவதாக இருந்தாலும் சரி.

அறிவியக்கமாகவே இருந்தாலும் இங்கே ஒரு ஆண் எழுத்தாளரின் படைப்புகளை இன்னொரு பெண் எழுத்தாளரின் படைப்புகளோடு ஒப்பிட்டு பேசி எங்குமே பார்க்க முடியாது. சினிமாவிலும் கூட அதே நிலைதான். நயன்தாராவின் நடிப்பை கமலஹாசனோடு தனுஷோடு ஒப்பிடமாட்டோம். த்ரிஷாவோடும் அனுஷ்காவோடும்தான் போட்டி! ஹாலிவுட் வரைக்கும்கூட இதே பாணிதான். எப்போதுமே துறை ஒன்றாகவே இருந்தாலும் ஆணுடைய திறமை வேறு... பெண்ணுடைய திறமை வேறுதான். காரணம் பெண்கள் வலிமையற்றவர்கள், அறிவற்றவர்கள், அரசியல் தெரியாதவர்கள், அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது, அவர்கள் ஆணை அண்டி பிழைப்பவர்கள் என்பது நமக்குத் திரும்ப திரும்ப போதிக்கப்படுகிறது.

எந்த ஆணும் தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்ளவோ அவரோடு போட்டிபோடவோ விரும்புவதில்லை. அப்படி நடக்கிற பட்சத்தில் அதிலிருந்து தன்னை விலக்கிக்கொள்ளவே விரும்புகிறான். அல்லது அந்த பெண் தன்னை மீறி வளரும் போது அவளுடைய திறமைக்கு வெளியே அவளுக்கு எதுவெல்லாம் சாதகமாக இருந்தது என்கிற தேடலில் முழ்கிப்போகிறான். சொல்லப்போனால் பெண்களே கூட தன்னை இன்னொரு பெண்ணோடு ஒப்பிட்டுக்கொள்வதை விரும்புவதில்லை. அவர்கள் எப்போதும் ஆண்களோடுதான் போட்டிபோட விரும்புகிறார்கள். ஆண்களைத்தான் உண்மையான போட்டியாளர்களாக கருதுகிறார்கள்.

இங்கே எல்லா ஆண்களுக்கும் பெண்களோடு வாழவேண்டும். அதுவும் மனைவியோடு ரகசியமாக மல்ட்டிபிள் தோழிகளும் என்றால் சுகானுபவம்தான். ஆனால் எந்த ஆணும் பெண்களைப்போல வாழவிரும்புவதில்லை. அவன் பெண்ணியவாதிகளை கூட ஏற்றுக்கொள்வான். அவர்களை நன்றாக ஊக்கப்படுத்துவான். ஆனால் எல்லாமே தன்னை விலக்கிக்கொண்டுதான். அது எல்லாமே நிபந்தனைகளுகுட்பட்டது. தன் குடும்பத்தினருக்கும் காதலிக்கும் அப்பாற்ப்பட்டது.

அதனால்தான் அவனால் ஒரே நேரத்தில் ஆல்பர்பஸ் அங்கிளாக மாறி ''நைஸ் தோழி'' கமென்டுகளையும் போட முடிகிறது. இன்னொரு பக்கம் மகளிர் தின வாழ்த்துகளையும் பகிர்ந்துகொள்ள முடிகிறது. இதற்கு நடுவே ஸ்கான்டல் வீடியோ ஏதாவது வந்திருக்கிறதா என தேடலுடன், இன்பாக்ஸில் ''இன்னைக்கு என்ன ட்ரெஸ் போட்டிருக்கீங்க'' மாதிரியான சாட்டிங் தொல்லைகளையும் தொடரமுடிகிறது.

பெண் என்பவள் ஆடு,மாடுபோல வேறொரு ஜீவராசி அல்ல... அவளும் என்னைப்போலவே ஒரு சக உயிர் என்று பார்க்கிற ஒருவனால் மட்டும்தான் அந்த ஜீவனோடு தன்னை ஒப்பிட்டுக்கொள்வது சாத்தியமாகும். ஆனால் அதை சாத்தியமாக்குவது ஆணுக்கு மாத்திரமே சாத்தியமல்ல. காரணம் ஆணின் ஒவ்வொரு அணுவிலும் ஆணாதிக்க மனோபாவம் பல்லாயிரம் ஆண்டுகளாக சேமிக்கப்பட்டிருக்கிறது. அதை மீறுவதென்பதோ அதற்கெதிராக செயல்படுவதென்பதோ அத்தனை சுலபமல்ல. வெவ்வேறு அரசியல் அழுத்தங்களால்தான் அவன் அதிலிருந்து மீளவும் பெண்ணை சரிசமமாக நடத்துகிற மனோபாவத்திற்கு நகரவும் முயல்கிறான். அதோடு இந்த நகர்தலும் கூட பெண்ணின் துணையின்றி சாத்தியமும் அல்ல. அப்படிப்பட்ட பெண்களால்தான் நானும் என்னை ஆணாதிக்கத்தின் அழுத்தங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள முயற்சி செய்கிறேன்.