Pages

10 May 2020

இருண்டகாலத்தின் இரண்டாவது இன்னிங்ஸ்!
ஒன்றரை மாதங்கள் ஆகப்போகிறது இந்த ஊரடங்கை அறிவித்து. வெறும் நான்கே நான்கு மணிநேரங்கள் மட்டுமே கால அவகாசம் கொடுக்கப்பட்டு எல்லோரும் கூடடையுங்கள் என விரட்டியடித்த உலகின் மிகப்பெரிய நிகழ்வு. டீமானிடைசேஷன் என்ன செய்ததோ அதையேதான் இந்த ஊரடங்கும் இந்தியாவுக்கு செய்துகொண்டிருக்கிறது. இனியும் செய்யும்.
ஊரடங்கால் தொழில் அகதிகள் எல்லாம் வருமானத்திற்கு வழியில்லாமல் உணவுக்காக அலைந்து திரிந்து தவித்தபோது... பசியோடு ஒருவரைக் கூட தவிக்க விடமாட்டோம்... என்கிற சூளுரைகளை நிதி அமைச்சர் நமக்கு வழங்கினார். ஆனால் நாற்பது நாள்களா நாடே பசியின் கொடுமையால் துடித்தது. இப்போதும் துடித்துக்கொண்டிருக்கிறது. எத்தனையோ பேர் பசியால் செத்துப்போனார்கள். தொழில் நசிந்து தற்கொலை செய்துகொண்டார்கள்.
பொருளாதார பின்னடவை சமாளிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு கையாளப்படும் என்றார் பிரதமர். இன்றுவரை அந்த குழு என்ன புடுங்கிக்கொண்டிருக்கிறது... அதனால் விளைந்த பயன் என்ன யாருக்கும் தெரியாது. வீட்டிற்குள் இருந்து தன்னுடைய தட்டுகளால் சத்தமெழுப்பியதை தவிர நிதியமைச்சர் செய்த உருப்படியான காரியம் என்னவென்று யாருக்காவது தெரியுமா...
தொழில்கள் நசிந்துவிட்டன. வேலை இழப்புகள் கடந்த ஐம்பதாண்டுகளில் இல்லாத அளவுக்கு எட்டியிருக்கிறது. சம்பளத்தை குறைக்காதீர்கள், வேலையை பறிக்காதீர்கள் என்று சொன்ன அரசு... ஆனால் யாருமே செய்யவில்லை. எப்படி செய்ய முடியும். என்னதான் மோடி ஆதரவு சங்கியாகவே இருந்தாலும் நஷ்டத்தில் இயங்கும்போது யாராலும் அதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியும் மீறி தொழிலாளர் நலனை காக்கிற நிறுவனங்களுக்கு உரிய நிதிபாதுகாப்பை இந்த அரசுகள் அளித்திருக்க வேண்டாமா... இதுவரை அப்படி எதாவது அறிவிப்புகளை நீங்கள் கண்டீர்களா? அதையும் செய்யவில்லை. வருமானமில்லாமல் தொழில் நடக்காமல் எந்த சிறுகுறு தொழில் முதலாளியும் தொடர்ச்சியாக சம்பளம் கொடுக்க முடியாது. காரணம் இங்கே சிறுகுறு மைக்ரோ லெவல் தொழில் நடத்துகிறவனும் ஒருவகையில் தொழிலாளிதான். அவனுடைய நிதிநிலைக்கு உதவிக்கரம் நீட்டாமல் வெறும் வாய்ஜாலாங்களால் நிகழ்த்தி காட்ட இது என்ன மதக்கலவரமா... சாதிக்கலவரமா... சொன்னதும் ஆளுக்கு ஒரு அரிவளோடு சென்று கண்டவனையும் வெட்டித்தள்ள.. இது உயிர்காக்கும் நடவடிக்கை. இங்கே சொல்லைவிட செயல்தான் பேசும்.
கொரானாவுக்கு எதிரான போரில் அனைவரும் கைகோர்ப்போம் என்றார் பிரதமர். இந்தியாதான் கொரானாவை மிகச்சரியாக கையாளுகிறது. உலக நாடுகளே மோடிதான் சிறந்த பிரதமர் என்கிறார்கள் என்று வாட்ஸ் அப் வட்டாரங்கள் எல்லாம் கொண்டாடித்தீர்த்தன. சொல்லப்போனால் கொரானாவை வைத்து தன்னுடைய கட்அவுட்டை இன்னும் நான்கு அடி உயர்த்திக்கொள்ளத்தான் பார்த்தார் பிரதமர். இதை மிகச்சரியாக கையாண்டிருந்தால் அது நாற்பதடி கூட உயர்ந்திருக்கும். ஆனால் அதை செய்ய மிகுந்த பொருப்புணர்வும் ஆளுமையும் வேண்டும். வெற்று உதார்களால் உதவாது. அவர் கைதட்டசொன்னார்... விளக்குப்பிடிக்க சொன்னார்... ஹெலிகாப்டர் வைத்து பூத்தூவசொன்னாலர். ஒரு கொள்ளைநோயை கையாளும் விதம் இதுதானா.
இதுபோன்ற வெத்து பம்மாத்துகள் எதுவும் ஒரு கொள்ளைநோயை கட்டுப்படுத்துவதில் உதவாது. முறையான திட்டமிடலும் அறிஞர்களின் சரியான வழிகாட்டுதல்களும் அதை ஏற்றுக்கொண்டு செயல்படுத்துகிற அதிகாரிகளும்தான் தேவை. தொடர்ச்சியாக பல்வேறு அரசு நிறுவனங்களும் ஆய்வு நிறுவனங்களும் இந்த ஊரடங்கு காலத்திலும் கூட எச்சரிக்கைகளை கொடுத்துக்கொண்டே இருந்திருக்கிறார்கள். ஆனால் அதை காதுகொடுத்து கேட்பதற்கு அரசு தயாராக இல்லை. இந்த அரசுக்கு காதுகள் கிடையாது.
ஜெயலலிதா காலத்தில் எப்படி ஒருநபர் ஆட்சி தமிழகத்தில் நடந்ததோ அதுபோல இன்று இந்தியாவில் நடப்பது இருநபர் ஆட்சி. எல்லா முடிவுகளுக்கும் இந்த இருவர் அனுமதிக்காக காத்திருக்கவேண்டும். காத்திருந்து காத்திருந்து மக்கள் செத்துக்குவிந்தாலும் காத்திருக்கவேண்டும். அவர்கள் தூங்கி எழுந்து வரும் வரை காத்திருக்க வேண்டும். அவர்களுடைய கழிவறை வாசலில் தவமிருக்கவேண்டும். இந்திய விஞ்ஞானிகளும் அறிஞர்களும் அப்படித்தான் இன்று காத்திருக்கிறார்கள். மேமாதம் அறிவித்த மூன்றாவது ஊரடங்கிலும் கூட இதே மெத்தனம் கடைபிடிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசுக்கு ஜோசியக்காரர்கள் மீது இருக்கிற மரியாதை கூட அறிவியலாளர்கள் மீது இருக்கிறதா என்று தெரியவில்லை.
இன்று மற்ற நாடுகளில் எல்லாம் கொரானா ஒரளவு கட்டுக்குள் வரத்தொடங்கி இருக்கிறது. பலி எண்ணிக்கை குறைகிறது. பாதிப்பு எண்ணிக்கை பன்மடங்கு குறைந்திருக்கிறது. ஆனால் இந்தியாவில் நிலைமை தலைகீழாக மாறிக்கொண்டிருக்கிறது. கொரானா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை பல மடங்காக அதிகரித்துக்கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் சுறுசுறுப்பாக இயங்கவேண்டிய அரசோ... போர் உச்சத்தை எட்டுகிற சமயத்தில் நம்மை சானிட்டைசர் போட்டு கைகழுவிவிட்டது. இனி நாம் கொரானாவோடு வாழப்பழகவேண்டும் என்று அறிவிக்கிறார் சுகாதார செயலாளர்.
இந்தியா இன்று இரண்டு விதமான சிக்கல்களை எதிர்கொள்கிறது. ஒன்று கொரானாவை இந்தியா நினைத்தபடி வெறும் ஊடரங்கால் மட்டுமே கட்டுப்படுத்த முடியவில்லை. அதன் தாக்கம் நினைத்துப்பார்க்கவும் முடியாத அளவில் வளர்ந்துகொண்டே செல்கிறது. இரண்டாவது இந்தியாவை சூளும் வறுமை. ஒருபக்கம் வேலையிழப்பால் அவதிறும் மக்கள். தொழில்நசிந்து போனதால் திண்டாடும் முதலாளிகள். அதன் தொடர்ச்சியாக வீழும் இந்திய பொருளாதாரம்.
அதோடு இந்தியாவின் பிரதான சாலைகளில் கூட்டம் கூட்டமாக மக்கள் இடம்பெயருகிறார்கள். இந்த தொழில் அகதிகளை மீட்கவோ அவர்களை உரிய இடத்தில் சேர்க்கவோ அவர்களுக்கு உரிய உதவிகள் கிடைக்கவோ அரசு எவ்வித முயற்சிகளையும் எடுக்கவில்லை. போர்க்கதைகளில் மட்டுமே படித்த பசியோடு குடும்பம் குடும்பமாக நிகழும் இந்த இடப்பெயர்வுகளை முதன்முறையாக நாம் வாழும் காலத்தில் பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு நிர்கதியாக விடுகிற போர்ச்சூழலும் இங்கே இல்லை. அரசு நினைத்தால் வாகனங்களை ஏற்பாடு செய்து இந்த அகதிகளை மீட்கவும் முடியும். ஆனால் இவர்கள் அடையாளமிலிகள். இவர்களுக்கு ஆதார் அட்டையோ வாக்களர் அட்டையோ வாக்குகளோ கூட இருக்குமா தெரியாது. இவர்களுடைய வாக்குகளால் ஆட்சியை பிடிக்கவும் வாய்ப்புகளில்லை. கிரிகெட் ஸ்கோர் போல அன்றாடம் வந்து விழும் கொரானா பட்டியல்கள் போல இந்த நீண்ட பயணங்களில் பசியால் பிணியால் சோர்வால் இறந்துபோகிறவர்கள் எண்ணிக்கைகள் எங்கும் வரக்காணோம்.
ஊரடங்கை திட்டமிடும்போது ஒழுக்கமாக திட்டமிட்டிருந்தால் இன்று இந்த நிலை உருவாகி இருக்காது. ஆனால் அவசரம். அதில் ஒரு விளம்பரம் தேடவேண்டும். ஒரு ஹீரோயிசம் காட்டவேண்டும். ஹாலிவுட் படங்களில் அமெரிக்க அதிபர் உரையாற்றுவது போல டிவியில் முகத்தை காட்டி பேசவேண்டும். பிரதமரின் இந்த முட்டாள்தனங்களுக்கு சப்பைக்கட்டு கட்ட பெரும்பான்மை ஆதரவு என்கிற ஊரில் பிணந்தின்னிகளுக்கு கொண்டாட்டம்தான்.
கொரானாவை இந்தியாவிலேயே சிறப்பாக கையாண்டது கேரளா மட்டும்தான். அவர்களால்தான் உருப்படியாக இந்த கொள்ளை நோயை கையாள முடிந்தது. ஆரம்பத்தில் அதிக கேஸ்கள் கொண்டிருந்த மாநிலம் இன்று பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்தியாவிலேயே மிகச்சிறந்த மருத்துவ வசதிகளை மருத்துவர்ளை கொண்ட தமிழ்நாடே திணறிக்கொண்டிருக்கிறது. காரணம் என்ன? முடிவெடுக்கும் திறன். ஆரம்பத்திலேயே பினராயி விஜயன் செய்தது ஒன்றுதான்... தன்னை இந்தியா என்கிற கூட்டமைப்பிலிருந்து விலக்கிக்கொண்டு அதன் உதவிகளுக்கோ முடிவுகளுக்கோ காத்திருக்காமல் அவர்களாகவே கொரானாச்சூழலை கையாளத்தொடங்கியதுதான். நம்முடைய அடிமை அரசோ இப்போதும் மேலிடத்து உத்தரவுக்காக டயர்களை வணங்கி காத்திருக்கிறது. பழக்கப்படுத்தப்பட்ட மிருகம் அப்படித்தான் சவுக்கு சத்தமில்லாமல் அதனால் இயங்க முடியாது. ஆனால் அறிவற்ற சவுக்குகள் அடுத்து என்ன செய்வது என்பதைக் குறித்து எந்த திட்டங்களுமற்றவை. கலவரங்களை உருவாக்குவதை மட்டுமே அறிந்தவை. யோசித்துப்பாருங்கள் இந்த ஆட்சியாளர்கள் ஏன் எதை முன்னெடுத்தாலும் அது ஒரு கலவரச்சூழலுக்கே நம்மை தள்ளுகிறது.
மக்களுடைய உயிர்குறித்து எந்தவொரு அக்கறையும் இல்லாத அரசு இது. அதிலும் அகதி உழைப்பாளர்களின் உயிருக்கெல்லாம் மயிரளவுக்குகூட இங்கே மதிப்பு கிடையாது. அதனால்தான் கர்நாடகாவில் கட்டுமான நிறுவனம் கேட்டுக்கொண்டது என்று ஊருக்கு திருப்பி அனுப்பவேண்டிய தொழிலாளர்களை அனுப்பாமல் பிடித்து வைக்கிறார்கள். ரயில்தண்டவாளங்களில் சாலைகளில் மனிதர்கள் செத்துவிழுகிறார்கள். அதைப்பற்றி எங்காவது பிரதமரோ அவரை இயக்கும் நிழல்பிரதமரோ அமைச்சரவையின் வேறுயாருமோ எதாவது அறிவித்து பார்த்தீர்களா... செத்துப்போகிறவன் எவனோ ஏழை என்கிற மெத்தனத்தில்தானே நாம் இருக்கிறோம். இந்த அரசு இந்த நாற்பது நாள்களில் அந்த அகதி தொழிலாளர்களை எப்படி கையாண்டதோ அப்படித்தான் அடுத்த நாப்பது நாள்களும் நம்மையும் கையாளப்போகிறது. சாலைகளில் நடக்கும் அகதிகளின் நிலை நமக்கும் நாளை வரக்கூடும். நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை. இந்த நீண்டசாலைகளில் வறண்ட நாவுகளோடும் பசித்த வயிறுகளோடும் நடப்பதை தவிர...