Pages

26 July 2008

முதல் டெஸ்ட்டில் இந்தியாவை தகர்த்த இலங்கை அணி


இலங்கையில் நடந்து வரும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்கஸ் மற்றும் 238 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமாக தோற்றது . இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய அதிர்ச்சி தரும் தோல்வியாக இது அமைந்துள்ளது .

முதலில் ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்கசில் 6 விக்கெட் இழப்பிற்கு 600 ரன்களை குவித்தது , தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது முதல் இன்னிங்கஸில் தனது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 233 ரன்களையே எடுத்து பாலோ ஆன் செய்தது , தனது இரண்டாவது இன்னிங்கஸை தொடங்கிய இந்திய அணி எதிர்பார்த்தது போல 133 ரன்களுக்குள்ளாகவே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இன்னிங்கஸ் தோல்வியை எட்டியது .
அந்த அணியின் முரளிதரன் மற்றும் மெண்டிஸின் சிறப்பான பந்து வீச்சு இலங்கை அணியின் வெற்றிக்கு வழி வகுத்தது .

சுழற் பந்து வீச்சில் வல்லவரான இந்திய அணியினர் கடந்த 10 வருடங்களாகவே அந்த தகுதியை இழந்து வருவதே இத்தோல்விக்கு காரணமாக கருதப்படுகிறது .

166 ஓவர்கள் பேட் செய்த இலங்கை அணியின் 6 விக்கெட்டுகளை மட்டுமே இந்திய அணியினரால் எடுக்க முடிந்ததும் , கும்ப்ளே போன்ற மூத்த வீரர் ஒரு விக்கெட்டை கூட எடுக்காததும் , 144 ஓவர்கள் மட்டுமே வீசிய இலங்கை அணியினர் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியதும் நமது அணியின் பந்துவீச்சை கேள்விக்குறியாக்குகிறது .

இலங்கை அணியின் 4 பேட்ஸ்மென்கள் சதத்தை கடந்த ஒரு ஆடுகளத்தில் இரண்டு இன்னிங்ஸிலும் சேர்த்து ஒரு அரை சதத்தை மட்டுமே நமது அணியினரால் எடுக்க முடிந்திருப்பது , இந்திய அணியின் பேட்டிங்கையும் கேள்விக்குள்ளாக்குகிறது .

இது இந்திய அணியின் 3வது மிகப்பெரிய தோல்வியாகும் , இதற்கு முன் இந்திய அணி 1974,1958 ஆண்டுகளில் இங்கிலாந்து மற்றும் மே.இந்திய தீவு அணிகளிடம் 336,258 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

இந்த தோல்விக்கு ஒட்டு மொத்த இந்திய அணியின் மெத்தனமான ஆட்டமுறையே காரணமென வல்லுனர்கள் கருதுகின்றனர் . இன்னும் சிலர் 20-20 ஆட்டத்தின் பாதிப்பு இதுவெனவும் கூறப்படுகிறது .

எது எப்படி இருப்பினும் இது இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மோசமான தோல்வியே என்பது நிதர்சனம் .

_____________________________________________________________________


இலங்கையின் வெற்றிக்கு வித்திட்ட முத்தையா முரளிதரன் மற்றும் தனது அற்புத சுழலில் இந்திய அணியை மூழ்கடித்த அஜந்தா மெண்டிஸுக்கும் வாழ்த்துக்கள் .