Pages

30 September 2008

சென்னை வலைப்பதிவர்சந்திப்பு - 04-10-2008

சென்னைவாழ் வலை பதிவர்களுக்கு ஒரு அறிவிப்பு .

இந்த வார இறுதியில் பழம் பெரும் பதிவர் ( வரும் போது பழம் கொண்டு வரவும் ) ஆஸ்திரேலியாவாழ் பதிவரான பொட்டிகடையார் சென்னை வருகிறார்.

அவரை சந்திக்கவும் , மேலும் சென்னையில் மிகச்சமீபத்தில் வலைப்பதிவர் சந்திப்பு எதுவும் நடத்தாத காரணத்தால் , பல புதிய பதிவர்கள் உருவாகி வரும் சூழலில் அவர்களும் ஒருவருக்கொருவர் சந்தித்து பயன் பெறவும்

அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று கடை(எந்த கடை என்று நான் சொல்லவும் வேண்டுமா) விடுமுறையாதலால் , அதனால் பாதிக்கப்பட்ட சென்னைவாழ் பெருங்குடி மக்களின் சிரமத்திற்கு இன்றைய ஆளும் அரசின் அராஜக போக்கை கண்டித்தும் ஒரு சிறிய அளவிலான அறப்போர் புரியவும் உத்தேசித்துள்ளோம் .

இந்த சந்திப்பில் ஏற்கனவே அடியேன் ,தல பாலபாரதி , மருத்துவர்.புருனோ , நர்சிம் ,ஜ்யோவ்ராம் சுந்தர் , லக்கிலுக் , முரளிக்கண்ணன் , புதுகை அப்துல்லா , தாமிரா ( வருவார் என்ற நம்பிக்கையில் போடுகிறேன் ) , பதிவர் செல்வம் , சென் , ஆகியோர் வருவதாக உருதியாகத்தெரிகிறது . இச்சந்திப்பில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் , மெரினா பீச்சில் இடப்பற்றாகுறை இருந்தால் மட்டுமே பிரச்சனை .

புதிய பதிவர்கள் கட்டாயம் கலந்துகொண்டு பதிவுகள் மற்றும் பதிவர்கள் குறித்த உங்கள் சந்தேகங்களை அங்கே வரும் பல மூத்த பதிவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் . நானும் கேட்டு தெரிந்து கொள்ள உத்தேசித்திருக்கிறேன் .

அதனால் சென்னை பதிவர்களே அலைகடலென திரண்டு வாரீர் வாரீர்


சந்திப்பு நாள் - 04-10-2008

நேரம் - மாலை 6.00 லிருந்து

இடம் - சென்னை மெரினா கடற்கரை காந்திசிலை பின்புறம்

வாங்க பாஸு... கலக்குவோம்.....

மேலதிக விபரங்களுக்கு..

எனது மின்னஞ்சல் முகவரி - dhoniv@gmail.com
எனது அலைபேசி எண் - 9941611993

_____________________________________________________________________________________

29 September 2008

பாரு நிபேதிதாவும் சாராயக்கடை லகுட பாண்டிகளும் ஒரு கடிதமும்......


அண்ணாத்த பாரு நிபேதிதாவுக்கு வணக்கம் ,

சமீபத்தில் உங்க பார்ல சரக்கடிச்ச மப்போட எழுதும் மடால் , தடால் , படால் என்ன வேணா வச்சிக்கோபா ,...

மூணு நாளா உங்க கம்பேனி சுமால் பெக்கு(அதான்பா குட்டி பெக்கு) அடிச்சு ஒரே குஜாலாக்கீது... உங்க வூட்ல அல்லாரும் சௌக்கியமா.. எங்கூட்டுல அல்லாரும் சோக்காகீராங்கப்பா... இன்னாடா இந்த சோமாரி நமக்கு இன்னாத்துக்கு லெட்டரு உடறானுதான யோசிச்சிகினுக்கீரிங்கோ.. அது ஒன்னுமில்ல நைனா.... இப்பல்லாம் நம்ம பேட்டைல ஒங்க பேர சொன்னாத்தான் சரக்கு நல்லா போணியாவுது... அதுமில்லாம நீங்க பாட்டுக்கு பேட்டை பசங்கள கன்னாபின்னானு கவுத்து போட்டு கும்மிட்டீங்கோ அதான் ஒரு தாங்க்ஸ் சொல்லிக்காலம்னுதாம்பா...

சமீபத்தில் கிங்பிசர் கம்பேனி ரூப்டாப் பார்ல நடந்த குடிகாரர்கள் கூட்டத்தில , நீங்க பேசின பேச்சிருக்கே சூப்பர் தலைவா.. டக்கரு... நல்லா கேட்ட நாக்க புடுங்கிக்கறமாதிரி...

இந்த காலத்து புள்ளையாண்டானுங்களுக்கு இன்னா தெர்து , சாராயம் காச்சுங்கடானா சுடுதண்ணி காச்சுதுங்கோ..

நம்ம சாராயக்கடை லகுட பாண்டிங்க இருக்கிறானுங்களே அவனுங்களுக்கு விவஸ்தையே இல்லபா . உங்க ஃபாரின் பாருக்கு முன்னால இந்த லகுட பாண்டிகளெல்லாம் எம்மாத்திரம் . நீங்க சொன்னது எவ்வளவு சரி , ஒரு சாராயக்கடை வைச்சு நடத்துறது சாதாரண காரியமா... அதுக்கு எம்புட்டு கஷ்டப்படனும் , நாம குடுக்கற சரக்கு , குடிக்கறவங்களுக்கு புடிக்கனும் , அது அவங்க வவுத்துக்கு ஒன்னும் பண்ணக்கூடாதுனு நீங்க சொன்னது எவ்ளோ நெசம் . ஏன்னா இப்டித்தான் பாரேன் முந்தாநாளு ஒரு ஒரு டமாருவோட சேர்ந்து அட்ச்ச சாராயம் வாந்தி பேதி வரிக்கும் போயிட்ச்சுபா....

நீங்க அப்படி இன்னா சொல்லீட்டிங்கோ .. தம்பிங்களா நீங்கள்ல்லாம் சாராயம் எப்படி காய்ச்சறதுனே தெரியாம தொழிலுக்கு வந்துட்டிங்கோ .... முதல்ல நம்ம முன்னோர்கள் ராயப்போட்டை கபாலி , கொருக்குபேட்டை முத்து இப்படி பல ஆளுங்க கிட்ட நல்லா கத்துகிட்டு அப்புறமா சாராயம் காய்ச்சுங்கோனு சொன்னீங்கோ....

இதுல இந்த அரவேக்காட்டு பேமாணிங்க அவனுங்க காய்ச்சறதுதான் சாரயம்னு ஹெட் வெயிட் போட்டுகினு அலையுதுங்கோ.... நீ மட்டும் எதினா சொன்னா போதும் அவ்ளோதான் உட்டாபத்திரி ரெய்டு கமால் பத்திரி சீ னு கெளம்பிருதுங்கோ... இன்னா பண்ண்டடும்..

இந்த பிள்ளைங்கோ இத்தோட ஒன்ன வுட்டா பரவால்ல.. இதுங்க காய்ச்சற மொக்க சாராயத்தல்லாம் உனக்கு வேற குடுத்து டேஸ்ட்டு பாக்க சொன்னா உங்களுக்கு கோவம் வருமா வராதா ! ! தலீவா ..... நீங்க யாரு எப்பேர்பட்ட சரக்குலாம் அட்ச்சவரு.... உங்களப் போயி அதும் லோக்கல் சரக்க குட்த்து டெஸ்ட் பண்ண ஒங்களுக்கு காண்டாவாது ... நீங்க என்ன எலியா மந்து குத்து டெஸ்டு பண்ண...

இந்த லகுட பாண்டி பசங்களுக்குலாம் தெரியாது சாராயம்னா இன்னா போதைனா இன்னா கவுச்சைனா இன்னா ஊறுகானா இன்னானு, அதுக்குள்ள சாராயக்கடை போட்டு பெரியாளாக பாக்குதுங்கோ.... நீங்கதான் தானே தலைவன் ஆச்சே கோச்சிகினீங்கோ... அது இந்த டாமாகோலி பசங்களுக்கு புரியுமா....

இந்த லகுடபாண்டி பசங்களுக்கு இன்னா தெரியும் தலிவா உங்களாட்டம் அதுங்க இன்னா பாரின் சரக்கு அடிச்சிருக்குங்களா , அட லோக்கல் சரக்காவது அடிச்சிருக்குங்களா...நீங்க பல நாட்டு சரக்கும் பாத்தவரு.... இந்த பிச்சாத்து பசங்களுக்கு ஓன்னியும் கெடியாது , அப்புறம் இன்னா , அதுங்க குட்ச்சதுலாம் புட்டிபாலும் டாஸ்மாக்கு பீரும் கொழாத்தண்ணியும் தான்...

இத மாதிரி என்னாட்டம் குட்டி சால்னா கடை அதிபருங்களுக்கு அப்பப்போ எதுனா அட்வைஸு குடுத்துக்கினு இருந்தீங்கன்னா நாங்களும் குஜாலா நெறிய பதிவு போடுவோம்...

அதினால நான் இன்னா சொல்லிகீரேன்னா , மக்களே நீங்க சாராயக்கடை வைக்கணும்னா மொதல்ல நாலு கடைல சரக்கு வாங்கி குடிங்கோ அதில இன்னா கலந்திருக்கு , எதில போதை ஜாஸ்தினு கத்துக்கோங்கோ , அப்பால என்னிக்காவது ஒரு நா சாராயம் காச்சலாம் , அது வரிக்கும் மூடிகினு புச்சு புச்சா தின்ச்சு தின்ச்சா நெறிய குடிங்கோ...

அப்பால நீங்க காய்ச்சற மட்டமான சாராயத்தல்லாம் தலிவருக்கு அனுப்பி டார்ச்சர் பண்ணாதீங்கோ, அப்பால தலிவரு கபாலி சரக்கு குடிச்சியானு கேட்டா பேந்த பேந்த முழுச்சிகினுக்கறது , அட்லீஸ்டு டூமில் குப்பம் குமாரு சரக்காவது அட்ச்சு உங்க போதைய வளத்துக்கோங்கோ..

அப்பால நல்லா ஆராய்ச்சி கீராய்ச்சி பண்ணிகினு பொறுமயா சால்னாகடை வைக்கலாம் , அதுக்கப்பால சாராயகடை வச்சக்கினு பொய்ப்பு நட்த்து ஒன்ன யாரு வேணாண்ணது , அத வுட்டுகினு ஃபிரீயா ஒரு இடம் கெட்ச்சிதுனு நீங்க பாட்டுக்கு கடை விரிச்சிகினுருந்தா... மக்கள் சாரயத்த பத்தியும் சரக்கபத்தியும் இன்னா நெனைப்பாங்கோ.... ஆல்ரெடி மக்கள்லாம் சாராயம்னா குமட்டிகினுக்கீதுங்கோ இதுல நீங்க வேற...

இன்னா தலீவா நான் சொல்றது ... இந்த பசங்களுக்குலாம் இப்படிச்சொன்னாத்தான் புரியும் .. அல்லாங்காட்டி அவுத்து போட்டு ஆடிகினே சொல்லனும் அப்பதான் புரியும்..

அப்பால நானும் எங்கடையில செம மொக்க சாராயம் தான் காச்சினுக்கீறேன்... ஓன் அட்வைஸ கேட்டுகினு இனிமே நம்ம கடைல நல்ல சாராயம்தான் காச்சிவேனு பாடிகாட்டு முனீஸ்வரர் மேல சத்தியம்பா... ( அல்லாம் ஒரு சேப்டிக்குதாம்பா ... அல்லாங்காட்டி என்ன உட்டு நீங்க கலாய்ச்சா நான் இன்னா பண்ண)

அவ்ளோதான் தல , வேற ஒன்னுமில்ல

கயண்டுகிறேன்பா...

இப்படிக்கு ..

புச்சா சாராயக்கடை தொறந்திக்கீற ஒரு லகுடபாண்டி..

(ஆண்டவா இன்னிக்கு நம்ம தலிவர் பேர சொல்லி வியாபாரம் தொட்ங்கிக்கீறேன் .. நீதான்பா காப்பத்தனும் )


பி.கு. - இப்பதிவு எந்த ஒரு நபரையும் குறிப்பிடுபவை அல்ல.... பிளாகு எழுதும் அனைவரையும் குறிப்பிடுவது மற்றும் பெருமாளையும்.... பெருமாளே

_____________________________________________________________________________________

ஒரு உலகசாதனை படைத்த வைன் பாட்டில் குறித்த செய்தி :



படத்தில் இருப்பது கின்னஸ் சாதனை படைத்த உலகின் மிக உயரமான வைன் பாட்டில் ஆகும் , இது ஆஸ்திரேலியாவை சேர்ந்த , கிம் புல்லக் எனபவரால் 2007 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது , இதன் உயரம் 6'5'' (6அடி 5 அங்குலம் ) , இந்த பாட்டிலினுள் 63.79 கேலன்கள் வைன் இருக்கிறது , அது சுமாராக 387 முழு வைன் பாட்டில்களுக்கு சமம் ஆகும்.

_____________________________________________________________________________________

அவ்ளோதான்பா.....

____________________________________________________________________

28 September 2008

காதலும் கற்று மற(1) - தன்னம்பிக்கைத் தொடர் - நீங்களும் நல்ல பிகர்தான்.......!!!



காதல் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை , இன்றைய மத்ய வயதினர் பலரும் சரியான ஒரு பிகர் செட்டாகாமல் வீட்டில் பார்த்து கிடைத்த பிகரை உள்ளங்கை நெல்லிக்கனியாய் நினைத்து அட்ஜஸ்ட் செய்து , பல அவதிகளுக்கு நடுவே பிடித்தது கிடைக்காமல் , கிடைத்ததும் பிடிக்காமல் ஒரு மொக்கையான வாழ்க்கையை வாழ்வதை நாம் பார்க்கலாம் . சரி இன்றைய இளைஞர்களுக்கு அப்படி ஒரு நிலை வேண்டுமா , அதனால் நம்மால் முடிந்த ஒரு சிறு உதவி ... இளைஞர்களே உங்களால் முடியும் , முயன்றால் முடியாதது எதுவம் இல்லை , உங்களது பலத்தை முழுமையாய் திரட்டுங்கள் , அப்போதும் முடியவில்லை என்றால் இருக்கவே இருக்கிறது சிவராஜ் சித்த வைத்திய சாலை இழந்த சக்தியை அங்கே பெறலாமாம் .

சரி வழவழவென்று கண்டதையும் எழுதினால் பதிவு சுவாரஸ்யமில்லாமல் போகலாம் அதனால் இனி சீரியஸ் ( சிரிக்காதீங்க ) . நம் நாட்டில் சமீபகாலமாக பல அட்டு பையன்களும் டக்கர் பிகர்களை உஷார் செய்வதை பார்க்க முடியும் , அதற்கு சரியான வழிமுறையை பின்பற்றினாலே போதும் , அது பெரிய கம்ப சூத்திரமெல்லாம் இல்லை , சரியான அணுகுமுறையும் , சிலபல யுக்திகளும் தெரிந்தால் போதும் .அது தெரியாமல்தான் நம் நாட்டு இளைஞர்கள் பாவமாய் திரிகின்றனர்.

அதனால் பிகர் கிடைக்காமல் அலையும் வாலிப வயோதிக அன்பர்களுக்கு ஒரு வாரகாலம் நமது வலைப்பூவில் ஒரு யுனிவர்சல் பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்த எண்ணியுள்ளோம் . 7 நாள் கோர்ஸான இந்த கோர்ஸ் முடிகையில் உங்களுக்கு நிச்சயம் உங்க ஊரின் எந்த பிகரையும் மடக்கும் திறமையும் பலமும் கிடைக்கலாம் கிடைக்காமல் போகலாம் , ஏன்னா இது இலவச சேவை .. காசு கொடுத்து கற்று கொள்ள விரும்புபவர்களுக்கு மேலும் பல நுணுக்கங்கள் சொல்லிக் கொடுக்கப்படும் . முதலில் இந்த பாடத்திட்டம் கல்யாணம் ஆகாத கட்டிளம் காளைகளுக்கு மட்டுமே தயாரிக்கப்பட்டது பிறகு பல ரங்கமணிகளும் தங்கமணிகளிடமிருந்து விடுதலை பெற விரும்புவதால் அவர்களுக்காக சில மாற்றங்களோடு...

நாம் இந்த பாடங்களுக்குள் நுழையும் முன் , இந்த பாடத்திட்டத்தை கற்க உங்களுக்கு முக்கியமாக தேவை தன்னம்பிக்கை , அதனால் முதலில் நம்மால் முடியும் என்கிற தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ளுங்கள் . வானம் மட்டுமல்ல பிகரும் வசப்படும்....


இன்னைக்கு முதல் பாடம் -


நீங்களும் டக்கர் பிகர்தான் !!

ஒரு நல்ல பிகரை நாம் தேர்ந்தெடுக்கும் முன் நாம் நல்ல பிகர்தானா என்பதை ஆராய வேண்டும் . ஆயிரம்தான் காதலுக்கு அழகு முக்கியமில்லை என்று சொன்னாலும் , உங்களை ஒரு பெண் திரும்பி பார்க்க வேண்டுமானால் அதற்கு நம் முகம் குறைந்த பட்சமாவது அழகாக இருக்க வேண்டும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று யாரோ லூசு சொல்லிவிட்டு போய் விட்டது , அதனால் முதலில் முகம் . ஊருக்குள் எந்த பிகராவது முகத்தில் மேக்கப் இல்லாமல் வெளியே வருகிறதா !! இந்த பசங்கதான் சீன் போடறதா நினைச்சுகிட்டு மூஞ்சி கழுவாம பரட்டை தலையோட பூச்சாண்டி மாதிரி சுத்தறது .
உங்க முகம் அழகா இருக்குதானு எப்படி கண்டுபுடிக்கறது . என் மூஞ்சிய கண்ணாடில பார்த்தா அழகாத்தான் இருக்கு , என்று நீங்க கூறுவீர்களானால் , தயவு செய்து உங்களுக்கு இல்லாத அழகை இருப்பதாய் சொல்லும் அந்த கண்ணாடியை உடைத்து தூள் தூள் ஆக்குங்கள் .

உலகத்தில் எந்த கண்ணாடியும் அவனவன் முகத்தை அவனுக்கு மட்டுமே அழகாய் காட்டவல்லது . அதனால் இனியும் கண்ணாடியை நம்பாதீர்கள் , நாமாகவே நம்மை அழகாக்க முயற்சிப்போம் முயற்சி திருவினையாக்கும் .

அந்த பாழாய் போன கண்ணாடியை உடைத்து விட்டு முதலில் நம்மை ஒரு நல்ல பிகராக மாற்ற வேண்டும் . அதற்கு நாம் நல்ல பிகர்தான் என்கிற தன்னம்பிக்கையும் கர்வமும் கொள்ள வேண்டும் . ( பெண்களுக்கு ஆண்களின் கர்வம் மிகவும் பிடிக்கும் !! அதை பற்றி பின்னால் விரிவாய் படிக்கலாம் )

பிகராக வேண்டும் என்று கூறியதும் லூசுத்தனமாக பேர் அண்டு லவ்லிய வாங்கி பக்கெட்டில் வைத்து மோண்டு மோண்டு குளிக்க கூடாது .

நம்ம பாழாய் போன சமூகத்தில் பெண்களுக்கு மட்டும்தான் அழகு குறிப்புகள் இருக்கிறது , அதனால் ஆண்களுக்கும் சில அழகு குறிப்புகள் .
* முகத்தை நல்ல மழுங்க சேவிங் செய்த பையனைத்தான் பெண்களுக்கு பிடிக்கும் என யார் உங்களுக்கு சொன்னது . நல்ல டிரிம்மிங் சேவரை வாங்கி அதில் தினமும் உங்கள் முகத்தில் கொஞ்சமாய் வளரும் தாடியை அழகாக டிரிம் செய்து கொள்ளவும் . ( அதான்ப்பா லேட்டஸ்ட் பேஷன் )

* முகத்தில் கண்ட கிரீமையும் தடவாதீர்கள் , முகத்திற்கு பாசிபயறை நன்கு அரைத்து அதை முகத்தில் பேசியல் போல அப்பிக்கொண்டு ஒரு அரை மணிநேரம் கழித்து கழுவ முகம் பளபளவென்று பளிங்குகல் போல மின்னும் , (மிருதுவாகவும் இருக்கும் , பெண்களுக்கு மிருதுவான முகமே பிடிக்கும் அதற்கான காரணம் 5ஆம் பாடத்தில் இருக்கிறது )

*நல்ல பேஸ்ட் வாங்கி காலை மாலை இருவேளைகளும் நன்கு பல்துலக்கவும் , சிகரெட் பிடிப்பவர்கள் , இரவு தூங்கும் முன் பல் விளக்கிவிட்டு , வாசலின் தயாரிப்பான லிப் கேரை உதட்டில் தடவி விட்டு படுத்துறங்க அவர்களது உதடு கருப்பாவது குறையும் .

* பெண்களுக்கு சிவப்பான ஆண்கள்தான் பிடிக்கும் என்கிற ஒரு தவறான கருத்து உள்ளது , பல அழகான பெண்களும் நல்ல கருப்பான ஆண்களையே விரும்புகின்றனர் . அதனால் அதைப்பற்றி கவலைப்பட்டு கிறுக்குத்தனமாக வெள்ளையாக்கும் கிரீம்களை முகத்தில் பூசிக்கொள்ள வேண்டாம்.

*தினமும் கட்டாயம் சேவிங் செய்ய வேண்டி இருந்தால் நல்ல ஆப்டர் சேவை உபயோகிக்கவும் . முகம் வழுவழு என்று பளிங்கு கல் போல இருந்தாலும் பெண்கள் விரும்புவர்.

*தினமும் தலைக்கு ஷாம்பு உபயோகிக்காதீர்கள் , பெண்களை விட ஆண்களின் முடிக்கு ஆயுசு குறைவு அதனால் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை மட்டும் குறைந்த அடர்த்தியுள்ள ஷாம்புகளை உபயோகிக்கவும் , அதே போல பரட்டை தலையாய் இருப்பதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை , நல்ல அழகாக நீளமான சீரான தலைமுடியையே பெண்கள் அதிகம் விரும்புவதால் , தலையை நன்கு கவனியுங்கள் .

* இது தவிர குளிர்காலங்களில் நல்ல மாய்சரைசர்ஸர்களையும் , வெயில் காலங்களில் நல்ல சன்ஸ்கிரீன் லோசன்களையும் உபயோகிக்கலாம் . அது உங்கள் முகம் தட்பவெப்ப சூழலால் சுருங்குவதை தடுக்கும் .

*முடிந்தவரை முகத்தை சிரித்த மாதிரி வைத்துக்கொள்ள பழகவும் ( சிரித்த மாதிரி என்றால் ஈ என்று இளித்து கொண்டல்ல ) உங்கள் முகத்தில் எப்போதும் ஒரு அழகான புன்னகை தவழட்டும் .

*ஆண்களுக்கு மூக்கு மற்றும் காதுகளில் தேவையில்லாமல் நிறைய முடி வளரும் , வாரத்திற்கு ஒரு முறை அதனை வெட்டி சுத்தமாக வைத்திருக்க முயலவும் .

*இரவு சரியான நேரத்திற்கு உறங்கவும் , தினமும் குறைந்தது 8 மணிநேரமாவது உறங்கவும் ( கண் விழித்து வலையில் எழுதுவதை தவிர்க்கவும் )

*தினமும் 10-15 டம்ளர் தண்ணீர் அருந்தவும் . இதனால் முகம் பளீரென இருக்கும் .

*இது தவிர இளநரை இருந்தால் வாரம் இருமுறை VLCCயின் ஹென்னா வாங்கி உபயோகிக்கவும் . தலை கருப்பாகும்.

*இளம் வழுக்கை இருந்தால் அப்படியே விட்டு விடுங்கள் , அதுதான் அழகு.

*பெண்களை விட ஆண்களின் முகத்தில் எண்ணை அதிகம் வழியும் ( அசடும் கூட சேர்த்து ) அதனால் DEEP CLEANSING செய்வது மிக முக்கியம் , அதற்கென பல பேஸ்வாஸ்கள் சந்தையில் கிடைக்கிறது .

*இது தவிர வாரம் ஒரு முறை உங்கள் வீட்டின் அருகாமையில் உள்ள மென்ஸ் பியூட்டி பார்லரில் போய் பேசியல் , பேஸ் மசாஜ் போன்றவற்றை முயற்சியுங்கள்.

இன்னாடா இவன் காதலிக்கறது எப்படினு சொல்லித்தருவான்னு பாத்தா இது எதோ முக அழகப்பத்தி பேசுது என்று நீங்கள் நினைத்தால் நாளையிலிருந்து நம் வகுப்பறைக்கு வரவேண்டாம் . காதலில் பொறுமைதான் அவசியம் .

இத்தனை விடயங்களையும் தவறாமல் பின்பற்றி உங்கள் முகத்தை அழகாக்க முயற்சியுங்கள் , இவ்வளவு பண்ணியும் உங்கள் முகம் அழகாகவில்லையா? இல்லை இத்தனையும் செய்ய காசில்லையா?........ அட விடுங்க பாஸு நம்ம பாடத்திட்டத்தில அதுக்கும் வழியிருக்கு அத நாளைக்கு பாக்கலாம் , நீங்களும் பிகர்தான் பாஸு........

இதில் என்ன சந்தேகம் இருந்தாலும் பின்னூட்டம் மூலமாகவோ dhoniv@gmail.com என்கிற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும் , உங்கள் சந்தேகம் தீர்க்கப்படும்.


காதலை மேலும் கற்கலாம்..............


_____________________________________________________________________________________

இந்த பதிவு ஆண்களுக்காக மட்டுமில்லை , இங்கே தரப்படும் விடயங்கள் தங்கமணிகள் மற்றும் தங்கமணி ஆகப்போகும் பலருக்கும் உபயோகமாக இருக்கலாம் .

____________________________________________________________________

அவ்ளோதான்பா....


;-)


____________________________________________________________________

26 September 2008

மோசமான படமா ராமன் தேடிய சீதை ??

பெண் பார்க்கும் படலம் திருமணமான அனைவரும் கட்டாயம் கடந்து சென்ற ஒரு மறக்க இயலாத விடயம் . அது பலருக்கும் பல வித அனுபவங்களை தந்திருக்கும் , சிலருக்கு மறக்கமுடியாத ஒரு சம்பவமாகவும் பலருக்கு மறக்க வேண்டிய சம்பவமாகவும் அது இருந்து விடுகிறது , சினிமாத்தனமாக இப்போதெல்லாம் யாரும் பெண் பார்ப்பதில்லை , இருவீட்டாரும் முன்னமே தொலைப்பேசி அலைப்பேசி இணையம் என்று தொழில்நுட்பம் அவர்களை எளிதில் இணைக்கிறது , அது மட்டுமின்றி மணமக்கள் இருவரும் நேரில் பார்க்கும் முன்னமே அலைப்பேசியிலே மின்அரட்டையிலோ பேசி தங்களை புரிந்து கொண்டு ஒத்துவராத பட்சத்தில் பிரிந்து விடும் சூழலே இன்றைய நமது சமூகத்தில் நிலவுகிறது .

இந்த பெண் பார்க்கும் சடங்கும், பஜ்ஜி சொஜ்ஜி மொக்கைகளும் , பெண்ணை பாட சொல்லி கேட்பதும் , ஆடத்தெரியுமா , சமைக்கத்தெரியுமா என்பது போன்ற ஆணாதிக்க மனோபாவத்துடன் கூடிய மற்றும் சினிமாத்தனமான சடங்குகள் இப்போதெல்லாம் வழக்கொழிந்து வருவது குறிப்பிடத்தக்கது .

பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இயக்குனர் விசு படங்களில் நிச்சயம் ஒரு காட்சியாவது பெண் பார்க்கும் காட்சி இருக்கும் , அதிலும் சம்சாரம் அது மின்சாரம் படத்தில் மூன்று விதமான பெண்பார்க்கும் காட்சிகள் வைத்திருப்பார் , ஒவ்வொன்றும் ஒரு விதம் , இது போன்ற தளத்தில் படம் எடுக்க அவரைத்தவிர யாராலும் அவ்விடயத்தை சினிமாவில் மிக அழகாக கையாண்டிருக்க இயலாது என்பது அனைவரும் அறிந்தது . அதன் பிறகு மௌன ராகம்,ரோஜா, படங்களில் வரும் பெண் பார்க்கும் காட்சியை சொல்லலாம் . ஒரு முழுத்திரைகதையையும் பெண்பார்க்கும் நிகழ்ச்சியை மட்டுமே கொண்டு பின்னப்பட்ட படித்தால் மட்டும் போதுமா படத்தின் திரைக்கதையை விட அது போன்ற கதைக்களத்தில் இது வரை எந்த திரைப்படமும் வரவில்லை .

கடந்த பத்து வருடங்களாக நம் வீட்டிற்குள் புகுந்து விட்ட மெகா சீரியல்கள் செய்ய முயன்றதை திரையில் இரண்டரை மணி நேரத்தில் செய்ய முயற்ச்சிக்கிறார் ராமன் தேடிய சீதை படத்தின் இயக்குனர் . அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும் ஏனென்றால் படம் முடிகையில் 500 எபிசோட்களை ஒரே மூச்சில் பார்த்த விரக்தி .



ஒரு பெண்பார்க்கும் காட்சியில் தொடங்கும் படம் , நம்மை ,அட ஒரு நல்ல படத்திற்குத்தான் வந்திருக்கிறோம் என்கிற ஒரு உணர்வை எழுப்பினாலும் , அந்த பெண் சேரனின் திக்கி பேசும் முறையையும் அவருக்கு சிற்வயதில் மனசிதைவு இருந்ததையும் கேள்விப்பட்டு சேரனை மணம் முடிக்க மறுக்கிறார் ( அந்த காட்சி மட்டுமல்ல எல்லா காட்சியிலும் திக்கி பேசுவாதக எண்ணி சேரன் முகத்தை அஷ்ட கோணலாக காட்டுவதை பார்த்து படத்தில் வரும் பெண்கள் மட்டுமல்ல குழந்தைகள் கூட அம்மா பூச்சாண்டி என்று அலறியதை கேட்க முடிந்தது , சேரன் இயக்கம் மட்டும் செய்யலாம் . ). அதை தொடர்ந்து சேரன் படம் முழுதும் அழுகிறார் , திக்கி திக்கி பேசுகிறார் , பல பெண்களை திருமணம் செய்து கொள்ள தெரு தெருவாய் அலைகிறார் , இப்படி அவர் வாழ்க்கையில் கடவுள் அவருக்கு கல்யாணம் செய்து வைக்காமல் கபடி விளையாட , அவர் மனம் நொந்து பசுபதியை சந்தித்து , பார்வையற்ற பசுபதி தரும் உற்சாகத்தில் மீண்டும் பெண் பார்க்க தொடங்கி , கடைசியில் ஒரு பெண்ணை பார்த்து அந்த பெண்ணும் திருமணத்திற்கு ஒப்புக்கொண்டு , அவளின் காதலன் நிதின் சத்யா என்று தெரிந்து எப்போதும் போல தியாகி ஆகி கடைசியில் தன்னை வேண்டாமென்று மறுத்த ஒரு பழைய டிக்கட் மீண்டும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்க அந்த பெண்ணையும் சிலபல சிக்கல்கள்கள் ( அது ஒரு 4 ரீல் ஓடுகிறது ) நடுவே கஷ்டப்பட்டு திருமணம் செய்யும் போது நம் கண்களில் ஆனந்த கண்ணீர் , ( சேரனுக்கு திருமணாமனதற்கல்ல அப்பாடா படம் முடிஞ்சிருச்சேனு ) .

சேரன் படம் முழுக்க கொடுத்த சம்பளத்திற்கு பல ஆயிரம் மடங்கு அதிகமாய் நடித்து கலக்குகிறார் , பசுபதி படத்தில் தேவையில்லையோ என்றே எண்ண தோன்றுகிறது , நிதின் சத்யாவை பாராட்டலாம் நல்ல தேர்வு அந்த பாத்திரத்தில் கனகச்சிதமாய் பொருந்துகிறார் , படத்தின் ஒரே மகிழ்ச்சி அவர் மட்டுமே . பல நாயகிகள் நிறைய மேக்கப்போடு கண்ணை உறுத்துமளவுக்கு வந்து வந்து போகின்றனர் , வெறுப்புதான் மிஞ்சுகிறது , மணிவண்ணன் எப்போதும் போல அதே சேம் ஒல்டு மாப்ளே மாப்ளே என்று ஹீரோ பின்னால் அலைகிறார் , சில காட்சிகளில் மிக அருமையாய் நடித்திருக்கிறார் .

இசை வித்யாசாகர் - அருமையான பிண்ணனி மற்றும் பாடல்கள் , கேமரா யாரென்று தெரியவில்லை நிறைவாய் செய்திருக்கிறார் , எடிட்டிங்கும் நிறைவாய் இருந்தது . மற்றபடி படத்தில் பெரிதாய் சொல்லிக்கொள்ள எதுவும் இல்லை.

படத்தின் இயக்குனர் ஒவ்வொரு காட்சியையும் ஒரு சிறுகதை போல் சொல்ல முயன்று அந்த சிறுகதையின் முடிவில் சொத்தப்புகிறார் . அதனால் அடுத்த காட்சியின் மீது வெறுப்புதான் மிஞ்சுகிறது . ஒரு அருமையான கதையை எடுத்துக்கொண்டு அதில் இன்னும் கொஞ்சம் சிரத்தை எடுத்து செய்திருந்தால் மிக நன்றாக வந்திருக்கும் . படம் நெடுக நகைச்சுவைக்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் இயக்குனர் வேண்டுமென்றே அந்த நகைச்சுவையை குறைத்திருப்பதாக தெரிகிறது . அதுவே படத்தின் பெரிய மைனஸாகிறது .

ஆனால் படம் முடிந்து வெளியே வருகையில் ஒரு 60 வயது மாமா மற்றும் மாமி படத்தை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தனர் ,( படம் முடிந்து எழுத்துக்கள் வருவதைக்கூட ) . இப்படம் ஒரு வேளை வாழ்க்கையில் அடிபட்ட மற்றும் அடிபடுகின்ற மத்திய வயதினருக்கு பிடிக்கலாம் , இன்றைய சமூகத்தின் இளைஞர்களுக்கு நிச்சயம் இப்படம் எரிச்சலை ஊட்டும் என்பதில் ஐயமில்லை.

படத்தின் பிளஸ் - இசை , பசுபதி , நிதினசத்யா

படத்தின் மைனஸ் - சேரன் , நாயகிகள் , ஸ்டீரியோ டைப் திரைக்கதை ,

இனி தலைப்புக்கு வருவோம் - அதென்ன மோசமான படமா ராமன் தேடிய சீதை - நிச்சயம் இல்லை , மிக மிக மோசமான படம்... ( இந்த படம் நல்ல படம்னு சொன்னா அப்புறம் நல்லபடம்லாம் என்னனு சொல்றது மக்களே )



இந்த லூசுத்தனமான படத்தை பார்த்து காண்டானதற்கு , புரட்சிதலைவரோடு புரட்சி தலைவி கலக்கிய அக்கால ராமன் தேடிய சீதையை இன்னொரு முறை பார்த்து குஷியோடு குஜாலகியிருப்பேன்....... டாமிட் ....... அதுவும் மோசமான படமாக இருந்தாலும் இதைவிட அது பல ஆயிரம் மடங்கு மேல்.......



____________________________________________________________________________________

அவ்ளோதான்பா......... :-)
____________________________________________________________________________________

25 September 2008

சில்க்.......சில்க்......சில்க்............சில்க் ஸ்மிதா...!!!





1980களில் தமிழ்திரையுலகின் எல்லா திரைப்படங்களிலும் ஒரு காட்சியிலாவது சில்க் ஸ்மிதா இல்லாமல் இருந்ததில்லை , அவரது ஒரு பாடல் நடனமாவது எல்லா படங்களிலும் இருக்கும் , இன்று 35 வயதை கடந்த பலரது கனவுகன்னியாய் நிச்சயம் சில்க் ஸ்மிதா இருந்திருப்பார் , இன்றைய தலைமுறைக்கு சில்க்கின் அருமை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.




சில்க்கின் அபார நடனத்திறமையும் , கண்களின் வசீகரமும் தமிழ்திரையுலகம் மட்டுமின்றி மலையாளம்,தெலுங்கு மற்றும் கன்னட பட உலகிலும் ஒரு அழியாத சுவடை விட்டு சென்றுள்ளதை யாரும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது , சில்க்கை பற்றி வீட்டில் பேசத்தயங்கும் இன்றைய குடும்பஸ்தர்கள் பலரது மனிதிலும் இன்றும் சில்க் வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்.




1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் 23 ஆம் தேதி தமிழகத்தின் பல மத்திய வயதினருக்கும் அதிர்ச்சியளித்த தினம் , அடுத்த நாள் காலை செய்தித்தாளை பார்த்தவர்கள் பலருக்கும் மீளாத்துயரம் மனதில் குடிகொண்ட நாள் , தமிழ் திரையுலகின் பலரது உடல் தேவைகளுக்கும் பல முறை உதவியாய் இருந்து தன் வாழ்வைத்தொலைத்து , முதுமை குடிகொண்டு யாருமே கவனிக்கப்படா ஒரு சூழ்நிலை உருவாகும் தருவாயில் யாருக்கும் தெரியாமல் தற்கொலை செய்து கொண்டு இறைவனடி சேர்ந்தார் சில்க் . 90களின் தொடக்கத்தில் டிஸ்கோ சாந்தி மற்றும் சில கவர்ச்சி நடிகைகளின் வருகையும் அதனால் ஏற்பட்ட புகழின் வீழ்ச்சியும் சில்க்கை அவரது கடைசி காலங்களில் பெரிதும் பாதித்திருந்தது .




அவரது சாவிற்கு ஆயிரம் காரணங்கள் சொல்லப்பட்டாலும் , இன்று வரை எனக்கு தெரிந்து அது நிராகரிப்பின் வலியாக மட்டுமே இருந்திருக்க வேண்டும் என்பது என் எண்ணம் , புகழுடன் வாழ்ந்த பல நடிகைகளும் தங்கள் முதுமையில் சுயமிழந்து புகழிழந்து சுற்றம் இன்றி , ஆதரவு தர யாருமின்றி தன்னை வாழ்த்திய பலராலும் தூற்றப்படும் கொடுமை திரையுலகிற்கே உரித்தானது .




திரையுலகில் இன்றும் ஒரு பெண்ணை போதைப்பொருளாக பார்க்கும் வழக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது , திரையுலம் போன்ற மீடியாக்கள் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் ஒருபெண் இது போன்ற இன்னல்களை அன்றாடம் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறாள் , இன்றைய சமூகம் பெண்ணை எந்த அளவில் வைத்திருக்கிறது என்பதற்கு சில்க்கின் வாழ்க்கை ஒரு நல்ல உதாரணம் .


அவரைக்குறித்து ஆயிரமாயிரம் கதைகளும் , கிசுகிசுக்களும் வந்தாலும் எதையும் மறுக்காமல் எதற்கும் கவலையின்றி , பல இன்னல்களுக்கும் நடுவே வாழ்ந்து மறைந்தவர் சில்க் .


சில்க் குறித்தும் அவரது இறப்பை நினைவு கூறும் இப்பதிவு பலருக்கும் நகைப்பைத்தரலாம் . சில்க் மட்டுமல்லாது எல்லா நடிகைகளையும் விபச்சாரியாக பார்க்க பழக்கிய சமூகம் நிச்சயம் நகைப்பைத்தருவதில் ஆச்சர்யமில்லை .


காலத்தால் மறுக்கப்பட்டு மறக்கப்பட்ட பல நூறு நடிகைகளில் என்றும் நம் உள்ளத்தில் நீங்க இடம் பிடித்த சில்க் அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் சில ..........


* சில்க் ஸ்மிதா ,1960ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் தேதி ஆந்திர மாநிலம் பெலுருவில் வருமையின் பிடியிலிருந்த ஒரு ஏழையின் குடும்பத்தில் முதல் பெண்ணாய் பிறந்தார்.


*அவரது இயற்பெயர் விஜயவாடா விஜயலட்சுமி


* அவர் தமிழில் வண்டிச்சக்கரம் கவர்ச்சி நடிகையாய் அறிமுகமானார் .


*200 தமிழ் படங்களுக்கும் மேல் நடித்து புகழ்பெற்றவர்.


*அவரது திரைப்படங்களில் மூன்றுமுகம் , மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை ,போன்ற படங்கள் குறிப்பிடத்தக்கது .


* அவர் நடித்த லயனம் ( மலையாளம் ) திரைப்படம் , இன்றைய ஷகிலா திரைப்படங்களின் முன்னோடி எனக்கூறலாம் , அதுவே அவ்வகையில் வந்த முதல் திரைப்படமும் ஆகும்.


*ஒரு காலகட்டத்தில் பெரிய நடிகர்களான ரஜினி மற்றும் கமல் படங்களில் கூட சில்க்கின் ஒரு பாடலாவது இணைத்தால்தான் படத்தை வாங்குவோம் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதிக்கும் அளவுக்கு புகழ் பெற்றிருந்தார் .


*ஒரு கவர்ச்சி நடிகையாக மட்டுமின்றி பல நல்ல குணச்சித்திர வேடங்களிலும் நடித்து தன்னால் நடிக்கவும் முடியும் என்று நிரூபித்தவர் , சில்க் ஸ்மிதா.


* சில்க் நடித்த படங்களில் அவருக்கு பிண்ணனி குரல் கொடுத்தவர் ஹேமா மாலினி என்னும் டப்பிங் கலைஞர் , அந்த குரல் சாதாரணமாக மறக்கக்கூடியதா!! என்ன...


*சமீபத்தில் அவரது கடைசி திரைப்படத்தை இயக்கிய திருப்பதிராஜா என்னும் இயக்குனர் சில்க் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார் , அவரது புத்தகத்தில் இது குறித்து கூறுவதாகவும் அந்த பேட்டியில் கூறியிருந்தார் .


*தனது திரையுல ஆரம்ப காலங்களில் பலராலும் சக திரைப்பட நண்பர்களாலும் பல விதங்களிலும் அவமானங்களை அனுபவித்திருந்தாலும் தான் வளர்ந்து நல்ல நிலையில் இருக்கையில் அதை மறந்து பல உதவிகளை செய்தவர்.


*பல ஆண்டுகளுக்கு முன் பொள்ளாச்சியில் நடந்த ஒரு படப்பிடிப்பில் அவர் கடித்து போட்ட ஆப்பிளை விளையாட்டாக ஒரு உதவி இயக்குனர் ஏலமிட அது 15 வருடங்களுக்கு முன்னாலேயே ஒரு லட்ச ரூபாய்க்கு விற்றதாம்.


*கடைசியாக நடித்த திரைப்படம் தங்கத்தாமரை


*அவர் நடித்து கடைசியாக வெளிவந்த சுபாஸ் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சியில் மட்டும் தோன்றுவார் , அப்பாடலின் கடைசியில் அவர் ஒரு தீ போன்ற ஒரு இடத்திற்குள் நுழைவதாய் காட்சியமைந்தது வருத்தமான உண்மை . அவர் இறக்குமுன் நடித்திருந்த காட்சி அது என்பது மேலும் வருத்தமளிக்கிறது .


அவருக்கு அதிஷா மற்றும் அனைத்து வலையுல நண்பர்கள் சார்பாக கண்ணீர் அஞ்சலிகள்.



_____________________________________________________________________________________


சில்க்ஸ்மிதாவின் 12வது நினைவு தினத்தில்( 23ஆம் தியதி ) வெளியிட நினைத்திருந்த பதிவு சில காரணங்களால் இன்று வெளியிடப்பட்டுள்ளது .



____________________________________________________________________________________

23 September 2008

பருத்திவீரனை விட சிறந்த படமா '' தாரே ஜமீன் பர் '' - ஒரு ஆஸ்கர் பயணம்


அண்மையில் ஆஸ்கருக்கு இந்தியாவிலிருந்து அனுப்பப்பட்ட படமான தாரே ஜமீன் பர் திரைப்படம் குறித்து இயக்குனர் அமீரிடம் டெக்கான் குரோனிக்கிள் நிருபர்கள் கேட்ட போது அவர் இந்தியாவிலிருந்து ஆஸ்கருக்கு அனுப்பப்படும் திரைப்படங்கள் பெரும்பாலும் வடநாட்டு படங்களாகவும் இந்தி படங்களாக இருப்பதாகவும் , அவர் கூறினார் . மேலும் அவர் கூறுகையில் தனது பருத்திவீரன் போன்ற படங்கள் இந்தியாவின் கலச்சாரம் மற்றும் பண்பாட்டை வெளிப்படுத்துவதாக இருப்பதாகவும் தாரே ஜமீன் பர் திரைப்பட்டதோடு தனது திரைப்படம் எவ்விதத்திலும் சளைத்ததல்ல என்றும் கூறியிருந்தார் . இவ்விரு படங்களின் இயக்குனர்களின் பெயர்களும் அமீர் என்பது இக்கட்டுரைக்கு மேலும் அழகூட்டுவதாய் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . நமது கட்டுரை அமீரின் பேட்டி குறித்த விவாதத்தை பற்றியதல்ல , அவ்விரு படங்கள் பற்றியது என்பதை முன்பே கூறிவிடுவது நல்லது .

பருத்திவீரன் படமும் தா.ஜ.ப படமும் இரு வேறு தளங்களில் வெவ்வேறு கதைகள் மற்றும் கருத்துக்களங்களையும் அடிப்படையாக் கொண்ட திரைப்படங்கள் , இதில் இவ்விரண்டு படங்களையும் ஒப்பிடுவதே தவறான ஒரு விடயமாகும் , அதனால் இப்படங்களை ஓப்பிடாமல் அது குறித்தான கண்ணோட்டத்தை மட்டும் பார்க்கலாம் .


பருத்திவீரன் திரைப்படம் தென்னிந்தியாவின் பெரும்பாலான கிராமவாசிகளின் இருண்ட பக்கத்தை பதிவு செய்யும் படமாகவும் , அவர்களது வாழ்க்கையை ரத்தமும் சதையுமாக பதிவிடப்பட்ட படமாகவே அறியப்படுகிறது , அப்படமும் அப்படியே . படம் முழுக்க விரவியிருந்த ஒரு கிராம இளைஞனின் ஊதாரித்தனமும் முரட்டுத்தனமும் வன்முறையும் படிப்பறிவுமின்றி இன்று தமிழ்நாட்டில் மட்டுமல்ல எல்லா தென்னியந்திய கிராமங்களிலும் நாம் சகஜமாக பார்க்கக் கூடிய பல இளைஞர்களின் வாழ்க்கையையும் , அதனூடே செல்லும் ஒரு காதலையும் கிளைமாக்ஸ் தவிர மிக இயல்பாகவும் படோடோபமில்லாமலும் பதிந்த படம் பருத்திவீரன். இப்படத்தில் அந்த கிளைமாக்ஸ் வன்முறையை தவிர்த்து வேறு எந்த விதத்திலும் குறை சொல்ல இயலாது . இப்படம் இந்தியாவின் கிராமத்து வாழ்க்கை குறித்த ஒரு நல்ல பதிவு .


தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பாடங்களை புரிந்துகொள்வதில் குறைப்பாடுள்ள ( DYSLEXIC என்னும் ஒரு வகை குறைபாடு ) ஒரு சிறுவன் எப்படி தனது குடும்பம் மற்றும் சமூகத்தை எதிர்கொள்கிறான் , அவனது மனநிலை மற்றும் அவனது குறைக்கான நிரந்தர தீர்வென்ன என்பதையும் குழந்தைகள் முதல் வயதான தாத்தா வரை அனைவரையும் மிகையில்லா திரைக்கதையாலும் அச்சிறுவனின் இயல்பான நடிப்பாற்றலாலும் ரசிக்க வைத்த திரைப்படம் .

இவ்விரு படங்களும் இது போல வெவ்வேறு உணர்வுகளை பிரதிபலிக்க கூடியவை , இருப்பினும் நான் கவனித்த விடயங்கள் ,

பருத்திவீரன் படம் கொண்டாட்டங்களோடு தொடங்கி , காதலோடு பயணமாகி வெறுமையில் முடியும் வகைத்திரைப்படம் .

தாரே ஜமீன் பர் திரைப்படமும் ஒரு குழந்தையின் குரும்புடன் தொடங்கி பின் அக்குழந்தையின் இருளில் நகர்ந்து பின் கொண்டாட்டத்தில் முடியும் வகைப்படம் .

இவ்விரு படங்களின் முடிவிலும் ஒரு சாதாரண ரசிகனின் கண்களில் கண்ணீரை கட்டாயம் நம்மால் காண இயலும் . பருத்திவீரனில் வெறுமையால் உண்டாகும் கண்ணீர் தாரேஜமீன் பரில் மகிழ்ச்சியாலும் உற்சாகத்தாலும் நம் வீட்டு குழந்தையின் வெற்றியில் உண்டாகும் களிப்பால் ஏற்படும் இன்பத்தால் கண்களில் பெருகும் கண்ணீர்.

இவ்விருபடங்களிலும் காணக்கிடைக்கும் இன்னொரு விடயம் இந்தியா குறித்த இவ்விரு படங்களும் பதிவு செய்துள்ள விடயங்கள் , அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளில் இந்தியாவை இன்னும் காட்டுமிராண்டிகளின் நாடாகவே பார்க்கும் பழக்கம் இருந்துவருவது தவிர்க்க இயலாத உண்மை , பருத்திவீரன் படத்தின் தவறு அதுதான் அப்படத்தில் இந்திய இளைஞர்களை பிரதிபலிப்பதாக அப்பட நாயகனின் பாத்திரபடைப்பு அமைந்து விட வாய்ப்புண்டு ( இது எனது சொந்தக்கருத்தே ) , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படத்தில் இப்படி ஒரு பிரச்சனை இல்லை . அதற்காக பருத்திவீரன் திரைப்படம் மோசமான படமல்ல அது உண்மையை உணர்வு பூர்வமாக உரக்கச் சொன்ன ஒரு திரைப்படம் , ஆனால் தாரே ஜமீன் பரின் குட்டி பையனின் சிரிப்பில் பருத்திவீரன் தோற்றுத்தான் போகிறான் , எப்போதும் குழந்தைகளின் சிரிப்புக்கும் கண்ணீருக்கும் சக்தி அதிகமல்லவா!!

ஆஸ்கர் பரிந்துரைப்பிலும் அந்த களிப்பின் கண்ணீரும் இந்தியா குறித்த அன்னிய பார்வைக்கு நமது படைப்புகளின் ஆக்கமும் இங்கே இவ்விரு படங்களின் ஆஸ்கர் தரத்தை நிர்ணயித்ததாக எண்ணுகிறேன் . அமெரிக்கர்களால் நிச்சயம் நம் பருத்திவீரன் படத்தின் மண் வாசனையையும் அக்கதையின் வலி மற்றும் வேதனையை உணர இயலுமா என்பது கேள்விக்குறியே , ஆனால் தாரே ஜமீன் பர் திரைப்படம் ஒரு பொதுவான விடயத்தை அனைவரும் புரிந்து கொள்ளும் வண்ணம் படைக்கப்பட்டுள்ளதும் அப்படத்தின் இன்னொரு பலம் அதுதவிர படம் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையினூடே பயணிப்பது இன்னுமொரு பலம் .

இவையெல்லாவற்றையும் விட ஆஸ்கர் குறித்தும் அதன் நடுவர்கள் குறித்தும் நன்கு அறிந்த அமீர்கானின் ( அமீர்கான் ஏற்கனவே லகான் படத்தை பிறமொழி படங்களுக்கான சிறந்த படத்திற்கான விருதுக்காக முதல் ஐந்து இடம் வரை கொண்டு சென்றவர் ) படமென்பதால் இப்படம் ஆஸ்கரை வெல்லத் தேவையான வேலைகளை ( மார்க்கெட்டிங் மற்றும் நடுவர்களை படத்தை முழுவதுமாக காணவைப்பது ) இம்முறை மிகச்சரியாக செய்து பல ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் ஆஸ்கர் கனவை பூர்த்தி செய்வார் என்று கட்டாயம் எதிர்பார்க்கலாம் .

இதுதவிர ஆஸ்கரில் இதுவரை வெற்றி பெற்ற படங்களில் பல படங்களும் மனம் மற்றும் உடல் குறைபாடுகள் உள்ளவர்களை பற்றிய படங்களாகவும் மிக பிரமாண்டமான படங்களாகவும் இருந்திருக்கிறது , இது போன்ற படங்களின் வெற்றி பெரும் வாய்ப்பு மிக அதிகம் என்பது ஆஸ்கரில் இது வரை வென்ற படங்களின் பட்டியல் அறிந்தோர்க்கு நன்கு தெரியும , உதாரணமாக ரெயின் மேன் , பாரஸ்ட் கம்ப் மற்றும் ஏ பியுட்டிபுல் மைன்ட் போன்ற திரைப்படங்கள் ,இப்படங்களின் நாயகன் அல்லது நாயகன் சார்ந்த பாத்திரம் மனம் சார்ந்த குறைபாடுள்ளவர்களை பற்றியது , ஆதலால் நம்மூரில் தயாரான தாரே ஜமீன் பர் திரைப்படமும் வெற்றி பெற அதிக வாய்ப்பிருப்பதாகவே நான் கருதுகிறேன் .

பல வருடங்களாக நம்மூர் கமலஹாசனும் ஆஸ்கருக்காக போராடி வரும் இவ்வேளையில் வட இந்திய தயாரிப்பு , தென்னிந்திய தயாரிப்பு என்ற பாகுபாடின்றி நம் இந்திய தயாரிப்பான இப்படம் ஆஸ்கரில் வெற்றி பெற்றால் அது நிச்சயம் இந்திய கலைத்துறைக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன் .

ஆஸ்கரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றுள்ள இப்படம் இனிவரும் சுற்றுகளிலும் அனைவரையும் கவர்ந்து ஆஸ்கரை வெல்லும் என்பதில் நம்பிக்கை எப்போதையும் விட இம்முறை மிக அதிகமாய் இருப்பதே அப்படத்தின் வெற்றிக்கு சாட்சி .
_____________________________________________________________________________________

அடுத்த வருட சிறந்த பிற மொழி படத்திற்கான ஆஸ்கர் விருதை தாரே ஜமீன் பர் திரைப்படம் வெல்ல அதிஷா மற்றும் அனைத்து தமிழ் வலையுல நண்பர்கள் சார்பாக வாழ்த்துக்கள் .
_____________________________________________________________________________________

விஜயகாந்துனா காமெடிதானா..... அவரை பற்றிய ஒரு சீரியஸ் பதிவு (உங்கள் கண்ணீருக்கு கம்பெனி பொறுப்பல்ல)

விஜயகாந்த் தற்காலத்தில் வளர்ந்துவரும் ஒரு மாபெரும் அரசியல் தலைவர் , சமீபத்தில் வடிவேலுகூட, வளர்ந்து வரும் தானே தலைவனின் புகழ் மீது ஆற்றாமை கொண்டு அவர் மீது அவதூறு பரப்பி அவரது அழியா புகழை அழிக்க நினைப்பது கண்டு மனம் நொந்து இன்று காலைநான் வெளியிட்ட விஜயகாந்த் v/s வடிவேலு பதிவிற்கு ஒரு நல்ல மாற்றத்திற்காக ஏங்கும் நடுநிலை மக்களான நீங்கள் தந்த ஆதரவை தொடர்ந்து.................



நேற்றய பதிவில் ரஜினிக்காக ஒரு திரைக்கதை அமைத்து அப்படம் பப்படம் ஆனது அனைவருக்கும் தெரிந்திருக்கலாம் அதைத்தொடர்ந்து , இன்று மக்களின் பேராதரவுடன் ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க



பாட்டி சுட்ட வடைகதையிலிருந்து புரட்சிகலைஞர் விஜயகாந்திற்காக அதிரடி சண்டை காட்சிகள் மற்றும் சேஸிங்குடன் ஒரு ஆக்சன் ஸ்டோரி : ( தீவிரவாதிகள் மற்றும் பஞ்சாயத்து இல்லாமலா)
(காக்கையாக விஜயகாந்த் , பாட்டியாக லட்சுமி மற்றும் நரியாக வல்லரசு வாசிம்கான் )



ஊரின் மிகப்பெரிய கோடீஸ்வரியான லட்சுமி அந்த ஊரின் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சின்ன வயதில் ஒரு கண்ணு நொள்ளையாய் போன தன் பேரன் விஜய்காந்த் குணமானால் , வேண்டுதலுக்காக ஆயிரம் வைரங்கள் பதித்த ஒரு தங்க வடையை தர முடிவெடுத்து , பல ஆண்டுகளுக்கு பிறகு அந்த நேர்த்தி கடனை பல கோடி ரூபாய் செலவில் ஒரு பிரமாண்ட தங்க வடையை செய்கிறார், ஆண்டவனுக்கே கொடுக்க போகும் வடை குறித்து ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகளுடன் தொடர்புடைய டெல்லிகணேஷ்(லட்சுமியின் காரியதரிசி ) அதை பாகிஸ்தான் தீவிரவாதிகளிடம் தெரிவிக்கிறார் , பாகிஸ்தான் தீவிரவாதி வாசிம்கான் அதை அறிந்து மகிழ்ச்சியடைந்து அந்த பல கோடிரூபாய் மதிப்புள்ள தங்க வடையை அபகரிக்க திட்டமிடுகிறார். ( இப்படத்தில் புதுமையாக படம் தொடங்கி முதல் அரைமணிநேரம் கேப்டன் வரமாட்டார் , மக்கள் நிம்மதியாய் இருக்கலாம் )



இருண்ட ஆப்பிரிக்காவின் விடிவெள்ளி நைரோபி போலீஸ் விஜயகாந்த் , அங்கே கருப்பின தீவிரவாதிகளை அடித்து துவைத்து துவம்சம் செய்து கொண்டிருக்கிறார் , சோமாலியா அதிபருக்கு சவால் விடுகிறார் , தன்னை அதிபராக்கினால் வீட்டு வீடு தானே வந்து ரேசன் பொருள் தருவதாய் ஜால்ஜாப்பு விடுகிறார் , செல்போன் அலருகிறது , லட்சுமி ஆண்டவனுக்கு தரப்போகும் வடை குறித்து தெரிவிக்க குஷியாகி சண்டையை பாதியில் போட்டுவிட்டு , தன் பாட்டியின் இந்த பிரார்த்தனையை பார்க்க இந்தியா வருகிறார் , வந்த இடத்தில் சாப்பாட்டிற்கே வழியில்லாமல் தவிக்கும் ஒரு ஏழையை பார்த்து கடுப்பாகி டென்சனாகி மனம் நொந்து , கண் கலங்கி அவனை நினைத்து வெந்து வெதும்பி நொந்து , கவர்ச்சி நடிகை தேஜாஸ்ரீயுடன் ஒரு ஒப்பனிங் சாங்கில் நடனமாடுகிறார் .



அது தவிர ஊரில் இருக்கும் ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் அரஜாகத்தை அந்த அரசியல்வாதிகளின் அடியாட்களை பின்னங்காலால் சுவறில் ஏறி அடித்து தட்டி கேட்கிறார் , ஒரு காட்சியில் தமிழ்நாட்டின் தலையாய பிரச்சனைகள் குறித்து பதினைந்து நிமிடங்கள் பேசுகிறார் , இவர் பேச்சை நிறுத்தவாவது அரசியல்வாதிகள் திருந்தலாம் என மக்கள் எண்ணுகின்றனர் .



'' மக்கள் உங்ககிட்ட எதிர்பார்த்து கிடச்சது ஏமாற்றம் எங்கிட்ட எதிர்பாக்கறது நல்ல மாற்றம்'' என பஞ்ச் டயலாக் பேசுகிறார் .



வடிவேலுவை புரட்டி புரட்டி அடிக்கும் நகைச்சுவை காட்சிகள் படத்திற்கு நடுவே சம்பந்தமில்லாமல் வரலாம் ( வடிவேலு கால்சீட் கிடைத்தால் , இல்லாவிட்டால் விவேக்கை வைத்து பஞ்ச் வசனங்களுடன் கூடிய சமுதாய சீர்திருத்த வசனங்களை பேச வைக்கலாம் ) , கடைசி நேர தகவல் படி வடிவேலு நடிக்க மறுத்து விட்டார்.



அரசியல்வாதிகளை புரட்டி எடுத்து டயர்ட் ஆகும் போதெல்லாம் தன் மாமன் மகள் நயன்தாராவையும் புரட்டி எடுக்கிறார் , அவரது தொப்பிளில் பரமபதம் ஆடுகிறார் ( பாம்பு ஏணிகள் மற்றும் கட்டைகள் என எல்லாமே தொப்புளில் கதகளி ஆடுகின்றன் - அட எல்லாமே கிராபிக்ஸ்பா ), (இந்தியாவில் புரட்டி எடுக்க மன்னிக்கவும் டுயட் பாட இடமில்லாததால் ஆஸ்திரேலியா , அமெரிக்கா , இங்கிலாந்து என பல நாடுகளிலும் பாடுகிறார் ஆடுகிறார் மரத்தை சுற்றி சுற்றி ஹீரோயினை விரட்டுகிறார் ) , இடைவேளைக்கு முன்னால் இரண்டு பாடல்களிலும் அதன பிறகு ஒரு பாடலிலும் பாடுகிறார் . அதன் பின் நயன்தாரா மாயமாய் மறையலாம் காணாமல் போகலாம் நமக்கும் கதைக்கும் அதனால் ஒன்றும் ஆகிவிடாது .
இப்படி பல வேலைகளுக்கு நடுவில் கதையெழுதிவிட்ட பாவத்திற்காக அவர் லட்சுமியை சந்திக்கிறார் , அங்கே அவருக்கு தங்க வடை குறித்தும் அதை கடத்த போகும் தீவிரவாதிகள் பற்றியும் தெரிய வருகிறது , அதற்குள் படம் பாதிக்கும் மேல்முடிந்தும் விடுகிறது , கண்கள் சிவக்கிறது ( படம் முடியும் வரை அது அப்படியேதான் இருக்க போகிறது பீ கேர் புல்... நான் எதிரிகள சொன்னேன் ). வடையை எடுத்துக்கொண்டு ஆயிரம் கிலோ மீட்டருக்கு அந்தபக்கம் இருக்கும் நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு தனது பைக்கை கிளப்பிக்கொண்டு , கையில் பெட்ரோலுக்கு காசிருக்கிறதா என்கிற கவலையில்லாமல் முதுகில் வடையை கட்டிக்கொண்டு டுர்ர்ர்ர்ரென கிளம்புகிறார் . (காட்டுதீயாக , அனல் பொறி அல்லது கடலை பொரியாக , அடங்காத வெள்ளமாக ,பனை வெல்லமாக என மேற்கூறிய வாக்கியங்களினிடையில் மக்கள் எந்த வாக்கியத்தையும் இணைத்துக்கொள்ளலாம் )



போகும் வழியில் கிராமங்களில் மக்கள் படும் துன்பம் கண்டு மனம் நொந்து விக்கி திக்கி திணறி திக்குமுக்காடி அழுது புரண்டு கண்ணீர் வடித்து , மக்களுக்காக எதாவது செய்ய வேண்டும் என எண்ணி நயன்தாராவை அழைத்து அவரது தொப்புளில் ஜிலேபி சுடுகிறார் ( ஏற்கனவே ஆம்லேட்,ஆஃபாயில், பூரி கிழங்கு .பொங்கல், தோசை,ஆப்பம் என பல அயிட்டங்களையும் போட்டு விட்டதால் இம்முறை ஜிலேபி - எப்படியோ மக்கள் மகிழ்ச்சியா இருந்தா சரிதான் ) , ஊருக்குள் நடந்த பம்பரம் விடும் போட்டியில் நடந்த அசம்பாவித சம்பவத்தை தட்டி கேட்டு தீர்ப்பு வழங்குகிறார் ( மக்கள் எதிர்பார்க்கறாங்க பாஸு உங்களையும் சேர்த்துதான் பாஸு )



மக்கள் மகிழ்ச்சியாகி அவரை புகழ்ந்து பாடுகின்றனர் . சாங் தொடங்குகிறது .



அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா

ஆட்சில இருக்கறவங்கள்ளாம் வெண்ணையா

நீங்க கிரிக்கெட்டில் கலக்குகிற கங்குலி

நம்ம கூட்டத்தில இல்ல ஒரு கருங்காலி

உனக்காக கூடியிருக்கு பெரிய கூட்டம்

அத பாத்து ஆளுங்கட்சி தலைவருக்கு நம்மேல் நோட்டம்

நீ நின்னா திருவாரூர் தேரு

உன்ன தட்டி கேட்க தமிழகத்தில் யாரு .....

உன் அரசாங்கம் அமையட்டும் சீக்கிரம்

உன் ஆட்சிக்காக கண் முழிச்சு காத்துகிட்டு கிடக்கறோம்

ஆண்டவனோட மட்டும்மே உங்க கூட்டணி

தேர்தலில் நம்ப மாட்டீங்க கள்ள ஒட்டணி

( அரசாங்கம் அமைக்க வந்த சின்னையா )

அவரை வில்லன்கள் துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , துரத்துகிறார்கள் , கார்கள் பறக்கின்றன , லாரிகள் எரிகின்றன , வெடிகுண்டுகள் வீசப்படுகிறது , வாசிம்கான் கதறுகிறார் , செல்போனில் கட்டளையிடுகிறார் , நடுவில் நயன்தாராவுடன் டூயட் பாடுகிறார் !!! ( ஏன்னு கேட்டா உங்க வீட்டிலும் கற்கள் வீசப்படலாம் அதனால் _______ ) .



கிளைமாக்ஸில் லட்சுமி , நயன்தாரா , மற்றும் பலரை கடத்தி வைத்துக்கொண்டு விஜயகாந்தை செல்போனில் அழைக்கிறார் , கேப்டன் டென்சனாகிறார் , வீரவசனங்கள் பேசுகிறார் ( வசன உதவி - லியாகத் அலிகான் ) , விஜயகாந்தின் தங்கையை தீவிரவாதிகள் கட்டி வைத்து கதற கதற ................................... (அட கற்பழிக்கலைங்க நீங்க வேற எதையாவது நினைச்சுகிட்டு இது சீரியஸ் கதை அதனால நோ கற்பழிப்புங்கோ ) கட்டி வைத்து கிச்சி கிச்சு மூட்டி டார்ச்சர் செய்ய அதை செல்போனில் கேட்ட விஜயகாந்த் வீரு கொண்டு எழுந்து கத்தி கதறி மண்ணெல்லாம் எடுத்து மேல பூசிக்கொண்டு ( இந்த சிச்சுவேசன்லயும் நீங்க நயன்தாராவோட டூயட் எதிர்பாத்தா அதற்கு நாங்க பொருப்பில்ல ) ... கண்ணீர் விடுகிறார் , தியேட்டரில் தாய்க்குலங்களும் அழுகின்றனர் அவரது டார்ச்சரை நினைத்து.........(விஜயகாந்தின் டார்ச்சர்.. வில்லன் டார்ச்சர இல்ல )


தனி ஆளாக பின்னிமில்லில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தன் உறவினரை தீவிரவாதிகள் சுடும் லட்சக்கணக்கான குண்டுகளில் ஒன்று கூட தன் மேல் படாமல் அனைவரையும்
துவம்சம் செய்து காப்பாற்றுகிறார் ,


கடைசியில் வடை குறித்த புள்ளி விபரங்களை கீழ்கண்டவாரு அடுக்குகிறார் இறுதிகாட்சியில் வாசிம்கானுடன் ஓற்றைக்கு ஓற்றையாக மோதுகிறார் , வாசிம் கானிடம் வசனம் ,


உலகத்துல வடை சுடுற நாடுங்க மொத்தம் பத்து


அதுல அதிகமா வடை சுடுறது இந்தியாவுல

ஒரு நாளைக்கு சுடுற வடைகளோட எண்ணிக்கை இரண்டு கோடி


அதுல ஊசி போன வடை அம்பது லச்சம்


அத வாங்கி அப்படியே திங்கறவன் இருபதுலட்சத்து முப்பத்தி அஞ்சாயிரம்

அத வாங்கி தினதந்தில கசக்கி திங்கறவன் 17 இலட்சம்


காசு குடுத்து திங்கறவன் ஆறு லட்சத்தி அருபதாயிரத்தி நானுரு பேரு

ஓசில திங்கறவன் மூணு லட்சத்தி முப்பதாயிரம் ஆங்ங்


.................விட்டா இந்தாளு நிறுத்தாம மூணு நாளு மூச்சு விடாம இந்த மாதிரபேசுவார்னு , கடுப்பாகி வாசிம்கான் கேப்டனை நையபுடைத்து வீசுகிறார் மூர்ச்சையான கேப்டன் விடமால் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க வாசிம் கான் இந்தாளுக்கு வெறி புடிக்கணும்னா ஒரே வழினு
இந்தியாவைப்பற்றியும் தமிழ்நாட்டைப்பற்றியும் தமிழ் மக்களைப்பற்றியும் மிக கேவலமாக பேசுகிறார் , அப்போதும் விடாமல் கணக்கு சொல்லிக்கொண்டிருக்க
நயன்தாராவையும் அவரது இறந்து போன தாய் அம்பிகாவை பற்றி படு கேவலமாக பேச உணர்ச்சி வந்து வாசிம்கானை நாயடிப்பது போலடித்து நாட்டை காக்கிறார் , வடையை காக்கிறார் .


( வாசிம் கானும் விஜயகாந்திடமிருந்து தப்பி போலீஸிடம் சரண்டைந்து போலீஸின் காலைபிடித்த படி ஐயா தயவு செஞ்சு என்னை தூக்குல வேணா போடுங்க இந்தாளுகிட்ட மட்டும் விடாதீங்க உங்களுக்கு புண்ணியமா போகும் என்று கூறும் காட்சி சென்சாரால் தடை செய்யப்பட்டது ).


இறுதிக்காட்சியில் ராதாரவி போலிஸாக வந்து '' உங்கள மாதிரி ஒருத்தர்தான் இந்த நாட்டுக்கு தேவை '' என்று கூறி சல்யூட் அடிக்க , அதற்கு விஜயகாந்த் இதுலாம் என்னோட கடமை ஆங் என்கிறார்


ஆஞ்சநேயர் கோவிலில் தங்க வடையை சாமிக்கு காணிக்கையாக விஜயகாந்த் குடுக்க ஒரு வழியாக படம் முடிகிறது . மக்கள் நிம்மதி பெருமூச்சடன் திரையரங்கை விட்டு வெளியேற படம் முடிகிறது .


இந்த படத்தின் கதைக்கு நல்ல பெயர் சூட்டுவோருக்கு கேப்டனின் தேமுதிக உருப்பினர் அட்டை இரண்டும் , அவரது தர்ம்புரி மற்றும் கஜேந்திரா படங்களின் டிவிடி ( 7.1) பரிசாக காத்திருக்கிறது , உடனே முந்துங்கள் பரிசுகள் ஸ்டாக் உள்ளவரை மட்டுமே . _____________________________________________________________________________________

நேற்றைய பதிவைப்போல இது எந்த கதையிலிருந்தும் உருவப்படவில்லை, இது நானே எழுதிய கதை இக்கதையை படமாக்க விரும்புவோர் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை அணுகவும். வி.கா வின் கால்ஜீட் இன்னும் ஆயிரம் வருஷத்துக்கு ஃப்ரீதானாம்.

_____________________________________________________________________________________

விஜயகாந்த் v/s வடிவேலு - என்னங்கடா நடக்குது - தற்குறிதமிழனின் அலசல்

விஜயகாந்த் v/s வடிவேலு என்னங்கடா நடக்குது - ஒரு தற்குறி தமிழனின் பார்வையில் அலசல் :




புரட்சி தலைவர் விஜயகாந்த் என்றாலே காமெடி தானா , இரண்டு நாட்களாக வடிவேலு மற்றும் விஜகாந்த் உடனான சண்டைகளை பார்க்கையில் வடிவேலு இதை வேண்டுமென்றே செய்ததாகவே தோன்றுகிறது , சமீபத்திய கலக்கபோவது,அசத்தபோவது,நசுக்க போவது என்று பல காமெடி நிகழ்ச்சிகளிலும் விஜயகாந்த் அடைந்திருக்கும் அளவ்வில்லா புகழையும் எங்கே இன்னும் சில நாட்களில் வடிவேலுவுக்கு போட்டியாக விஜயகாந்த்ம் இது போன்ற காமெடி படங்களில் தனி டிராக்கில் காமெடி பண்ணலாம் என்கிற அச்சமும் அவரை அப்பாவி விஜயகாந்த் மீது இது போன்ற ஒரு தாக்குதலை நிகழ்த்த காரணமாயிருக்கிறது ,

தற்காலங்களில் வெளியாகும் பெரும்பாலான இந்த காமெடி நிகழ்ச்சிகளில் வடிவேலுவின் மிமிகரியை விட விஜகாந்த் மிமிகரிக்கே மக்கள் ஆதரவும் வாக்குகளும் குவிவதை கண்டு ஏற்பட்ட அச்சம் தனக்கு தானே இது போன்ற ஒரு சம்பவத்தை அரங்கேற்ற காரணமாயிருக்கலாம் . அது தவிர சமீபத்தில் வெளியான விஜயகாந்தின் அரசாங்கம் திரைப்படம் வடிவேலுவின் முந்தைய படமான இந்திரலோகத்தில் அழகப்பன் படத்தை காமெடியிலும் மக்கள் ஆதரவிலும் விஞ்சியதால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி அல்லது காண்டாக இது இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. ஏற்கனவே அவருக்கு போட்டியாக விஜய்,பரத்,நிதின், ஜேகே.ரித்திஷ என பலரும் வந்துவிட்டதால் உடனடியாக தனது இருப்பை நாட்டில் பதிவு செய்ய வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் இப்படி லூசுத்தனமாக அவர் இப்படி செய்திருக்கலாம் .

காமெடியில் விஜயகாந்தை தோற்கடிக்க இயலாது என்பதால் , விஜயகாந்திற்கு துளியும் சம்பந்தமில்லாத அரசியலில் அவரை தோற்கடிக்க வடிவேலு எடுக்கும் முயற்சியாகவே இச்சம்பவம் இருக்கிறது ,



வடிவேலு அவர்களே உங்களுக்கு தைரியமிருந்தால் எங்கள் அண்ணாவை காமெடியில் வெல்ல முடியுமா , அவரது காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா அல்லது உங்கள் காமெடிக்கு மக்கள் ஆதரவு அதிகமா என்று பார்த்துக்கொள்வோமா ???



எங்கள் ஆசான் விஜயகாந்த் அவர்களே இது போன்ற துக்கடா காமெடியர்களின் வீண் வாய்ச்சவடால்களுக்கெல்லாம் பயந்து விடாதீர்கள் உங்களால்தான் இன்று பல கோடி தமிழர்கள் வீடுகளிலும் மக்கள் சிரித்து மகிழ்கிறார்கள் தொடரட்டும் உங்கள் நகைச்சுவை பணி!!! , நேற்று முதல்வர் மீது இப்பழியை தூக்கிப்போட்டு தூர்வாரிய காமெடியை கண்டு பக்கத்து வீட்டு தாத்தா சிரித்து சிரித்து மண்டையை போட்டுவிட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் , இது போல இன்னும் பல ஆயிரம் காமெடிகளை சோகமயமான கரண்ட்இல்லாத தமிழகத்திற்கு தந்து மக்களை மகிழ்ச்சியடைய வைக்க வேண்டும் .

காமெடியில் நீங்கள்தான் எப்போதும் முதல்வர் இதை யாராலும் மறுக்கவோ மறைக்கவோ இயலாது ஐயா...

____________________________________________________________________

21 September 2008

ரஜினியின் அடுத்தப்பட கதையும் - பாட்டி வடை சுட்ட கதையும் ......!!!

என்னைப்பார் யோகம் வரும்
(இது ஒரு அதிர்ஷடப்படம் இதை உங்கள் வலைப்பூவில் வைத்தால் உங்களுக்கு நிறைய பின்னூட்டங்கள் கிடைக்கும் )


பாட்டி வடை சுட்ட கதை ஒரு நகைச்சுவை கதை அது நம் எல்லாருக்கும் நன்கு தெரியும் , சிறு வயது முதலே நமக்குநம் வீட்டில் சொல்லி தந்த கதைதான் .


அதே கதையை தமிழ்சினிமாவுக்கு எப்படியெல்லாம் உபயோகப்படுத்தலாம் என்று சிந்தித்தால் இன்று வெளியாகும் பல படங்களின் கதைகளும் அதிலிருந்து உருவப்பட்டிருக்குமோ என்கிற ஐயம் ஏற்படுகிறது , சில உதாரணங்கள் உங்கள் பார்வைக்கு ஒரு குட்டி தொடராக தரலாம் என்றொரு எண்ணம் அதன் விளைவாக்க எனது முதல் கதை முயற்சி ரஜினிக்காக ( சூப்பர்ஸ்டார்தான பஸ்டு அதான் )



____________________________________________________________________________________

குடும்பத்தோடு பார்த்து ரசிக்க காதல்,சென்டிமெண்ட்,சோகம்,துரோகம்,வீரம்,சண்டை நிறைந்த சூப்பர்ஸ்டாருக்காக சூப்பர் கதை ... !!!







(காக்கையாக - ரஜினி , பாட்டியாக - வடிவுக்கரசி , நரியாக - ராதாரவி , வடையாக - பூர்வீக சொத்து )


அந்த கிராமத்தின் மிக பெரிய பணக்காரர் , அவர் இறந்து விட்டார் அவரது ஒரே மகன் சரத்பாபு , அவரது ஒரே பாட்டி லட்சுமி , அந்த ஒரே பாட்டியின் ஒரே தம்பி ராதாரவி , வேறு ஒரு ஊரில் வாய்க்கால் தகராறு நடக்கிறது , இரண்டு ஊர்காரர்கள் அடித்து கொண்டிருக்க அங்கே வரும் ரஜினி இரண்டு ஊர்க்காரர்களையும் சுமூகமாக பேசி தீர்க்கிறார் ( காவிரி பிரச்சனையை சம்பந்தபடுத்தி சிலபல பஞ்ச் டயலாக்குகள் பேசுகிறார் ) அதில் ஒருவர் ரஜினியை பார்த்து நீங்கதான்யா இந்த ஊருக்கு தலைவனா இருக்கணும் உம்னு சொல்லுங்க உங்கள பஞ்சாயத்து போர்டு பிரெசிடென்ட் ஆக்கறோம்ங்கறாங்க ரஜினி புன்னைகைத்தபடி விரலை மேல உயர்த்தி '' கண்ணா காட்டுல ஒடுது முயல் நான் அரசியிலுக்கு வரது ஆண்டவன் செயல் '' அப்படினு சொல்லிட்டு நடக்க மக்கள்லாம் ___ தின்ன பன்னி மாதிரி தேமேனு முழிச்சுகிட்டு நிக்க ஓப்பனிங் சாங் ஸ்டார்ட் ...

போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....
வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீ அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....

வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா...

சிறகிருந்தா வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்


மக்கள் கொந்தளித்து பாடுகின்றனர் ரஜினி எல்லாரையும் பார்த்து கையசைத்தவாறே பாடல் முழுக்க ஆடுகிறார் , பாடல் முடிந்ததும்

அடுத்த காட்சி அவர் வாழும் குடிசை வீட்டில் , அவர் சோற்றுக்கே வழியில்லாத ஏழையாய் ஒரு குடிசை வீட்டில் ஓன்டியாய் விஜயகுமாரின் வளர்ப்பு மகனாய் வாழ்கிறார் , விஜயகுமார் சாகும் நிலையில் அந்த வீட்டின் கயிற்று கட்டிலில் படுத்த படி ரஜினியை அழைத்து ஒரு கடிதம் கொடுத்து அதிலிருக்கும் விலாசத்தில் போய் பார்த்தால் உனக்கு வேலை கிடைக்கும் என்கிறார் .

ரஜினி ஜாலியாக முதுகில் ஒரு பையுடன் பாட்டு பாடிக்கொண்டு அந்த ஊரை அடைகிறார் , நுழைந்ததும் அந்த ஊரில் உள்ள குளத்தில் குளிக்கும் சுரேயாவிடம் (ஸ்ரேயா ) மணி கேட்கிறார் (எத்தனை படத்தில்தான் வழியே கேட்பது ) , அவர் ரஜினியை பார்த்ததும் குளிக்க குளிக்க அப்படியே எழுந்து மணி சொல்ல விழைய அவரது கச்சை கழண்டு விடுகிறது , ரஜினி அப்படியே ஷாக்காகி நிற்க சுரேயாவும் ஷாக்காகி நிற்கிறார் . கண்கள் கலக்கிறது , காதல் மலர்கிறது காட்சி கலைந்து அமெரிக்கா பிரேசில் வழியாக மலேசியா சிங்கப்பூர் வழியாக மீண்டும் அந்த குக்கிராமத்தை அடைகிறது , பாடல் முடிகிறது . சுரேயாவை அப்படி பார்த்த அதிர்ச்சியில் ரஜினி ரோபோ போல நடக்கிறார் . ( ரோபோவிற்கான விளம்பரமாகவும் அமைந்து விடுகிறது )

வடிவுக்கரசியை சந்தித்து தந்தை கொடுத்த கடிதத்தை தருகிறார் , ரஜினி தந்த கடிதம் கண்டு அதிர்ச்சியாகி அவருக்கு அந்த அரண்மனையிலேயே வேலை போட்டு தருகிறார் , (அங்கே வேலை செய்யும் கவுண்டமணியுடன் நிறைய காமெடி செய்கிறார் , அதை இங்கே எழுதினால் சீரியஸாக இருக்கும் அதனால் ஸ்டோரி டைரக்ட்லி கோயிங் டு தி மேட்டர் )

நடுவில் ஊரில் அடங்காபிடாரியாக இருக்கும் ஒருவரின் மனைவியை திட்டி அரைபக்க வசனம் பேசுகிறார் , பெண்களின் அடக்கம் குறித்து அற்புதமான கருத்துக்களை அள்ளி தெளிக்கிறார் , அந்த அப்பாவி கணவனின் மனைவியை திருத்துகிறார் . படம் பார்க்கும் பலரது அடங்காத மனைவிகளும் திருந்துகிறார்கள் , அப்பாவி கணவன்கள் கண்ணீரில் திரையரங்கத்தில் வெள்ளம்!!!

வடிவுக்கரசி தனது பூர்வீக சொத்தை சரத்பாபுவிற்கு எழுதி வைக்க முடிவெடுக்கிறார் , அது பிடிக்காத ராதாரவி , அதை தடுக்க சூழ்ச்சி செய்கிறார் , ஒவ்வொரு சூழ்ச்சியையும் அசாதாரணமாக ரஜினி முறியடிக்கிறார் , சரத்பாபுவை கொல்ல ஆள் அனுப்புகிறார் , அவர்களையும் அடித்து வீழ்த்துகிறார் , ( நாம அங்கதான் வைக்கறோம் டுவிஸ்ட )

அடிவாங்கியவர்களில் ஒருவன் ரஜினிதான் உங்கள கொல்ல அனுப்பினார் என்று சொல்ல சரத்பாபு கடுப்பாகி ரஜினியை வீட்டில் வளர்க்கும் நாயை விட்டு அட்டாக் செய்கிறார் ரஜினி நாயின் எல்லா கடிகளையும் சிரித்தபடியே தாங்கி கொள்கிறார் ,நாய்கடித்து பேண்ட் முதல் ஜட்டி வரை கிழிந்து பின்னாலிருந்து ரத்தம் வடிய அங்கிருந்து ( மூஞ்ச சிரிச்ச மாதிரியே வச்சுகிட்டு ) நடந்து செல்ல சோகப்பாடல் துவங்குகிறது .

இவ்விசயம் தெரிந்த வடிவுக்கரசி உண்மையை சொல்கிறார் , அந்த சொத்துக்கு அவர்தான் வாரிசென்றும் அவர் வாரிசு என்று தெரிந்தால் எதிரிகளால் ஆபத்து என்றும் தெரிவிக்க திகைக்த்து பின் வருந்துகிறார் சரத்பாபு .

சரத்பாபு ரஜினியை தேடுகிறார் , ஆனால் ரஜினி மாயாமாகிறார் , ராதாரவி வடிவுக்கரசி,சரத்பாபு,சுரேயா வை கடத்தி கொண்டு போய் மர்ம பங்களாவில் கட்டி வைத்து அவர்கள் முன்னால் மும்பை கவர்ச்சி நடிகையை நடனமாட விட்டு டார்ச்சர் செய்கிறார் , ( சரத்பாபுவுக்கு இந்த டார்ச்சர் மிகவும் பிடித்து அவர் ஓன்ஸ்மோர் கேட்டது சென்சாரால் கட் செய்யப்பட்டது ) . சொத்துப்பத்திரத்தில் கையெழுத்திட வடிவுக்கரசியை மிரட்டுகிறார், அவர் எவ்வளவு டார்ச்சர் செய்தும் மறுக்கிறார் ( லூசுப்பசங்க கையெத்து போடத்தெரியாத பாட்டிய டார்ச்சர் பண்றதா நினச்சிட்டு வாய கட்டி வச்சிட்டு கையெழுத்து போடுன்னு டார்ச்சர் பண்ணா அந்த கிழவி எப்படி போடும் , ) . ரஜினி திடீரென எங்கிருந்தோ ஒரு பைக்கில் கண்ணாடிகளை உடைத்துக்கொண்டோ அல்லது கயிறில் தொங்கிய படியோ வருகிறார் , ( அது படத்தின் தயாரிப்பாளரின் வசதியை பொருத்தது , நிறைய செலவு செய்ய முடிந்தால் கண்ணாடிகளை உடைத்து கொண்டு ஹெலிகாப்டரில் வருவது போல் கூட செய்யலாம் )

அனைவரையும் அடித்து துவைக்கிறார் , எரிமலையாய் வெடிக்காமல் சிரித்தபடி அடிக்கிறார் , நடுநடுவே சரத்பாபு,வடிவுக்கரசி,சுரேயா போன்றோர் அடியாட்களில் மட்டமான காமெடி பைட்டர்ஸை அடித்து துவைக்க , இறுதியில் கவுண்டமணி போலிசுடன் உள்ளே நுழைகிறார் , அனைவரையும் அடித்து துவைத்து ரஜினி போலிஸில் ஒப்படைக்க படம் முடியவில்லை ,


அடுத்த காட்சியில் ரஜினியிடம் சொத்துக்கள் ஒப்படைக்கபடும் போது ரஜினி மக்களைப்பார்த்தபடி

என்னோட நிரந்தர சொத்து இங்க இருக்கும் போது எனக்கு எதுக்கு சொத்து என்று தனது அழுக்கு வேட்டியை தூக்கி கட்டிக்கொண்டு கிளம்புகிறார் .


மக்களைநோக்கி நடக்க படத்தில் நடித்த அனைவரும் ரஜினியின் பின்னால் நடக்க ஓப்பனிங் சாங்கே மீண்டும்

போடா வாடா போடா வாடா பொட்ட கண்ணா..
நீ பொங்கி வந்து நின்னாக்க கன்னா பின்னா....

வாங்க வாங்க வாங்க வாங்க எங்கள் ஐயா....
நீங்க அரசியலில் பாஞ்சடிச்சா எரியும் தீயா....

வல்லரசா ஆகபோகுதிந்தியா..
நல்லரசா ஆக்க நீங்க வாங்கையா..

சிறகிருந்த வானவில்லும் குடை பிடிக்கும்
நீங்க முதல்வரானா - தமிழ்நாட்டில்
நிலாவும் எடம்புடிக்கும்

படம் முடிய மக்களும் ரஜினியின் ரசிகர்களும் ரஜினியை கடித்த அந்த நாயை போல குஷியாகி குஜாலாகின்றனர் . திரையரங்கம் அதிர்கிறது , அந்த அதிர்ச்சி குறைவதற்குள் ரஜினி இமயமலைக்கு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .


இக்கதைக்கு நல்ல தலைப்புகளை அள்ளித்தந்து குசேலன் பட டிவிடிகளை அள்ளிச்செல்லுங்கள் .


____________________________________________________________________________________

இப்பதிவின் தொடர்ச்சியாக நாளை காலை புரட்சிகலைஞர் கேப்டன் விஜயகாந்தின் அதிரடி ஆக்சன் , சேஸிங் , தொப்புள் ரொமான்ஸ் , தங்கச்சி செண்டிமெண்ட் , வீர வசனங்கள் நிறைந்த பாகிஸ்தானில் படமாக்கப்படவுள்ள திரைக்கதை - உங்களுக்காக அதிஷாவின் வலைப்பூவில் மட்டுமே .......

_____________________________________________________________________________________

இப்போதெல்லாம் கருணாநிதி மேல் காண்டான ஞானியைப்போல அடிக்கடி நம் வலைப்பூவில் ரஜினி காண்டு காமெடிகள் இடம் பெருவதால் ஒரு கற்பனை கார்ட்டூன் .( படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் - கருத்து அடியேன் )





____________________________________________________________________

அவ்ளோதான்பா..... ;-)

_____________________________________________________________________________________

படம் உதவி - மின்னஞ்சல் நண்பர் மற்றும் google.com

20 September 2008

குருவி குசேலனை விஞ்சிய பந்தயம் - ( தமிழ்மக்களை தாக்க வந்துள்ள அடுத்த சுனாமி )


நீண்ட கால தயாரிப்புக்கு பின் மிகச்சிரமத்திற்கிடையே நேற்று வெளியான பந்தயம் திரைப்படத்தை நண்பர் ஒருவரின் மிகுந்த ஆவலாலும் , ரசிகன்,விஷ்ணு போன்ற கருத்தாளமிக்க அற்புதமான திரைப்படங்களினால் SA சந்திரசேகர் ( சேகரன்) மீதான அபிமானத்தாலும் இப்படத்தை காண நேர்ந்தது . எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி ஒரு உலகசினிமாவை பார்ப்பது போன்ற மனநிலையுடன் படத்திற்கு சென்றதால் வெகுவாக ரசிக்க முடிந்தது .( படத்தை தவிர படம் பார்க்க வந்தோரது சேட்டைகளையும் , திரையரங்க நிகழ்வுகளையும் )


படத்தின் துவக்கம் இதுவரை எந்த சினிமாவிலும் கண்டிராதது என்றெல்லாம் கூறும் அளவுக்கு இல்லையென்றாலும் புதுமையானது , ஒரு பள்ளிக்கூட மாணவன் எதையெல்லாம் செய்யக்கூடாதோ அதையெல்லாம் செய்யும் ஒரு சிறுவன் , ( இதில் அவன் டொக்டர் விஜயின் ரசிகன் என்று புலம்பல் இல்லை இல்லை சவடால் வேறு ) , தலைநகரம் படத்தில் வடிவேலுவிற்கு கொடுத்த பில்டப் ஒப்பனிங்கைவிட கொஞ்சம் அதிகமாக பிரகாஷ் ராஜிற்கு அவரது காலை காட்டி காட்சியை தொடங்குகையில் நம் மனதில் வடிவேலுதான் வரப்போகிறாரோ என்கிற எதிர்பார்ப்பு .


இப்படி தொடங்கும் படம் போக போக வேகம் பிடித்து மிக வேகமாகி அங்கங்கே சீட்டுகளுக்குள் புகுந்து திரையரங்கத்தை விட்டே ஒடி மூச்சு வாங்கி நம் மண்டையில் இருக்கும் பாதி ரோமத்தையும் பிடுங்கியபடி இறுதியில் சுபமாக முடிகிறது . படத்தின் கதை பேரரசுவின் முந்தைய படங்களுக்கே செல்போனில் சவா(டா)ல் விடும் வகையில் கேவலமாக இருக்கிறது , திரைக்கதையில் கன்னாபின்னாவென்று முடிச்சுகள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் எங்கள் வீட்டு நாய்க்குட்டி கூட அடுத்து என்ன நடக்கப்போகிறதென்று கூறிவிடும் அளவுக்கு காட்சியமைப்பு .


படத்தின் பெரும்பாலான காட்சிகளை பிரகாஷ்ராஜ் ஆக்கிரமித்திருக்கிறார் , நிறைய கத்துகிறார் , கோபப்படுகிறார் , சவால் விடுகிறார் , ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போடுகிறார் , அருவாளால் தலைகளை கொய்கிறார் , கடைசியில் சாகிறார் , நடுவில் கில்லி பட பாணியில் நகைக்கவைக்கிறார் .


படத்தின் ஹீரோ நிதின் சத்தியா , இதே மாதிரி இன்னும் ஒரு படம் நடித்தால் தமிழகத்தின் முதல்வர்கள் பட்டியலில் இடம்பிடித்து விடுவார் . நடிப்பு என்ன விலை என்று கேட்குமளவிற்கு நடித்திருக்கிறார் . சத்தம் போடாதே படத்தில் சத்தமில்லாமல் பட்டையை கிளப்பியவரை இப்படத்தில் கீச்சுகுரலில் கத்தி கத்தி பஞ்ச் டயலாக் பேச வைத்து அழகு பார்த்திருக்கிறார் படத்தின் இயக்குனர் . பார்க்க பரிதாபகரமாக இருக்கிறது .


படத்தில் நாயகி ? எப்போதும் போல வந்து போகிறார் , பாடல்களில் ஆடுகிறார் , அழுகிறார் .


இது தவிர டாக்டர் விஜய் இரண்டு காட்சிகளில் வருகிறார் , சிரிக்கிறார் , முதல் காட்சியில் குழந்தைகளுக்கு அறிவுரை கூறுகிறார் , இரண்டாவது காட்சியில் அரசியல்வாதிகளுக்கு அறிவுரை கூறுகிறார் , நல்ல காமெடி !!! படத்தின் மிக சிறந்த நகைச்சுவை காட்சி '( இந்த வருடத்தின் மிகச்சிறந்த நகைச்சுவைக்கூட )


படத்தில் ராதிகா ஒரு டுவிஸ்டுக்காக படம் பூராவும் அரசி சீரியல் மேக்கப்பிலேயே வந்து அதே கெட்டப்பபில் அதே போல அழுகிறார் கடைசியில் கொலை செய்கிறார் . சரத்குமார் வாழ்க சமக வாழ்க


அசத்தபோவது யாருவில் அசத்திய இருவரும் மானாட மயிலாடவில் அசத்தும் கணேசும் பல இடங்களில் படத்திலிருந்து கொஞ்சம் ரிலீப் . நல்ல நகைச்சுவை நடிகர்களாக வரலாம்.


பாடல்கள் விஜய் ஆண்டனி யா ? ( போட்ட பால்களில் ரெண்டு சிலோன் மனோகரின் பாடல்களை ரீமிக்ஸ் பண்ணியிருக்கிறார் , மற்றவை இரைச்சல் , பிண்ணனி அதை விட இரைச்சல் , சமயங்களில் ஷகிலா படம் பார்க்கும் உணர்வு )


இயக்குனர் SAC க்கு ரொம்ப வயதாகிவிட்டது , கோடம்பாக்கத்தில் பல ஆயிரம் திறமைவாய்ந்த இளைஞர்கள் பட வாய்ப்புக்காக பசியும் பட்டினியுமாய் , எதை செய்தாவது முன்னுக்கு வர வேண்டும் என போராடிக்கொண்டிருக்கிறார்கள் , 30 வருடங்களுக்கு முன்னால் SACக்கு யாரோ வாய்ப்பு கொடுத்து இன்று இந்த அளவுக்கு தனக்கு தானே தியேட்டர் வாசலில் போஸ்டர் அடித்து கொள்ளும் அளவுக்கு வளர்த்து விட்டதை நினைத்து பார்த்து வாய்ப்பு வழங்கி தமிழ்திரையுலகத்திற்கு இன்னுமொரு நல்ல இயக்குனரை தரலாம் , அதை விடுத்து 1940 களில் வெளியான திரைப்படங்களின் கதையை பேரரசு போன்ற இயக்குனர்களின் உதவியுடன் இப்படி மிக மோசமாக எடுத்து ஏற்கனவே தனது சமீபத்திய முந்தைய படங்களினால் கழட்டப்பட்ட டவுசரை மேலும் கழட்டிக்கொள்வது அழகல்ல . (அவரது சட்டம் ஒரு இருட்டறையும் நான் சிகப்பு மனிதனும் யாராலும் மறக்க இயலாதது ) . ( புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் , நீங்கள் ஓய்வெடுங்கள் , உங்களுக்குள் விழித்துக் கொண்டிருந்த அந்த சமூகத்தின் மீது கோபம் கொண்ட கண்கள் சிவந்த அந்த இளைஞன் செத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது )


குருவி , குசேலன்,காளை,பழனி போன்ற மிக நல்ல படங்களுடன் ஓப்பிடுகையில் இப்படம் மிக மோசமானது என்பதில் துளியும் சந்தேகமில்லை .


படத்தின் இயக்குனர் இது போல நாலு படங்களை எடுத்தால் டி.ஆர் தமிழ்திரையுலகத்தில் விட்டு சென்ற இடத்தை நிரப்பலாம் . ( டி.ஆர் தற்காலிக விடுமுறையில் சென்றுள்ளார் )


வலியின்றி தற்கொலை செய்து கொள்ள விரும்புவோர்க்கு இப்படத்தை கட்டாயம் பரிந்துரைக்கலாம்


படத்தின் முதல் பாதி சஞ்சலக்கா மீதி பாதி மஞ்சலக்கா ( சஞ்சலக்கா மற்றும் மஞ்சலக்கா குறித்து அறிய என்னை தொடர்பு கொள்ளுங்கள் எனது மின்னஞ்சல் முகவரி dhoniv@gmail.com )


மார்க் : படத்திற்கு மார்க் போடலாம் பாடத்துக்கு மார்க் போடலாமா ?
மொத்தத்தில் பந்தயம் படம் அல்ல நல்ல பாடம்.... ( இனிமே படத்துக்கு போவியா )

18 September 2008

காலமும் காதலும் காதலின் காலனும் - சிறுகதை

காலமும் காதலும் காதலின் காலனும் -










காலம் நம்மை எப்போதும் நாம் விரும்பும் இடத்திற்கு அழைத்து செல்வதில்லை . காலத்தின் ஓட்டமோ கால்களின் ஓட்டமோ எதுவாயினும் அது அழைத்துச் செல்வதென்னவோ நாம் விரும்பாத இடத்திற்கே . காலமும் காலனும் நாம் நினைத்தபடி இருப்பதில்லை .

அவனையும் அவளையும் அது அப்படித்தான் அழைத்துச்சென்றிருக்கிறது , அவள் பூப்பெய்தி இருபது வருடங்களுக்குள் எத்தனை பேர் எத்தனை விதமாய் அத்தனையையும் எப்படித்தான் பொருத்துக் கொண்டதோ அந்த உடல் ,

காமத்தில் நகக்கீரல்களும் வலியும் அழகானாதாம் யாரோ ஆணாதிக்க கிழட்டு கவிஞன் பாடிச் சென்ற வரிகளின் அர்த்தம் அவளிதுவரை உணர்ந்ததில்லை , அவள் மேல் விழுகின்ற நகக்கீரல்களும் அவள் மேல் விழுகின்ற உடல்கள் தரும் எடையின் வலியும் அவளுக்கு என்றுமே சுகமாய் இருந்திருக்க வாய்ப்பில்லை , அதை ஒரு ஆணால் மட்டுமல்ல கணவனுடன் காமத்தில் கரைகண்ட எந்த குடும்ப பெண்டிரும் உணர இயலாத உயிரின் வலியது .

காதோரம் நரையும் முகமெல்லாம் மஞ்சளும் உதட்டில் சாயமும் தலையில் மல்லிகையும் சோம்பிய உடலும் கரைபடிந்த பற்களுமாய் அவளை எங்கும் காணலாம் . அவள் நம்மை சுற்றி எப்போதும் அலைபவள் . அதற்கென பிறக்காவிட்டாலும் அதற்காய் தயாராக்கப்பட்டவள் , கல்வியின்றி கலவி மட்டும் பயின்றவள் , இப்பெண்கள் பூப்படையாமலிருந்தாள் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் , காம மிருகங்கள் அப்போதும் புணர காத்திருக்கும் வாசலில் .

அவளை அவன் முதன் முதலில் பார்த்தது அந்த சாந்தி திரையரங்க பேருந்து நிருத்ததில் , தினமும் காலையில் ஒன்பது மணிக்கு பேருந்தில் ஏறி பத்து மணிக்கு அலுவலகம் சென்று ஆறு மணிக்கு மீண்டும் பேருந்தில் அடைக்கலமாகி மீண்டும் வீட்டை அடையும் நகரத்தின் கோடி இயந்திரங்களில் அவனும் ஒருவன் , பேருந்து நிலையத்தை ஒட்டிய அந்த நடைபாதை சுரங்க பாதையில் நின்ற படி போவோர் வருவோரை கண்களால் அழைத்து காசு பார்க்கும் அவள் இவனை அப்படி என்றுமே பார்த்ததில்லை , இவனுக்கு அதுவே அவள் மேல் மையல் வர காரணமாயிருந்தது .

அவனுக்கு அவள் மேல் ஏற்பட்ட அது , காதலா? காமமா? அல்லது மையலா? புயலா? எதுவோ ஒன்று மையம் கொண்டு அவனை தாக்கியிருந்தது .

காசு கொடுத்து காமம் தேடுபவன் என்ன காதலுடனா காமம் கொள்வான் , அவளை பூப்போல் புணர , அவன் காதலிக்க தொடங்கிய போதிருந்த அந்த காகிதப்பூ பலரது கைகளாலும் கசக்கப்பட்டு வாடியிருந்தது இப்போது , அவன் அவளது உடல் அவனுக்கொரு பொருட்டாய் இருந்ததில்லை , இவனும் ஒரு நாள் வாயைவிட்டு சொன்னான் உன் மேல் எனக்கு காதல் என்று , அவளால் பேச இயலாமல் எதோ தடுத்தது , பிறகு சரியென்றாள் . காதலித்தாள் .

பெரியாரென்றான் பகுத்தறிவென்றான் , அம்பேத்கரென்றான் , காதலென்றான் , அன்பென்றான் , கதை சொன்னான் , இதமாய் முத்தம் தந்தான் , இதயத்தில் நீ என்றான் , கடல் காட்டி முத்தமிட்டான் , காந்தி சிலையோரம் காற்றோடு கவிதை சொன்னான் , குடும்பம் பற்றி கவலையில்லை தனக்கு குடும்பமே இல்லையென்றான் , குழந்தைகள் வேண்டுமென்றான் , குடும்பத்தலைவியாய் ஆக்குவேனென்றான் , மடியில் படுக்கவைத்து பாடி மகிழ்வித்தான் , காதோரம் கிசுகிசுத்து அவளை கற்பனையில் மிதக்கவிட்டான்.

ஊருக்கு ஒதுக்குபுறமாய் யாருமில்லா தனிமையான விடுதியின் அறையில் அவனது தோளில் சாய்ந்து கொண்டு என்னை கல்யாணம் செய்து கொள்வாயா என்றாள் , செய்வேன் என்றான் ஒற்றை வார்த்தையில் , அவள் மனதில் இனம் புரியாத ஒரு பயம் எப்போதும் இருந்தது , அவனுக்கு நம் உடல் மட்டும்தான் தேவை என்பதைப்போல , அவளது ஆண்களின் உலகம் துரோகிகளின் உலகம் , இவனை காதலிக்க தொடங்கியதிலிருந்து தொழிலுக்கும் போக இயலாமல் சாப்பாட்டிற்கும் மற்றதுக்கும் இவனை நம்பி அவன் தரும் சொற்பத்தில் இன்பம் கண்டு இன்று அவனுக்கு தன்னையே முழுமையாய் தரப்போகும் வேளையில் இப்படியொரு எண்ணம் அவள் மனதில் பாலில் ஒரு துளி விஷமாய் , அவன் சந்தேகமா என்றான் , இல்லை என்பது போல மறுத்தவளின் கண்களில் கண்ணீர் தன் சோகங்கள் தீர்ந்ததாய் . அவள் தனது உள்ளத்தை முழுமையாய் தந்தாள் , காமம் இல்லா உலகத்தில் வாழ்வதாய் , வெறிநாயாய் மேலே பாய்ந்து பிரண்டும் காமமில்லா உலகத்தில் வாழ்வதாய்....

காமம் முற்றி காதல் ஆகும் கண்களின் உலகத்தில் இவன் காதல் முற்றி காமமானது , அவனும் புணர்ந்தான் காதல் கிழிய புணர்ந்தான் ஆணுறை கிழியாமல் .

கதவு தட்டும் ஓசை கேட்க திறந்தால் காவலன் அவள் காதலின் காலன் , அவன்கள் தப்புவதும் அவள்கள் சிக்குவதும் நம் நாட்டில் காலம்காலமாய் நடப்பதுதானே , காலம் இருவரையும் வெவ்வேறு பாதைகளில் அழைத்து சென்றது .

பல வருடங்களுக்கு பிறகு அதே சாந்தி திரையரங்க பேருந்துநிறுத்தம் , வருவோர் போவோரை கண்களால் அளந்த படி அவள் , காதோரம் நரைத்து விட்ட முடியை சரி செய்தபடி , நான் கேட்டேன் அவனை அதன்பிறகு நீங்கள் பார்க்கவில்லையா என்று , சிரித்தாள் , சதை கேட்கும் அவளிடம் கதை கேட்கும் பைத்தியம் போல் என்னை பார்த்தாள் .

பிரிதொரு நாள் அதே அவன் அதே அவள் , அவனுடன் அவனின் அவளும் , இவன் இருவராய் , அவள் ஒருத்தியாய் , அவன் வாழ்க்கையின் தேடலில் தீவிரமாய் அடுத்த பேருந்துக்காய் இவளை பார்க்காதது போல தனது பணப்பையை இருகப்பிடித்தபடி நிற்க , அவளும் அவனை பார்க்காதது போல அவளின் இன்றைய அவனாய் ஒரு பிச்சைகாரனிடம் பேரம் பேசியபடி , அவளுக்கு அவனது முகம் அருவருப்பாய் அவனுக்கும் அவளது முகம் அப்படியேவும் .

அவன் தினமும் வெறுப்புடனும் இன்பமில்லாமலும் இயந்திரம் போல் வாழ்க்கையையும் அவனின் அவளையும் காதலையும் புணர்ந்தபடி காதலையும் காலத்தையும் அவளையும் மறந்தவனாய் ,

அவள் எச்சில் பண்டமாய் தெருவோர நாய்களின் பசிக்குணவாய் வாயோரம் வழியும் புகையிலையினை துடைத்து கொண்டு பேரம் பேசிய படி இன்றும் நாளையும் நாளை மறுநாளும் அதற்கடுத்த நாளும் அடுத்த நாளும் ஓயும் வரை , இவர்களில் யார் இதற்கெல்லாம் காரணம் என புரியாமல் இவையெல்லாம் எதற்கு என தெரியாமல் கதை புரியாத நான் .

____________________________________________________________________

பட உதவி - மின்னஞ்சல் நண்பர்.

17 September 2008

தோசாவதாரம் !!

தோசாவதாரம் :


'' என் வணக்கத்திற்குரிய தமிழ்மக்களே இந்தியர்களே மன்னார்குடி பஞ்சாயத்து போர்டு தலைவர் குப்புசாமி, அண்டார்டிகாவில் ஐஸ் வண்டி ஓட்டும் ஜம்புலிங்கம் அண்ணாச்சி , கேளம்பாக்கம் குஜிலி கும்பாவும் அமர்ந்திருக்கும் இந்த தரித்திர விழா மேடையில் நானும் பேச வந்த கதை பெரிய கதை ஓலகமே சம்பந்தப்பட்ட கதை ,

ஏன் இது ஒரு மாமி கதையும் கூட , என்னடா பீஸாகடை பீஸா மாஸ்டர் மாமி கதை சொல்கிறானே என்று ஒரு ஐயம் எழலாம் ,

இங்கே மத்தியில் அமர்ந்திருக்கும் இந்த ஜலஜாமாமியும் இந்த கதையில் ஒரு முக்கிய பாத்திரம் அதனால் இந்த மாமியின் கதையையும் சொல்ல வேண்டியதாயிருக்கிறது , ஜலஜா மாமிக்கு நிறைய டமால் டுமீல் கதையுண்டு அதை இங்கே சொன்னால் இக்கதை பிரசுரமாகாது இருந்தாலும் ஜலஜா மாமி சம்பந்தப்பட்ட ஒரு கதை உண்டு அக்கதை சொல்ல குறைந்தது நாம் 50 வருடங்களாவது பின்னால் போக வேண்டும் சோ ( இங்கிலீசு SO ) 1958 , பீஸாஹட்டும் டோமினோசும் இந்தியாவிற்குள்ளும் இந்தியர்களின் வயிற்றுக்குள்ளும் புகாத நூற்றாண்டு தோசையும் ஆப்பமும் மோதி விளையாட வேறு ஐயிட்டம்கள் இல்லாத காலம் அதனால் அதன் ரசிகர்கள் வாயிலாக தன்னுள் மோதிக்கொண்ட நூற்றாண்டு ''

'' நாய்க்கும் சரி மனிதனுக்கும் சரி ருசிகண்டு விட்டால் தொல்லைதான் , கொருக்குபேட்டை கவுன்சிலர் காளியப்பனுக்கு ஆப்பம் மிகவும் பிடித்து போனது , பசி ருசியானது , ருசி ஓசியானாது , அது வரை மாமி மெஸ்ஸில் ஆப்பத்துடன் ஒண்டி குடித்தனம் நடத்தி வந்த தோசையை கவுன்சிலர் காளியப்பன் நிறுத்த சொன்னான் , ''

கவுன்சிலர் ஆட்கள் தோசைகல்லை பெயர்த்து எடுக்க , அங்கே வருகிறார் ரங்கன் ( அந்த கடை தோசை ஸ்பெசலிஸ்ட் , அவரது சிறப்பு 18 வகை தோசைகள் ) , தோசைக்கல்லை பெயர்த்து எடுக்கும் அடியாட்களை அடித்து நொருக்குகிறார் ( அப்படித்தான் இயக்குனர் சொல்லி தந்திருக்கிறார் ) ,

'' சுங்கம் பஸ் ஸடான்டில கடலைவித்த காளியப்பன்கிட்ட சூடாக வேணானு சொல்லு , அப்படி சொன்னது ஆருனு கேட்டா இந்த ரங்கன்தான்னு சொல்லு இன்னா!! ,'' ரங்கன் சூடாகிறார் தோசைகல்லின் மேல் கரண்டியால் ஓங்கி அடிக்கிறார் .

காளியப்பன் காண்டாகி மேலும் ஆட்களை அனுப்பி ரங்கனை அடிக்க சொல்கிறார் , சமையலறை கதவை இருக்க பிடித்து கொண்டு ரங்கன்

'' சாதா தோசை , சுபெசல் தோசை , வெங்காய தோசை , ஆனியன் ரவா , etc etc.. ( கோவில் புரோகிதர்கள் போல படித்துக்கொள்ளவும் ) '' என்று கதறியபடி கதவை பிடித்துகொண்டிருக்க , காளியப்பன் ஆட்கள் அடித்த அடியில் கதவு இரண்டாய் பிளக்க ராமு தெரித்து அனல் பறக்கும் தோசைக்கல்லில் விழுகிறார் , அவரையும் அகண்ட பிரமாண்டமான தோசைக்கல்லையும் சேர்த்து இழுத்து வருகிறார்கள் ஆட்கள் ,

இனி வசனங்கள் ,

காளியப்பன் : இன்னா ரங்கா , பாரு உம்புள்ளைங்கள்ளாலாம் எப்படி கதருதுனு , மருவாதயா நான் சொன்னபடி கேளு மக்கர் பண்ணாத

ரங்கன் : இன்னா எம் பாட்ட என்னாண்டயே பாடுறியா .. மவனே நான் செத்தாலும் இத பண்ணமாட்டேன்

காளி : மவனே நீ போடற வெங்காய தோசை , கீரை தோசை , ரவா தோசைலாம் தின்னு வயிரு செம கப்பு மாமு

ரங்கன் : பாத்தியா நைனா உன் வாயலயே எத்தினி தபா தோசை தோசைனு சொல்ல வச்சிருச்சு பாரு நம்ம தோசை

இப்படி ஒரு கலாய்ப்பை எதிர்ப்பார்க்காத காளி கடுப்பாகிறார்

காளி : இன்னாடா ஒன்னோட படா பேஜாரா பூடுச்சு , சரி ஒன்னு பண்ணு உன் தோசைகல்லுல எனக்கு ஒரு ஆப்பம் சுட்டு குடுத்தினா உன்ன உயிரோட விட்டுடறேன்

ரங்கனின் மனைவி காண்டாகிறார் ,

ரங்கனின் மனைவி : ஏ ஒன்னொட படா ரோதனையாக்கீதே பேசாம அந்தாளு சொல்ற மாறி ஆப்பம் சுட்டு குடுக்க வேண்டியது தான...


அனைவரும் ரங்கனை தோசை போடச்சொல்லி வற்புறுத்துகின்றனர் .


ரங்கன் தனது தோசை கல்லை காய வைக்கிறான் அதில் தண்ணீரை தெளித்து ஈர்குச்சி விளக்கமாறால் ஒரு விளாசு விளாசி மாவை எடுத்து தோசை சுடுகிறான் , காளி கோபமடைந்து அவனை அந்த காய்ந்து போன தோசைக்கல்லுடன் வைத்து கட்டி கூவத்தில் போட உத்தரவிடுகிறான் ,

பாடல் ஆரம்பமாகிறது , ரங்கன் அடித்தொண்டையில் கத்துகிறான்


கல்லை மட்டும் கண்டால் தோசை தெரியாது

தோசை மட்டும் கண்டால் ஆப்பம் கிடையாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்

தோசை மாவிலே முடியாது


ஆப்பமாவிலே தோசை சுடலாம்
தோசை மாவிலே முடியாது



பூனைகண்ணில் பார்த்தால் எல்லாம் ஆப்பம்தான்

யானைகண்ணில் பார்த்தால் யாவும் தோசைதான்


மாவு தீர்ந்த பின்பு மாமிமெஸ்ஸில் தோசைகிடையாது

சட்னி மட்டும் தீர்ந்து போனால் ஆப்பம் - தின்ன முடியாது

பாடல் முடிகிறது...

டார்ச்சர் செய்யப்பட்ட ரங்கன் கூவத்தில் வீதப்படுகிறான் ஆழமில்லா பகுதியில் வீசப்பட்டும் அந்த ஆற்றின் கப்பு தாங்க இயலாமல் கதறி கதறி கண்மூடுகிறான் ,

''ரங்கன் செத்ததற்கு காரணம் தோசையுமல்ல , அந்த ரங்கன் நம்பி நாசமாய் போனதற்கு காரணம் ஆப்பமும் அல்ல .... தின்றே செத்தவர்கள் கதை அக்காலத்தில் மட்டுமல்ல இக்காலத்திலும் உண்டு ,ஹோட்டல் தோசை சரியில்லையென்றால் அதை கூண்டில் ஏற்றி குற்றம் சாட்டலாம் , வீட்டு தோசையை குற்றம் சொன்னால் தங்கமணிகளிடம் அடி மட்டுமே மிஞ்சும் , இந்த வீட்டு சக்தி வாய்ந்த தோசைகளின் மேல் தோசைகளை அடிக்கினால் நிச்சயம் அதன் பின்புலத்தில் ஒரு மாபெரும் சக்தி நிச்சயம் இருக்கும் , உதாரணத்திற்கு மனைவி , நாம் என்னதான் அலுவலகத்தில் இருந்தாலும் நம்மை வீட்டிலிருந்தே ஆட்டிவைக்கும் சக்தி மனைவிக்கு மட்டுமே உண்டென்று சொன்னால் அது மிகையாகாது , பசி வந்த நேரத்தில் காய்ந்த தோசைகளால் நம்மை காலி செய்யும் மனைவியும் சரி , கெட்டு போன சட்டினியுடன் வரும் ஹோட்டல் தோசையும் சரி பசிக்கும் போது நமது பசியை நிச்சயம் தீர்ப்பதில்லை , உதாரணம் டிசம்பர் 27 2003 கிரிவலபவன் வாந்திபேதி , சென்னை மயிலையில் பல நூறு பேர்களின் வயிற்றில் கபடி விளையாடிய தினம் , சரி அதற்கும் நம் கதைக்கும் என்ன சம்பந்தம் , மேற்கத்திய சிந்தனையில் கேப்மாரி தியரி என்று ஒன்று உண்டு இந்த உலக விஞ்ஞான தத்துவப்படி உலக வாந்திபேதிகள் யாவும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை எனபதாகும் , எடுத்துக்காட்டாக அருந்து விழும் ஒரு சிறிய பல்லியின் வால் பல ஆயிரம் பேரின் வாந்தி பேதிக்கு காரணமாய் இருக்கக்கூடும் என்பதே தத்துவம் , என் கதை ஒரு வாந்தி பேதியில் தொடங்கி ஒரு பல்லியின் வாலில் முடிகிறது


கதையின் இரண்டாவது அத்தியாயம் நுங்கம்பாக்கம் , பீஸா பாயிண்டில் துவங்குகிறது கதை சொல்லும் நானே கதாநாயகன் ஆனேன் , நானும் ஒரு வகையில் டமால் டுமீல் குஜிலி கும்பாதான் , ஆம் ராயபுரம் ரவுடி ராக்கப்பனின் மகனாய் பிறந்து , தோசை சுடுவதில் பல பட்டங்கள் பெற்று இன்றைக்கு கொலைகாரன்பேட்டையில் தோசைக்கல்லில் டமால் டுமீலென பீஸாகளைகண்ட

குஜிலி கும்பன் , அவசர சேவைக்காக நூறு பீஸாக்களை உற்பத்தி செய்யும் வேலையில் என்னை போல பல மாஸ்டர்களும் கடினமாக உழைத்துகொண்டிருந்தனர் , என் பெயர் கோயிந்தசாமி , என்னோட பசங்க இன்னானு கூப்புடுவானுங்கோ தெர்மா .. கோமி கோமி.......

____________________________________________________________________________________

TO BE CONTINUED....AGAINST PEOPLE'S INTREST....

___________________________________________________________________

Photo Courtesy - Dasavatharam Audio Wrapper

16 September 2008

பொய் சொல்லப் போறோம் : சரக்கு பழசு ஸைடிஸ் புதுசு !!!



சமீபத்தில் 1970களில் வெளியான புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் படங்களிலும் 1980களில் வெளியான் பெரும்பாலான மசாலா படங்களின் ( உதாரணம் : சகலகலா வல்லவன் ) கதைக்கருவை எடுத்துக்கொண்டு , மிக அற்புதமான நகைச்சுவையோடு துளியும் ஆபாசமோ வன்முறையோ இரட்டை அர்த்த வசனங்களோ இன்றி குடும்பத்தோடு அனைவரும் கண்டு ரசிக்கும்படி வந்துள்ள மற்றும் மிகச்சமீபத்தில் வெளியான அருமையான படங்களின் வரிசையில் நிச்சயம் '' பொய் சொல்லப் போறோம் '' படம் இருக்கும்.

இந்த படம் கோஸ்லா கா கோஸ்லா என்னும் இந்திபடத்தினை தழுவி எடுக்கப்பட்டது என படம் துவங்கியதுமே காட்டிவிடுகின்றனர் .

டைட்டில் போடும் போதே இயக்குனர் அசத்த ஆரம்பித்திருக்கிறார் ,அழகான சில பொய்களின் படங்களுடன் படம் துவங்குகிறது .

( புல்தின்னும் புலி , செடிகளுக்கு நீர் பாய்ச்சும் பீரங்கிகள் , பின்லேடனுடன்
கை குலுக்கும் புஷ் , 2ரூபாய்க்கு பெட்ரோலும் 1 ரூபாய்க்கு டீசலும் விற்கும் பங்க் etc etc... )


ஒரு சாவு வீட்டில் நடக்கும் சில சுவாரஸ்யமான சம்பவங்களுடன் படம் துவங்குகிறது . ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தின் சொந்த வீட்டு கனவும் அதனால்அவர்கள் ஏமாற்றப்படுவதும் அந்த இழப்பிலிருந்து அக்குடும்பம் எப்படி மீண்டது என்பதை சுவாரஸ்யம் சற்றும் குறையாமல் மிக அருமையான திரைக்கதையுடன் படமாக்கிய இயக்குனர் விஜயை கட்டாயம் பாராட்டியே ஆக வேண்டும் . படத்தின் முதல் பாதியில் வரும் காட்சிகள் ஒவ்வொரு நடுத்தர வர்க்க குடும்பஸ்தனுக்கும் வயிற்றில் பொறி பறக்க செய்யும் , இரண்டாம் பகுதி முழுவதும் ஒவ்வொரு காட்சியும் எப்படி முடியப்போகிறதோ என்கிற ஒரு சஸ்பென்ஸுடன் படம் நம்மை சீட்டின் நுனிக்கே வரவழைக்கின்றன . அதுவும் வில்லன் நாசரை ஏமாற்ற சதி செய்து ஒவ்வொரு பிளானிலும் சொதப்பி விடுவார்களோ என்கிற ஒரு பயத்தை படம் பார்க்கும் ஒவ்வொரு பார்வையாளனின் மனதிலும் பதிய விட்டுள்ளனர்.

படத்தில் நடித்துள்ள எல்லா கதாபாத்திரங்களுக்கும் தனிதனி குணாதிசயத்தை வைத்து அப்பாத்திரங்களும் அதற்கேற்ற படி நடித்திருப்பதும் படத்தின் மிக பெரிய பலம் .
பல நாட்களுக்கு பிறகு மௌலி , படத்தின் ஹீரோ அவர்தான் என்றால் மிகையாகாது , அவரது இயல்பான நகைச்சுவை நடை அப்பாத்திரத்திற்கு மட்டுமல்ல படத்திற்கே அழகு. அவரது டைமிங் காமெடியும் அலட்டலில்லாத நடிப்பும் முகபாவனைகளும் வெடிச்சிரிப்பை தருகிறது . செண்டிமென்ட் காட்சிகளில் மனுஷன் கலக்குகிறார்.

படத்தின் இன்னொரு ஹீரோ நாசர் பாடி உடலசைவு மொழியில் அசத்துகிறார் , அதுவும் பெண்களை பார்த்தால் அவர் செய்யும் சேட்டைகளில் தியேட்டர் அதிருகிறது . குடித்துவிட்டு அவர் செய்யும் ரகளைகள் கட்டாயம் யாரையும் சிரிக்க வைக்கும்.

படத்தின் மற்றுமொறு முக்கிய பாத்திரத்தில் நெடுமுடிவேணு ( இந்தியன் படத்தில் சி.பி.ஐ ஆபீசராக வருவார் ) படம் முழுக்க அவரை சுற்றியே வருகிறது , அப்பாவி நடுத்தர வர்க்க குடும்பஸ்தனை கண் முன் நிறுத்துகிறார் . அதுவும் அவரது இயலாமை குறித்த காட்சிகளில் மிக சிறப்பான நடிப்பாற்றலை வெளிப்படுத்துகிறார் . ( நம்மவர்கள் இது போன்ற நல்ல நடிகர்களை சரியாக கவனிக்கவில்லை போலும் , அப்பா வேடமென்றால் சமீபகாலமாக விஜயகுமாரையும் ராஜ்கிரணையும் பார்த்து சலித்தவர்களுக்கு ஒரு நல்ல மாறுதல் ).

வெளிநாட்டு மாப்பிள்ளைகள் வேடம் மட்டுமே போட்டு வந்த கார்த்திக்கு இப்படத்தில் ஹீரோ வேடம் , உம்மனாமூஞ்சி அல்லது ஊமைகுசும்பு கணினி பொறியாளர் வேடம் , அசத்துகிறார் . நாயகி புதுமுகமாம் நன்கு நடிக்கவும் செய்கிறார் ( குரல் மிர்ச்சி சுச்சி - கார்த்தியின் நிஜ ஹீரோயின் )

இது தவிர பிக் பாலாஜி, பாஸ்கி,ஓம் ( புதுமுகம் ஆசை அஜித்குமாரை நினைவூட்டுகிறார் ) , கொச்சின் ஹனீபா , டெல்லிகணேஷ் , நாசரின் உதவியாளராக வருபவர் என பலரும் நகைச்சுவையை அள்ளி கொட்டுகிறார்கள் .

படத்தின் பல காட்சிகளிலும் நகைச்சுவை துணுக்குகளை தெளித்திருப்பது நல்ல யுக்தி , அதே போல் பாடல்களை படத்தின் நடுவில் இடைஞ்சலாக இல்லாமல் படத்தின் ஓட்டத்தில் கலந்து தந்திருப்பதும் .

கண்ணை உருத்தாத ஒளிப்பதிவு ( அர்விந்த் கிருஷ்ணா - அவரும் படத்ததில் கௌரவ வேடத்தில் ஒரு காட்சியில் நடித்துள்ளார் ) , நேர்த்தியான எடிட்டிங் , எரிச்சலூட்டாத பிண்ணனி இசை என படத்தில் பணியாற்றிய அனைவரும் மிக அருமையாக பணியாற்றியுள்ளனர் .

படத்தின் மைனஸாக நான் கருதுவது படத்தின் பல காட்சிகள் நாடகப்பாணியில் இருப்பதும் , சில நீளமான செண்டிமெண்ட் காட்சிகளும் , மனதில் ஒட்டாத பாடல்களுமே .

மற்றபடி எல்லாமே பிளஸ்தான் , அதனாலேயே என்னவோ படம் மிக நேர்த்தியாக வந்துள்ளது . படம் முழுக்க வியாபித்திருக்கும் இளமை துள்ளல் ம்மற்றும் ஒரு சிறப்பு .

பல நாட்களுக்கு பிறகு ஒரு நல்ல குடும்பத்தோடு பார்க்க தகுந்த ஒரு நகைச்சுவை படம் தந்த இயக்குனர் விஜய்க்கு வாழ்த்துக்கள் , அவரது முந்தைய படமான '' கீரிடம் '' நூறு மடங்கு இந்த படம் சிறப்பாக உள்ளது .

ஆனால் இந்த படம் எந்த அளவிற்கு வெகுஜன மக்களுக்கு பிடிக்கும் என்பது கேள்விக்குறியே , இப்படம் நிச்சயம் '' சி '' கிளாஸ் மக்களை கவருவது கடினம் என்பது அடியேனின் கருத்து . மற்றபடி இது ஏ & பி ரசிகர்களை கவரும் .

இப்படம் மென்மையான நகைச்சுவையை ரசிக்கும் ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை . தமிழில் இது போன்ற நகைச்சுவைப்பட முயற்சிகளை 1960களில் வெளியான பாலச்சந்தரின் படங்களுக்கு பிறகு யாரும் முயற்சிக்காத நிலையில் இப்படம் அந்த குறையை போக்குகிறது .

மொத்தத்தில்

பொய் சொல்லப் போறோம் - அழகான கவிதையில் பொய்
42/100
____________________________________________________________________________
புகைப்பட உதவி : indiaglitz.com

15 September 2008

வலையுலகில் பதிவுகளை திருடும் முகமூடி கும்பல்...!!!


சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் முகமூடி கொள்ளையர்களின் கைவரிசை அதிகமாகியுள்ளது , அது போல நம் பதிவுலகத்திலும் கொள்ளையர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது . பதிவு திருட்டு என்பது என்னை போன்ற புதிய பதிவர்களுக்கு மிக புதியதும் அரியதுமான ஒரு வார்த்தை .



இரண்டு வாரங்களுக்கு முன் எனது டிஷர்ட் வாசகங்கள் குறித்த பதிவு எனது வலைத்தளத்தில் வெளியானது அனைவரும் அறிந்ததே , அந்த பதிவில் HISUBASH என்னும் நண்பர் ஒருவர் ஒரு பின்னூட்டத்தில் ஒரு லிங்க்கை கொடுத்து அதை பார்வையிட கூறியிருந்தார் . அந்த வலைப்பக்கத்தில் பார்த்தால் எனது டிஷர்ட் பதிவு ஒரு வரி கூட மாறாமல் அப்படியே முழுவதுமாக காப்பி பேஸ்ட் செய்யப்பட்டிருப்பதை பார்க்க நேர்ந்தது (தலைப்பு மட்டும் மாற்றப்பட்டுள்ளது ) . சரி நமது ஒரு பதிவுதானே என்று அந்த வலைப்பூவை மேலும் தேடினால் அங்கு எனது சிலபலபதிவுகள் மட்டுமின்றி லக்கிலுக் போன்ற பதிவர்களது பல பதிவுகளும் அப்படியே திருடப்பட்டுள்ளது , ஒரு இடத்தில் கூட அது எந்த இடத்திலிருந்து உருவப்பட்டது என குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது . குறைந்தது உபயம் என அந்த பதிவின் உரிமையாளரின் பெயரயாவது போட்டிருக்கலாம்.



இதில் அந்த வலைப்பூவில் காப்பிரைட் honey tamil என்று வேறு போட்டுள்ளனர் . நாளைக்கே அந்த பதிவு தான் எழுதியதென்றும் அதை எழுதிய நான் , அதை திருடியதாகவும் குற்றம் சாட்டினால் நம்மால் என்ன செய்து விட முடியும் . அந்த வலைத்தளத்தில் அவரது பெயர் மின்னஞ்சல் முகவரி எதுவுமே இல்லை .




பதிவர்களாகிய நாம் நமது ஒவ்வொரு பதிவினையும் எழுத எடுத்துக்கொள்ளும் முயற்சிகளும் அதன் வலியும் வேதனையும் நமக்கு மட்டுமே தெரிந்த ஒன்று . அப்படி நாம் மிக சிரமப்பட்டு எழுதிய இந்த பதிவுகளை சுட்டு தனது பதிவில் போடுவது தவறில்லை ஆனால் அந்த பதிவில் அதனை யார் எழுதியது என ஒரு வரி இட்டாலாவது பரவாயில்லை , என்னை போன்ற புதிய பதிவர்களது வலைப்பூவிற்கு வரும் மக்களின் எண்ணிக்கையில் ஒன்றிரண்டாவது கூடும் . இதை எப்படி தடுப்பது யாரிடம் முறையிடுவது ஒன்றும் இயலாது ,




ஐயா புளைங்கள பெத்த புண்ணியவான்களே , அங்க அவன் அவன் ஒரு பதிவு எழுதறுதுக்குள்ள டவுசர் கிழிஞ்சு கீழ்வானம் செவந்துருது , தயவு செஞ்சு உங்க பதிவுல யாரோட பதிவ வேணும்ணாலும் போட்டுக்கோங்க ஆனா அத எங்க சுட்டீங்கணு போட்டீங்கண்ண உங்களுக்கு புண்ணியமா போகும் .



இப்போதைக்கு இந்த வலைத்தளம் மட்டும்தான் மாட்டிருக்கு இன்னும் யார் யார் எழுதினத எங்க எங்க போட்டு யாராரு காசு பாக்கறாங்கனு தெரியல....

அந்த வலைத்தள முகவரி இதானுங்க நீங்களும் போயி பாருங்க உங்க பதிவும் திருடப்பட்டிருக்கலாம் .






இந்த வலைபதிவு புதிதாக ஆரம்பிக்கப்பட்டதாக தெரிகிறது , அதனால் பதிவுகளை பற்றி அதிகம் தெரியாமல் இப்படி செய்திருக்கலாம் , இப்படிப்பட்ட பதிவு திருட்டுக்கள் தடுக்கப்பட வேண்டியவை , இணையத்தில் உலவும் பலரும் இது குறித்து அறிந்திருக்க வேண்டும் , இனி இது போல யாரும் செய்யாதவாரும் தடுக்கப்படவேண்டும் என்பதே அனைவரது ஆவலும் கூட .



பதிவுகளுக்கான காப்பிரைட் உரிமைகள் குறித்து விபரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் சகபதிவர்களுக்கு உபயோகமாக இருக்கும்.



அதையும் பதிவுடன் இணைக்க ஏதுவாக அமையும்.



____________________________________________________________________

அந்த வலைப்பக்கத்தின் படம்.