Pages

11 October 2008

வால் - ஈ ( WALL-E ) : திரைப்பட விமர்சனம்உலகிலேயே அமெரிக்கர்கள்தான் அதிக அச்சத்துடனும் பயத்துடனும் வாழ்பவர்கள் என்பது அவர்களது நாட்டில் வெளியாகி வெற்றியடையும் திரைப்படங்களை கண்ணோக்கினாலே புரிந்துவிடும் . அதுவும் அவர்களது பெரும்பாலான படங்களில் ஏதோ ஒரு ஆபத்து நியார்க் அல்லது வாஷிங்டன் நகரத்தை தாக்குவதாகவும் அதிலிருந்து ஒரு சூப்பர் ஹீரோவோ அல்லது அந்நகரத்து மக்களோ திரண்டு நாட்டை மட்டுமல்ல சமயத்தில் உலகத்தையே காப்பாற்றுவதாகவும் திரைக்கதைகள் இருக்கும் .


நம் உலகம் மற்றும் அதன் அழிவு தரும் அச்சம் அனைவருக்குமே பொதுவானவை . இன்றைய சுற்றுசூழலின் நிலை அனைவரும் அறிந்த ஒன்று , நாம் சுவாசிக்கும் காற்றாகட்டும் , அல்லது குடிக்கும் நீராகட்டும் , ஏன் ஓஸோன் மண்டலத்தில் விழுந்து வரும் துளையால் நம் மேல் விழுகின்ற சூரிய ஒளி கூட நமக்கு ஆபத்தை விளைவிப்பதாய் மாறி வருகிறது . இந்நிலை என்றுமே குறையாது , அது ஒவ்வொரு நாளும் அதிகரித்த வண்ணமேயுள்ளது . இந்நிலை இன்னும் சில வருடங்களில் அதிகமாகி நம்மை இவ்வுலகத்தில் வாழ இயலாத ஒரு நிலைக்கு கொண்டு செல்லும் . எங்கும் சுவாசிக்க இயலாத விஷவாயுவால் சூழப்பட்டு ஒரு உயிர் இப்பூவலகில் வாழ இயலாத ஒரு நிலை .
அப்படி ஒரு சூழலில்தான் இப்படம் துவங்குகிறது , உலகத்தில் இருக்கும் மனிதர்கள் தங்களது அயராத உழைப்பால் நம் உலகத்தை ரசாயன கழிவுகளின் குப்பையாக்கி அதன் பலனாய் தானே அழிந்து போன நம் உலகம் , அங்கே எல்லாம் இரும்பு கழிவுகள் அக்கழிவுகளை அகற்றும் பணிக்கு வால்-இ எனப்படும் ரோபோக்கள் . மனித அழிவிற்கு பிறகு பல நூறு ஆண்டுகள் கடந்த பின் உலகில் உயிரினங்கள் அற்ற சூழலில் சூரியசக்தியில் இயங்கும் இந்த வால்-இ ரோபோக்களும் அழிந்து அவ்வகையில் ஒன்று மட்டும் தனித்து தனது அன்றாட வேலையான குப்பை அகற்றுதலை செய்துகொண்டிருக்கிறது .

அந்த வேலைகளுக்கு நடுவே புதிதாக வித்யாசமான பொருட்கள் தென்பட்டால் அதையும் தன்து சிறிய குடோனில் அடைத்து வைத்துக்கொண்டு , ஒரு கரப்பானின் துணையோடு வாழ்கிறது ! . தனது உதிரிபாகங்களையும் கூட பாதுகாத்து வைத்துக்கொண்டு ஒரு மிகப்பழைய அமெரிக்க திரைப்படத்தின் பாடல்காட்சி அடங்கிய ஒரு வீடியோ டேப்பை வைத்துக்கொண்டு தினமும் பணி முடிந்து வீட்டிற்கு வந்ததும் அந்த படத்தை பார்க்கிறது , அதில் காதலர்கள் கைகோர்த்து தங்கள் அன்பை வெளிப்படுத்தும் காட்சியில் இதுவும் தனது இயந்திரகைகளை கோர்த்தபடி தனக்கு அது போல ஒரு துணையில்லையே என வருந்துகிறது .


பின் அங்கு வரும் ஒரு வேற்றுகிரக ரோபோவும் , அதனுடனான வால்-இ யின் காதலும் அதனைதொடர்ந்து வரும் காட்சிகளும் இறுதியில் வால்-ஈ யிம் அந்த பெண் ரோபோவும் இணைந்தனரா , அவர்களது இரும்புகைகள் இணைந்ததா என்பது கிளைமாக்ஸ் .
படத்தின் முதல் 30 நிமிடங்கள் எந்த வித வசனங்களும் இன்றி வெறும் காட்சிகளிலேயே படத்தை கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கிய விடயம் . ரஜினிகாந்த் படத்தைக்கூட வசனமில்லாமல் முதல் அரைமணிநேரம் நம்மால் பார்க்க இயலுமா என தெரியவில்லை ஆனால் முதல் அரை மணி நேரமும் ,அதில் இடம் பெரும் காட்சிகளையும் சார்லி சாப்ளினின் அக்கால பேசாப்படங்களோடு ஒப்பிடலாம் . அத்தனை நேர்த்தி அவ்வளவு அழகு , முதல் அரை மணிநேரமும் படத்தில் வசனங்களே இல்லை என்பதை நாம் உணர்வதற்குள் காட்சிகள் வேகமாய் ஒரு மணிநேரத்தை தாண்டிவிட்டிருக்கின்றன.

சார்லி சாப்ளின் படங்களில்(சிட்டிலைட்ஸ் ) காணவல்ல நகைச்சுவையுடன் கூடிய ஒரு சோகமான காதலை இப்படத்தில் பயன்படுத்தியிருப்பது அருமை.

படத்தில் இரண்டு இயந்திரங்களையும் அதன் பாலினத்தையும் அதன் உணர்வுகளையும் முக அசைவுகளையும் உடலசைவு மொழிகளையும் மிக அருமையாகவும் துல்லியமாகவும் வடிவமைத்திருக்கின்றனர் . நிச்சயம் இவ்வகை முகமற்ற ரோபோக்களில் பாலினம் அறிவது மிக கடினமான விடயம் .


இத்திரைப்படம் முழுவதும் விரவியிருக்கும் சுற்றுசூழல் மீதான அக்கறை வியக்கவைக்கிறது , குழந்தைகளுக்கான ஒரு அனிமேஷன் திரைப்படத்தில் இப்படி ஒரு முயற்சி நமக்கு விந்தையாக இருந்தாலும் , நாம் வெட்டி விட்டு போன மரத்தின் நிழலை தேடும் நாளைய சமுதாயம் கட்டாயம் அறிந்து கொள்ள வேண்டிய ஒரு பிரச்சனை இது .இப்படம் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது பெரியோர்களுக்கும் ஏற்ற வகையில் ஆக்சன் , ரொமான்ஸ் , சென்டிமென்ட் என கலந்து கட்டி அடித்திருப்பது , நமது மசாலா வகை ரசிகர்களுக்கும் பிடிக்கும் .

படத்தின் நாயகன் வால்-ஈ யின் தனிமையையும் அது தரும் ஒரு வெறுமையான ஒரு சூழலையும் முதல் இரண்டு காட்சிகளிலேயே புரியவைத்து விடுகின்றனர் .

உலகை நாசமாக்கும் இயந்திர வாழ்க்கையையும் அது தரும் சுகத்தால் நாம் அழித்து வரும் இவ்வுலகம் குறித்தும் இப்படி ஒரு சூழலில் அழியவிருக்கும் மனித குலத்தை ஒரு இயந்திரம் காப்பாற்றுவது போலவும் திரைக்கதை அமைத்தமைக்கு படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்.
படத்தினூடே இழையோடும் இசை ஒரு அனிமேஷன் படத்திற்கு இத்துணை சிரத்தையா என வியக்கவைக்கிறது .

படம் பற்பல கருத்துக்களை கூறினால் எந்த இடத்திலும் அலுப்பின்றி ஒரு அனிமேஷன் திரைப்படம் பார்க்கிறோம் என்கிற ஒரு உணர்வின்றி நம்மை ஒவ்வொரு காட்சியின் முடிவிலும் அடுத்து என்ன என்னும் ஒரு சஸ்பென்ஸோடு கதை நகர்வது அருமை .
ஒரு முழுமையான அறிவியல் புனைக்கதையை சார்ந்த இந்த அனிமேசன் திரைப்படம் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் .

இது போன்ற படங்களை ஏன் தமிழில் யாரும் மொழிபெயர்த்து வெளியிட முன்வருவதில்லை என்பது கேள்விக்குறியே .