Pages

19 December 2008

திண்டுக்கல் சாரதி - சன்-டிவி வாழ்க !


'' மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்தவரம் '' என்று ஒரு பாடல் இருக்கிறது. அந்த மனைவி அழகானவளாய் , நம்மை விரும்புபவளாய் இருந்துவிட்டால் சொல்லவே வேண்டாம் வாழ்க்கை படு ஜாலிதான் . நாளெல்லாம் திபாவளிதான். திருமணமான திருமணமாகப்போகும் ஒவ்வொருவனும் எதிர்பார்க்கும் ஒன்றுதானே அது . அப்படி நாம் நினைத்ததை விட மிகச்சிறந்த மனைவி நமக்கு அமையும் போது அதை ஏற்றுக்கொள்ளும் மனம் எல்லாருக்கும் இருந்துவிடுவதில்லை .

தன் தகுதி இவ்வளவுதான் என்று நமக்கு நாமே ஒரு வரையறை வைத்துக்கொள்வது. அதைவிட சிறந்த மனைவி நமக்கு அமைந்து விடுகிறாள் . அப்போது ஏற்படும் மன உளைச்சலும் அந்த பொக்கிஷத்தை அடுத்தவன் பறித்துவிடுவானோ என்னும் மனதோடு அலையும் ஒருவனின் வாழ்க்கைப்பயணம் '' திண்டுக்கல் சாரதி '' திரைப்படம் .

கறுப்பு பையனுக்கு சிகப்பு மனைவி . அவளது வருகையால் அவனுக்குள் விழையும் மாற்றங்கள் . அவனது குடும்பத்துக்குள் பிரச்சனைகள் . மனைவி மேல் சந்தேகம் . அதனால் மன உளைச்சல் . பைத்தியம் பிடிக்கிறது . மனைவி தந்தை வீட்டில் . குணமாகிறான் . சேரவிட மறுக்கிறார் தந்தை . சேர்ந்தனரா? பிரிந்தனரா? இவ்வளவுதான் கதை . ஆனால் அதற்காக அமைக்கப்பட்ட ஒரு அழுத்தமான திரைக்கதை அட! போடவைக்கிறது .

கருணாஸ் படம் முழுக்க வியாபித்திருக்கிறார் . இயலாமையையும் தாழ்வு மனப்பான்மையையும் , ஒரு மிடில்கிளாஸ் அப்பாவியாய் இவரை விட வேறு யாரும் தமிழில் இந்த பாத்திரத்தை சிறப்பாக செய்து விட இயலாது. முதல்பாதியில் காமெடி இரண்டாம் பாதியில் அளவான ஆனால் சிறப்பான நடிப்பு . கிளைமாக்ஸில் பைத்தியமாகி அவரது நடிப்புக்கு தாய்க்குலங்கள் நிச்சயம் அழுதாலும் சொல்வதற்கில்லை. வித்யாசமான உடல்மொழியும் அதற்க்கேற்ற வசன உச்சரிப்பும் அசத்தல். படத்தின் ஆரம்பத்தில் அது தேவையில்லாததைப்போல தோன்றினாலும் படத்தின் நகர்தலில் அது அப்பாத்திரத்தின் தன்மையை விளக்க உதவுகிறது. இந்த வருடத்தின் சிறந்த நடிகர் விருது வழங்கினால் கருணாஸின் இயல்பான நடிப்புக்காக அவருக்குத்தரலாம். குசேலன் படத்தில் இவரை நடிக்க வைத்திருந்தால் ரஜினியாவது தனது இமேஜைக்காப்பாற்றியிருக்கலாமோ? . படத்தில் நடனம் அருமையாய் ஆடுகிறார் , அவர் ஒரு நல்ல பாடகர் என்பது முன்பே தெரியும் ஆனால் நடனம் அசத்தலாய் வருகிறது (முண்ணனி நடிகர்கள் ஜாக்கிரதை )

படத்தின் நாயகி கார்த்திகா , குடும்பப்பாங்கான முகம் , உடல் , அழகான கண்கள் , மிதமான நடிப்பு . தமிழ்க்கதாநாயகிகளைவிட ஒரு பங்கு அதிகமாகவே நடித்திருக்கிறார். கருணாஸின் அம்மாவாக சரண்யா . எப்போதும் போல மகனை உசுப்பேத்திவிட்டு பழிவாங்கச் சொல்லும் தாயாக இல்லாமல் இயல்பான நடிப்பில் தன் மகனை பிரித்துவிடுவாளோ புதுமனைவி என்கிற ஆதங்கத்தோடு சண்டை போடும் தாயாக வித்யாசம் காட்டியிருக்கிறார். படத்தின் இன்னும் பல பாத்திரங்கள் அளவோடு நடித்து மனதில் பதிகின்றனர்.

படத்தின் இசை தீனா , திண்டுக்கல்லு பாடல் மனதில் படம் முடிந்து வந்தபின்னும் ஓடிக்கொண்டே இருக்கிறது , மற்ற பாடல்கள் சுமார் ரகம். பிண்ணனி இசை எரிச்சல் இல்லை . காமராவும் எளிமை .

படத்தின் இயக்குனர் குறைந்த பட்ஜெட்டில் நிறைய மெனக்கெட்டிருக்கிறார். படம் முழுக்க திண்டுக்கல்லிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது . தனது முதல் படத்திலேயே படத்தின் கதையை மட்டும் நம்பி அதற்கேற்ற கருணாஸைப் போன்ற ஒருவரை கதாநாயகனாக தேர்ந்தெடுத்த வீரம் இங்கிருக்கும் எந்த பிரபல இயக்குனருக்கும் வருவதில்லை. சபாஷ் . இயக்குனர் இதற்கு முன்னால் மெகா சீரியல் எடுத்தவரோ என்று சமயங்களில் தோன்றுவது பெரிய குறை . பல இடங்களில் தேவையில்லாத நாடகத்தனம் எரிச்சலூட்டுகிறது . பாடல்கள் படமாக்கிய விதம் நன்றாக இருந்தாலும் ஏனோ அதிலும் அதே பிரச்சனை. படத்தில் பல பாடல்கள் தேவையில்லாமல் சேர்க்கப்பட்டுள்ளது. அதுவும் ஒரு கவர்ச்சிப்பாடல் வேறு சகிக்கலை.

படத்தில் பல காட்சிகளும் சன்பிக்ஸர்ஸ் வாங்கியபின் சேர்க்கப்பட்டுள்ளது . படம் முடிந்த பின் போடப்படும் பாடல் காட்சிகளுக்கு யாரும் நின்று இதுவரை பார்த்ததில்லை . இப்படம் முடிந்ததும் போடப்படும் அந்த திண்டுக்கல் பாடலுக்கு தியேட்டரில் கூட்டம் அப்படியே அமர்ந்திருக்கிறது . அதே போல நிறைய நகைச்சுவைக்காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது . அவை படத்தின் சுவையைக்கூட்டுகிறது . ஒரு ஆர்ட்பிலிமைக்கூட நல்ல முறையில் மாற்றியமைத்து நல்ல மசாலாவாக ( அப்படத்தின் சாரம் கெடாமல் )மாற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க இயலும் எனவும் சன்டிவி நிரூபித்திருக்கிறது . (அதற்காக நல்ல படங்களை வாங்கி நாறடிக்காமல் இருக்க வேண்டுமே பாடிகாட் முனீஸ்வரா!!)
சன்னுக்கும் பேரனுக்கும் ஒரு நன்றி.

படம் முடிந்து வெளியே வரும் போது மனதுக்குள் ஒரு தன்னம்பிக்கை பிறப்பது புது உணர்வு. தன்னைத் தானே மற்றவருடன் மதிப்பீடு செய்வதைவிட கேவலமான ஒன்று உலகில் இல்லை என்று ஒஷோ சொல்வார். ஓப்பீடே சந்தேகத்தின் வேர் . சந்தேகமே இல்லறத்தின் தோல்விக்கு முக்கிய காரணம் . இல்லறத்தோல்வி ஒருவனை என்னபாடு படுத்தும் . இப்படமும் அதைத்தான் சொல்கிறது .

கதையில் ஆங்காங்கே கொஞ்சம் மிகையிருந்தாலும் படம் முழுக்க பொங்கி வழியும் நகையில் அவை பகையாய் இல்லை .

குடும்பத்தோடு கட்டாயம் அனைவரும் ரசிக்கலாம்... உங்களுக்கு தேவையானது நிச்சயம் படத்தில் இருக்கும் .

திண்டுக்கல் சாரதி - தன்னம்பிக்கை டானிக்.. இனிப்பாய் சுவையாய்... தமிழ்சினிமாவுக்கும் , படம் பார்க்கும் அனைவருக்கும்...