Pages

14 February 2009

கடித்தாலும் , பிராண்டினாலும் அவள் என் காதலி!!




எங்க ஊருக்கு அவ வந்த புதுசுல யாருக்குமே அவள புடிக்கலை.. அப்போ அவ பாக்க ஒல்லியா , வயிறு ஒட்டிப்போயி நெஞ்செலும்புலாம் தெரியற அளவுக்கு இளைச்சு போயிருப்பா.. அவள வீதிக்குள்ள விடாம நாங்க ஒரு பத்து பதினைஞ்சு பேரு கத்தி கத்தி குரைப்போம்.. ஆனாலும் அவ விடாப்பிடியா உள்ள வர பல நாள் முயற்சி பண்ணிக்கிட்டுதான் இருந்தா!!..


ஒரு நாள் எங்களோட இருக்கற கருப்பன் கொஞ்சம் முரடன் அவ கால கடிச்சிட்டான். வீல் வீல் னு அலறிட்டு எங்க ஏரியாவவிட்டு ஓடினவதான் அதுக்கப்பறம் பல மாசமா வருஷமா அவ எங்க வீதி பக்கம் வரவே இல்லை. அதுக்குப்புறம் அவள யாருமே நினைக்கல.. நான் மட்டும் நினைச்சுகிட்டு கிடந்தேன்.. அவ முகம் மட்டும் மனசுக்குள்ளயே இருந்துச்சு...


அவளோட அழகான கருப்பும் சிவப்பும் கலந்த காது , சிவந்து தொங்குற நாக்கு , சோகமான பார்வை , நாலுநாள் நக்கின எலும்பு நிறத்தில பல்லு , அழகா சுருண்டு வளர்ந்த வாலு அதுல அங்கங்க மாமிவீட்டு கோலம் மாதிரி புள்ளிங்க , அவ என் கண்ணுக்கு அழகா தெரிஞ்சிருக்கணும்... ஆனா எனக்கு அவ எங்களோட இருந்தப்பவும் எங்க வீதிக்கு வந்தப்பவும் அப்படி தோணலை.. அவ நெனப்பு என் நெஞ்சுக்குள்ள மூட்டை பூச்சு மாதிரி கடிச்சி அரிச்சிகிட்டே இருந்துச்சு.. நானும் என் நாக்கால அத நக்கிக்கிட்டேதான் இருந்தேன். பல வருஷமா..

எங்க ஏரியால நாங்க பத்து பேர் எங்கள எங்க ஏரியால இருக்கற மனுசங்களுக்கு ரொம்ப புடிக்கும். நாங்க எப்பவும் கூட்டாமாதான் அலையுவோம் . நைட்டான எங்க வீதிக்குள்ள யாரும் நுழைய சாமானியமா விடமாட்டோம். எங்களுக்கு தலைவன் கருப்பன். அவனுக்கு நல்ல பாடி. பிறவிலயே அவனுக்கு நல்ல உடல்வாகு. அவன் அப்பன் பெரிய பணக்காரன். அவங்கம்மா என்னாட்டம் தெருதெருவா கிடைச்சத திங்கற ஏழை. ரெண்டுபேருக்கும் லவ்வாகிதான் இவன் பொறந்தானாம். ஆனா அவங்கப்பன் வீட்டுல இவன் காதல ஏத்துக்கலயாம். இருந்தாலும் பணக்கார திமிரோடதான் இருப்பான்.
அவன எதுத்துகிட்டு யாரும் எங்க வீதி இருக்க முடியாது. காலைல டிபன் மதியம் லஞ்ச் நைட்டு டின்னர் எல்லாமே எங்க வீதி குப்பைத்தொட்டிலதான். எனக்கு மனுசி ஒன்னு தினமும் பால் சோறு போடுவா.. அது இப்போ எங்கயோ போய்டுச்சு.. குப்பைல கிடக்கறத திங்க எங்களுக்குள்ள பெரிய போட்டியே நடக்கும். அதும் ஆட்டுக்கறி,மாட்டுக்கறினா கடிச்சே வச்சுருவானுங்க.அதனால நான் அதையெல்லாம் திங்கறதில்ல. எனக்கு சண்டனாலே அலர்ஜி. நான் பொறந்து வளர்ந்ததுலாம் இந்த வீதிலதான். இதைத்தாண்டினா என்னனு கூட எனக்கு தெரியாது.

இப்படித்தான் ஒருக்கா பக்கத்துவீதி பயலுக சிலபேரு எங்க வீதிக்குள்ள நுழைய பாத்தாய்ங்க , நம்ம கருப்பன் ஒரு காரியம் பண்ணான் நேரா வீதிமுக்குல இருக்கற மளிகை கடைகிட்ட போயி அந்த ரோட்டையே மறைக்கிற மாதிரி ஒரு கோடு போட்டான் அதோட மூத்திரத்தால. அதே மாதிரி இன்னொரு பக்கம் இருக்கற லாரிகிட்டயும் அதே மாதிரி மூத்திரக்கோடு. அத தாண்டி ஒரு பய வர முடியலயே. அதயும் மீறி ஒரு அரைக்கருப்பன் வந்துட்டான் அவன விரட்டி விரட்டி கடிச்சு அவன் உடம்புல கீறி அவன் ரத்தம் வடிய வடிய ஓடினான்.கருப்பன் உஸ் உஸ்னு விட்ட மூச்சப் பாத்து அன்னைக்கு எங்களுக்கு மட்டுமில்ல எங்க ஏரியா மனுசங்களுக்கு கூட சிலித்துக்கிச்சு. நான் அந்த சண்டைல நல்லா வேடிக்க மட்டும் பாத்தேன். நான் ஒரு பூனையா பொறந்திருக்க வேண்டியவன்.

அவ கொஞ்ச நாளைக்கப்புறம் திரும்பி வந்தா.. புதுசா , பெரிசா, அழகா.. என்னால என் கண்ணையே நம்ப முடியல.. பூனை மாதிரி நடந்தா. இப்போ ஒரு பயலும் அவ வீதிக்குள்ள வரத தடுக்கல. ஆனா எங்க செட்டு பொண்ணுங்களுக்குத்தான் அவள புடிக்காம காய் காய்னு கத்தினாளுங்க.. கருப்பன் அவளுங்க வாய அடக்கிட்டான். கருப்பனுக்கு எப்படித்தான் இதெல்லாம் தெரியுதோ.. பொம்பளைங்க வாயக்கூட அலேக்கா அடச்சிட்றான். சில மனுசங்க கூட புதுசா வந்த சிவப்பிய பாத்து சிரிச்சுது. அவ்ளோ அழகு. அவள இப்படி பாப்பேனு நான் கனவுல கூட நினைச்சதில்ல. அவ்ளோ அழகா சிரிக்கிறா.. குரைக்கிறா.. ஐ லவ் யூ சிகப்பினு சத்தமா குரைக்கனும் போல இருந்துச்சு. ஆனா குரைக்க முடியல ஒரு வாரமா தொண்டல ஏதோ பிரச்சனை.

பகலெல்லாம் அவள நினைச்சுகிட்டு தூங்காம நைட்டெல்லாம் தூங்கினேன். குப்பைத்தொட்டி சோறும் புடிக்கல , மனுசங்க தர சோறும் புடிக்கல . கறியும் புடிக்கல சொறியும் புடிக்கல. காருக்கு பின்னாலயும் டூவிலர் பின்னாலயும் ஓடறதில்ல . என்னோட நார்மல் லைப்பே பாதிச்சிருச்சு. அவளுக்கு எங்க இடத்தில சோறு கிடச்சுது. எல்லா நாயும் அவ பின்னாடீயே மோப்பம் புடிச்சிட்டு அலைஞ்சானுங்க. நான் அவனுங்க கூட சண்ட போட வக்கில்லாம பேசாம அத நாக்க தொங்க போட்டுகிட்டு வாயால மூச்சுவிட்டுகிட்டு கிடந்தேன்.

அதுக்காக எனக்கு லவ் இல்லனு நினைச்சுறாதீங்க.. என்னையும் எங்க ஏரியா கருஞ்சிவப்பியும் , மாடிவீட்டு பப்பியும் லவ்பண்ணிகிட்டுதான் இருந்துச்சு. பின்னால வந்து மோப்பம் புடிச்சிகிட்டுதான் கிடந்துச்சு. ஆனாலும் ஏனோ எனக்கு சிவப்பி மேலதான் ஒரு இது.ஒரு நாள் இப்பிடித்தான் நம்ம பப்பி கார்ல போயிகிட்டு இருந்தப்ப என்னப்பாத்து சிலுப்பிகிச்சு. அடுத்த நாளு அந்த வீட்டு கார மனுசன் அத கூட்டிக்கிட்டு வாக்கிங் வந்தப்ப அந்த மனுசன் கைய விட்டுட்டு என் பின்னால வந்து மோந்துகிட்டு நின்னுச்சு.. நான் என்னடினதுக்கு என்ன எதும் தெரியாத மாதிரி கேக்கறனுச்சு.. நான்தான் வீம்பா போடி இவளேனு போய்ட்டேன்.

அப்படி இருந்த நான் இந்த சிவப்பி மேல இதுவாகி , அவ பின்னாடியும் போக முடியாம என் காதலயும் சொல்லமுடியாம முதுக நக்கிகிட்டு மூலைல கிடந்தேன். கருப்பனுக்கு ஏற்கனவே பல காதலிங்க இவளையும் வளைச்சுப்போட முயற்சிப்பண்ணான். ஆனா சிகப்பி மடியல. நானும் பல நாளு என்னோட காதல அவ கிட்ட சொல்லலாம்னு முயற்சிபண்ணிருக்கேன். எப்பவும் சிங்கம் மாதிரி கர் கர்னு வர கொரலு அவள பாத்ததும் கீ கீ னு கிளிப் பிள்ளையாட்டமா ஆகிருது. நாக்கெல்லாம் வேர்த்துடுது. அவள நினைச்சு உருகினேன்.

வெள்ளைபுள்ளியானுக்குத்தான் கிடச்சுது லக்கி பிரைஸ். அவன் பல நாள் அவ பின்னால மோப்பம் புடிச்சு அலைஞ்சு வித்தைலாம் காட்டி அவள மயக்கிட்டான். அவளும் அவனுக்கு மசிஞ்சுட்டா. ஒரு மார்கழி மாசம் காத்தால ............ விடுங்க நான் அழுதிடுவேன்.

அதிலருந்து வெள்ளைப் புள்ளியான கண்டாலே எனக்கு வயித்தெரிச்சலா இருக்கும். எங்கள புடிக்கற மனுசங்க வண்டி வரும் போது இவன மட்டும் புடிச்சுட்டு போக மாட்டானானுலாம் நினைப்பேன். அவனுக்கு வியாதி வந்து சாகமாட்டானானு ஏங்குவேன். அவன் இருக்க இருக்க நல்லா புஷ்டியாகிட்டேதான் போனான். வயிறெரிஞ்சு நான்தான் முன்ன விட மெலிஞ்சு முக்காவாசி ஆனேன்.

அப்போதான் புதுசா ஒரு வெள்ளையன் எங்க ஏரியாக்கு வந்தான். அவன பாத்து கருப்பனே மிரண்டுட்டான். அவன் அவ்ளோ பெரிசா இருப்பான். அவன்கிட்ட ஒரு நாள் கருப்பன் சண்டை போட்டுத் தோத்துட்டான். எங்கள்ல யாராலயும் அவன தோக்கடிக்க முடியல.. (நான் சண்டை போடல ) அதிலருந்து நாங்கல்லாம் அவன் கட்டுப்பாட்டுக்கு வந்தோம். சிகப்பியும் வெள்ளைப்புள்ளியானும் சேத்துதான்.

இருங்க இருங்க அடுத்து என்னாகிருக்கும்னு யோசிக்காதீங்க... நீங்க நினைச்ச மாதிரியேதான் நடந்துச்சு அவ வெள்ளைப்புள்ளியானுக்கும் அல்வா குடுத்துட்டு அந்த வெள்ளையனோட சேர்ந்துட்டா.. அவ அவன் பின்னால மோப்பம் புடிச்சுகிட்டு அலைஞ்சா.. அவங்க ரெண்டு பேருக்கும் ஆறு குட்டி பொறந்துச்சு.. சிகப்பியோட அழகெல்லாம் போயி ஆரம்பத்தில சொன்னமாதிரி நெஞ்செலும்பு தெரிய வயிறு ஓட்டிப்போய் அசிங்கமா ஆகிட்டா.. அதுக்கப்பறம் ஒரு நாளு நாலஞ்சு மனுசனுங்க சேர்ந்து அவள தூக்கிட்டு போயிட்டாங்க , அவ கழுத்துல மஞ்ச கயிற கட்டிவிட்டுடானுங்க.. அவள வீட்டோட வச்சுக்கிட்டானுங்க.. இப்பலாம் அவ வெளிய வரதே இல்ல.. அந்த மனுசன் அவள என்னலாம் பண்ணுதோ.. பாவம் என் சிகப்பி..

நான் அவள காதலிக்கறேன்.. என் மனசார காதலிக்கறேன்.. சாகர வரைக்கும் காதலிப்பேன். அவள எப்பவாவது பாக்கும்போது அவ கழுத்துல மஞ்ச கயிறு கட்டின மனுசன் அவள அடிச்சுகிட்டு இருக்கும்..என்னால அத பாத்துட்டு ஒன்னும் பண்ண முடியாம கிடந்து தவிப்பேன். மனசு வலிக்கும். என்னைக்காவது அந்த மனுசன் தனியா நடந்து வந்தா கடிக்காம விடமாட்டேன். அதுக்காகதான் காத்துகிட்டே இருக்கேன்.


அது சரி நீ யார்ரானு நீங்க கேக்கறது தெரியுது. என்னை உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும். தேவதாஸ்னு ஒரு மனுசன் இருக்கே அது கூட பக்கத்திலேயே உக்காந்திருப்பானே ஒரு நாய். அந்த நாய் பொண்ணுனு நிறைய பேர் நினைச்சுகிட்டு இருக்காங்க. அது மட்டும் பொண்ணா இருந்திருந்தா.. விடுங்க.. இந்த மனுசங்களே இப்படித்தான். அது நான்தான். என்ன நீங்க தேவதாஸ் நாய்னு கூப்பிடலாம்.