05 March 2009

எதிர்வீட்டு ஜன்னல்கள் - 1


ஷகிலா படங்கள் பார்த்துப் பல வருடங்கள் ஆகிவிட்டதால் சமீபத்தில் முகப்பேர் கோல்டன்ஈகிளில் ' இளமை இளமை ' படம் பார்க்க நேர்ந்தது. அதே ஆண்மையில்லா கிழவனின் மனைவியின் விரகதாபத்தை சொல்லும் கதை. ஏற்கனவே பார்த்த படங்களின் பல காட்சிகள் வெட்டி ஓட்டப்பட்டு ஒரு புதிய படம் போல் ஆக்கியிருந்தனர். இன்டர்வெல்லுக்கு முன்னால் டபுள் எக்ஸ்பிட்டு ஒன்று இடம் பெற்றது. டிக்கெட் விலை 15ரூபாய். கொடுத்தகாசுக்கு காட்டினார்கள். பரங்கி மலை ஜோதி தியேட்டரை பிரமிட் நிறுவனம் கைப்பற்றியதிலிருந்து தியேட்டரில் சாதாரண தமிழ்ப்படங்கள் மட்டுமே இடம் பெறுகிறதாம். கடைசியாக அங்கே பார்த்தபடம் தி அதர் சைட்ஆப் வுமன் , பிட்டே இல்லை.

போன வாரம் இரவு பத்து மணிக்கு தோழரை சந்திக்க டிநகர் வரைக்கும் செல்லவேண்டியிருந்தது. தொடர்ந்து போன் பண்ணிக்கொண்டே இருந்தார் தோழர். அரைமணிநேராமாய் காத்திருக்கிறாராம். நான் அசோக்பில்லரிலிருந்து செல்ல வேண்டாமா? . தோழரைப்பற்றி சொல்லவில்லையே மிக நல்ல மனிதர். வாய் கொஞ்சம் ஜாஸ்தி. வாயைக்கொடுத்து ______ஐ புண்ணாக்கிகொள்வார்.

தோழர் ஒரு முறை டெல்லி சென்றிருந்தபோது ஜிலேபி சாப்பிட ஆசைப்பட்டு தனக்கு தெரியாத இந்தியில் ஜிலேபி பத்து ரூபாய்க்கு என கேட்டிருக்கிறார். அவரும் பத்துரூபாய்க்கும் ஜிலேபி என நினைத்து 20 ஜிலேபிகளை கையிலடைத்துவிட்டாராம். அதற்கு பின் வேறு வழியின்றி தனக்கு பிறந்தநாள் என்று வருவோர் போவோரிடமெல்லாம் சொல்லி சொல்லி அதை தள்ளிவிட்டாராம். ஹிந்தி தெரியாமல் தான் விழித்தக்கதையைக்கூட சுவாரஸ்யமாய் சொல்பவர். ஆனால் தீவிர திராவிடப்பற்றாளர். இந்தி எதிரிப்புதான் என் உயிர்மூச்சு என்பார்.

சமீபகாலமாக ஒரு பத்திரிக்கையாளராக தன்னை மாற்றிக்கொள்ள அரும்பாடுபடுகிறார். அதனால் அவரது வலைப்பூவில் எழுதுவதில் சுணக்கம் வந்துவிட்டதாம். தோழருக்கு திருமணமாகிவிட்டிருந்தாலும் மனதிற்குள் இன்னும் யூத்து என்கிற நினைப்பு மட்டும் போகவேயில்லை. எனக்காக டிநகரில் காத்திருக்கும் போது எனக்கு அவசரமாக போன் பண்ணினார். ''பாஸ் வருவீங்களா மாட்டீங்களா''
''தோழர் வந்துகிட்டே இருக்கேன் '' என்றேன்


''சீக்கிரம் வாங்க பாஸ்.. ஒரு வயசுப்பையன் தனியா ரோட்டில நின்னா போறவர பொண்ணுங்க ஒருமாதிரி பாக்கறாங்க பாஸ் , எனக்கு வெட்கமா இருக்கு ..அழகா பொறந்துட்டாலே கஷ்டம்தான் பாஸ், உங்களுக்கு இதெல்லாம் புரியாதென்றார் '' என்றார்..

''எனக்கு இது தேவைதான் '' என்றபடி பைக்கின் ஆக்ஸி...முறிக்கினேன்.

டிநகர் சென்று சேறும் போது மணி 10.35.

டிநகரில் அம்மா மெஸ்ஸில் சாப்பிட்டிருக்கிறீர்களா. மிக அருமையான உணவகம். கொஞ்சம் காஸ்ட்லி. மாத ஆரம்பத்தில் சம்பளம் வாங்கிய ஜோரில் செல்வதுண்டு. புல் மீல்ஸ் 90 ரூபாய் (சைட்டிஸ் சாப்பிடுவதில்லை) . சமீபகாலமாக அருகில் இருக்கும் டிசிஎஸ் ஸ்ளாஸ்ஸப்போர்ட் போன்ற கம்பெனிகளின் வரவால் மதியவேளைகளில் எப்போதும் கனஜோராக கூட்டம் இருக்கும். நிறைய ஐடி பெண்கள் வருவதுண்டு. சாப்பாட்டைவிட அந்த பெண்களை காணவே அதிகம் அங்கே செல்ல விரும்புவேன்.

அந்த கடையின் உரிமையாளர் எம்.ஜி.ஆருக்கு ஆஸ்தான சமையல்காரராக இருந்தவராம். ஹோட்டலெங்கும் எம்.ஜி.ஆர் படங்கள். மெல்லிய சத்தத்துடன் எம்.ஜி.ஆர் தத்துவப்பாடல்கள். டிநகர் ஜி.என்.செட்டி ரோடிற்கு செல்லும்போது ஒரு முறை முயற்சித்துப்பார்க்கலாம். பர்ஸில் நிறைய பணத்துடன் செல்வது உத்தமம்.

அதேபோல ''ஒரு சோறு'' என்றும் ஒரு கடை இருப்பதாக நண்பர் கென் கூற கேட்டதுண்டு. தற்காலத்தில் அரபுநாட்டு அழகிகளோடு பணிபுரியும் நண்பர் கென் , நான்,கிருஷ்ணா என மூவரும் ஒரு நாள் சாருவை அழைத்துச்செல்ல திட்டமிட்டு சாரு தனது பத்து புத்தக வெளியீட்டில் அந்த சமயத்தில் பிஸியாக இருந்ததால் கைவிடப்பட்டது. சாருவிற்கு அந்த உணவகம் மிக பிடித்த உணவகமாம். சாருவின் சாப்பாட்டுக்கதைகள் உலகப்பிரபலம். அதனால் அவருக்கு பிடித்த உணவகம் நிச்சயம் சிறந்ததாக இருக்கலாம். ஒரு சோறு திட்டம் குறித்து சாரு மறந்திருக்கக் கூடும். ஞாயபகப்படுத்தவேண்டும்.

மார்ச் மாத உயிர்மை இதழ் நேற்றுதான் வீட்டிற்கு வந்தது. எப்போதும் வீட்டிற்கு இதழ்வரும் சமயத்தில் எல்லாம் அம்மா அதை ஒரு நாளும் அதன் மேல் அட்டையை ( பிளாஸ்டிக் கவர் ) பிரித்து பார்த்ததே இல்லை. எப்போதும் திட்டிக்கொண்டே இருப்பார். ஏன்டா இந்த லூசுக்கருமாந்திரத்தலாம் வாங்குற என்று. காசுக்கு புடிச்ச கேடு.. எடைக்கு போடக்கூட லாயக்கிலை என்றெல்லாம் திட்டுவதுதான் வழக்கம்.
இது மாதம் தோறும் தொடருகிற சமாச்சாரம்தான். ஆனால் இன்று காலை பார்க்கும் போது கவர் பிரிக்கப்பட்டிருந்தது. அம்மாவிடம் கேட்டேன். நான்தான்டா பிரிச்சேன். அட்டைல ஆர்யா படம் இருந்துச்சு அத பார்த்துதான் பிரிச்சேன், நான்கடவுள் விமர்சனம் படிச்சேன். ரொம்ப நல்லாருந்துச்சி. நான் நினைச்ச மாதிரியேதான் போட்டிருக்கு ,என்றார். எனக்கு தலை கிர்ரென இருந்தது. அம்மா எட்டாங்கிளாஸ் பெயிலானவர். ஆனால் நிறைய படிப்பவர். ஆன்மிகமும் சினிமாவும் உயிர் அவருக்கு. இலக்கியம் என்றால் காத தூரம் ஓடுபவர்.கடைசியாக பார்த்தபோது கோணல்ப்பக்கங்கள் படித்துக்கொண்டிருந்தார். சாருவின் விமர்சனத்தை படித்து சிலாகிக்கிப்பதை பார்க்கும் போது நான் இன்னும் வளரவேண்டும் என புரிந்தது.

நானும் சாருவின் நான்கடவுள் விமரிசனம் வாசித்தேன். மிகநேர்மையான விமர்சனம். ஆனால் கொஞ்சம் அளவுக்கதிகமாக புகழ்ந்து விட்டாரோ என்றே தோணியது. முக்கியமாக ஜெமோவையும் பாலாவையும் எப்போதும் திட்டுபவர் இம்முறை இதுவரை திட்டியதற்கெல்லாம் சேர்த்து பாராட்டியது போல் இருந்ததது. படத்தில் வரும் எல்லாபுகழும் இறைவனுக்கேவையும் , மாதாகோவில் குறித்தும் எழுதாதது ஏன் என்று தெரியவில்லை. சாருவின் மிக மோசமான விமர்சனமாகவே அது இருந்தது.எனக்கு பிடிக்கவில்லை. ஒருவேளை நான் வளர்ந்துவிட்டதாய் நினைத்துவிட்டேனோ என்னவோ?.

அவரது விமர்சனம் ஒரு நல்ல ஆன்ட்டி கிளைமாக்ஸ் போல் ஆனது பலருக்கும் வருத்தமளித்திருக்கும். எனக்கு அது அம்மா கிளைமாக்ஸ் ஆகிப்போனது.
அவர் அந்த படத்தை திட்டுவார் என்றே பலரும் எதிர்பார்த்திருக்கக்கூடும் என்னைப்போல.

நான்கடவுள் திரைப்படம் குறித்த பல கேள்விகளுக்கும் ஜெமோ தன்வலைப்பூவில் கூறியிருந்த பல பதில்களும் வெறும் சப்பைக்கட்டாக இருந்தது. பல கோடிகள் செலவளித்து எடுக்கப்படும் ஒரு படம் அதன் தயாரிப்பாளருக்கு கோடிகளில் வருமானம் தரவில்லையென்றாலும் கோவணத்தை அவிழ்க்காமல் இருந்தால் நலம். ஆனால் இந்தப்படம் போட்ட காசை எடுத்துவிட்டது என சினிமாவட்டார நண்பர் கூறினார். அது எந்த அளவுக்கு உண்மை எனத்தெரியவில்லை. மிகச்சில படித்த மெத்த அறிவாளிகளுக்கு படமெடுப்பதென்றால் சொந்த பணத்தில் எடுத்திருக்கலாம்.

அதேபோல நர்சிம்மின் நான்கடவுள் விமர்சனத்தில் பைத்தியக்காரன் கூறிய குறியீட்டு விடயங்களெல்லாம் கவனிக்கும் அளவுக்கு நமக்கு அறிவில்லை. சராசரி ரசிகனாக படம் பார்த்தால் நிச்சயம் இதையெல்லாம் கவனிக்க இயலுமா எனத்தெரியவில்லை. இலக்கியம் தெரிந்தவர்களுக்கும் படித்த மேதாவிகளுக்கும் நான்கடவுள் திரைப்படம் பிடித்திருந்ததாக தெரிகிறது. நான்கடவுள் குழுவினருக்கு வாழ்த்துக்கள்.

நான்கடவுள் குழுவினர்களின்(பிச்சைக்காரர்களாக நடித்தவர்கள்) பேட்டி ஒன்று அடிக்கடி இசையருவி சேனலில் ஒளிபரப்பாகிறது. சினிமா குறித்த பேட்டிகளில் இருந்து இது மிக வித்தியாசமாக இருந்தது. மறுஓளிபரப்பு அடிக்கடி ( மார்க்கெட்டிங்) செய்யப்படுவதால் பார்க்கலாம்.

அடுத்த வாரம் ஞாநி தனது ஓப்பக்கங்களில் கலைஞர் தொலைக்காட்சி பிச்சைக்காரர்களை வைத்து பிழைப்பு நடத்துகிறது என எழுத முற்படலாம். அதைக்கண்டித்து லக்கிலுக் தன் வலைப்பூவில் கலைஞரைவைத்து ஞாநி பிழைப்பு நடத்துகிறார் என பதிவெழுதலாம்.

ஏன் அடிக்கடி ஞானி போல ஜென்கதைகள் உங்கள் வலைப்பூவில் போடுகிறீர்கள் என ஒரு வாசகர் சாட்டில் கேட்டிருந்தார். மனது மிக கடுமையாக பாதிக்கப்படும்போதெல்லாம் ஜென்கதைகளை ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழிபெயர்ப்பதே ஒரு தியானம் போல இருக்கிறது. அதைத்தவிர வேறு ஏதும் காரணங்கள் இல்லை.

இது போல செய்யும் போதெல்லாம் மனது இளகி லேசாகி விடுகிறது. பிரச்சனைகளிலிருந்து விடுதலை கிடைக்கிறது. தம்மடிப்பதைப்போல .

வலைப்பதிவதே மனசாந்திக்குத்தானே..

சமீபகாலமாக நமது வலைப்பூவிற்கு பின்னூட்டங்கள் குறைந்துவிட்டதென ஒரு வாசகர் மிகவும் வருத்தத்தோடு சொன்னார். அதற்கு காரணத்தையும் அவரே சொன்னார். நான் யாருக்கும் பின்னூட்டம் போடாததால் யாருமே எனக்கு போடுவதில்லை என்று. பின்னூட்டம் என்றால் என்னவென்று இதுவரைக்கும் எனக்கு புரியவேயில்லை. அது தவிர எனக்கு தற்காலத்தில் கணினி கிடைப்பதே குதிரைக்கொம்பாக இருக்கிறது இதில் பதிவை படிக்கவே ஆர்வம் அதிகமாக இருக்கிறது. பின்னூட்டம் குறித்து விபரம் தெரிந்தவர்கள் தனிமடலில் சொல்லலாம்.

பரிசல்காரன் மற்றும் நர்சிம்மிற்கு வாழ்த்துக்கள். இரட்டைசதம் அடித்தமைக்கும் சதம் அடித்தமைக்கும். இதற்கு முன்னாலேயே சைலன்ட்டாக இந்த சாதனைகள் படைத்த கார்க்கீக்கு கூடுதல் வாழ்த்துக்கள். (அவருக்கு திருமணம் என ஒரு வதந்தி வலையுலகில் சுற்றுகிறது.. அது உண்மையாகின் எனது அனுதாபங்கள்)

கார்க்கி தமிழ்வலையுலகில் நிஜமாகவே ஒரு யூத்து. இளம் குறுத்து. பதிவுகள் மிக அருமையாக இருக்கிறது.அவரது எழுத்தில் அவரது ஆழமான வாசிப்பு தெரிகிறது. கும்மிகளை குறைத்தால் தேவலை.

பரிசல்க்காரன்+நர்சிம்=கார்க்கி ( 200 பதிவுக்கு வாழ்த்துக்கள்)
தாமிராவின் குறும்படம் எடுப்பது எப்படி என்னும் காமெடிப் பதிவை சீரியஸாகப்படித்து அவரிடம் அதுகுறித்து கேட்டு அசிங்கப்பட்ட நிகழ்வுகளையும் , கேபிளாரின் விமர்சனங்கள் குறித்த விமர்சனங்கள் எனக்குண்டு அதை அடுத்த எ.வீ.ஜன்னலில் எழுத உசிதம்

நண்பர் அகிலன் சில மாதங்களுக்கு முன்னே மரணத்தின் வாசனை என்கிற புத்தகத்தை இலவசமாக கொடுத்தார். இலவசமாய் தரும் பொருளின் மதிப்பு ஏனோ தமிழ் மக்களுக்கு தெரியாது போல. எனக்கும். அதைவாங்கியதோடு ( அவரது கையெழுத்தோடு) சரி.

பல நாட்களுக்கு பிறகு கடந்த ஞாயிறன்று தூக்கம் வராத இரவில் படிக்க நேர்ந்தது. தூங்கமுடியவில்லை. கண்களில் கோர்த்திருந்த கண்ணீர் தீர்வதற்குள் அடுத்த துளி கோர்க்க துவங்கிவிடுகிறது. ஈழத்தமிழர் குறித்த அதைக்குறித்து ஒரு புத்தக மதிப்புரை எழுதவேண்டும்.

சமீபத்தில் படித்த பதிவுகளில் மிகவும் பிடித்தப் பதிவுகள் சில -

மணிகண்டனின் -பிரம்மபிரயத்தனம்
thodar.blogspot.com/2009/02/blog-post_23.html

ஜ்யோவ்ராம் சுந்தரின் -சலிப்பு குடி புணர்ச்சி மற்றும் இன்னபிற

jyovramsundar.blogspot.com/2009/02/blog-post_11.html

முரளிக்கண்ணனின்- ஐமேக்ஸ் தமிழ்சினிமாவிற்கு சாத்தியமா? 1,2,3 (அவரது வலைப்பூ எனது கணினியில் ஓப்பன் ஆக நேரமாகிறது அதனால் அவரது பிளாக் லிங்க் மட்டும்)

muralikkannan.blogspot.com


****************************************************


18 comments:

கணேஷ் said...

சிறப்பாக உள்ளது. தொடர்ந்து எழுதவும். நோ பிரேக்.

தமிழன்-கறுப்பி... said...

ரொம்ப நாளா பாக்க முடியலை...

தமிழன்-கறுப்பி... said...

நான் இதைத்தான் எதிர்பார்த்தேன் சாருவின் விமர்சனத்தில் ஆனால் இளைய ராஜாவை ஓவராக கலாய்த்திருக்கிறார் அதுவும் இன்னொருவரோடு ஒப்பிட்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை அது வேறு மொழிப்படமும் கூட...

மணிகண்டன் said...

****
நானும் சாருவின் நான்கடவுள் விமரிசனம் வாசித்தேன். மிகநேர்மையான விமர்சனம்.
****

யோவ் ! ஒரு விமர்சனம் அந்த படத்தோட சிறப்பான / அறுவையான பகுதிகள வாசகர் முன்னால கொண்டு செல்லனும்..

ஆனா பாருங்க, சாருவோட விமர்சனம் படிக்கறவங்க எல்லாம் "நேர்மை" பத்தி தான் பேசறாங்க. ஒரு படைப்பு, அதுக்கு எழுதப்பட்ட விமர்சனம், இத எல்லாத்தையும் விட்டுட்டு அந்த விமர்சனத்த எழுதினவர் தான் முன்னாடி நிக்கறார்.

ஒருவேளை சாருவுக்கு இளையராஜா பேரு கேட்டாலே ஒரு படபடப்பு வருது போல. பிச்சை பாத்திரம் ராஜா குரல்ல கேட்டதா எழுதி இருக்காரு ! நான் கடவுள் பட பாட்டு கேட்டாரா இல்லாட்டி ரமண மஹரிஷி CD கேட்டாரா ?

Cable சங்கர் said...

அதிஷா.. அம்மா மெஸ்ஸில் சாப்பாடு அறுபது ரூபாய்தான்.. சைட்டிஷ் இல்லாமல் உன்னை யாரோ நல்ல்லா ஏமாத்திட்டாங்க.

anujanya said...

நல்ல வித்தியாசமான ஸ்டைல். கொஞ்சம் சாருவை நினைவுபடுத்தும் நடை. யாரையும் விட மாட்டீர்கள் போல. தொடருங்கள்.

அனுஜன்யா

Anbu said...

நன்றாக இருக்கிறது அண்ணா..

ஆண்ட்ரு சுபாசு said...

நான் யாருக்கும் பின்னூட்டம் போடாததால் யாருமே எனக்கு போடுவதில்லை என்று//

அப்ப உங்களுக்கு நான் ஒரு பின்னூட்டம் இட்டுவிட்டேன் ...இதை பார்பவர்கள் எல்லாம் எனக்கு பின்னூட்டம் இட்டு விடவும்...:-)

வால்பையன் said...

எள்ளலும், துள்ளலும் நிறைந்த நடை!
நல்லாருக்கு

நான் சென்னை வரும் போது போன் பண்றேன், அம்மா மெஸ்ஸுக்கு கூட்டிகிட்டு போறிங்களா?

VIKNESHWARAN ADAKKALAM said...

என்ன இது எல்லாவற்றையும் கிழி கிழியென கிழித்து துவம்சம் செய்து வைத்திருக்கிறாய் மகனே?

சின்னப் பையன் said...

எள்ளலும், துள்ளலும் நிறைந்த நடை!
நல்லாருக்கு...

narsim said...

//அவரது விமர்சனம் ஒரு நல்ல ஆன்ட்டி கிளைமாக்ஸ் போல் ஆனது பலருக்கும் வருத்தமளித்திருக்கும். எனக்கு அது அம்மா கிளைமாக்ஸ் ஆகிப்போனது//

நன்றாக இருந்தது..

கார்க்கிபவா said...

பிறந்த நாள் வாழ்த்துகள் சகா.

தொடர்ந்து வாசித்தாலும் உங்க கடைல பின்னூட்டம் போடாததற்கான காரணம் எனக்கே தெரியவில்லை.நேற்றே பதிவைப் படித்தாலும் அப்போது பின்னூட்டம் போட்டால், நம்மை பற்றி எழுதினால்தான் போடுவோமா என்ற கேள்வியை நானே கேட்டுக் கொண்டு அமைதியாக போய் விட்டேன்.

இன்று உங்களை வாழ்த்துவதற்காக தான் வந்தேன்.

:)).. இனி தொடர்ந்து கும்மிதான்..

(கும்மியை குறையுங்கள் என்று சொன்னவ்ரிடமே கும்ம்மியா? திருந்த மாட்டடா கார்க்கி)

மாதவராஜ் said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா!
உங்கள் எழுத்துக்களை ரசிக்கிறேன்.

கார்த்திகைப் பாண்டியன் said...

அன்புள்ள நண்பர் அதிஷாவிற்கு.. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

chandran rama said...

I wish you a very happy birthday..
Enjoy and share your happiness with your friends and family.

Anonymous said...

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட் தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம். மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும். http://www.newspaanai.com/easylink.php நன்றி.

Suresh said...

arumiayna pathivu