Pages

16 March 2009

நிராகரிப்பின் வலி..அவர் ஒரு பிரபலமான முன்னாள் நடிகர் , எம்.ஜி.ஆரைப்போல வந்திருக்க வேண்டியவர். அரைடிராயர் போட்டுக்கொண்டு தனது முதல் ஹிட்டை கொடுத்தவர். அடுத்தடுத்த தோல்விகளால் துவண்டு போயிருந்தார். அவர் மனைவியும் ஒரு நடிகை. சமீபகாலமாக தொ.காட்சித்தொடர்களில் அதிகம் காணமுடிகின்ற ஒருவர்.இருவருக்கும் காதல் திருமணம். பல ஆண்டுகள் திரையுலகத்திற்கே எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தம்பதியினர் அவர்கள். தோல்விகள் தாலாட்டும் காலத்தில் அந்த நடிகருக்கு மேலும் ஒரு தோல்வி. திருமணமுறிவு.


விவாகரத்து கோருகிறார் அந்த நடிகை. விவாகரத்து கிடைக்கிறது. ஜீவனாம்சமாக நடிகர் இத்தனை ஆண்டுகளும் உழைத்துச்சேர்த்த மொத்த சொத்தும் கை மாறுகிறது. நடுத்தெருவில் ஆதரவின்றி ஒரு வேளை சோற்றுக்கே சிரமப்படும் நிலைக்கு ஆளாகிறார் நடிகர். சில வருடங்களுக்கு முன்னால் நடந்த இந்த சம்பவம் ஜனரஞ்சக பத்திரிக்கைகள் சிலவற்றில் அந்த நடிகரின் பரிதாப நிலை என ஒரு வாரச் செய்தியாக வெளியானது பெரும்பாலோருக்கும் தெரிந்திருக்கும். நிராகரிப்பின் வலியை அன்று அந்த நடிகரின் கண்களில் காண முடிந்தது.


உங்கள் உயிருக்கும் மேலாக நீங்கள் காதலிக்கும் காதலியோ மனைவியோ உங்களை முற்றாக நிராகரிக்கிறார். விவாகரத்துக் கோருகிறார். உங்களை நடுத்தெருவில் அநாதையாய் நிற்கவைத்து நீங்கள் கதறி அழும்போது கைகொட்டி சிரிக்கிறார். வெளிநாட்டவரான உங்கள் பாஸ்போர்ட்டை திருடிக்கொள்கிறார். உங்கள் மீது பொய் வழக்குப்போட்டு காவல்துறையிடம் மாட்டிவிடுகிறார். உங்கள் வாழ்க்கையையே சூன்யமாக்குகிறார். என்ன செய்வீர்கள்? இப்படித்தான் துவங்குகிறது WHITE திரைப்படம். போலந்து நாட்டு திரைப்படமான இதை இயக்கியவர் கிறிஸ்போம் கிரிஸ்லோஸ்கி. Three colours என்கிற தொடர் திரைப்படங்களில் இது இரண்டாவது. (முதல் படம் BLUE மூன்றாவது RED)


கோர்ட்டில் துவங்குகிறது திரைப்படம். விவாகரத்து வழக்கு. மணமாகி ஆறுமாதத்திற்குள் . இவன் மறுக்கிறான். அவன் அவளை உயிருக்கும் மேலாய் காதலிப்பதாய் கூறுகிறான். அவளோ நான் அவனை காதலிக்கவில்லை என நீதிபதியிடம் வாதிடுகிறாள். இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது. அவனும் அவளும் இணைந்து நடத்திய சலூன்,வங்கிக்கணக்கு,சொந்த வீடு அனைத்தையும் பிடுங்கிக்கொள்கிறாள். சலூனை எரிக்க முயன்றான் என போலிஸில் புகார் செய்வேன் இனி இங்கே வராதே என வீட்டைவிட்டு விரட்டுகிறாள். ரயில்நிலையத்தில் ஒரு பிச்சைக்காரனாய் அமர்ந்திருக்கிறான்.


அவன் போலந்தின் 'வார் சா'(WARSAW) நகரத்தில் வளர்ந்தவன். அந்த ஊரின் மிகப்பிரபலமான சலூனின் முதலாளி. வார்சாவில் நடந்த ஒரு போட்டியில் பங்கேற்க வந்தவளை காதலித்து அவளுக்காக பாரிஸுக்கு வந்தவன். தனது பாக்கெட்சீப்பில் ஒரு கர்சீப்பை வைத்து வாயினால் மௌத்தார்கனைப்போல வாசித்து ரயில்நிலையத்தில் பிச்சை எடுத்துக்கொண்டிருக்கிறான். போலந்தின் மிகப்பிரபலமான பாடலை வாசிக்கிறான். அந்த வழியே வரும் ஒரு பெரியவர் அவனுக்கு சில்லரைகளை போடுகிறார். நின்று பார்க்கிறார். இருவரும் சேர்ந்து குடிக்கின்றனர். அவரும் போலந்தை சேர்ந்தவர். அவனை தான் ஊருக்கே அழைத்து செல்வதாய் கூறுகிறார். ஆனால் அங்கே ஒருவரை கொலை செய்யவேண்டும் என்கிறார். இவனது பாஸ்போர்ட்டை அவள் பிடுங்கி தொலைத்துவிட்டிருந்தாள். இவன் தனது மிகப்பெரிய பெட்டியில் மறைந்து கொள்வதாகவும் அதை வைத்துக்கொண்டு விமானத்தில் தப்பிக்கலாம் என்றும் திட்டமிடுகிறான். போலந்தில் பெரியவர் இறங்குகிறார் அவன் இருக்கும் பெட்டியை தேடுகிறார். பெட்டியை வரவில்லை. அவன் அடைந்திருக்கும் பெட்டியை திருடர்கள் சிலர் திருடிக்கொண்டுபோய் திறந்து பார்க்க இவன். அவனை அடித்து உதைத்து கையிலிருக்கும் வாட்சைபிடுங்கிக்கொண்டு விரட்டி விடுகின்றனர்.


மீண்டும் ஊர்திரும்பிய மகிழ்ச்சியில் கடினமாய் உழைக்கிறான். ஒரு பணக்காரனிடம் அடியாளாய் சேருகிறான். பணக்காரனை ஏமாற்றுகிறான். பெரியவரிடம் சென்று கொலைசெய்யத் தயார் என்கிறான். (தற்கொலை செய்துகொள்ள மனமில்லாத வாழ்வில் சலிப்படைந்த ஒருவனை அவன் அனுமதியோடு கொல்வதே திட்டம்) . கொலை செய்ய செல்கிறான் அங்கே அந்த பெரியவர். பாக்கெட்டில் பணமிருக்கிறது என்னை கொன்று அந்த பணத்தை எடுத்துக்கொள் என்கிறார். அவன் அவரை சுடுகிறான். ஆனால் அவர் இறக்கவில்லை. அது போலி குண்டு. அவர் வாழ்வின் அர்த்தம் உணர்கிறார். அதற்கு பரிசாய் பணம் தருகிறார். இவன் அதைக்கொண்டு தொழில் துவங்கி பணக்காரனாகிறான். தன் பணத்தை கொண்டு தன் மனைவியை பழிவாங்க ஒரு பயங்கரமான திட்டத்தை தீட்டுகிறான் . இதற்கு மேல் இந்த படத்தின் கதையை கூறிவிட்டால் படத்திற்கு நான் செய்யும் மிகப்பெரிய துரோகமாய் அது அமைந்து விடக்கூடும்.


1994 ல் வெளியான இத்திரைப்படம் பெர்லின் திரைப்படவிழாவில் வெள்ளிக்கரடி விருதுப்பெற்ற ஒன்றாகும். ஒரு சாதாரண கதையை எடுத்துக்கொண்டு மிகச்சிறந்த திரைக்கதையின் மூலம் படத்தை கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்.


ஒரு காட்சியில் அவனுக்கு உதவும் பெரியவர் உன் காதலி எப்படி இருப்பாள் எனக் கேட்கிறார். இவன் அவள் தேவதையை ஒத்து இருப்பவள் வா காட்டுகிறேன் என அவரை அழைத்துக்கொண்டு அவள் வீட்டு வாசலுக்கு அழைத்து செல்கிறான். ஜன்னலில் அவனது நிழல் தெரிகிறது. பார் அவள்தான் எனக்காட்டுகிறான். சிறிது நேரத்தில் விளக்கு அணைந்து விடுகிறது. அவன் இது அவள் தூங்கும் நேரம் என்கிறான். மீண்டும் விளக்கு எரிகிறது. இப்போது ஒரு ஆணின் நிழல் தெரிகிறது. பெரியவரோ ஆமாம் ஆமாம் இது தூங்கும் நேரம்தான் என்று கிண்டலாக சிரிக்கிறார். இவனோ பைத்தியம் பிடித்தவனாய் தெருவோர டெலிபோன் பூத்துக்கு ஓடுகிறான். அவளுக்கு போன் செய்கிறான் , அவள் போனை எடுத்து சரியான நேரத்தில் அழைத்திருக்கிறாய் எனக் கூறி அவளும் அந்த இன்னொருவனும் சேர்ந்து புணரும் ஓசையையும் கட்டில் கிறீச்சிடும் சத்தமும் அவள் முனகும் சத்தத்தையும் கேட்க வைக்கிறாள். அவன் டெலிபோன் பூத்திலேயே கண்ணீர்மல்க கதறி அழுகிறான். ஹிட்லரின் சித்ரவதை முகாம்கள் குறித்த திரைப்படங்களில் காட்டப்படும் வன்முறையை விட ஆயிரம் மடங்கு வன்முறையான காட்சியாகத்தோன்றியது அது. இது போல ஒவ்வொரு காட்சியும் வலிமையானதாய் உருவாக்கப்பட்டிருக்கிறது.


ஆண்களின் காதல்,நிராகரிப்பின் வலி குறித்த ஒரு கதையை தேர்ந்தெடுத்து அதன் வலி சிறிதும் குறையாமல் படம் நெடுக நகைச்சுவையாய் சொல்லிச்செல்லும் இத்திரைப்படம் மேற்கத்திய நாடுகளில் புகழ்பெற்ற பிளாக் காமெடி வகையை சேர்ந்த ஒரு படமாகும். படம் நெடுக கிடைக்கும் நகைச்சுவையான உரையாடல்கள் ஒரு காட்சியில் கூட படத்தின் பாதையை மாற்றாமல் நிராகரிப்பின் வலியிலேயே பயணிக்கிறது. அதை ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.


படத்தின் பெயருக்கேற்றாற் போல் படம் நெடுக நம்மோடு அந்த வெண்மையும் பயணிக்கிறது. பாரிஸின் வீதிகளில் வானம் முழுக்க வெண்மையாகவும் , போலந்தின் வீதிகளில் நிலம் முழுக்க பனிமூடி வெண்மையாகவும் காட்சிகள் அமைத்தது அருமை. அதன் குறியீடுகள் தரும் செய்தியை உணரமுடியவில்லை.


படத்தின் இயக்குனர் கிரிஸ்லோஸ்கி இத்திரைப்பட வரிசை குறித்து ஒரு பேட்டியில் இப்படிக்குறிப்பிட்டார்.'' இத்திரைப்பட வரிசைக்கு ஏன் BLUE,WHITE,RED எனப் பெயரிட்டேன் தெரியுமா? , இப்படங்களின் தயாரிப்பாளர்கள் பிரான்சைச்சேர்ந்தவர்கள், வேறு நாட்டினவராக இருந்திருத்தால் அவர்களுக்கேற்றாற் போல வேறு பெயர்களை தேர்ந்தெடுத்திருப்பேன், ஆனால் படங்கள் இந்த மூன்றாக மட்டுமே இருந்திருக்கும் '' என்றார். கிரிஸ்லோஸ்கி போலந்து நாட்டின் மிகச்சிறந்த இயக்குனர்களில் ஒருவர்.


படத்தின் நாயகனாக நடித்த ஜமோச்வ்ஸ்கி படம் நெடுக தன் அப்பாவி நடிப்பாலும் உடலசைவு மொழியாலும் அசத்தியிருப்பார். நாயகியாய் வரும் ஜீலி டெல்பி , மூன்றாம்பிறை ஸ்ரீதேவியைப்போல கிளைமாக்ஸில் மொத்தமாய் அள்ளிவிடுகிறார். அசத்தலான நடிப்பு.

படம் நெடுக வரும் அமைதியான மெல்லிய இசை படத்தோடு நம்மையும் சேர்ந்து இணைக்கும் பாலமாக இருக்கிறது.
வாய்ப்புக்கிடைத்தால் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.


**********************************************