Pages

19 March 2009

யாவரும் நலம் - ஆவி வந்த டிவி!


சிறுவயதில் ரங்கராட்டினம் என்றால் எனக்கு சிம்மசொப்பனம். கோடி ரூபாய் குடுத்தாலும் குச்சி ஐஸ் குடுத்தாலும் ஏற மாட்டேன். பலருக்கும் அந்த பயம் இப்போதும் இருக்கும். பால்யத்தில் இருந்த பயம் சற்றே விலகி பருவத்தில் ஒரு முறை பொருட்காட்சியில் இதில் என்னதான் இருக்கிறது என பார்த்துவிடுவோம் என ஏறிவிட்டேன். ஒவ்வொரு முறை ராட்டினம் என் பெட்டியை உச்சிக்கு கொண்டு செல்லும் போதும் பயம் நெஞ்சைக்கவ்வும். பின் கீழிறங்கும் போது குறையும். மீண்டும் மேலேறும் போது பயம் அதிகமாகும். கீழிறங்கும்போது ஈர்ப்பு விசை உடலை இழுக்கும் , மேலேறும் போது அந்த கீழிறங்கப்போகும் அந்த விநாடிகளை நினைத்தே மயிர் கூச்செரியும். சுற்றி வருகையில் மேலே உச்சியில் அந்த ஒரு விநாடி திகைப்பு அதுதான் ரங்கராட்டினத்தின் வெற்றிக்கும் நமது மகிழ்ச்சிக்கும் காரணம். எத்தனை பிளாக்தண்டர் வந்தாலும் தீம்பார்க்குகள் வந்தாலும் பொருட்காட்சி ரங்கராட்டினம் என்றுமே தி பெஸ்ட்டுதான்.


எஸ்.வி.சேகரின் ஒரு நாடகம் அதில் அவர் ஒரு ரேடியோவை நடுவீட்டில் கொண்டு வந்து வைத்து அதனிடம் தன் மனைவியுடன் ஆசீர்வாதம் வாங்குவார். மனைவி கேட்பாள் ஏன் என்று, அதற்கு சேகர் , அந்த ரேடியோவில் தான் தன் பாட்டி வாழ்கிறாள் , சிச்சுவேசனுக்கு ஏற்றாற்போல பாட்டு பாடுவாள், இது ஆல் இண்டியா ரேடியோ அல்ல ஆவி வந்த ரேடியோ என்றும் கூறுவார். அந்த நகைச்சுவைக்காட்சி எனக்கு மிகபிடித்தமானவற்றில் ஒன்று. அந்த நாடகத்தின் கதை 1980களின் ஆரம்பத்தில் எழுதியிருக்கக் கூடும் தற்காலமென்றால் கணினியாகவோ டிவியாகவோ இருந்திருக்கும். யாவரும் நலம் திரைப்படத்தின் கருவும் இதுதான். ''ஆவி வந்த டிவி''


மாதவன் நடிப்பில் பிக் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளிவந்துள்ள படம்தான் யாவரும் நலம். இந்தி தமிழ் என இரு மொழிகளிலும் தயாரான இப்படத்தை நேற்று காண நேர்ந்தது. இதுவும் ஆவி வந்த ரேடியோ கதைதான். ஆனால் இதில் டிவி . நிறைய ஆவி (ஆவி என்றால் ஆவியேதான் ஆ.வி அல்ல ). எட்டோ ஒன்பதோ சரியாக எண்ணவில்லை. படத்தின் கதை ஏற்கனவே ஆங்கிலத்தில் வெளியான GRUDGE,THE RING 1&2 ( இன்னும் எந்த சினிமா சீரியல்களிலிருந்து சுடப்பட்டதோ அந்த ஆவிகளுக்குத்தான் வெளிச்சம் ) படங்களின் சாயல். படத்தின் கலர் உட்பட.


வீட்டில் மெகாசீரியல் பார்க்கும் பெண்களால் ஆண்களுக்கு பைத்தியம் பிடித்து மெர்சலாகி மென்டலாகி இப்படிக்கூட நடந்துவிடும் அபாயம் இருக்கிறதோ என படம் முடியும் போது தோன்றுகிறது. மெகா சீரியல்தான் இந்த படத்தில் பேய் பூச்சாண்டி பூதம் எல்லாமே. அதற்கு ஒரு விளக்கம் வேறு. படம் முடியும் போது பலரும் மெர்சலாகி மென்டாலாகி போனதை காண முடிந்தது. பக்கத்து சீட்டு தோழர் உட்பட.


பி.சி.ஸ்ரீராமின் கேமராவையும் ஒலிப்பதிவாளரின் சவுண்டையும் நம்பியே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். படத்தின் ஹீரோ அவர்கள் இருவரும்தான். சாதாரண கார்கதவு தட்டைலைக்கூட ஆக்ரோசமாய் கேட்கச்செய்கிறார் அந்த ஓலிப்பதிவாளர். (பெயர் தெரியவில்லை பின்னூட்டத்தில் சொன்னால் அப்டேட்டிக்கிறேன்). அதே போல இசைகூட யாரெனத்தெரியவில்லை. அசத்தலாக இசையமைத்திருக்கிறார் ஹாலிவுட்படங்களுக்கு இணையான இசை.(ஆங்கிலப்பட இசை மாதிரியே)


பி.சி.ஸ்ரீராம் கேமராவை ஆட்டுகிறார் ஆட்டுகிறார் படம் முழுக்க ஆட்டிக்கொண்டே இருக்கிறது. பார்க்கும் நமக்கு தலையே வலிக்கும் அளவுக்கு ஆட்டுகிறார். கொஞ்சம் ஆட்டலை குறைத்திருக்கலாம். பேய் படமென்றால் கேமராவை ஆட்டி ஆட்டி ஓட்டி ஓட்டி ஓடி ஓடி படமெடுக்க வேண்டுமென யாரோ தப்பாக சொல்லிக் கொடுத்திருக்கலாம். கேமரா கோணங்கள் அருமை. குறையே சொல்ல முடியாது. கலர் கான்டிராஸ்ட்டும் மிக அருமை அதிலும் அந்த பிளாஷ்பேக்கில் வரும் கலர் அப்படியே 1975களின் நிறம். (இது போன்ற நிறமாதிரியை கடைசியாக வந்த இன்டியானா ஜோன்ஸ் படத்தில் காணலாம் அதுவும் அந்த காலகட்டத்தில் நிகழும் கதையே). படம் முழுக்க முழுக்க டிஜிட்டலில் படமாக்கப்பட்டுள்ளதாம். அழகு.


இதுதவிர படத்தின் மிகப்பெரிய பலம் மற்றும் பலவீனம் மாதவன். முதலில் இப்படி ஒரு பாத்திரத்தில் நடிக்க முன்வந்தமைக்கே அவருக்கு ஒரு ஷொட்டு. ஆனால் படம் முழுக்க சீரியஸ் காட்சிகளிலும் அதே பப்ளி முகத்தோடு வருவது சீரியஸ் காட்சிகளையும் 'சிரி'யஸ் காட்சி ஆக்கிவிடுகிறது. அவர் ஆவியிடம் படும்பாட்டைப்பார்த்து நமக்கு கவலை வருவதற்கு பதிலாக சிரிப்பு வந்து தொலைக்கிறது. படத்தின் ஹீரோயின் யாரென தெரிவதில்லை. சிக்கன் 69 பற்றியெல்லாம் பேச வைத்திருக்கிறார்கள். நல்ல நடித்துக்காட்டவேண்டிய பாத்திரம். நடிக்க மட்டுமே செய்திருக்கிறது. படம் பிடிக்காதவர்களுக்காக அட்லீஸ்ட் ரெண்டு பிட்டாவது இணைத்திருக்கலாம்.


படம் நெடுக நிறைய மெகாசீரியல் நடிகர்கள். டிவிசீரியல் பார்க்கும் உணர்வு. படம் முழுக்க லட்சக்கணக்கில் மன்னிக்கவும் கோடிக்கணக்கில் லாஜிக் ஓட்டைகள். நல்ல வேளை சென்றவாரம்தான் முடிவெட்டியிருந்தேன் இல்லாவிட்டால் காதில் பூவைக்க சிரமமாய் இருந்திருக்கும். காதில் பூந்தோட்டமே வைத்து அதுக்கு கேப்டனை காவலுக்கு வைக்கின்றனர்.


காதலிக்க நேரமில்லை படத்தில் நாகேஷ் , பாலையாவிற்கு ஒரு திகில் பட கதை சொல்லுவார். யாராலும் அத்தனை எளிதில் மறந்துவிட முடியாத காட்சி அது. அந்த கதை கேட்கும் பாலையாவைத்தவிர படம் பார்க்கும் யாருக்குமே அந்த கதையால் பயமோ நடுக்கமோ வராது. நகைப்புதான் வரும். அப்படி ஒரு திரைக்கதை.


படத்தின் நல்லதே இல்லையா? எல்லோரும் படம் அருமை என்கிறார்களே என்று நீங்கள் கேட்கக்கூடும். இருக்கிறது . கடைசியாக வெளியான உருவம் படத்திற்கு பிறகு குடும்பத்தோடு கண்டுரசிக்க(?) ஒரு ''குடும்பப்பேய்படம்'' வரவேயில்லை. இதைவிட வேறு என்ன வேண்டும் படத்தின் வெற்றிக்கு. அதிலும் சுத்தியலால் ஒரு குடும்பத்தையே அடித்துக்கொல்லும் அற்புதக்காட்சிகள் நிறைந்தபடம். அதுதவிர மைடியர் லிசா,13ஆம் நம்பர் வீடு,நாளைய மனிதன்,உருவம்,ராசாத்தி வரும்நாள், ஈவில் டெட் 12345 ( பலர் டெக்கில் பார்த்திருக்கக்கூடும்), இப்படிப்பட்ட படங்கள் பார்த்த ஒரு தலைமுறைக்கு இப்படிப்பட்ட படங்களே தற்காலத்தில் வருவதில்லையே என்கிற ஏக்கமும் காரணமாய் இருக்கலாம்.

பேய்பட ரசிகர்களுக்கு இந்த படம் பிடிக்குமா என்றால் கேள்விக்குறிதான். ஆனால் குடும்பத்தோடு மெகாசீரியல் பார்க்க பிடிக்கும் குடும்பஸ்தர்களுக்கு கட்டாயம் இந்தப் படம் பிடிக்கும். பேய்படங்கள் பார்த்து வெகுநாட்களாகிவிட்டதாலும் அந்த GENREல் அதிகம் படங்கள் தமிழில் வெளிவராததாலும் சர்க்கரை இல்லாத ஊருக்கு இலுப்பைபூ சர்க்கரை.


மக்களை பயமுருத்துவது என முடிவெடுத்து படம் முழுக்க நிறைய பார்த்து பார்த்து உழைத்திருப்பதும் , திட்டமிடலும் தெரிந்தாலும் , ஏனோ ரங்கராட்டினத்தின் அந்த ஒரு விநாடி சிலிர்ப்பைத் தர தவறிவிட்டதாகவே கருதுகிறேன். மெகாசீரியலாக(?) வந்த மர்மதேசம் தொடர் இதைவிட ஆயிரம் மடங்கு சிலிர்ப்பை உண்டாக்கியதாய் கருதுகிறேன்.

பகுத்தறிவு மற்றும் வியாக்கியானத்தை தவிர்த்து விட்டு ஒரு இரண்டு மணிநேரம் தன்னை மறந்து மகிழ்ச்சியாய் இருக்க நிச்சயம் இந்த படம் உதவும். முதல் முறை மட்டும் யாவருக்கும் நலமாக.