Pages

20 October 2009

கொலைகாரன் நினைவுகள்


கொலைகாரன் நினைவுகள்

ஒரு புலி ஊருக்குள்ள புகுந்துகிட்டு மனுசங்களையெல்லாம் திங்க ஆரம்பிச்சுது. எப்படியாவது அதை புடிக்கணும்னு நம்ம தமிழ்நாடு காவல்துறை,ஸ்காட்லான்ட் யார்டு, எப்.பி.ஐ (அமெரிக்கா போலீஸ்) மூணு படைகள் காட்டுக்குள்ள போச்சு. ஸ்காட்லான்ட் யார்ட் எவ்ளவோ டிரைபண்ணியும் அந்த புலிய புடிக்க முடியலனு திரும்பி வந்துட்டாங்க. எப்.பி.ஐ ஒரு வாரம் கழிச்சு திரும்பி வந்து நாங்க சாட்டிலைட் அனுப்பிருக்கோம், விரைவில் அதுல பாத்துட்டு சொல்லுவோம் அது வரைக்கும் ஊருக்குள்ள அழிச்சாட்டியம் பண்றோம்னு திரும்பிட்டாங்க. ஒரு மாசம் ஆச்சு நம்ம ஊரு போலீஸ காணோம். ரெண்டு மாசம் ஆச்சு ம்ஹூம் காணோம்.. ஆஹா புலி நம்ம போலீஸ்ங்கள சாவடிச்சிருச்சோனு நினைச்சு ஊர்க்காரங்க பாசத்தோட காட்டுக்குள்ள போலீஸ தேடிட்டு போனாங்க!

இருட்டான காட்டுக்குள்ள முரட்டுத்தனமா தேடி அலைஞ்சாங்க! கடைசியா ஒரு குகைக்குள்ளருந்து ஏதோ சத்தம் வருதேனு .. உள்ள நுழைஞ்சு பார்த்தா ஒரு கரடிக்குட்டிய தலைகீழா கட்டித்தொங்க விட்டு நம்ம ஊரு போலீஸ் நொங்கெடுத்துகிட்டுருந்தாங்க! இன்னும் கிட்டப்போய் பார்த்தா
‘’நான்தான் புலினு ஒத்துக்க.. நான்தான் புலினு ஒத்துக்க’’ கைல ஒரு லத்திய வச்சுக்கிட்டு , கரடிய நிர்வாணமா கட்டித்தொங்கவிட்டு அடிச்சிகிட்டுருந்தாங்க!

ரொம்ப பழைய ஜோக்கு.. உங்களுக்கு சிரிப்பு வந்திருந்தாலும் வராவில்லையென்றாலும் இதற்குள் இருக்கும் பிரச்சனை மிகவும் கொடுமையானது. வன்முறை நிறைந்தது. உலகெங்கும் வல்லரசு நாடுகள் பலதும் தங்களுடைய மேலதிகாரத்தை காட்டுவதில் துவங்கி லோக்கல் கான்ஸ்டபிள் வரைக்கும் இந்தியா மட்டுமல்ல உலகம் முழுக்கவே இது போன்ற வன்முறைகள் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. யாரோ செய்த தவறுக்காக தண்டனை அனுபவிப்பது மிக மிக கொடுமையானது. அது பள்ளிக்கூடத்தில் நடந்தாலும் சரி , யாரோ செய்த புரட்சிக்காக லட்சக்கணக்கான மக்களை அகதிகளாக முகாம்களில் அடைத்து கொடுமைப்படுத்தி தண்டித்தாலும் சரி.. வன்முறை ஒன்றுதான் . அதற்கு ஸ்கேல் கிடையாது.

அந்த ஊரில் ஒரு அழகான இளம் பெண் கொல்லப்படுகிறாள். அவளது வாயில் மார்க்கச்சையால் கட்டப்பட்டிருக்கிறது. முகம் அவளுடைய உள்ளாடையால் மூடப்பட்டு பின்கைகள் கட்டப்பட்ட நிலையில் பிணமாய் கிடக்கிறாள். அதை விசாரணை செய்ய இரண்டு லூசுத்தனமான போலீஸ்காரர்கள் வருகின்றனர்.

MEMORIES OF MURDERER திரைப்படம் இப்படித்தான் துவங்குகிறது. கொரிய தேசத்தின் ஒரு சிறிய நகரம் ஜியுன்ஜி. 1986 கொரியா சர்வாதிகாரத்தின் பிடியில் இருந்தது. அந்த ஊரில் தொடர்ச்சியாய் இரண்டு கொலைகள். இருவரும் இளம் பெண்கள். கொலை செய்யப்பட்ட விதம் ஒரே மாதியானவை. முட்டாள் போலீஸ் காரர்கள் கிடைப்பவர்கள் மீதெல்லாம் சந்தேகப்பட்டு அடித்து துவைத்து அவர்கள்தான் அந்த கொலைகளை செய்ததாக ஒப்புக்கொள்ள செய்ய முயல்கின்றனர். பார்ப்பவர் மீதெல்லாம் சந்தேகம். அந்த ஊருக்கு புதிதாய் வரும் இன்ஸ்பெக்டர் மீதே சந்தேகம் கொண்டு அவனையும் அடிக்கின்றனர். பின்னர் அவன் இவர்களோடு பணியாற்ற வந்தவன் என்பதை அறிந்து கொண்டு மன்னிப்பு கேட்கின்றனர். அந்த புதியவன் கொரியாவின் தலைநகரிலிருந்து வந்தவன். நிறைய படித்தவன். அமைதியானவன். சிந்தனையாளன். அந்த கொலைகளை வேறு பாணியில் ஆராய்கிறான். அதற்கு நடுவில் மூன்றாவது ஒரு பெண் கொல்லப்படுகிறாள். குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டிய நிர்பந்தம். இவர்களுடைய விசாரணை மேலும் முடுக்கி விடப்படுகிறது . இம்முறை மேலும் பல அப்பாவிகள் அதிக வன்முறை! இறுதியில் அந்த கொலைகாரன் பிடிபட்டானா? அப்பாவிகளின் நிலை என்ன? போலீஸ்காரர்கள் என்ன ஆனார்கள் என்பது கதை!.

மிகச்சாதாரண துப்பறியும் கதைதான். திரைக்கதை! பிரில்லியண்ட். படம் அகிரா குராசோவாவின் ஹிட்டன் போர்ட்ரஸ் திரைப்படத்தை போல படத்தின் முக்கியமில்லாத அல்லது ஒரு சாதாரண பாத்திரத்தின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கிறது. படத்தில் வருகிற லூசு போலீஸ் அவன்தான் படம் முழுக்க நம்மை அழைத்துச் செல்கிறான். படத்தின் நாயகனோ கொலைகாரனோ படத்தின் சாதாரண வழிப்போக்கர்களாகவே இருக்கின்றனர். அது தவிர படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை எங்கும் குறையாத நகைச்சுவை வயிறை புண்ணாக்குகிறது. பிளாக் காமெடி வகையாக இருக்கும் என்றே நினைக்கிறேன். பல இடங்களில் அப்பாவிகளை துன்புறுத்தி அவர்கள்தான் கொலைகாரன் என ஒப்புக்கொள்ள வைக்கின்ற காட்சிகள் அனைத்துமே நகைச்சுவையாக காட்டப்படுகிறது. ஆனால் அதன் பின்னால் ஒளிந்திருக்கும் வன்முறை அபரிமிதமானது. இறுதிவரை அந்த கொலைகாரனின் முகத்தை காட்டாமல் , படம் முழுக்க கொலை மற்றும் பிணங்கள் பற்றிய பிரக்ஞையே இல்லாமல் , போலீஸ் காரர்களையும் அப்பாவிகளையும் குறித்தே கவலையுறவும் யோசிக்கவும் வைத்துள்ளனர்.

படத்தின் இயக்குனர் ஜூன் ஹோ போங்கின் பிற படமான தி ஹோஸ்ட் ( தமிழிலும் வெளியாகி இருந்தது ) படத்திலும் சரி இந்த திரைப்படத்திலும் சரி! ஒரு பெரிய பிரச்சனையை எடுத்துக்கொண்டு அதிலிருந்து விலகி உணர்வுகளுக்குள் ஊடுருவிச்செல்கிறது திரைக்கதை.

படத்தின் மிகமுக்கிய அம்சங்கள் கேமரா மற்றும் ஒலிப்பதிவு. அபாரம். மழைக்கால காட்சிகளில் பொதுவாக இஸ்ஸ் என்கிற ஒலி மட்டுமே கேட்பதாய் படங்களில் அமையும் , ஆனால் கொலை நிகழும் மழைக்கால இரவுகளின் ஒவ்வொரு சின்ன சின்ன சப்தங்களும் மிக அருமையாய் பதிவாகியுள்ளது. குடைகளின் மேல் விழும் தடதட மழை சத்தம் முதல் மழையில் நனையும் காகிததின் சத்தம் வரை அனைத்தும் பர்பெக்ட். முதல் காட்சியில் மஞ்சளாய் துவங்கும் காட்சிகள் பச்சை சிகப்பு கறுப்பு என காட்சிகளுக்கு ஏற்றாற் போல நிறம் மாறுவது ஏதேச்சையானதாய் தெரியவில்லை.

படத்தின் நாயகன் அல்லது முக்கிய பாத்திரத்தில் சாங் காவ் ஹோ வின் நடிப்பு படத்தின் மிகபெரிய பலம். அப்பாவியா , வில்லனா , பைத்தியமா , முட்டாளா என புரிந்து கொள்ள முடியாத ஒரு போலீஸ் பாத்திரத்தை அருமையாய் செய்திருக்கிறார்.
படத்தின் இசை உறுத்தலில்லாமல் , கொலைக்காட்சிகளில் பதறவைத்து , வன்முறையில் மனதை சிதறடிக்கிறது.

உலக அளவில் பல விருதுகளை பெற்ற இந்த திரைப்படம் வெளியான ஆண்டு 2003. வாய்ப்புக்கிடைத்தால் அனைவரும் கட்டாயம் பார்க்கலாம்.