Pages

22 December 2009

ராஜிவ் கொலையும் சில மனிதர்களும்!







ராஜிவ் கொலையும் சில மனிதர்களும்!
உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய மரணங்களின் பட்டியல் தயாரானால் அதில் மிக முக்கியமான இடம் ராஜிவ் காந்தியின் கொலைக்கும் இருக்கும். ஒரு கொடூர மரணம். இந்தியாவிற்கே புதிதாய் மனிதவெடிகுண்டு தாக்குதல்! பலியானவர் முன்னாள் பிரதமர். அடுத்தது என்ன? ஒட்டுமொத்த இந்தியாவும் காத்திருந்தது. அதன் தொடர்ச்சியாய் நூற்றுக்கணக்கில் கதைகள்,கற்பிதங்கள் சில புனைவுகள் கொஞ்சம் உண்மைகள். கொலை முடித்து சில நாட்களுக்குள் செய்தது விடுதலைப்புலிகள்தான் என்று அனைவருக்கும் உறுதியாகத் தெரிந்து விட்டது.
ஆனால் ஒற்றை வழக்கு.இந்த கொலையில் அரசியல் உள்நோக்கம் உண்டா? யாரெல்லாம் செய்தார்கள்? எப்படி முடிந்தது? என்ன திட்டம்? எத்தனை நாள்? எத்தனை பேர்? ஸ்காட்லாந்து யார்டுக்கே சவால்விடும் தமிழக காவல்துறையை மீறி எப்படி? ரா அமைப்பு என்ன புடுங்கியது? ஒரு சின்ன தகவல் கூடவா இல்லை? தமிழகம் என்னும் அமைதிப்பூங்காவில் எப்படி சாத்தியமாக்கினர்?
அடுக்கடுக்காய் அலைகளைப் போல் தொடரும் கேள்விகளுக்கு வழக்கு முடிந்து இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போதும் ஆளுக்கொரு கண்ணோட்டம், பார்வைகள். நான்கு பேருக்கு தூக்கு பலருக்கு ஆயுள் தண்டனை , சிலர் விடுதலையாகி இருந்தாலும் அந்த அதிர்ச்சி தீராமல் அந்தக் கொலையின் மர்மமான முடிச்சுகள் அவிழ்க்கப்படாமல் பலருக்கும் புதிராகத்தான் இருக்கிறது. அந்த புதிரின் சில முடிச்சுக்களை ஓரளவு அவிழ்க்கிறது ராஜிவ் கொலை வழக்கு என்னும் நூல்.
ரஹோத்தமன். இந்நூலின் ஆசிரியர். முன்னாள் சிபிஐ அதிகாரி. ராஜிவ் கொலைவழக்கு என்றாலே என் ஊரான கோவையைச் சேர்ந்த கார்த்திகேயன்தான் கண்முன் வருவார். அவருக்கு அடுத்த நிலையில் பணியாற்றிய இன்னொருவர். இவர் எழுதிய ராஜிவ்காந்தி கொலைவழக்கு புத்தகத்தை சென்ற வாரத்தில் கிழக்குப்பதிப்பகத்தினர் வெளியிட்டுள்ளனர். இப்போது என்ன அவசியம் இப்படி ஒரு புத்தகத்திற்கு? அதற்கான விடையும் புத்தகத்திலேயே இருக்கிறது. விடுதலைப்புலிகள் அமைப்பு இப்போது இல்லை. பிரபாகரன் இல்லை. புலிகள் இல்லை. வழக்கு முற்றிலுமாக முடிந்து விட்டது. இனி தைரியமாகப் பேசலாம். இந்தியாவின் ரா அமைப்பின் மட்டமான செயல்பாடுகள் குறித்துப் பேசலாம். தமிழ்நாடு காவல்துறையின் தவறான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கூறலாம். இந்திய அரசியல், நாட்டின் மிகமுக்கிய வழக்கில் செய்யக்கூடிய இடையூறுகள் குறித்துப் பேசலாம். புலிகளின் ஒருங்கிணைந்த திட்டமிடப்பட்ட அந்த கொலை எப்படி நிகழ்த்தப்பட்டது என்பது குறித்துப் பேசலாம். புலிகளின் உளவு அமைப்பு இந்தியாவின் ரா வைக்காட்டிலும் உயர்ந்தது என சுட்டிக்காட்டலாம்.
பேசியிருக்கிறார் ரஹோத்தமன். புலிகள் ஏன் ராஜிவ்காந்தியைக்கொன்றனர் என்பது அனைவருக்குமே தெரிந்திருக்கும். அதைப்பற்றி அதிகம் பேசாமல் கொலைக்குப் பிறகான அரசியல்,விசாரணை என எழுதப்பட்டிருக்கிறது இந்த புத்தகம். ராஜேஷ்குமார்,சுபா,பட்டுக்கோட்டை பிரபாகர்களின் மர்ம நாவல்களுக்கு சற்றும் சளைக்காத புத்தகம். ஒரு விறுவிறுப்பான நாவலைப்போல அத்தனை மனிதர்களுக்குமான குணாதியங்களும் கண் முன்னே! கையிலெடுத்தால் கடைசிவரை வைக்கமுடியாத 225 பக்கங்கள். புத்தகம் முழுக்க ஒரு மென்மையான காதல் இருக்கிறது.  ஆக்சன் சென்டிமென்ட் என எல்லாம் கலந்த வித்தியாசமான புலன்விசாரனை நூல் இது.
ஒரு போட்டோகிராபரின்(ஹரிபாபு) சின்ன கேமராவில் தொடங்கும் விசாரணை பெங்களூருவில் சிவராசன் உட்பட சிலருடைய சைனட் மரணங்கள் வரை நீடிக்கிறது. இந்தக்கொலைக்கு உடந்தையாக இருந்த பலருடைய வாக்குமூலங்களையும் , அவர்கள் தந்த மற்றும் கைப்பற்றப்பட்ட ஆதாரங்களையும் கடிதங்களையும் புத்தகம் முழுக்க தந்திருக்கின்றனர். புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. தணுவின் பச்சை சுடிதாரும் தலையிலிருந்த கனகாம்பரமும் அத்தனை எளிதில் மறந்து விட முடியாது. அதற்கான காரணங்களாக நளினி கொடுத்த வாக்குமூலம் கூட அதிர்ச்சியை உண்டாக்குகிறது. புத்தகம் முழுக்க ஆசிரியர் ஆணித்தரமாக சொல்லும் புலிகளின் அர்ப்பணிப்பு அவர்களுடைய சாதுர்யம் திட்டமிடல் திகைக்க வைக்கிறது. ஆனால் அவர்களுடைய சின்னசின்ன தவறுகள் , விட்டுச்செல்லும் தடயங்கள் பின்னர் எப்படியெல்லாம் அவர்களை சிக்க வைத்தது என்பதை படிக்கும் போது முதுகுத்தண்டில் ஜில்லிர்ப்பு.
வைகோவின் சகோதர்ர் ரவிசந்திரனை புத்தகத்தின் இரண்டு மூன்று இடங்களில் குற்றவாளியாக(சீனிவாசய்யா) சந்தேகிக்கிறார். அந்த வெள்ளைசட்டை-பேண்ட் சீனிவசய்யா யார் என்று வழக்கு முடிந்த பின்னும் தெரியாமல் போயிருக்கிறது. திமுகவையும் கலைஞரையும் கூட விட்டுவைக்கவில்லை. எல்லோர் மேலும் சந்தேகம் இருந்தாலும் அரசியல் அதிகாரத்தில் இருக்கும் யாரையும் அத்தனை எளிதில் விசாரித்துவிட முடியாது என்கிறார் ஆசிரியர். இந்த விசாரணையின் மூத்த அதிகாரி கார்த்திகேயன் மீதும் தன்னுடைய அதிருப்தியை புத்தகம் முழுக்கவே சூசகமாகவும் நேரடியாகவும் தெரிவிக்கிறார். காதலுக்காக இந்தக் கொலையின் அத்தனை செயல்பாடுகளையும் முன்னிறுத்தி செய்த நளினியின் மீது ஒரு மிதமான பார்வையை , அனுதாபத்தை வாசகனிடம் உண்டுபண்ணுகிறார். நமக்கும் படித்து முடிக்கையில் நளினியின் மீது அனுதாபம் வராமல் இல்லை.
விசாரணையில் பல புலிகள் சயனைட் அருந்தி மரணமடைந்தனர். அதை அப்போது அதிகார மையத்தில் இருந்தவர்கள் நினைத்திருந்தால் தடுத்திருக்க முடியும். சிவராசன் தற்கொலையின் போதுகூட அந்த அமைப்புகளின் மெத்தனமே பலருடைய மரணத்திற்கு காரணமாக இருந்தது என குற்றஞ்சாட்டுகிறார். எம்.கே.நாராயணனையும் விட்டு வைக்கவில்லை , மே22 கொலை முடிந்த பின் நடந்த விசாரணை குறித்த கூட்டத்தில் தன்னிடம் கொலை நடந்த போது பதிவான வீடியோ கேசட் ஆதாரம் இருப்பதாக கூறியதாகவும் ஆனால் இதுவரை அதைப்பற்றி பேசக்கூட இல்லை என எழுதியுள்ளார். அந்த கேசட் கிடைத்திருந்தால் இந்த விசாரணை வேறு மாதிரி இருந்திருக்கும் எனவும் அனல் பறக்கிறார்.
இந்த வழக்கில் சந்திராசாமிக்கோ சுப்ரமணியசாமிக்கோ ஒரு வெங்காயத்தொடர்பும் இல்லை என ஆணித்தரமாக மறுக்கிறார். புலிகளின் வீழ்ச்சிக்கு மிகமுக்கிய காரணமான இந்த கொலை குறித்து இது வரை வெளியான அத்தனை புத்தகங்களையும் அத்தனை அறிக்கைகளையும் பார்வைகளையும் மாற்றி போடுகிறது இந்த புத்தகம். இது குறித்து அறிந்து கொள்ளும் ஆர்வமிருக்கும் அனைவரும் கட்டாயம் படிக்கலாம். இப்படியொரு வேகமான நடையில் நிச்சயம் ரகோத்தமன் இந்த புத்தகத்தை எழுதி கொடுத்திருக்க முடியாது. எழுத்து நடை புத்தகத்தின் சுவாரஸ்யம் கூட்டுகிறது. எழுதியவர் அல்லது எடிட்டியவர் அருமையாக செய்திருக்கிறார்.
புத்தகத்தில் நுண்ணரசியல்கள் எதுவும் தென்படவில்லை. தெரிந்திருந்தால் அதை சுட்டிக்காட்டலாம். மற்றபடி நல்ல புத்தகம் பட் என தொடங்கி சட் என படித்து முடித்து விடலாம். இந்த வருட புத்தக கண்காட்சியில் பரபரப்பை கிளப்ப போகும் புத்தகமாக இது கட்டாயம் இருக்கும்! இதன் விலை – ரூ.100 வெளியீடு – கிழக்கு பதிப்பகம்