ஆ... அவதார்!

>> 26 December 2009


உங்களுக்கு ராமாயணம்,மகாபாரதம்,விக்ரமாதித்த வேதாளக் கதைகள் இப்போதும் பிடிக்குமா? விட்டாலாச்சார்யாவின் திரைப்படங்கள் பிடிக்குமா? கதை புரியாவிட்டாலும் ஸ்டார் வார்ஸ்? மிரட்டும் டைனோசர்களின் ஜூராசிக் பார்க்? லார்ட் ஆப் தி ரிங்ஸ்? ஹாரிபார்ட்டரின் கதையோ திரைப்படமோ பிடிக்குமா? ஏன்?

மேற்சொன்ன உதாரணங்கள் அனைத்திலுமே தொக்கி நிற்கும் பொதுவான அம்சம் ஒன்றுள்ளது. அனைத்துமே நாம் பார்த்திராத புதிய உலகை நமக்கு அறிமுகப்படுத்துபவை. வெறும் அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அந்த உலகின் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான குணாதிசயங்கள் தொடங்கி இடம் பொருள் இருப்பு பரிமாண பரிணாமங்களின் நீட்சியாய் தொடர்பவை. அப்படிப்பட்ட புதிய உலகினை அச்சு அசலாய் நமக்கு அறிமுகப்படுத்துகிற எந்த படைப்பும் காலத்தால் அழிக்க முடியாதவை. ஒரு படைப்பு நம்முடைய வாழ்வியலோடு இணைந்ததாகவோ அல்லது நமக்கு துளியும் அறிந்திராத உலகை காட்டுபவையாகவோ இருந்தால் அது உலகெங்கும் கொண்டாடப்படும். அது உலகின் எந்த மூலையிலும் இருக்கும் மிகச்சாதாரண மனிதனும் ஏற்றுக்கொள்ளும்,ரசிக்கும்,சிரிக்கும்,சிலிர்க்கும் பிரமாண்டமான உலக சினிமா.

கடவுளுக்கும் படைப்பாளிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெயர்களே காரணங்களைச் சொல்லிவிடும். இதோ இன்னும் ஒரு கடவுள்! அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம்! இறுதியாய் முடிவுக்கு வந்திருக்கிறது.
எந்த ஒரு படைப்பாளியும் தன் வாழ்வின் ஆகச்சிறந்த படைப்பை கொடுத்துவிட்ட பிறகு அதற்கு அடுத்த படைப்பு அதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கால அளவு பிரமிக்க வைக்கிறது. உலகிலேயே ஒரு சாதாரண திரைக்கதையை படமாக்கத் தேவையான தொழில்நுட்பத்திற்காக காத்திருந்து படமாக்கிய இயக்குனர் ஜே.கேமரூனாகத்தான் இருக்கவேண்டும்.

1994ல் தோன்றிய ஐடியா இது. அதை அப்போதே எழுதி வைத்து அது பின்னாளில் இணையத்திலும் உலவியது. ஆனால் அப்போதைய தொழில்நுட்பம் இந்த கதைக்கு ஒத்துவராது எனக்காத்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் தொடர்ந்தும் வெளியான லார்ட் ஆப் தி ரிங்ஸின் ‘கோல்லம்’ என்னும் கதாபாத்திரம் முழுக்க 3டி அனிமேஷனால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைபடத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரமும் , இப்போது இந்த கதையை சாத்தியமாக்க இயலும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உடனே வேலையில் குதித்து விட்டார் கேமரூன். இந்த படத்திற்கான கரு ‘எட்கர் பரோ என்னும் எழுத்தாளரின் ஜான்கார்டர்’ என்னும் தொடர் கதையிலிருந்து உதித்தது. அதில் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஒரு இனம் அதன் மீது போர் தொடுக்கும் மனிதர்கள் , மனிதர்களில் ஒருவன் அந்த இனத்தைப்போல வேடமிட்டு செல்வது என செல்கிறது அந்த கதைகள். அதையே இப்போதைய தொழில்நுட்பத்துடன் புதிய உலகைப்படைத்து செய்யமுடியுமா என யோசித்தபோது உருவானது அவதாரின் கதை. கதை ரெடி அடுத்து என்ன?

இப்படி ஒரு படம் எடுப்பதாக இருந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்? முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம். கேமரூன் அமெரிக்காவின் பெரிய பல்கலைகழகத்தின் மொழிகள் ஆராய்ச்சித்துறைத் தலைவரை பிடித்தார். ‘எனக்கு ஒரு மொழி வேண்டும், உலகில் யாருமே பேசியிருக்காத , அறியப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய வார்த்தைகள் இருக்க வேண்டும், உச்சரிப்பு இருக்க வேண்டும், இலக்கணம், பாடல்கள், பிரார்த்தனைகள், மந்திரங்கள், பெயர்கள் எல்லாமே இருக்க வேண்டும்! அந்த மொழி சார்ந்த அல்லது அவர்கள் பண்பாடு சார்ந்த ஒரு நாகரீகமும் வேண்டும் , ஆறுமாதம்தான் டைம்!’

ஆசிரியரும் இயக்குனரும் ஆராய்ச்சியில் இறங்கினர். நியூசிலாந்தின் பழங்குடியினரின் மொழியில் கொஞ்சம் எத்தியோப்பியாவின் மலைவாழ்மக்களின் மொழிகளில் கொஞ்சம் இரண்டையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு அதிலிருந்து புதிய மொழியை உருவாக்கினர். நவ்வி என்றொரு இனமும் அதற்கென பிரத்யேக மொழியும் , ஒரு மலை சார்ந்த குடிகளின் நாகரீகமும் உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்த மலை எப்படி இருக்கப்போகிறது , அங்கே என்னவெல்லாம் வேண்டும் , அதை எப்படி சாத்தியமாக்குவது , இப்படி ஒரு கிரகம் சாத்தியமா என பலதும் ஆராயத்தொடங்கினார். 4.4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் , (பூமியிலிருந்து மிக அருகில் இருக்கும் பிரபஞ்சம்) ___ கேலக்ஸியில் ஒரு நட்சத்திர கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் சின்ன நிலாதான் இந்த கதைக்கான களம் என முடிவு செய்து கொண்டார். அதற்கான காரணம் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதனால் அத்தனை தூரம்தான் பயணிக்கவும் போர் தொடுக்கவும் முடியும் என்பது அவருடைய அனுமானம். இப்படி திரைப்படத்தின் ஒவ்வொரு விசயங்களுக்குமான மெனக்கெடல் நம்மை பிரமிக்க வைக்கிறது.



அந்த மக்களின் நடை உடை பாவனை என மீண்டும் ஆராய்ச்சி , அவர்களுடைய உருவம் அதற்கு ஒரு ஆராய்ச்சி! அதில் சிக்கியவர் நம்முடைய சிவபெருமான். நீல நிறமும் நீண்ட முகமும் சடை முடியும் குட்டியூண்டு உடை அகண்ட விழிகள் என நீளும் அவருடைய முகமும் உடலும் அவதாருக்கு மிகச்சரியான பொருத்தமாக இருந்திருக்கிறது. தூக்கிப்போடு இந்த மூஞ்ச என மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. அவதார் என்கிற பெயரே இந்துக்கடவுளான கிருஷ்ணரின் பாதிப்பில்தான் உருவாக்கப்பட்டதாக டைம் இதழின் பேட்டிக்கு 2007ல் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போல ஹீரோவுக்கு திருப்பதி ஏழுமலையானைப்போல நடுமண்டையில் காவிநிறத்தில் திருநாமம் போட்டிருக்கிறார்.

கதை? வேற்றுகிரகத்திலிருந்து வரும் விநோத ஜந்துக்கள் மனித குலத்தை அழிக்க நினைக்கும். அதை எதிர்த்து போராடும் அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி கடைசி போர்வீரன் வரை தன் உயிரையும் துட்சமாக மதித்து அந்த ஜந்துக்களை வெற்றிகொள்வான். இதுதான் வேற்று கிரகவாசிகள் குறித்த எல்லா அறிவியல் புனைகதைகளும் சொல்லுகிற செய்தி. அவதார் அப்படியே ஆப்போசிட்!

விலை உயர்ந்த எரிபொருளுக்காக இன்னொரு கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் மீது போர் தொடுக்கும் மனிதர்கள். அதற்கென பிரயோகிக்கும் இத்யாதிகள்.. மேலதிக இத்யாதிகள் என கதை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்ககூடும். அதில் ஒரு காதல். அனல் பறக்கும் சேஸிங் மற்றும் ஆக்சன், கொஞ்சமே கொஞ்சம் சென்டிமென்ட் , மனிதர்களின் வில்லத்தனம், நிறைய அறிவியல், என படத்தின் கதைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் நமக்கு ஏனோ அம்புலிமாமாவில் படித்த கதை போலவே ஃபீலிங்ஸ். லேசாக தூக்கமும்!

ஆனால் அந்த கதைக்கு பின்னாலிருக்கும் அரசியலும் , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்பும் நுண்ணரசியலாக அல்ல , வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் பெட்ரோல் மீதான அமெரிக்காவின் கவனம், அதைத்தொடர்ந்த போர்கள் எத்தனை அப்பாவி மக்களின் சாவுகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சீரழிவுக்கும் காரணமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். வளர்ந்த நாடுகளின் சுற்றுசூழல் கொள்கைகள் எப்படி நம்முடைய புவியை நாசாமாக்குகின்றன என்பதும் நமக்குத்தெரியும். அந்த பிரச்சனைகளை மிக தைரியமாக ஆனால் சாதுரியமாக முன்வைக்கிறது அவதார். எப்போது வல்லரசுகள் சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்தாலும் அல்லது எங்கு போர் முற்றினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்னும் கருத்தை கடுமையாக முன்மொழிகிறது இத்திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் முதன் முறையாக மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தியுள்ளார். அனிமேஷன் திரைப்படங்களில் நிஜ நடிகர்கள் உடலில் வயர்களுடன் நடிப்பார்கள். பின் அவர்களுடைய அசைவுகள் அனிமேசன் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படும். ஆனால் கேமரூனின் தொழில்நுட்பம் வயர்களோடு நடிக்கும்போதே மானிட்டரில் கதாபாத்திரம் எப்படியெல்லாம் அசைகிறது எப்படியெல்லாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது என்பதை பார்த்துவிட முடியும். இது சினிமாவின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தொழில்நுட்பம் என்கின்றனர் வல்லுனர்கள். இது தவிர வால்யூம் என்கிற இன்னொரு தொழில்நுட்பமும் உண்டு. இது நடிகர்களின் முகபாவனைகளை (அனிமேஷனுக்கு நடிப்பவர்கள்) உடனுக்குடன் அவர்களுடைய முகத்தோடு பொறுத்தப்பட்ட சிறிய கேமராக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இது அனிமேஷன் பாத்திரங்களின் அசைவுகள் மற்றும் உணர்ச்சிகளை தெள்ளத்தெளிவாக காட்டக்கூடியது. படத்தின் நடித்தவர்களில் பாதி பேர் நிஜ நடிகர்கள் மீதி எல்லோருமே அனிமேஷனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் படத்தினை பார்க்கும் போது அந்த வேறுபாடுகள் தெரியவில்லை என்பதே உண்மை. இதில் 40% நிஜம் 60% கணினியில் வரைந்த புனைவு என்றால் யாருமே நம்ப மறுப்பார்கள்.

படத்தின் இசை மிரளவைக்கிறது. படம் முழுக்க சில பாடல்கள் வருகிறது. அவை அனைத்துமே நவ்வி மொழியில் பாடப்பட்டதாம்! படம் முழுக்க ஏதோ வித்யாசமான இசை வருகிறதே என அதுகுறித்து ஆராய்ந்தால் அதற்காக எத்னோமியுசிக்காலஜி என இசையில் ஒரு துறை இருக்கிறதாம் அதில் ஆராய்ச்சி செய்து பழங்குடியினரின் இசைக்கருவிகள் மற்றும் இசையை உருவாக்கியுள்ளனர்.

இப்படி கடுமையான உழைப்பு , அற்புதமான தொழில்நுட்பம், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் என எல்லாமிருந்தும் , படம் நம் மனதோடு ஒட்ட மறுக்கிறது. டெர்மினேட்டர் கொடுத்த விறுவிறுப்போ அல்லது டைட்டானிக் கொடுத்த பாதிப்போ இல்லாமல் மொத்தமாக சமயங்களில் கொட்டாவி விட வைக்கிறது. நம்மூர் பாலா எடுத்த நான்கடவுளுக்கு சற்றும் சளைக்காமல் ஒவராய் உழைத்து , எல்லாமே ஓவராய் போயிருக்கிறது. கேமரூன் படங்களுக்கே உண்டான கிரிஸ்ப்னஸ் இல்லை.

படத்தில் பெரிய குறை என்னதான் விறுவிறுப்பு இருந்தாலும் ஏதோ குறைகிறது.. அது படத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகள் குறைந்த காதலா? நமக்கு ஏற்கனவே பரிச்சயமான மசாலா கதையா? அல்லது வேறு ஏதாவது ஒன்றா? எனத்தெரியவில்லை. மற்றபடி குறைச்சலே இல்லாமல் வெறும் அமோக விளைச்சல்தான். டூ மச் அறிவியல் கூட சமயத்தில் கதையின் ஓட்டத்தை பாதிக்குமோ என்னவோ!

இது ஹாலிவுட் சினிமாவின் சரித்திரத்தில் மிகமுக்கிய இடம் வகிக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து அதன் தொழில்நுட்பங்களுக்காக போற்றப்படலாம். ஆனால் படம் – பப்படம். தமிழகத்தில் 2012 அடைந்த வெற்றியைக்கூட எட்டமுடியாது என்றே நினைக்கிறேன்.

சுஜாதா எப்போதோ கற்றதும் பெற்றதுமில் எழுதியது போல் அடுத்த இருபது ஆண்டுகளில் நடிகர்களுக்கான தேவை இருக்காது என்றுதான் தோன்றுகிறது. நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு அடேங்கப்பா என வாய்பிழக்க வைக்கும் படத்தினை எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் உண்டாக்குகிறது. வலுவான கதையாக இருந்திருந்தால் நிஜமாகவே அவதார் சினிமாவை மாற்றக்கூடிய அவதாரமாக இருந்திருக்கும்.

19 கருத்துக்கள்:

நந்தா December 26, 2009 12:47 PM  

Very good post. So Informative. Liked it lot. ஆனால் கொட்டாவி விடற அளவுக்கு எல்லாம் ஒண்ணுமே இல்லையே. ரசித்து பார்க்க முடிந்ததே.

மணிகண்டன் December 26, 2009 1:01 PM  

ஹலோ, உங்களுக்கு ஏதாவது இலக்கிய பத்திரிகைக்கு விமர்சனம் அனுப்ப ஆசை இருந்தா அதை செய்யவேண்டியது தான ? அதை எதுக்கு ப்ளாக்ல பப்ளிஷ் பண்ணறீங்க ? (நான் முழுசா படிச்சேன் ! அந்த தார்மீக உரிமையில் சொல்றேன் )

நல்லா ரிசர்ச் பண்ணி எழுதி இருக்கீங்க. ரெண்டாவது பாராவுல ("இடம் பொருள் இருப்பு பரிமாண பரிணாமங்களின் நீட்சியாய் தொடர்பவை") இதை படிச்சவுடன தொடர்ந்து படிக்கணுமான்னு யோசிச்சிக்கிட்டே படிச்சு முடிச்சுட்டேன். :)

Raja Subramaniam December 26, 2009 1:02 PM  

nalla vimarsanam sagaa

//சுஜாதா எப்போதோ கற்றதும் பெற்றதுமில் எழுதியது போல் அடுத்த இருபது ஆண்டுகளில் நடிகர்களுக்கான தேவை இருக்காது என்றுதான் தோன்றுகிறது.//

இப்போவே தேவை இல்லை என்று தான் தோணுது. நேத்து தான் ஒரு அட்டகாசமான படம் பார்த்தேன் . கந்தகோட்டை இதுக்கு அனிமேஷன் கேரக்டர் வைச்சு படம்எடுக்கலாம்

கே.ரவிஷங்கர் December 26, 2009 1:26 PM  

அதிஷா! “அவதார்” விமர்சனம் நல்லா இருக்கு.இதில் பெண்ணீயம் சற்று காணப்படுகிறது.கவனித்தீர்களா?

உங்கள் எழுத்து நடையும் ஏதோ புது ”அவதார்” எடுத்திருக்கிற்து(!)

பாலாஜி December 26, 2009 1:30 PM  

அறியாத பல விசயங்களை சொன்னது நன்றாக உள்ளது

♠ ராஜு ♠ December 26, 2009 2:01 PM  

ரவிஷங்கர் பின்னூட்டத்தின் கடைசி வரியை 10000000000000000000000000000000000000 முறை ரிப்பிட்டுகிறேன்.

பீர் | Peer December 26, 2009 5:45 PM  

முதல் பத்திக்கு என் பதில் 'பிடிக்காது' என்பதுதான்.
அதன்பிறகும் இங்கு என்ன வேலை? உங்க எழுத்து நடை தான். கடைசி வரி வரை படிக்கவைத்தது.

ஆதிமூலகிருஷ்ணன் December 26, 2009 8:54 PM  

பிரமிப்பு இன்னும் அகலவில்லை.!

Miriyala Balraj December 27, 2009 10:47 AM  

itha ninga thaan ezhuthuningaalaa ... chinna doubt....

கண்ணா.. December 27, 2009 12:45 PM  

//கடவுளுக்கும் படைப்பாளிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெயர்களே காரணங்களைச் சொல்லிவிடும். இதோ இன்னும் ஒரு கடவுள்! அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம்! இறுதியாய் முடிவுக்கு வந்திருக்கிறது. //

எப்பிடிய்யா இப்பிடில்லாம் ...!!!

:)

உங்கள் எழுத்துக்கள் அசத்துகிறது.

ஊர்சுற்றி December 27, 2009 1:16 PM  

ஆ! ன்னு தலைப்பைப் பார்த்ததும், அசந்துபோய் எழுதியிருப்பீங்கன்னு வந்தா, அசந்த தூக்கம், கொட்டாவி ன்னு எழுதியிருக்கீங்களே! ஐயகோ!

கார்த்திKN December 28, 2009 2:05 AM  

நன்றாக இருந்தது .. அருமை.. எங்களையும் கொஞ்சம் கவனிங்க. புதுசா எழுத ஆரமிச்சுடேன்

இராஜ ப்ரியன் December 28, 2009 9:18 AM  

நல்லாயிருக்கு ................

SanjaiGandhi™ December 28, 2009 1:10 PM  

//நாமெல்லாம் என்ன செய்வோம்? முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம்.//

ஆமா.. ஆமா.. பின்ன.. நாமெல்லாம் எவ்ளோ பெரிய ப்ரிட்யூசர்ஸ்? :))

ஏராளமான தகவல்கள் .. கலக்கறிங்க ராசா.. நேத்து தான் நம்மூரு கனகதாராவுல 3டி கண்ணாடி போட்டு பார்த்தேன். மிரட்டலா எடுத்திருக்கார்.

ஆனா ஹீரோ ஹீரோயின் மட்டும் விஜய் நயந்தாரா மாதிரியே நடிச்சிருக்காங்க.. பெரிய பறவைகள்ல பறந்துட்டே சைட் அடிச்சிக்கிறது, மரத்துல நடக்கும் போது தடுமாறும் ஹீரோவை கைப்பிடித்து காப்பாற்றி ஒரு ரொமாண்டிக் லுக்.. இன்னும் இன்னும் :))

கதியால் December 30, 2009 1:11 AM  

நன்றாக அலசியுள்ளீர்கள்..நன்றி...! நிறைய விடயம் அறிந்து கொண்டேன்.
நன்றி...தொடரட்டும் வாழ்த்துக்கள்...!!

அஜீவன்,  January 3, 2010 4:33 PM  

அவதார் குறித்த தகவல்களுக்கு நன்றி. தமிழ் படம் பார்க்கும் சிலருக்கு , இங்கே புதிதில்லை. ஆனால் தொழில் நுட்ப சாதனையோடு கூடிய அருமையான படம். அடுத்த ஒரு இனத்தை அழிக்க நினைப்போருக்கு சாட்டையடி. ( உதாரணத்துக்கு அமெரிக்க ஆக்கிரமிப்புகளாக எடுத்தக் கொள்ளலாம்) பலமானவர்கள் , பலமற்றவர்களை வென்றதாக எடுத்து கதை படைப்பார்கள். ஒற்றுமை - நியாயத்தின் வெற்றியாக காதலும் கனிந்து அளவோடு அரங்கேறியுள்ளது. தூக்கம் வர வேறு காரணம் இருக்கலாம். அது படத்தின் தாக்கமாக முடியாது.

AJeevan January 3, 2010 4:34 PM  

அவதார் குறித்த தகவல்களுக்கு நன்றி. தமிழ் படம் பார்க்கும் சிலருக்கு , இங்கே புதிதில்லை. ஆனால் தொழில் நுட்ப சாதனையோடு கூடிய அருமையான படம். அடுத்த ஒரு இனத்தை அழிக்க நினைப்போருக்கு சாட்டையடி. ( உதாரணத்துக்கு அமெரிக்க ஆக்கிரமிப்புகளாக எடுத்தக் கொள்ளலாம்) பலமானவர்கள் , பலமற்றவர்களை வென்றதாக எடுத்து கதை படைப்பார்கள். ஒற்றுமை - நியாயத்தின் வெற்றியாக காதலும் கனிந்து அளவோடு அரங்கேறியுள்ளது. தூக்கம் வர வேறு காரணம் இருக்கலாம். அது படத்தின் தாக்கமாக முடியாது.

Abi,  February 20, 2010 5:24 PM  

//வேற்றுகிரகத்திலிருந்து வரும் விநோத ஜந்துக்கள் மனித குலத்தை அழிக்க நினைக்கும். அதை எதிர்த்து போராடும் அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி கடைசி போர்வீரன் வரை தன் உயிரையும் துட்சமாக மதித்து அந்த ஜந்துக்களை வெற்றிகொள்வான். இதுதான் வேற்று கிரகவாசிகள் குறித்த எல்லா அறிவியல் புனைகதைகளும் சொல்லுகிற செய்தி. அவதார் அப்படியே ஆப்போசிட்//

படத்தின் கதையைக் கேட்டவுடன் நான் நினைத்ததையேதான் சொல்லியிருக்கிறீர்கள். மனிதர்களின் அட்டுழியங்களையும், வெறிகளையும், பேராசையினையும் முதன்முதலில் வெளிப்படுத்திய "மனிதன்" கமரூன் தான்.

Post a Comment

  © Blogger template Simple n' Sweet by Ourblogtemplates.com 2009

Back to TOP