Pages

26 December 2009

ஆ... அவதார்!


உங்களுக்கு ராமாயணம்,மகாபாரதம்,விக்ரமாதித்த வேதாளக் கதைகள் இப்போதும் பிடிக்குமா? விட்டாலாச்சார்யாவின் திரைப்படங்கள் பிடிக்குமா? கதை புரியாவிட்டாலும் ஸ்டார் வார்ஸ்? மிரட்டும் டைனோசர்களின் ஜூராசிக் பார்க்? லார்ட் ஆப் தி ரிங்ஸ்? ஹாரிபார்ட்டரின் கதையோ திரைப்படமோ பிடிக்குமா? ஏன்?

மேற்சொன்ன உதாரணங்கள் அனைத்திலுமே தொக்கி நிற்கும் பொதுவான அம்சம் ஒன்றுள்ளது. அனைத்துமே நாம் பார்த்திராத புதிய உலகை நமக்கு அறிமுகப்படுத்துபவை. வெறும் அறிமுகத்தோடு நின்றுவிடாமல் அந்த உலகின் ஒவ்வொரு பாத்திரத்திற்குமான குணாதிசயங்கள் தொடங்கி இடம் பொருள் இருப்பு பரிமாண பரிணாமங்களின் நீட்சியாய் தொடர்பவை. அப்படிப்பட்ட புதிய உலகினை அச்சு அசலாய் நமக்கு அறிமுகப்படுத்துகிற எந்த படைப்பும் காலத்தால் அழிக்க முடியாதவை. ஒரு படைப்பு நம்முடைய வாழ்வியலோடு இணைந்ததாகவோ அல்லது நமக்கு துளியும் அறிந்திராத உலகை காட்டுபவையாகவோ இருந்தால் அது உலகெங்கும் கொண்டாடப்படும். அது உலகின் எந்த மூலையிலும் இருக்கும் மிகச்சாதாரண மனிதனும் ஏற்றுக்கொள்ளும்,ரசிக்கும்,சிரிக்கும்,சிலிர்க்கும் பிரமாண்டமான உலக சினிமா.

கடவுளுக்கும் படைப்பாளிக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது. பெயர்களே காரணங்களைச் சொல்லிவிடும். இதோ இன்னும் ஒரு கடவுள்! அல்லது படைப்பாளி ஹாலிவுட்டிலிருந்து. ஏற்கனவே ஏலியனிலிருந்து டைட்டானிக் வரை வாய்பிழக்க வைத்த அதே ஜேம்ஸ் கேமரூன். 12 ஆண்டுகளுக்கு முன் ‘I am the king of the world’ என ஆஸ்கர் மேடை அதிர கர்வமாய் சப்தமிட்ட அதே கேமரூன். டைட்டானிக் கப்பலை காதலுடன் புரட்டிப்போட்டு உலக சினிமாவை அதிர வைத்தவர் , மீண்டும் ‘அவதார்’ மூலம் மீண்டு வந்திருக்கிறார். 12 ஆண்டுத்தவம்! இறுதியாய் முடிவுக்கு வந்திருக்கிறது.
எந்த ஒரு படைப்பாளியும் தன் வாழ்வின் ஆகச்சிறந்த படைப்பை கொடுத்துவிட்ட பிறகு அதற்கு அடுத்த படைப்பு அதைக்காட்டிலும் பல மடங்கு சிறந்ததாக இருக்க வேண்டும் என நினைப்பது இயல்பு. ஆனால் அதற்காக அவர் எடுத்துக்கொண்ட கால அளவு பிரமிக்க வைக்கிறது. உலகிலேயே ஒரு சாதாரண திரைக்கதையை படமாக்கத் தேவையான தொழில்நுட்பத்திற்காக காத்திருந்து படமாக்கிய இயக்குனர் ஜே.கேமரூனாகத்தான் இருக்கவேண்டும்.

1994ல் தோன்றிய ஐடியா இது. அதை அப்போதே எழுதி வைத்து அது பின்னாளில் இணையத்திலும் உலவியது. ஆனால் அப்போதைய தொழில்நுட்பம் இந்த கதைக்கு ஒத்துவராது எனக்காத்திருந்தார். 2000ஆம் ஆண்டுகளின் துவக்கத்திலும் தொடர்ந்தும் வெளியான லார்ட் ஆப் தி ரிங்ஸின் ‘கோல்லம்’ என்னும் கதாபாத்திரம் முழுக்க 3டி அனிமேஷனால் உருவாக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வெளியான பைரேட்ஸ் ஆப் தி கரீபியன் திரைபடத்தில் வரும் டேவி ஜோன்ஸ் பாத்திரமும் , இப்போது இந்த கதையை சாத்தியமாக்க இயலும் என்கிற நம்பிக்கையை கொடுத்திருக்கிறது. உடனே வேலையில் குதித்து விட்டார் கேமரூன். இந்த படத்திற்கான கரு ‘எட்கர் பரோ என்னும் எழுத்தாளரின் ஜான்கார்டர்’ என்னும் தொடர் கதையிலிருந்து உதித்தது. அதில் செவ்வாய் கிரகத்தில் வாழும் ஒரு இனம் அதன் மீது போர் தொடுக்கும் மனிதர்கள் , மனிதர்களில் ஒருவன் அந்த இனத்தைப்போல வேடமிட்டு செல்வது என செல்கிறது அந்த கதைகள். அதையே இப்போதைய தொழில்நுட்பத்துடன் புதிய உலகைப்படைத்து செய்யமுடியுமா என யோசித்தபோது உருவானது அவதாரின் கதை. கதை ரெடி அடுத்து என்ன?

இப்படி ஒரு படம் எடுப்பதாக இருந்தால் நாமெல்லாம் என்ன செய்வோம்? முதலில் பட்ஜட்டைப்பற்றித்தான் ரூம்போட்டு யோசிப்போம். கேமரூன் அமெரிக்காவின் பெரிய பல்கலைகழகத்தின் மொழிகள் ஆராய்ச்சித்துறைத் தலைவரை பிடித்தார். ‘எனக்கு ஒரு மொழி வேண்டும், உலகில் யாருமே பேசியிருக்காத , அறியப்படாத ஒன்றாக இருக்க வேண்டும். அதற்கு நிறைய வார்த்தைகள் இருக்க வேண்டும், உச்சரிப்பு இருக்க வேண்டும், இலக்கணம், பாடல்கள், பிரார்த்தனைகள், மந்திரங்கள், பெயர்கள் எல்லாமே இருக்க வேண்டும்! அந்த மொழி சார்ந்த அல்லது அவர்கள் பண்பாடு சார்ந்த ஒரு நாகரீகமும் வேண்டும் , ஆறுமாதம்தான் டைம்!’

ஆசிரியரும் இயக்குனரும் ஆராய்ச்சியில் இறங்கினர். நியூசிலாந்தின் பழங்குடியினரின் மொழியில் கொஞ்சம் எத்தியோப்பியாவின் மலைவாழ்மக்களின் மொழிகளில் கொஞ்சம் இரண்டையும் உதாரணத்திற்கு எடுத்துக்கொண்டு அதிலிருந்து புதிய மொழியை உருவாக்கினர். நவ்வி என்றொரு இனமும் அதற்கென பிரத்யேக மொழியும் , ஒரு மலை சார்ந்த குடிகளின் நாகரீகமும் உருவாக்கப்பட்டது.

ஆனால் அந்த மலை எப்படி இருக்கப்போகிறது , அங்கே என்னவெல்லாம் வேண்டும் , அதை எப்படி சாத்தியமாக்குவது , இப்படி ஒரு கிரகம் சாத்தியமா என பலதும் ஆராயத்தொடங்கினார். 4.4 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருக்கும் , (பூமியிலிருந்து மிக அருகில் இருக்கும் பிரபஞ்சம்) ___ கேலக்ஸியில் ஒரு நட்சத்திர கூட்டத்திற்கு நடுவில் இருக்கும் சின்ன நிலாதான் இந்த கதைக்கான களம் என முடிவு செய்து கொண்டார். அதற்கான காரணம் அடுத்த நூறு ஆண்டுகளில் மனிதனால் அத்தனை தூரம்தான் பயணிக்கவும் போர் தொடுக்கவும் முடியும் என்பது அவருடைய அனுமானம். இப்படி திரைப்படத்தின் ஒவ்வொரு விசயங்களுக்குமான மெனக்கெடல் நம்மை பிரமிக்க வைக்கிறது.



அந்த மக்களின் நடை உடை பாவனை என மீண்டும் ஆராய்ச்சி , அவர்களுடைய உருவம் அதற்கு ஒரு ஆராய்ச்சி! அதில் சிக்கியவர் நம்முடைய சிவபெருமான். நீல நிறமும் நீண்ட முகமும் சடை முடியும் குட்டியூண்டு உடை அகண்ட விழிகள் என நீளும் அவருடைய முகமும் உடலும் அவதாருக்கு மிகச்சரியான பொருத்தமாக இருந்திருக்கிறது. தூக்கிப்போடு இந்த மூஞ்ச என மொத்த மக்களுக்கும் ஒரே மாதிரியான முக அமைப்பு. அவதார் என்கிற பெயரே இந்துக்கடவுளான கிருஷ்ணரின் பாதிப்பில்தான் உருவாக்கப்பட்டதாக டைம் இதழின் பேட்டிக்கு 2007ல் சொல்லியிருந்தார். அதற்கேற்றாற்போல ஹீரோவுக்கு திருப்பதி ஏழுமலையானைப்போல நடுமண்டையில் காவிநிறத்தில் திருநாமம் போட்டிருக்கிறார்.

கதை? வேற்றுகிரகத்திலிருந்து வரும் விநோத ஜந்துக்கள் மனித குலத்தை அழிக்க நினைக்கும். அதை எதிர்த்து போராடும் அமெரிக்க ஜனாதிபதி தொடங்கி கடைசி போர்வீரன் வரை தன் உயிரையும் துட்சமாக மதித்து அந்த ஜந்துக்களை வெற்றிகொள்வான். இதுதான் வேற்று கிரகவாசிகள் குறித்த எல்லா அறிவியல் புனைகதைகளும் சொல்லுகிற செய்தி. அவதார் அப்படியே ஆப்போசிட்!

விலை உயர்ந்த எரிபொருளுக்காக இன்னொரு கிரகத்தில் வாழும் நவி இன மக்களின் மீது போர் தொடுக்கும் மனிதர்கள். அதற்கென பிரயோகிக்கும் இத்யாதிகள்.. மேலதிக இத்யாதிகள் என கதை ஏற்கனவே உங்களுக்கு தெரிந்திருக்ககூடும். அதில் ஒரு காதல். அனல் பறக்கும் சேஸிங் மற்றும் ஆக்சன், கொஞ்சமே கொஞ்சம் சென்டிமென்ட் , மனிதர்களின் வில்லத்தனம், நிறைய அறிவியல், என படத்தின் கதைக்காக கடுமையாக உழைத்திருக்கிறார். ஆனால் நமக்கு ஏனோ அம்புலிமாமாவில் படித்த கதை போலவே ஃபீலிங்ஸ். லேசாக தூக்கமும்!

ஆனால் அந்த கதைக்கு பின்னாலிருக்கும் அரசியலும் , அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீதான எதிர்ப்பும் நுண்ணரசியலாக அல்ல , வெளிப்படையாகவே சுட்டிக்காட்டப்படுகிறது. மத்திய கிழக்கு ஆசிய நாடுகளின் பெட்ரோல் மீதான அமெரிக்காவின் கவனம், அதைத்தொடர்ந்த போர்கள் எத்தனை அப்பாவி மக்களின் சாவுகளுக்கும் அவர்களுடைய வாழ்க்கை சீரழிவுக்கும் காரணமாக இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்திருக்கும். வளர்ந்த நாடுகளின் சுற்றுசூழல் கொள்கைகள் எப்படி நம்முடைய புவியை நாசாமாக்குகின்றன என்பதும் நமக்குத்தெரியும். அந்த பிரச்சனைகளை மிக தைரியமாக ஆனால் சாதுரியமாக முன்வைக்கிறது அவதார். எப்போது வல்லரசுகள் சிறிய நாடுகளின் மீது போர் தொடுத்தாலும் அல்லது எங்கு போர் முற்றினாலும் முதலில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்களே என்னும் கருத்தை கடுமையாக முன்மொழிகிறது இத்திரைப்படத்தின் கதை.

இந்த திரைப்படத்தில் முதன் முறையாக மோசன் கேப்சர் தொழில்நுட்பத்தில் புதுமையை புகுத்தியுள்ளார். அனிமேஷன் திரைப்படங்களில் நிஜ நடிகர்கள் உடலில் வயர்களுடன் நடிப்பார்கள். பின் அவர்களுடைய அசைவுகள் அனிமேசன் கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி மாற்றியமைக்கப்படும். ஆனால் கேமரூனின் தொழில்நுட்பம் வயர்களோடு நடிக்கும்போதே மானிட்டரில் கதாபாத்திரம் எப்படியெல்லாம் அசைகிறது எப்படியெல்லாம் உணர்ச்சிகளை வெளிப்படுத்துகிறது என்பதை பார்த்துவிட முடியும். இது சினிமாவின் எதிர்காலத்தையே மாற்றக்கூடிய தொழில்நுட்பம் என்கின்றனர் வல்லுனர்கள். இது தவிர வால்யூம் என்கிற இன்னொரு தொழில்நுட்பமும் உண்டு. இது நடிகர்களின் முகபாவனைகளை (அனிமேஷனுக்கு நடிப்பவர்கள்) உடனுக்குடன் அவர்களுடைய முகத்தோடு பொறுத்தப்பட்ட சிறிய கேமராக்கள் மூலமாக அறிந்து கொள்ள முடியும். இது அனிமேஷன் பாத்திரங்களின் அசைவுகள் மற்றும் உணர்ச்சிகளை தெள்ளத்தெளிவாக காட்டக்கூடியது. படத்தின் நடித்தவர்களில் பாதி பேர் நிஜ நடிகர்கள் மீதி எல்லோருமே அனிமேஷனால் உருவாக்கப்பட்டவர்கள். ஆனால் படத்தினை பார்க்கும் போது அந்த வேறுபாடுகள் தெரியவில்லை என்பதே உண்மை. இதில் 40% நிஜம் 60% கணினியில் வரைந்த புனைவு என்றால் யாருமே நம்ப மறுப்பார்கள்.

படத்தின் இசை மிரளவைக்கிறது. படம் முழுக்க சில பாடல்கள் வருகிறது. அவை அனைத்துமே நவ்வி மொழியில் பாடப்பட்டதாம்! படம் முழுக்க ஏதோ வித்யாசமான இசை வருகிறதே என அதுகுறித்து ஆராய்ந்தால் அதற்காக எத்னோமியுசிக்காலஜி என இசையில் ஒரு துறை இருக்கிறதாம் அதில் ஆராய்ச்சி செய்து பழங்குடியினரின் இசைக்கருவிகள் மற்றும் இசையை உருவாக்கியுள்ளனர்.

இப்படி கடுமையான உழைப்பு , அற்புதமான தொழில்நுட்பம், ஆச்சர்யமூட்டும் கிராபிக்ஸ் என எல்லாமிருந்தும் , படம் நம் மனதோடு ஒட்ட மறுக்கிறது. டெர்மினேட்டர் கொடுத்த விறுவிறுப்போ அல்லது டைட்டானிக் கொடுத்த பாதிப்போ இல்லாமல் மொத்தமாக சமயங்களில் கொட்டாவி விட வைக்கிறது. நம்மூர் பாலா எடுத்த நான்கடவுளுக்கு சற்றும் சளைக்காமல் ஒவராய் உழைத்து , எல்லாமே ஓவராய் போயிருக்கிறது. கேமரூன் படங்களுக்கே உண்டான கிரிஸ்ப்னஸ் இல்லை.

படத்தில் பெரிய குறை என்னதான் விறுவிறுப்பு இருந்தாலும் ஏதோ குறைகிறது.. அது படத்தில் சொல்லப்பட்ட உணர்ச்சிகள் குறைந்த காதலா? நமக்கு ஏற்கனவே பரிச்சயமான மசாலா கதையா? அல்லது வேறு ஏதாவது ஒன்றா? எனத்தெரியவில்லை. மற்றபடி குறைச்சலே இல்லாமல் வெறும் அமோக விளைச்சல்தான். டூ மச் அறிவியல் கூட சமயத்தில் கதையின் ஓட்டத்தை பாதிக்குமோ என்னவோ!

இது ஹாலிவுட் சினிமாவின் சரித்திரத்தில் மிகமுக்கிய இடம் வகிக்கும். இன்னும் பத்து பதினைந்து வருடங்கள் கழித்து அதன் தொழில்நுட்பங்களுக்காக போற்றப்படலாம். ஆனால் படம் – பப்படம். தமிழகத்தில் 2012 அடைந்த வெற்றியைக்கூட எட்டமுடியாது என்றே நினைக்கிறேன்.

சுஜாதா எப்போதோ கற்றதும் பெற்றதுமில் எழுதியது போல் அடுத்த இருபது ஆண்டுகளில் நடிகர்களுக்கான தேவை இருக்காது என்றுதான் தோன்றுகிறது. நான்கு சுவருக்குள் அமர்ந்து கொண்டு அடேங்கப்பா என வாய்பிழக்க வைக்கும் படத்தினை எடுத்துவிட முடியும் என்கிற நம்பிக்கையை இந்த திரைப்படம் உண்டாக்குகிறது. வலுவான கதையாக இருந்திருந்தால் நிஜமாகவே அவதார் சினிமாவை மாற்றக்கூடிய அவதாரமாக இருந்திருக்கும்.