26 May 2010

வெள்ளிங்கிரி - 1அந்த ஆற்றின் பெயர் நினைவில்லை. ஆனால் காட்டுக்குள் சில கி.மீட்டர்கள் நடக்க வேண்டும். போகும் வழியெல்லாம் ஒவ்வொரு செடி,கிளைகளையும் கவனமாக பார்த்துக்கொண்டே போக வேண்டும். ஆற்றுப்பாதையில் சாணி கிடந்தால் அதை தொட்டுப்பார்க்க வேண்டும். கால்த்தடங்களை கவனிக்க வேண்டும். செடிகொடிகள் உடைந்திருந்தால் உடைந்த பகுதி காய்ந்திருக்கிறதா அல்லது இன்னும் பச்சை வாசனை இருக்கிறதா என்று முகர்ந்து பார்ப்போம்.

சாணியாக இருந்தால் தொட்டுப்பார்த்து அது இன்னும் சூடாக இருக்கிறதா என்று!. கால்த்தடங்கள் பெரிதாக இருந்தால் அருகிலேயே கடந்திருக்கிறது எமன்! யானைகளும் காட்டுப்பன்றிகளும் சில வகை குரங்குகளும் சுற்றிக்கொண்டிருக்கும் காடு அது. நரிகளும் இருக்குமென்பார்கள். நான் யானைகளையும் காட்டுப்பன்றிகளையும் மட்டும்தான் பார்த்திருக்கிறேன். நரிகளை வேறொரு சமயம் நகரத்தில் பார்த்திருக்கிறேன். அந்த காடு வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்திற்கு(பூண்டி) எதிர்ப்பக்கம் இருக்கிறது. அந்த காட்டுக்குள் யாரும் நுழைந்து விட முடியாது. யாரும் நுழைவதுமில்லை. நாங்கள் எப்போதும் நுழைந்துவிடுவோம். காட்டிலாக்கா ஆபீசர்களின் காலடிகளையும் குரலையும் ஒலியையும் தேடியபடி!

கொஞ்சம் போல் அடர்த்தி இருந்தாலும் அதன் உள்ளே ஓடும் ஆற்றுப்படுகையும் அதன் நீரும் அபாரமானது. சுவையானது. குளிர்ச்சியானது. வெள்ளிங்கிரி மலை மீதேறி இறங்கினால் உடலெல்லாம் வலி பின்னி பிணைந்திருக்கும். அதை ஒற்றை குளியலில் நீக்கும் அபார ஆற்றலை கொண்டிருந்தது அந்த நீர். இப்போது நினைத்தாலும் நாக்கில் இனிக்கிறது. அதன் குளுமை உடலில் குளிர்கிறது.

கோவையிலிருந்து முப்பது கி.மீ சுமாரில் அமைந்திருந்தது பூண்டி மலைக்கோவில். வருடாவருடம் சித்ராபௌர்ணமி வந்துவிட்டால் ஏரியா இளசுகள் கையில் கம்போடு அர்த்தராத்தியில் கிளம்பி விடுவார்கள். சிறுவர்களான நாங்களும் அவர்களோடு செல்ல கேட்போம். அனுமதி கிடைக்காது. பின் குதித்து குதித்து வளர்ந்து பெரியவனாகி நாங்களும் போக ஆரம்பித்தோம். ஏனோ சித்திரா பௌர்ணமி கூட்டம் எங்களுக்கு பிடிக்கவில்லை. வதவதவென சொதசொத ஆட்களை கண்டாலே எங்கள் கும்பலுக்கு பிடிக்காது. கொலை செய்தாலும் அமைதியாக செய்வோர்களின் கூட்டு எங்களுடையது. அதனால் மலையேற அனுமதிக்கப்படும் சித்திரை மாதத்தின் ஏதாவது ஒரு நாளில் நாங்களும் கம்பிருப்பவன் இல்லாவதன்களெல்லாம் சேர்ந்து புறப்படுவோம்.

பூண்டி கோவிலின் அடிவாரத்திலிருந்து கிட்டத்தட்ட 6000அடி உயரத்தில் இருக்கிறது வெள்ளிங்கிரி மலை. மலை உச்சியில் சின்னதே சின்னதாக ஒரு சிவலிங்கமும் , அதற்கு பூஜை செய்ய ஒரு பூசாரியும், வீபூதி , குங்குமம், மஞ்சள் , கயிறு மற்றும் இன்னபிற பிரசாதங்கள் விற்க ஒரு சிறிய கடை. மிகப்பெரிய பாறைகளுக்கு நடுவில் சிவபெருமான் சிறிய பாறைக்குள் ஒளிந்திருப்பார். ராவோடு ராவாக மலையேறுகிறவர்கள் அதை வணங்கி உண்டியலில் பத்தோ இருபதோ போட்டுவிட்டு இறங்கி விடுவார்கள். ஆனால் அத்தனை சுலபமாய் அடிவாரத்திலிருந்து மலைக்கு போய்விட முடியாது!

பகலில் வாட்டி எடுக்கும் வெயிலை பொருட்படுத்தாமல் மலை ஏறினால் ஒரு உற்சாக அனுபவம் நிச்சயம் கிடைக்கும். ஆனால் யாரும் பகலில் மலை ஏறுவதில்லை. ஏறுவதில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லிவிட முடியாது. சின்னதும் பெரியதுமாக ஏழு மலைகளைக் கொண்டது வெள்ளிங்கிரி. பயணப்பாதையில் முதலிரண்டு மலைகளிலும் கடைசி மலையிலும் இளைப்பாருவோருக்காக கடைகள் இருக்கும். அவைகளுக்கான சாமான்கள் பகலிலேயே கூலியாட்களால் முதுகில் சுமந்தபடி ஏற்றிக்கொண்டு செல்லப்படுகிறது. சிகரட்,பீடி,பாக்கு,பொடி,சிப்ஸ் பாக்கெட்டு,சோடா மற்றும் இன்னபிற நொறுக்குத்தீனிகளும் இதில் அடக்கம்...

கஞ்சாவும் அபினும் இதில் சேராது.. இரவில் மட்டுமே கொண்டு செல்லப்பட்டு இரவில் மட்டுமே விற்கப்படுவது. இப்போதும் விற்கப்படுகிறதா என்பதை வெள்ளிங்கிரி மலை ஆர்வலர்கள்தான் தெரிவிக்க வேண்டும். கஞ்சா வாசனை காற்றில் வந்தாலே மோப்பம் பிடித்துவிடும் நாங்கள், மலையேறும் போதெல்லாம் , மலை மட்டும் ஏறாமல் காட்டுக்குள் உலாத்தும் போது புதர்களுக்குள் அமர்ந்து கொண்டு புகைவிடும் சித்தர்களை அல்லது பித்தர்களை கண்டிருக்கிறோம்.

- இன்னும் ஏறுவோம்

*********

படம் உதவி - ஹிந்து நாளிதழ்

28 comments:

ஜெய் said...

அந்த இடத்துக்கே போயிட்டு வந்த மாதிரி இருந்துச்சு.. நல்ல விவரிப்பு..
அது 6000 அடிகள் என நினைக்கிறேன்.. 6000 மீட்டராக இருக்காது..

Anonymous said...

i like the last para!!!

Pot"tea"

☼ வெயிலான் said...

நல்லாருக்கு. தொடருங்கள் வினோ!

மணிகண்டன் said...

தொடரட்டும்.

அதான் ஜக்கி கூட்டம் அடிக்கடி போறாங்களே இப்போ :)-

raashidsite said...

கேட்பதற்கு பரவசமான ஒரு பயண அனுபவம் ஆனால் இப்படிப்பட்ட குறிஞ்சி (அதாங்க மலையும் மலைசார்ந்த இடமும்) அருகில் குடியிருக்கும் பாக்கியம் எல்லாருக்கும் கிடைத்து விடுவதில்லை. கிடைத்தவனுக்கு அதில் பயணித்து ரசிக்கும் அறிவெல்லாம் இல்லை. மருதம் (அதான் வயலும் வயல் சார்ந்த இடமும்) நிலத்தில் பிறந்து இப்போது பாலையில் (சவூதி) (மணலும் மணல் சார்ந்த இடம்) வாடிக்கொண்டிருக்கும் எனக்கு இது போன்ற பயண அனுபவம் புத்துணர்ச்சியை அளிக்கிறது.

அதிஷா said...

6000 அடிகள்தான் சரி ஜெய்.

அகல்விளக்கு said...

அங்கு செல்ல எனக்கும் விருப்பமுண்டு....

இன்னும் வரிவாக இருந்திருந்தால் நன்றாக இருக்கும்...

நர்சிம் said...

அதிஷா, மிகப்பிடித்திருந்தது.

யுவகிருஷ்ணா said...

//இன்னும் ஏறுவோம்//

ஆதாம் காலத்திலிருந்து சொல்லப்பட்டு வரும் வசனம்!

Anonymous said...

ஒரு மலையில் இருந்து பார்த்தால் சிறுவானி அனையின் நீர் பிடிப்பு பகுதியை பார்க்கலாம், அது அதிகாலை நேரமென்றால் இன்னமும் ரம்யமாக இருக்கும்.

திருஞானசம்பத்.மா. said...

//.. அந்த ஆற்றின் பெயர் நினைவில்லை ..//

ஆண்டி சுனையை சொல்லுகிறீர்களா..??

ஷர்புதீன் said...

நமக்கும் மலைமேல் ஏறுகிற விளயாட்டேலாம் ரெம்ப பிடிக்கும், ஆனா பாருங்க நம்மகூட இருந்தவங்க எல்லாம் பெட்டி கடைக்கு பைக் தேடும் ஜாதி....

ILA(@)இளா said...

நானும் போவனும்னு நினைச்சிட்டு இருந்தேன்,.. தொடருங்க..

Palay King said...

நல்ல பதிவு நன்றி ஜக்கி .

~~Romeo~~ said...

வாயா வா .. இப்படி ஒரு பயண கட்டுரையை தான் நான் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறேன். அது சரி சுவாமி ஓம்கார் சொன்ன கைப்புள்ள நீதானா ???

இளைய கவி said...

நான் இப்பொதுதான் போய் வந்தேன், நீங்கள் எந்த ஆற்றை பற்றி சொல்லுகிறீர்கள் ? சிவமூலிகை இன்னமும் கிடைக்கிறது..

butterfly Surya said...

அருமை.

தொடரட்டும்.

அதிஷா said...

ரோமியோ -

இன்னும் சுவாமி ஓம்காரை தரிசிக்கும் பாக்கியம் எனக்கு கிட்டவேயில்லை.. அவருடன் பயணம் செய்தது அடியேனில்லை!வேறு யாரோ!

விக்னேஷ்வரி said...

அருமையான அனுபவத்தைத் தந்தது உங்கள் கட்டுரை. தொடர்ச்சிக்குக் காத்திருக்கிறேன்.

chinathambi said...

நல்ல பகிர்வு
http://chinathambi.blogspot.com

குசும்பன் said...

//ஆற்றுப்பாதையில் சாணி கிடந்தால் அதை தொட்டுப்பார்க்க வேண்டும். கால்த்தடங்களை கவனிக்க வேண்டும். செடிகொடிகள் உடைந்திருந்தால் உடைந்த பகுதி காய்ந்திருக்கிறதா அல்லது இன்னும் பச்சை வாசனை இருக்கிறதா என்று முகர்ந்து பார்ப்போம்.
//

ரீஜெண்டா பேராண்மை படம் பார்த்திங்களா பாஸ்?:))

வாய்ப்பாடி குமார் said...

கூகுல் எர்த்தில் சென்று பின்வரும் லேடிடூட், லான்ஞ்சிடூடு சென்று பாருங்கள்
10"59'21.37"N 76"41'12.25"E
வெள்ளியங்கிரி மலைத்தொடர் அதன் மேலே செல்ல உதவும் தடம் போன்றவை மிகத் தெளிவாக கிடைக்கும். அதனருகிலேயே மேலும் பயணித்தால் சிறுவாணி, மருதமலை, அனுவாவி போன்றவை அழகாக கிடைக்கும்,

ரோஸ்விக் said...

நல்ல அனுபவம். தொடருங்கள் அதிஷா.

Raja Subramaniam said...

I wish the content writer. Its good effort. Also see the link to know more about the sacred hill...
http://en.wikipedia.org/wiki/Talk:Velliangiri_Mountains

krishnakrishna said...

நல்ல பதிவு

http://skkme.blogspot.com/

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

வெள்ளிங்கிரியைப் பற்றி இன்னொருத்தர் எழுதி இருந்தார்.. யார்னு மறந்து போச்சு...

ஜோதிஜி said...

/இன்னும் ஏறுவோம்//

ஆதாம் காலத்திலிருந்து சொல்லப்பட்டு வரும் வசனம்!

கோபமா வந்தாலும் பொருத்தமான வசனம்.

ரொம்ப நல்லா ரசித்து எழுதி இருக்கீங்க,
பக்கத்தில் தான் இருக்கேன். ம்ம்ம் வாய்ப்பு இல்லை. வெயிலான் ரமேஷ் நிச்சயம் போயிருப்பார்.

thamizhan said...

எல்லோரும் போகிறார்களே என்று ஒரு கடைக்காரர் தன் நண்பர்களுடன் சென்று ஏறுவதற்கும் பிறகு இறங்குவதற்கும் கஷ்ட்டப்பட்டு(படுத்தி)கால்கள் வீங்கி ஒரு வாரம் கழித்து கடையை திறந்தது ஒரு பெரிய கதை.(பழைய நினைவுகளை நினைவு கூற வைத்ததற்கு நன்றிகள் பல.