Pages

02 June 2010

இசைராஜாவிற்கு பிறந்தநாள்இரவு பதினோறு மணிக்கு மேல் , சில்லுனு காத்து வீச , தன்னந்தனியாக பைக்கில் விபத்து நேர்ந்துவிடாத வேகத்தில் வண்டி ஓட்டியபடி , காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு ‘செந்தூரப்பூவே.. செந்தூரப்பூவே சில்லென்ற காற்றே!’ , அதைத்தொடர்ந்து ‘இதழில் கதை எழுதும் நேரமிது.. இன்பங்கள் அழைக்குது’ , அதைத்தொடர்ந்து ‘ராத்திரியில் பூத்திருக்கும் தாமரைதான் கண்ணோ.. ராஜ சுகம் தேடிவர தூதுவிடும்..’ , பொசுக்கென வீடு வந்துவிடும். வேலை முடிந்து அவ்வளவு தாமதமாக வீட்டிற்குச் சென்றாலும் , ஏன்டா இவ்ளோ சீக்கிரம் வீடு வந்துச்சு , ச்சே இன்னும் மூணு பாட்டு கேட்ருக்கலாமோ என்று பலநாள் என்னை ஏங்கவைத்தவர் இளையராஜா.

எனக்கு சில வருடங்கள் முன்புவரை இளையராஜாவை வெறும் மொக்கை இசைமையப்பளராகவும் , வெறும் டப்பாங்குத்து , கிராமத்துப்பாட்டுக்காரன் என்கிற அளவில்தான் பரிச்சயம். என் இசை அறிவு சூன்யம். ஏ.ஆர்.ரஹ்மானே என்னுடைய ஆதர்சனம். எப்போதும் பூங்காற்றிலே உன் சுவாசத்தில், மூழ்கி கிடப்பேன். ரஹ்மானின் துள்ளலில் ஊர்வசி ஊர்வசி டேக் இட் ஈஸி ஊர்வசி என்று தலைசுழல ஆடிக்கொண்டிருப்பேன். இளையராஜா ரசிகர்களிடமும் சண்டையிட்டிருக்கிறேன். என்னையா பெரிய புடலங்கா இளையராஜா அவரால ரஹ்மான் மாதிரி பாலிவுட்டுல கலக்க முடிஞ்சுதா? உலக இசைனா தெரியுமா.. எப்ப பார்த்தாலும் டன்டனக்க டனக்குனக்கா தானே! என்று ஏளனம் பேசியிருக்கிறேன். உண்மையில் இளையராஜா விவாதப்பொருளல்ல உணர்வு என்பது அப்போது எனக்கு தெரிந்திருக்கவில்லை. அதை உணர இயலாத வயதும் காரணமாய் இருந்திருக்கலாம்.

உணர்வுகள் கோர்க்கும் அவருடைய இசையை உணரும் தருணம் , என் காதலியிடமிருந்தே தொடங்கியது. என் காதலியுடனான ஒவ்வொரு நிகழ்வுக்கும் அவரிடம் ஒரு இசை இருந்தது. அவருடைய இசையில் என் காதலுக்கான தருணங்கள் நிரம்பிக்கிடந்தன. என்ன சத்தம் இந்த நேரம்.. எந்த நேரத்திலும் மனதோடு அப்பிக்கொண்ட இசை அது. இப்போதும் மௌனராகத்தின் பீஜிஎம் என்னுள் கலந்து விட்டிருக்கிறது. துள்ளல் இசைக்கும் அந்த படத்திலேயே இன்னொரு பீஜிஎம் வைத்திருப்பார். அவள் கோபப்பட்டு கன்னம் சிவந்த போது உண்டாகும் அழகை இளையராஜாவின் பாடல்களில் மீட்டெடுத்தேன். அவளுடைய செல்ல சீண்டல்களும் , முத்தகங்களும் எல்லாமே புதைந்திருந்தது அந்த இசையில். உதாரணம் அழகிய கண்ணே உறவுகள் நீயே!

இதோ திருமணமாகிவிட்டது.. இப்போதும் மெட்டிஒலி காற்றோடு என்னை நெஞ்சை தாலாட்டுகிறது!. மண்ணோடு கலந்த என் இசையாக ராஜாவின் இசையை பார்க்கிறேன். இன்றும் என்னுள் இறங்கி ஏதேதோ செய்து கொண்டிருக்கும் அந்த இசை எப்படி என்னை ஆக்கிரமித்த்தென்று என்னால் சொல்லிவிட முடியாது! அது எங்கு தொடங்கியதாக இருந்தாலும்.. ஆக்கிரமிப்பு முழுமையானது.

இளையராஜாவை விமர்சிப்பவர்கள் என்ன காரணங்களைச் சொன்னாலும் அவருடைய இசையையோ அவருடைய திறமையையோ யாராலும் விமர்சிக்க முடியாது! எத்தனை ஆயிரம் பாடல்கள்.. எத்தனை மெட்டுக்கள்.. ராஜாவைப்பற்றி ஏதேதோ எழுதிவிட்டேன் போதும்.

ரஹ்மானிடமிருந்து என்னை பிரித்த நாட்களில் ஓவர்நைட்டில் இளையராஜா என்னை ஆக்கிரமித்துவிடவில்லை. கொஞ்ச கொஞ்சமாக ஸ்லோ பாய்சனைப்போல என் உடலெங்கும் பரவி இதோ இப்போது என் முழுக்க ராஜாவின் இசை எப்போதும் , அழும் போதும் சிரிக்கும் போதும்..

இன்று இசைராஜாவிற்கு எத்தனை வயதென்று தெரியவில்லை. இன்று பிறந்தநாளாம்! வணங்குகிறேன்.

நிறைய பாடல்கள் பிடித்தாலும், எனக்கு நிறைய பிடித்த அவருடைய ஒரு  இசைமாதிரி ஒன்று!