Pages

13 June 2010

கராத்தே கிட்அசராம அடிப்பதுதான் ஜாக்கிசான் ஸ்டைல். கராத்தே கிட் படத்தில் அசராமல் நடித்திருக்கிறார் ஜாக்கி! கடைசியாக வெளியான போலீஸ் ஸ்டோரியிலேயே அழுது புரண்டிருந்தாலும்.. கராத்தே கிட்டில் அமைதியாக ஆர்பாட்டமில்லாமல் நடித்திருக்கிறார். அமைதியான சீனர்களுக்கேயான கிழட்டு நடை! புன்னைகையில்லாத அமைதியான முகபாவம்.. இத்தனைவருடமாக ஜாக்கியை ஹாலிவுட்டும் சீனர்களும் விரட்டி விரட்டி சண்டையே போட வைத்துவிட்டனர். இந்த படத்தில் ஒரே ஒரு சண்டைதான் அதுவும் மிகமிக மிருதுவான வன்முறையில்லாத சண்டை!

ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித்தின் மகன் ஜேடன் ஸ்மித் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கிறார். (அங்கேயும் வாரிசுகள் தொல்லைதானா!.. தந்தை மகனுக்காற்றும் உதவி!) சின்ன பையன்தான் ஆனால் சிறுத்தைக்குட்டி!. அம்மாவிடம் நாம ஊருக்கே போயிரலாம்மா! என்று அழும் போதும்.. கிளைமாக்ஸில் உடைந்த காலோடு சண்டையிடும் போதும் உழைப்பு தெரிகிறது. படத்தின் நாயகனின் அம்மாவாக வரும் தாராஜி ஹன்சன். சில காட்சிகளிலேயே தோன்றினாலும் கவர்கிறார்.

படம் முழுக்க சீனாவிலேயே படமாக்கப்பட்டிருந்தாலும் , கம்யூனிச சீனாவிற்கு எதிராக எடுக்கப்பட்டதோ என்று நினைக்கவைக்கிறது படம் சொல்லும் செய்தி மற்றும் அதன் அரசியல்! பழமைவாதியான ஜாக்கி குங்பூ எனும் ஆயுதத்தை சமாதானத்திற்கான கலையாகவும், தற்கால குருவான வில்லன் குங்பூ எதிரிகளை சாகும்வரை அழிக்கவும் பயன்படுத்துவாக சித்தரிக்கப்படுகிறது. சீனர்களை அமெரிக்க நாட்டின் கருப்பின சிறுவன் தோற்கடிக்கிறான்! இப்படி படம் முழுக்க நிறைய சின்ன சின்ன அரசியல் இருந்தாலும்.. படத்தை தயாரித்திருப்பது ஒரு அமெரிக்க நாட்டின் பிரஜை! அதனால் அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க முடியாது! படம் முழுக்க முழுக்க ஒரு மாதிரி அழுக்காகவே எடுக்கப்பட்டுள்ளதும் சீன நகரங்களை நெருக்கடியாகவும் சீனர்களை வெறிபிடித்தவர்களாகவும் காட்டுவது நெருடல்.

குழந்தைகளுக்கான படமாக இருந்தாலும்.. படம் முழுக்க வன்முறை நிறைந்திருக்கிறது. தியேட்டரில் நிறைய குட்டீஸ்களைக் காண முடிந்தது. என்ன செய்ய? வேறு வழியில்லை, நம்மூர் சுறாக்களுக்கும் சிங்கத்துக்கும் குட்டிப்பிசாசுகளுக்கும் இந்த வன்முறைகள் குறைவுதான். சொல்லப்போனால் குழந்தைகள் மனதில் தைரியத்தை விதைக்கலாம். சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் , குங்பூ பயிற்சிக்காக ஜாக்கி அந்த சிறுவனை அழைத்துச் செல்லும் மலைகள் நிறைய புத்தக்கோயில்களும் பிரமிப்பு!

பயிற்சிக்காக ஆர்வத்தோடு வருகிற சிறுவனை விடாமல் அவனுடைய சட்டையை கழட்டி மாட்ட செய்வது.. அதைப்பற்றி தியேட்டரிலேயே பாருங்கள்.. ஒரு குட்டி ஜென் கதை பார்த்த திருப்தியை அளிக்கிறது கராத்தேகிட் திரைப்படம்! படம் பார்த்து முடிக்கும் போது குஷியான மூட் மனதிற்குள் நிரம்பி விடுகிறது. ஜாக்கிசானின் ரசிகர்களுக்கு ஏமாற்றமாக இருந்தாலும் ஜேடன் ஸ்மித் அந்த குறையை தன்னுடைய அபாரமான நடிப்பால் போக்குகிறார்.

படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட வேண்டிய ஒன்று டப்பிங்! சிம்பிள் மற்றும் பளிச் வசனங்கள். சில வசனங்களுக்கு தியேட்டரில் விசில் பறக்கிறது. முடிந்தவரைக்கும் படத்தை தமிழ் டப்பிங்கில் பார்ப்பது உசிதம்!

1984களில் வெளியான கராத்தே கிட் என்னும் படத்தின் ரீமேக் இது. இந்த படத்தை வில் ஸ்மித் தயாரித்துள்ளார். ஜாலியாக இரண்டு மணிநேரம் பார்க்க கூடிய நல்ல விறுவிறு சுருசுரு குங்பூ படம்.

***********