Pages

13 July 2010

மதராசப்பட்டினம் (சென்னை)
நாற்றமடிக்கும் கூவம். எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டம். ஒரே நசநச. சுத்தமான காற்று கிடையாது. தண்ணீர் கிடையாது. வெயில் காலத்தில் வீட்டுக்கு உள்ளே வெளியே எங்குமே இருக்க முடியாது. வேர்வையில் குளிக்கலாம். விலைவாசி வேறு! மழைகாலத்தில் வீட்டுக்குள்ளே பம்பில்லாமல் பாம்போடு தண்ணீர் வரும். குடிநீர் கூட காசுக்குதான் கிடைக்கும். மகிழ்ச்சி என்கிற நம் வரையறையில் ஒரு சதவீதம் கூட திருப்தியை அளிக்காத நகரம் தமிழ்நாட்டிலேயே சென்னை மட்டுமாகத்தான் இருக்கும். இத்தனை குறைகள் இருந்தாலும் அதனையும் மீறி இந்நகரத்தில் ஒரு கோடிபேர் வசிக்கின்றனர். ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் பேர் குடிபுகுந்த படி உள்ளனர். புகுந்தவன் திரும்பிச்செல்வதேயில்லை. இந்நகரம் தன் வசீகர ஆக்டோபஸ் கரங்களால் அவனை இங்கேயே கட்டி வைத்துவிடுகிறது. காரணம்... குறைகளையெல்லாம் மீறி இங்கே வசிக்கும் ஒவ்வொருவருக்கும் இருக்கிற , இந்த நகரத்தின் மீதான காதல்! இது இளம்பருவக் காதல்களைப்போல சொல்லமுடியாத ஈர்ப்பினால் உண்டாவதாகவும் இருக்கலாம்.

இந்நகரத்தின் மீதான காதலோடு ஒரு வரலாற்று சினிமா! மதராசப்பட்டினம் (சென்னை). 1947க்கும் 2010க்கும் நடுவே ஒரு மென்மையான காதல்கதை. நிறைய டைட்டானிக் கொஞ்சம் லகான் , கடலுக்கு பதிலாக கூவம், கப்பலுக்கு பதிலாக சென்னை, கிரிக்கெட்டுக்கு பதிலாக மல்யுத்தம். கதைக்காக அதிகம் மெனக்கெடவில்லை. ஆனால் படமாக்கத்திற்காக மிகமிக அதிகமாக உழைத்துள்ளனர். 60ஆண்டுக்கு முந்தைய சென்னை. பாலங்கள் கிடையாது, கூவத்தில் சாக்கடை கிடையாது, வயல்கள் , கிராமத்து வீடுகள் , யானைகள் வலம்வரும் மைலாப்பூர்,திருவல்லிக்கேணி,பாரிஸ்,பர்மாபஜார் இல்லாத கடற்கரை சாலை என சென்னையும் ஒரு பாத்திரமாக வலம்வருகிறது. பார்க்க பார்க்க உடல் சிலிர்க்கிறது. பிசிறில்லாத கிராபிக்ஸ். அதிலும் படம் முழுக்க வருகிற சென்ட்ரல் ஸ்டேசனும்,படகுகள் நகரும் கூவம் நதியும் அழகு. பழைய சென்னையின் புகைப்படங்களை மாதிரியாக வைத்துக்கொண்டு காட்சிகள் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும்.

காதல் படங்களுக்கு ஆதாரமே நாயக நாயகியரின் அங்கலட்சண சர்வாம்ச பொருத்தம்தான். அலைகள் ஓய்வதில்லை தொடங்கி அண்மையில் வெளியான காதல்,ஜெயம் படம் வரைக்கும் வெற்றிபெற்ற படங்கள் எல்லாவற்றிலும் நாயக நாயகியரின் பொருத்தம் மிகமுக்கிய பங்கு வகிக்கிறது. இதில் ஆர்யா , எமி இருவருக்குமே அப்படி ஒரு ரொமான்ஸ். எமி வெளிநாட்டு நடிகையாம். பஞ்சாபி பெண் போல் இருக்கிறார். அழகு! மிக அருமையாக நடிக்கவும் செய்திருக்கிறார். படமே அவரை சுற்றி அவரால்தான் நகர்கிறது. தமன்னா,ஜெனிலியாவுக்கெல்லாம் நல்ல போட்டி! விஜயின் அடுத்தபடத்தில் ஜோடி சேர நேரிடலாம்.

ஆர்யா நான்கடவுள் படத்தினைக் காட்டிலும் இதில் அருமையாக நடித்திருக்கிறார். கோபக்கார முரட்டு மல்யுத்த வீரனாகவே படம் முழுக்க வலம் வருகிறார். காமெடி,ஆக்சன்,ரொமான்ஸ் என களைகட்டுகிறது அவருடைய நடிப்பு. மல்யுத்தக்காட்சிகளுக்காக நிறைய உழைத்திருப்பார் போல!

படத்தின் இன்னொரு ஹீரோ ஹனீபா. மொழிபெயர்ப்பாளராக அவர் செய்யும் காமெடிகள் விலாநோகவைக்குமளவுக்கு சிரிக்க வைக்கிறது. அதே போல நாசர் அந்தக்கால சென்னைக்காரராக சென்னையின் மொழியை அச்சரம் பிசகாமல் அந்தக்காலத்து பெரிசாக கவர்கிறார். அவர் தவிர்த்து வில்லனாக வருகிற பாரின் காரர்,பாஸ்கர் உள்ளிட்ட சின்ன சின்ன பாத்திரங்களும் நிறைவாக நடித்துள்ளனர். நீரவ்ஷாவின் கேமராவில் வரலாறு,தற்போது என வித்தியாசம் காட்டுகிறார். படத்தின் கலை இயக்குனருக்கு விருதுகள் கிடைக்கலாம் , பேனா,குடை,கார்,கைவண்டி தொடங்கி சென்ட்ரல் ஸ்டேசன் வரை அச்சு அசலாக அந்தகாலத்தை பிரதிபலிப்பது அசத்தல். அதிலும் மல்யுத்த பயிற்சி காட்சியில் அருகிலேயே மல்யுத்த வீரர்கள் பயிற்சி எடுக்கும் மல்லர் கம்பம்! ஹனீபா உடல்நலமில்லாமல் படுத்திருப்பார் அருகிலேயே பழங்காலத்து அமிர்தாஞ்சன் மற்றும் ஆனந்தவிகடன் என பார்த்துப் பார்த்து ஒவ்வொரு காட்சியையும் எடுத்திருக்கிறார்கள்!

ஜி.வி.பிரகாஷின் இசை முதல் பாதியில் மெல்லிய இறகைப்போல காதை வருடினாலும், இரண்டாம் பாதியில் ஏனோ இரைச்சல். பூக்கள் பூக்கும் பாடல் படத்தில் வரும் காட்சியில் சிலிர்ப்புக்கு கியாரண்டி. காதலில் கரைய வைக்கும் கஜல். ஆரம்பப்பாடலில் எம்.எஸ்.வீயின் குரல் அதே வீரியத்துடன்!

முதல் பாதி படம் மென்மையாய் அழகாய் போய்க்கொண்டிருக்கும் போது, இரண்டாம் பாதி ஜவ்வு மிட்டாயாய் , வழவழகொழகொழ என நீண்டு கொண்டே போவது எரிச்சலூட்டுகிறது. இன்னும் கொஞ்சம் தட்டி டிங்கரிங் செய்திருக்கலாம். அதிலும் தேவையில்லாமல் வருகிற இரண்டாம் பாதி சோகப்பாடல்! க்ரிஸ்ப்பாக வெட்டி ஒட்டியிருந்தால் படம் ஒரு கிளாஸிக்காக வந்திருக்கும். அதிலும் கிளைமாக்ஸ் ஹீரோயிசங்களை குறைத்திருக்கலாம். மற்றபடி நல்ல படம்,வித்தியாசமான முயற்சி , ஒவ்வொருவரும் நிச்சயம் பார்க்க வேண்டியதும் கூட.

படத்தில் காணும் சென்னை மனதை என்னவோ செய்கிறது. அத்தனை அழகு. படம் முடிந்து வெளியே வரும் போது , வெளியே புதிய சென்னை , அதே டிராபிக்,ஜனநெருக்கடி கூவத்தின் நாற்றத்தோடு , குற்றவுணர்வும் சென்னை எனும் சொர்க்கத்தை அழித்துவிட்ட தவிப்போடும் மனது இறுகிப்போகிறது. இந்நகரத்தின் மீதான எங்களுடைய காதல்தான் இந்நகரத்தின் முதல் எதிரியாகவும் இதன் அழிவுக்கு காரணமாகவும் இருக்கிறது.