Pages

23 July 2010

கனவு வேட்டை

பறவைகளால் தொடர்ந்து துரத்தப்படுவதாய் விடாமல் கொத்தப்படுவதாய் சிறுவயதில் ஒரு கனவு. என்னால் இப்போதும் ஒரு சின்ன பறவையைக்கூட கைகளால் தூக்க முடியாது, கைகள் உதறும். பறவைகள் மீதான பயத்தை ஒரு கனவால் ஏற்படுத்த முடியுமா?

சில நாட்களுக்கு முன் எனக்கு ஓரளவு தெரிந்த உறவினர் ஒருவர் இறந்து போவதாக கனவு. அவர்மேல் எனக்கு எந்த மரியாதையோ அன்போ அதற்கு முன் கிடையாது. ஆனால் அந்த கனவுக்குப்பின் எல்லாமே தலைகீழ். அவர்மீது இனம்புரியாத அன்பு உள்ளே பரவுவதாய் உணர்ந்திருக்கிறேன். கனவால் அன்புகாட்ட வைக்க இயலுமா?

ஆல்பா தியானம் என்று ஒருவகை தியானமுறை உண்டு. வேலைதேடி அலைந்து கொண்டிருந்த போது கற்றுக்கொண்டது. இன்டர்வியூவுக்கு செல்லுமுன் கண்களை மூடி மனதை ஒருநிலைப்படுத்த வேண்டும். கிட்டத்தட்ட உறங்குவது. பின் வீட்டிலிருந்து இன்டர்வியூவுக்கு செல்வதாகவும், போகும் வழியில் என்ன இருக்கும், என்ன நிறத்தில் உடை? எந்த பேருந்து? டிக்கட் எடுப்பது தொடங்கி , டையை சரி செய்து கொள்வது, இன்டர்வியூவில் வரிசையில் காத்திருப்பது, உள்ளே மேலாளரிடம் பேசுவது,பின் வெற்றிபெறுவது , அந்த மகிழ்ச்சி, வீட்டில் அதை பகிர்ந்து கொள்வது, வெற்றிதரும் களிப்பில் துள்ளி குதிப்பது, என கற்பனையை விரிவாக்கி அரைமயக்கத்தில் வெற்றிக் கனவொன்றை காணவேண்டும். இவ்வளவையும் உங்களால் ஐந்திலிருந்து பத்து நிமிடத்திற்கு காணமுடியும்! இந்த வகை தியானம் ஒருவகையில் எனக்கு பல வெற்றிகளை தேடித்தந்திருக்கிறது.

சிங்கப்பூர் சென்று திரும்பியிருந்த நண்பர் , அது குறித்து சிலாகித்து பேசிக்கொண்டிருந்தார். நாள்முழுக்க அதைப்பற்றியே சிந்தனை. அன்றைக்கு இரவே நானும் என் நெருங்கிய நண்பரும் சிறிய படகில் சிங்கப்பூர் செல்வதாக! கையில் காசில்லாத மாதக்கடைசி அது , சிங்கப்பூரில் எனக்கு நிறைய நண்பர்கள் இருந்தனர். அவர்கள் எங்களுக்கு பணம் கொடுத்தனர். விதவிதமான அனுபவங்கள். சிறிய படகிலேயே நானும் நண்பரும் கனவு முழுக்க சிங்கப்பூரை சுற்றிக்கொண்டிருந்தோம். கனவு இன்னும் கூட கொஞ்சம் நீளாதா என ஏங்கவைத்தது. இப்போதெல்லாம் என்றைக்காவது காசு சேர்த்து சிங்கப்பூர் போய் விட வேண்டும் என்கிற வேட்கை எப்போதும் மனதிற்குள் இருந்துகொண்டே இருக்கிறது. கனவு என்பது வெறும் தொகுக்கப்பட்ட மாயதோற்றங்கள் மட்டுமல்ல , அது ஒரு ஐடியா!

சுவாரஸ்யமான ஐடியாக்களை ஆள்மனம் நினைவிலிருந்து மீட்டெடுத்து நனவாக்கிப் பார்க்க துடித்துக்கொண்டே இருக்கும். அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்த்தால் கனவை நனவாக்கிவிடுகிறது. கிட்டத்தட்ட சுவாரஸ்யமான நினைவுகளை எப்போதும் அசைப்போடுவோமே அதைப்போல! பயங்கரமான கனவுகள் ஆள்மனதில் பாதிப்பை உண்டாக்கலாம். கனவால் ஒரு லட்சியத்தை உருவாக்க முடியும். கனவால் பயத்தை உருவாக்க முடியும். கனவால் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே சிதைக்க இயலும். அப்படிப்பட்ட என் கனவுகளை உங்களால் கட்டுப்படுத்த முடிந்தால் எப்படி இருக்கும்!

இன்செப்சன் (INCEPTION) திரைப்படமும் அதையே முன்வைக்கிறது. உங்களுக்குள் இருக்கும் ஐடியாவை . அல்லது உங்கள் மனதில் புதைந்திருக்கிற ரகசியத்தை , நான் கணினியில் உருவாக்கியிருக்கும் கனவுலகின் மூலம் , உங்கள் கனவுக்குள் புகுந்து திருட முடிந்தால், அல்லது அந்த ஐடியாவை உருமாற்றி , உங்களுடைய வாழ்க்கையை மாற்றியமைத்தால்? சொல்வதற்கே மூச்சு வாங்குகிறதே! இப்படி ஒரு மிக மிக சிக்கலான ஒரு கதையை எடுத்துக்கொண்டு யாருமே நினைத்துப்பார்க்க முடியாத , கசாமுசாவென சிக்கிக்கொண்ட இடியாப்பத்தைப் போன்றதொரு திரைக்கதை அமைத்திருக்கிறார் இப்படத்தின் இயக்குனர் கிரிஸ்டோபர் நோலன். முன்னதாக வெளியான இவருடைய படமான மெமன்டோவும் கூட இவ்வகை உளவியல் சார்ந்த சிக்கல்களை பேசிய சிக்கலான திரைக்கதையை கொண்ட திரைப்படமே! ஆனால் இன்செப்சன் அதைக்காட்டிலும் இன்னும் ஒரு படிமேலே!

ஜிக்-சா புதிர்களைப் போல ஒன்றுக்கொன்று பிணைந்து , அங்கொன்றும் இங்கொன்றுமாக சிதறிக்கிடக்கிற திரைக்கதையை பார்வையாளனே ஒருங்கிணைத்து ஒட்டவைத்து புரிந்து கொள்ளுகிற வகையில் எடுக்கப்படும் படங்களுக்கு பேர் போனவர் நோலன். கிட்டத்தட்ட ஸ்டான்லி குப்ரிக்கின் புகழ்பெற்ற படங்களில் இதே யுக்தியைக் காணலாம்.. படத்தின் காலக்குழப்பங்களை மிகச்சரியாக பயன்படுத்தியிருப்பது அதைக்காட்டுகிறது. கனவின் நீளம் தற்போதைய கால அளவினை விடவும் நீண்டதாய் இருப்பதை உணர்ந்திருப்போம். அதுவே கனவுக்குள் கனவாக இருந்தால் இன்னும் நீளும். நான்கு கட்ட கனவாக இருந்தால்... எவ்வளவு நீளும்.. கால அளவு நீண்டபடியிருந்தால் புவியீர்ப்பு விசை அதற்கேற்ப குறையுமென்கிறார் (அறிவியலாளர்கள்தான் விளக்கவேண்டும்)

கனவுகளை வேட்டையாடும் நாயகன் , நிர்பந்தத்தால் ஒரு தொழிலதிபரின் கனவுகளை மாற்றியமைக்கத் திட்டமிடுகிறான். அதற்காக ஒரு அணியை உருவாக்கி அதை சாதிக்க எண்ணுகிறான். கிட்டத்தட்ட நான்கு கனவுகளைத் தாண்டி அதை செய்ய முடியும். (கனவிற்குள் கனவிற்குள் கனவிற்குள் கனவு). அப்படி ஒரு முயற்சியில் ஏற்கனவே தன்னுடைய மனைவியை கனவுகளுக்கு தாரை வார்த்தவன். (நிஜ உலகை விட கனவுலகம் அழகாக இருக்கிறதென்று , அங்கேயே தற்கொலை செய்துகொண்டு கனவுலகம் எது நிஜ உலகம் எதுவென்று புரியாமல் கனவுலகிலிருந்து விடுபட நிஜ உலகத்தில் தற்கொலை செய்துகொண்டு சாகிறாள் , கனவுலகம் குறித்த ஐடியாவை அவளுக்குள் விதைத்தவன் நாயகன்) , இறுதியில் அவளுக்காக அவனும் கனவுலகிலேயே மாண்டுபோகிறான்.

இப்படிப்பட்ட கான்செப்ட்டை யோசிப்பதே மிகவும் கடினம். அதில் ஒவ்வொரு கனவிற்கு நடுவிலும் புவி ஈர்ப்பு, கால அளவு குறித்த சிக்கலான பிரச்சனையை சேர்த்திருப்பது திரைக்கதைக்கு மேலும் வலுசேர்க்கிறது. ஹோட்டல் அறையில் புவி ஈர்ப்பின்றி மொத்தமாக அனைவரும் மிதக்க கேமரா அப்படியே சுற்றுகிறது. ஸ்டேன்லி குப்ரிக் 2010 ஸ்பேஸ் ஒடிஸி திரைப்படத்தில் இதே மாதிரியான காட்சியை அமைத்திருப்பார். ( நீளமான வராண்டாக்களை காட்டுவது ஸ்டானிலியின் டிரேட்மார்க் )

யாருடைய கனவில் நாம் இருக்கிறோமோ அவருடைய கனவு உலகத்தில் அனைத்துமே கனவு காண்பவரின் உள்ளுணர்வு. மனிதர்கள்,சாலைகள்,மரங்கள்,வாகனங்கள் என.. நாயகனை எப்போதெல்லாம் வில்லன் சந்தேகிக்கிறானோ அப்பொதெல்லாம் அனைத்துமே அவனை நோக்கி திரும்புகின்றன. அவனுடைய சந்தேகம் தற்காப்பாக மாறும்போது மனிதர்கள் கனவுக்குள் நுழைந்தவன் தாக்க தொடங்குகின்றனர். இதை காட்சியாக நோலானால் மட்டுமே திரைக்குக் கொண்டுவர இயலும் என்று நினைக்கிறேன்.
படத்தின் இறுதிகாட்சி மிக முக்கியமானது. கனவின் கனவிற்குள் புதையுண்டு மாண்டு போகும் நாயகன் , மீளமுடியாத நினைவலைகளில் சிக்கி அதிலிருந்து வெளியேற முடியாமல் கனவுகளுக்குள்ளேயே வாழ்வதாக படம் முடிந்து போகிறது. கிட்டத்தட்ட கனவில் தற்கொலை செய்துகொண்டால் உண்மையில் கோமாதான். அண்மையில் வெளியான அவதார் திரைப்படம் தொழில்நுட்ப ரீதியில் எப்படி திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல்லோ கருங்கல்லோ, இத்திரைப்படம் திரைக்கதை அமைப்பில் அதற்கு ஒப்பானது.

படத்தில் கிராபிக்ஸ் கலைநுணுக்கம் மிக அருமையாக கையாளப்பட்டுள்ளது. நடிகர்களின் நடிப்பு, எடிட்டிங் கேமரா என எல்லாமே அருமையாக இருந்தாலும், திரைக்கதையின் ஓட்டத்தில் அவையெல்லாம் ஒரு பொருட்டாகவே தெரியாமல் போகலாம். நீங்கள் மசாலாப்பட ரசிகராக இருந்தால் கிராபிக்ஸ் கனவில் மூழ்கடிக்கப்படுவீர்கள். சிறந்த ஆக்சன் அட்வென்ச்சராக அது இருக்கும். சினிமா ஆர்வலராக இருந்தால் இப்படி ஒரு திரைக்கதை , உங்களுடைய ஆழமான நுட்பம் சார்ந்த தேடலுக்கு உங்களை அழைத்துச்செல்லும்.

கனவுலகில் சஞ்சாரம் செய்யுகிற தொழில்நுட்பம் வருங்காலத்தில் வரலாம். நம் கனவினை நாமே வடிவமைக்கும் பலமும் நமக்கு கைவரலாம். ஆனால் அதற்காக வருங்காலத்திற்கெல்லாம செல்லவேண்டியதில்லை. இன்செப்சன் , கிரிஸ்டோபர் நோலனே வடிவமைத்த கனவுப் புதிர். அந்தப்புதிரில் தியேட்டரில் படம் பார்க்கும் நூற்றுசொச்சம் பேரையும் இணைத்துவிடுகிறார். நீங்களும் கனவில்தான் இணைக்கப்படுகிறீர்கள். ஆனால் நோலனின் கனவில். அவருடைய ஐடியாவை உங்கள் கனவில் அவர் விதைத்துவிடுகிறார்! ஆழமாக...