Pages

27 October 2010

கரைந்த நிழல்கள்
இலக்கே இல்லாமல் எப்போதாவது கடுமையாக வேலை பார்த்ததுண்டா? தொழில் கற்றுக்கொள்கிறேன் பேர்வழிகள் கூட ஓரளவாவது வேலைக்குண்டான கூலியை பெற்றுக்கொண்டு கற்றுக்கொள்வதை கவனித்திருக்கிறேன். ஆனால் தன்னிச்சையாக எந்த ஒரு இலக்குமில்லாமல் நேரத்தை யாரோ ஒரு சிலருடையா அதிவளர்ச்சிக்காக உழைக்கிறவர்களை சினிமா உலகில் மட்டுமே காணலாம். இப்படி உழைப்பவர்களினுடைய எண்ணிக்கை ஒன்றோ இரண்டோ அல்ல.. நிச்சயம் பல ஆயிரங்கள் இருக்கும்.


வடபழனியிலும் சாலிகிராமத்திலும் அசோக்நகரிலும் இன்னும் கோடாம்பாக்கத்தினை சுற்றிக் கிடக்கிற எண்ணிலடங்காதவர்களினுடைய வாழ்க்கை இப்படிப்பட்டதுதாகாத்தான் இருக்கிறது. காரணமேயில்லாமல் எந்த லாபநோக்குமின்றி தன்னைத்தானோ சுற்றிக்கொண்டு சூரியனை சுற்றுகிற கிரகங்களைப்போல இந்த மக்கள் எப்போதும் ஆர்காட் ரோடு சாலைகளில் சுற்றிக் கொண்டிருப்பதை காணலாம்.


சிறுவயதில் சென்னை என்பதே எனக்கெல்லாம் கனவு. கோடம்பாக்கம் டீ ஸ்டாலில் ரஜினியும் கமலும் டீ சாப்பிடுவார்கள். ஏவிஎம் சரவணன் தன் வெள்ளை சட்டையை ரோட்டோர டிரைகீளினிங்கில் ஐயர்ன் செய்து வாங்குவார். கோடம்பாக்கம் சாலைகளில் உசிலமணியும் பாண்டியராஜனும் ஜனகராஜும் கைகோர்த்து செல்வதாக கனவு கண்டிருக்கிறேன். அமலாவும் ரேவதியும் தெரு பைப்பில் தண்ணீர் பிடிக்க நிற்பாகக்கூட கற்பனை செய்திருக்கிறேன். உண்மையில் சினிமா என்பதே இவர்கள் என்கிற எண்ணம் நான் வளர வேறாக மாறியது. கோடாம்பாக்கத்தில் வலம் வருகிற போது நிறைய சினிமா காரர்களை சந்திக்க முடிந்தது.. ஆனால் அவர்களை யாருக்குமே தெரியாது. அவர்கள் சினிமா கலைஞர்கள்.


சில ஆண்டுகளுக்குப் பின் சாலிகிராமத்தில் சில ஆண்டுகள் வசிக்க நேர்ந்தது. அப்போது நிறைய சினிமாக்காரர்களோடு டீக்கடைகளிலும் பக்கத்து அறைகளிலும் பார்க்க நேரும். அவர்களெல்லாம் சினிமாவில் வேலை பார்க்கிறவர்கள். தினமும் அலுவலகத்திற்கு செல்வதை போல செல்கிறவர்கள். அவர்களுடைய பெயர் டைட்டிலில் எங்கோ ஒரு மூலையில் போட்டால் போடலாம். ஆனால் அதிகம் உழைக்கிறவர்கள்.


உதவி இயக்குனர்கள்,ஸ்டன்ட் மேன்கள், துணை நடிகர்கள்,புரொடக்சன் மேனேஜர்கள்,டப்பிங் கலைஞர்கள், லைட்மேன்கள்,வாகன ஓட்டுனர்கள்,கோரஸ் பாடகர்கள்,வாத்திய கலைஞர்கள் ம்ம் மூச்சு முட்டுகிறது. இனி இன்னும் என்னென்னவோ ஆட்கள். ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருந்தது. பெரும்பாலான கதைகள் எல்லாமே அந்தக்காலத்து சிவாஜி படங்களைப்போல ஒரே சோகம் பிழியும். பெண்கள் என்றால் கேட்கவே வேண்டாம். எங்கு சென்றாலும் விரித்தபடிதான் செல்லவேண்டும் பாயை என்று கேலியாய் சிரிப்பதை கேட்டிருக்கிறேன். அவர்களுக்கும் குழந்தைகள் இருந்தனர். அவர்களை சினிமா தொடர்புள்ளவர்கள் யாருமே மதிப்பதில்லை. சினிமா அல்லாதவர்களுங்கூட. இவர்கள் அனைவருமே ஏதோ ஒரு காலத்தில் எங்கிருந்தோ சென்னையை நோக்கி ஓடிவந்து சினிமாவில் மூழ்கி முத்தெடுக்க முயற்சித்து முடியாமல் அதிலேயே கிடந்து சாகிறவர்கள்.


என்னோடு தங்கியிருந்த உதவி இயக்குனர் அவன். பிரபல இயக்குனரிடம் உதவியாளராக இருந்தான். இயக்குனரின் படம் தொடங்கிவிட்டால் கையில் செல்போனும் பைக்கும் இரவெல்லாம் குடியென மாறிவிடுவான். படம் முடிந்து அடுத்த படம் தொடங்குவதற்கு எல்லாவற்றையும் விற்று அழித்துவிட்டு.. மச்சி ஒரு பீடி கட்டு வாங்கி குடேன் என்கிற அளவுக்கு வறுமையில் வாடுவான். ஒரு கட்டத்தில் தனியாக படமெடுக்க முடிவெடுத்தான். எப்போது சந்தித்தாலும் மச்சி இதோ நாமக்கல் புரொடியூசர் மாட்டிகிட்டாரு.. அடுத்த மாசம் பூஜை கட்டாயம் வரணும் என்பான். போகும் போது சில நூறுகளை கடனாக வாங்கிக்கொள்வான். எப்போதும் பித்துபிடித்தவன் போல மணிக்கணக்கில் அவனுடைய திரைக்கதைகள் சொல்லிக்கொண்டே இருப்பதை பார்த்திருக்கிறேன். மச்சி விஜய பார்த்து கதை சொல்லிட்டேன்.. ஓகே பண்ணிட்டா உடனே பூஜை.. இளையராஜா கால்ஷீட் எப்போ கேட்டாலும் தரேன்னுட்டாரு.. விஜய்ஆன்டனிகிட்டயும் பேசி வச்சிருக்கேன்.. என்று பலதும் சொல்லிக்கொண்டேயிருப்பான்.


வறுமையில் அலைந்து கஞ்சா அடித்து பைத்தியமாகி ஊருக்கே அழைத்து சென்றாலும் , அங்கேயிருக்காமல் மீண்டும் சென்னைக்கே திரும்பி வந்து இப்போதும் தனியாக படமெடுக்கிறேன் என்று புரொடியூசர் தேடி அலைந்து கொண்டிருக்கிறான். ஒரு பைசா கூட வருமானமில்லை. ஆனால் மாதம் முழுக்க சுற்றிக்கொண்டேயிருக்கிறான். யாராவது பெரிய இயக்குனருக்கு எல்லா வேலையுமே ஐந்து பைசா கூட வாங்காமல் செய்து கொடுப்பதை பார்த்திருக்கிறேன். உனக்கு நல்ல புரொடியுசர் அமைய மாட்டேங்கிறாங்கடா.. நீ அந்த கமலாவோ விமலாவோ அவள என்னை வந்து பாக்க சொல்றீயா.. என்று பல வேலைகளையும் இலவசமாக செய்ய வேண்டியதாயிருப்பதாக சொல்லுவான்.


இங்கே லைட்பாய் தொடங்கி தயாரிப்பாளர் வரைக்கும் எல்லோருக்குமே நிலை இதுதான். எத்தனையோ வெற்றிபடங்களில் நடித்த நடிகர்களும் நடிகைகளுமே சில ஆண்டுகளில் வறுமையில் வாடி செத்த கதைகளை தமிழ்நாடு அறியும். இங்கே, இந்த சினிமாவில் வெற்றி பெறுகிறவனும் தோல்வியடைகிறவனும் சேர்ந்தே மரணிக்கின்றனர். அவர்களுடைய மரணம் ஏதேச்சையானதல்ல முன்தீர்மானிக்கப்பட்டது. இங்கே பத்தாண்டுகளுக்கு இரண்டு நடிகைகள் தற்கொலை செய்து கொள்வதும், நான்கு பேர் விவாகரத்து செய்து கொள்வதும், வறுமையில் வாடி செத்து போகிற தினத்தந்தியின் ஆறாவது பக்க துணை நடிகைகளின் கதையும் நாம் அறிந்ததே. அது தடுக்க முடியாத அளவுக்கு விஷம் சினிமாவின நாடிநரம்பெல்லாம் ஊறியிருக்கிறது. இங்கே ஒழுக்கம் என்பதே கெட்டவார்த்தை.


எழுபதுகளின் கடைசியில் சுஜாதா எழுதிய கனவுதொழிற்சாலையும், அறுபதுகளில் அசோகமித்திரனால் எழுதப்பட்ட கரைந்த நிழல்களும் சினிமாவின் அகோர பக்கங்களை நமக்கு காட்டுகின்றன. சுஜாதா சினிமாவில் வெற்றி பெற்ற ஒருவனை பிரதானமாக்கி அவன் சந்திக்கிற உளவியல் சிக்கல்களையும், அடிமட்டத்திலிருந்து முன்னேறுகிற ஒருவன் சந்திக்கிற சவால்களையும் காட்சிப்படுத்தியிருப்பார். நிறைய மசாலாவும் கலந்து கட்டியிருப்பார். ஆனால் கரைந்த நிழல்கள் நாம் திரையில் காணும் சினிமாவிற்கு பின்னால் இருட்டில் இயங்குகிறவர்களினுடைய வாழ்க்கையையும் அவர்கள் சந்திக்கிற பிரச்சனைகளையும் முன்வைத்து எழுதியிருக்கிறார். பத்து அத்தியாங்களிலும் பத்து வித்தியாசமான கதைகள், அவை ஒன்றோடொன்று சினிமாவால் பிணைக்கப்பட்டிருக்கிறது. அவற்றினை மிக லாவகமாக கோர்த்து கதை பண்ணியிருக்கிறார் அசோகமித்திரன்.


வறுமையில் வாழும் ஒரு புரொடக்ஷன் மேனேஜர், தோல்யிடைந்து மீண்டெழ படமெடுக்கும் தயாரிப்பாளர்,புரொடக்ஷன் அசிஸ்டென்ட்,ஒரு நடிகை, வெற்றி பெற போராடும் ஒரு உதவி இயக்குனர் , வெற்றிகளை குவிக்கும் தயாரிப்பாளர், அவருடைய மகன் என கதை முழுக்க சினிமாவோடு தொடர்புடைய ஒவ்வொருவரும் சந்திக்கும் சிக்கல்கள், வெற்றிக்காக செய்கிற தில்லுமுல்லுகள், அது தோல்வியடைகையில் உண்டாகிற கோபம். சினிமா என்னும் கருவியின் உதவியோடு மனிதமனங்களின் சிக்கல்களையும் பேசியிருக்கிறார் அசோகமித்திரன். இங்கே ஒவ்வொருவனும் வெற்றிக்காக போராடுவதும் அனைத்தையும் இழந்து அதை அடைந்தபின் வீழ்ந்துமடிவதுமாக கதை பின்னப்பட்டுள்ளது. இதற்கிடையே வெற்றியோ தோல்வியோ மொத்தத்தில் சினிமாக்காரனின் குடும்பம்.. சினிமாவால் எதை இழந்து எதை பெறுகிறது என்பதான தேடலாக கதை நகர்கிறது.


இன்றும் கமலாதியேட்டரின் வலது பக்கம் அழிந்து போன விக்ரம் ஸ்டூடியோவின் மிச்சங்களை காணமுடியும். ஸ்டூடியோக்கள் கோலோச்சிய அறுபதுகளின் சினிமாவும் அக்காலகட்டத்தில் நிலவிய சினிமாக்களின் தொடர்தோல்விகளும் அதானல் பாதிக்கப்படும் தயாரிப்பாளர்கள் தொடங்கி உதவி இயக்குனர் வரையிலுமான போராட்டமே கரைந்த நிழல்கள்.


வெளியே பார்க்க நீர்த்தாவரங்கள் வளர்ந்த அடர்ந்த அழகான பச்சை பசேல் ஏரியினை போல் இருந்தாலும், உள்ளே குதித்தால் ஒவ்வொரு அணுவும் சாக்கடைதான் என்பதை மிக அழகாக விவரித்திருப்பார். இங்கே எவனோ ஒருவனுடைய வளர்ச்சிக்கு பலிகடா ஆக்கப்படும் பல ஆயிரம் கனவுகளின் கதையாக இதை கருதலாம்.


சினிமாத்துறையிலேயே சில காலம் அசோகமித்திரன் பணியாற்றியதால் அந்தக்கால சினிமா உலக இயக்கம் குறித்து ஓரளவு புரிந்து கொள்ள முடிகிறது. சில உண்மை சம்பவங்களும் கோர்க்கப்பட்டதாக நண்பர்கள் சொல்லக்கேட்டேன். எனக்கு அப்படி ஏதும் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லலாம். அறுபதுகளின் சென்னை சில இடங்களில் பிரமிக்க வைக்கிறது. குறிப்பாக கோடம்பாக்கத்திலிருந்து ராயப்பேட்டை செல்பவர்கள் கூட மெட்ராஸ்க்கு போறேன் என்று பேசுவது..


திரையில் நாம் காணும் சில விநாடி காட்சிகளுக்காக எத்தனை இழப்புகள் என்று நாவல் முழுக்க வருகிற சூட்டிங் காட்சிகளும் அதற்கான ஆயத்த முயற்சிகளாகவும் விவரித்துள்ளார்.


தொடக்க அத்தியாயங்கள் படிக்க சிரமமாக இருந்தாலும் மூன்றுக்கு மேல் எளிமை. பல இடங்களில் காட்சியை ஓரளவு மட்டுமே ஆசிரியர் விவரிக்கிறார்.. மீதியை நாமாக யூகித்துக்கொள்ள விட்டிருப்பது நன்றாக இருந்தாலும்.. அந்தக்கால வாழ்க்கையை யூகிப்பதென்பது என்னை போன்ற சிறார்களுக்கு சிரமம்.

நாவலை படித்த பிறகு பழைய படங்கள் சிலதை பார்க்க நேர்ந்தது. ஏனோ டைட்டில் போடும்போது உதவி இயக்குனர்கள் , எடிட்டிங் உதவி, கேமரா உதவி , நடனம் உதவி, இயக்கம் உதவி என உதவிகளின் பட்டியலில் உள்ளவர்களில் ஏதாவது இன்றைய பிரபலங்கள் இருக்கிறார்களா என்று தேடுகிற வினோதமான பழக்கம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுவரை பத்துக்கும் மேல் படங்கள் பார்த்துவிட்டேன்.. ஒரு உதவி கூட பின்னாளில் சொல்லிக்கொள்கிற வெற்றியாளர்கள் யாருமே இல்லை.. அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும். இப்போது என்ன செய்து கொண்டிருப்பார்கள்? அவர்களுடைய குடும்பம்...? அவர்களுடைய உருவங்கள் நிழல்களாக மனக்கண்ணில் வந்து அச்சமூட்டுகின்றன. உண்மையிலேயே திகிலானதுதான் சினிமா!

 


18 October 2010

சொந்த செலவில் சூனியம் - ஏ சாரு ஸ்டோரி
இவ்வளவு சீக்கிரமே அவன் எந்த நிகழ்ச்சிக்கும் சென்றதில்லை. அன்றைய தினம் விஜயதசமியாகையால் அலுவலகம் விடுமுறை. குமாஸ்தாயிய மனநிலையின் படி விடுமுறை நாளில் வெளியே சுற்றி நேரத்தை வீணடிக்காமல் மனைவி மக்களோடு செலவில்லாமல் டிவி புதுப்படம் மானாட மயிலாட பார்த்து சுகிப்பவன். இருந்தாலும் இது அதிகம் சந்தித்திராத இணைய நட்புக்காக..இலக்கியத்திற்காக சில தியாகங்களை செய்துதான் ஆகவேண்டியதாயிருக்கிறது. ஐந்து மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணிக்கே தயாராகிவிட்டிருந்தான். பெட்ரோல் போட்டு காற்றுப்பிடித்து போகும் வழியில் புகைவிட்டு டிஸ்கவரிபுக் பேலஸை அடைகையிலே நேரம் 4.55.

கொடுமை என்னவென்றால் அவனுக்கு முன்பாகவே , பார்வையாளர்கள் வருகைக்கு முன்பாகவே இலக்கிய சூறாவளிகள் வருவதற்கு முன்பாகவே விழாவின் சிறப்பு விருந்தினரான சாருநிவேதிதா வந்துவிட்டிருந்தார். சமகால இலக்கிய பரப்பில் இப்படிப்பட்ட எழுத்தாளர்களும் இருப்பது எண்ணவொண்ணா ஆச்சர்யமே.. அண்மையில் ஒரு இசை இலக்கிய விமர்சகரின் (இலக்கிய இசை விமர்சகர்?) புத்தக விமர்சன கூட்டம் ஆறு மணிக்கு ஆரம்பித்திருக்க வேண்டும். ஆடி அசைந்து வந்த இலக்கிய பிதாமகர்களாலும் சினிமா ஜிலாக்குகளாலும் உத்தமதமிழ் எழுத்தாளர்களாலும் ஏழுமணிக்குத்தான் தொடங்கினர். இதனால் பிரபல இலக்கிய விமர்சகர் ராம்ஜி யாகூ உள்ளிட்ட பலரும் கோபித்துக்கொண்டு அரங்கைவிட்டு வெளியேறியதெல்லாம் பழைய கதை.

அவன் கண்களுக்கு சாரு எப்போதும் இல்லாத அளவிற்கு மொட்டைதலையாய் இருந்தாலும் கவர்ச்சிக்கன்னணாக தெரிந்திருக்க வேண்டும். பார்த்ததுமே குப்புற விழுந்து வணக்கம் தல என்றான். அவர் எப்போதும் போல அகல திறந்த கண்களுடன் அடடே நீயா? என்கிற ஆச்சர்யத்தோடு அவனை பார்த்தார். சாருவிடம் அவனுக்கு பிடித்ததே அவன் எதை சொன்னாலும் ஓஓஓ என்று ஒரு ஆச்சர்ய பார்வை பார்ப்பார். அப்படியே பதிப்பாளர் அகநாழிகை பொன்வாசுதேவனுடன் எங்கோ டீக்கடை பக்கம் சாரு மறைய , தூரத்தில் தெரிந்த புனைவு எழுத்தாளர்கள் மணிஜி நர்சிம்ஜிகளோடு தன் பேச்சை தொடங்கினான். பேச்சு பேச்சாக இருக்கும் போதே வாங்க பாஸ் புக்க வெளியிட்டுற போறாய்ங்க என்று நர்சிம்ஜி சொல்ல அவனும் அவர்களோடு மேலேறினான். விழா 5.30க்கு ஷார்பாக தொடங்கியது.

டிஸ்கவரி புக் பேலஸில் இதுவரை பல புத்தக வெளியீடுகள் நடந்திருக்கின்றன. ஆனாலும் இம்முறை அங்கே அனல் பறந்தது. மக்களெல்லாம் நனைந்து போய் அமர்ந்திருந்தனர். நானும் நர்சிம்ஜியும் சாருவுக்கு அருகில் அமர்ந்துகொண்டோம். பீப்லி லைவ் குறித்து நீங்கள் இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் சாரு என்றான். ''அட இதையேதான்ப்பா அந்த கலாகௌமுதி எடிட்டரும் சொன்னாரு'' என்றார் சாரு. அவன் புன்னகைத்தான். என்ன சாரு இருக்க இருக்க இளமை கொப்பளிக்க அழகாகிட்டே போறீங்களே என்றான் அவன்.. சாரு புன்னகைத்தார். கேரளாவுக்கு நாவல் எழுதப்போனீங்களா இல்ல ஃபுல் சர்வீஸா? ரெண்டும்தான்பா என்று கூறியவர் மீண்டும் புன்னகைத்தார். அடுத்த நாவல் என்ன ஒரு க்ளுவும் இல்லையே? அதைப்பத்தி இன்னைக்கு பேசிரலாம்னு இருக்கேன்ப்பா! ஆர்வம் மேலிட முதல் வரிசையில் அவன் அமர்ந்திருக்க மேடையேறினார் சாரு.

அது எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் என்னும் இளம் எழுத்தாளரின் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா. சாருவுக்கும் கவிதைக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம். பாவம் அந்த எழுத்தாளர் சாருவை வைத்துதானா தன் புத்தகத்தை வெளியிட வேண்டும்? சொந்த செலவில் சூனியம். வெளியிட்டார். சாரு பேச்சை தொடங்கினார். அவருடைய பேச்சு..

'' இன்றைக்கு அரசியல்,ஜனரஞ்சக பத்திரிகைகள் மட்டுமல்ல சிறுபத்திரிகை இலக்கிய உலகமும் ஊழல் நிறைந்த ஒன்றாகிவிட்டது. பொது மேடையில் இரண்டு எழுத்தாளர்கள் பிரபல இயக்குனருக்கு சோப்புப்போட்டு காலில் விழாத குறையாக வாய்ப்பு கேட்கும் இழிநிலைதான் இன்றைக்கு இருக்கிறது.'' என்று பேசத்தொடங்கியவர் அப்படியே எந்திரன் பக்கம் தாவினார். படத்தை கொஞ்ச நேரம் கிழித்து தொங்கவிட்டார். அப்படியே சுற்றியவர் ஆப்பிரிக்காவின் சர்வாதிகார மன்னன் (பெயர் குறிப்பிடவில்லை) ஒருவனுடைய அராஜகங்கள் குறித்தும், அவன் எப்படி புணர்வதற்காக பெண்களை தேர்ந்தெடுப்பான் என்பதையும் குறிப்பிட்டார். அதே போல தமிழ்நாட்டிலும் ஒரு பேரரசர் இருப்பதாகவும், மதுரையில் ஒரு இளவரசரும் சென்னையில் ஒருவரும் இருப்பதாகவும் சொன்னார். அடுத்து அரசியின் ஆட்சி வரும்போல் தெரிகிறது என்று தொடர்ந்தார்.

சிலே என்கிற தேசத்தில் அனைவருமே கவிஞர்களாம்.. 'போலவே' தமிழ்நாட்டிலும்.

வெளியிடப்பட்ட புத்தகத்தினை வைரமுத்துவுக்கு சமர்ப்பிருந்திருந்தார் எழுத்தாளர். ஆனால் புத்தகத்தில் கவிப்பேரரசு வைரமுத்து என குறிப்பிடப்பட்டிருந்தது.. அதென்னய்யா கவிப்பேரரசு என்று அடைமொழிகள் குறித்து அரைமணிநேரம் பேசினார். இளையராஜாதான் இசை ஞானி என்றால் மற்றவர்களெல்லாம் என்ன இசை முட்டாள்களா என்று அந்த பேச்சு கொஞ்ச நேரம் தொடர்ந்தது.

பின் கமலஹாசனை மகாநதியில் பாரட்டியதையும் குறுதிப்புனலில் விமர்சித்ததையும் , குறிப்பிட்டு சொன்னார். அசோகமித்திரனின்
இதற்கு நடுவே தன்னுடை நாவல் குறித்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டார். சாரு சில காலம் ஆண் விபச்சாரியாக இருந்த அனுபவங்களே இந்நாவல், இதில் அவர்களுடைய உடல் மீதான வன்முறையும், அதன் வலியும் வேதனையையும் பதிவு செய்யப்போவதாகவும் கோடிட்டு காட்டினார். இதே போல லத்தீன் அமெரிக்காவில் ஒரு எழுத்தாளர் ஆண் விபச்சாரியாக இருந்து அந்த அனுபவங்களை நாவலாக எழுதியுள்ளாராம். சாருவின் நாவல் டிசம்பர் மாதம் ஒரு குறிப்பிட்ட தினத்தில் காமராஜர் அரங்கில் வெளியிடப்படவுள்ளதாக ஒரு தகவலையும் பகிர்ந்து கொண்டார். கிம்கிடுக்கின் திரைப்படங்களில் உடல்மீதான வன்முறை எப்படியெல்லாம் காட்டப்பட்டது என்பது குறித்துப்பேசினார். 3

கடைசியாக சில சமகால உலக கவிதைகளை வாசித்துக்காட்டினார். பின் பாவப்பட்ட அந்த எழுத்தாளரின் கவிதைகள் குறித்து பேசினார். இந்த கவிதை தொகுப்பை சுஜாதா உயிரோடிருந்தால் தலை தூக்கிவைத்து கொண்டாடியிருப்பார்.. வைரமுத்து பாராட்டுவார்.. ஆனால் இந்த தொகுப்பில் வெறும் வார்த்தைகள்தான் இருக்கின்றன.. பரத்தையர்களில் குரல் இக்கவிதைகளில் ஒலிக்கவில்லை.. அவர்களுடைய வலியும் வேதனையும் இல்லவே இல்லை.. இந்த தொகுப்பில் சில கவிதைகளில் நல்ல வார்த்தை விளையாட்டு உண்டு. என்று குறிப்பிட்டார். அருகில் அமர்ந்திருந்த அந்த எழுத்தாளர்சரவணகார்த்திகேயன் புன்னகை மாறாமல் அமர்ந்திருந்தார். கவிதை நன்றாக இல்லை என்று இறுதியாக சொன்னவர்.. இப்படி சொல்வதற்காக சரவணகார்த்திகேயன் சந்தோசப்படவேண்டும்.. என்று உரையை பேசிய சில மணி நேரங்களில் சில நிமிடங்கள் புத்தகத்தைப்பற்றியும் பேசி முடித்துக்கொண்டார். சரவணகார்த்திகேயனை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்.. இதை எதிர்பார்த்துதான் அவர் சாருவையே அழைத்தாராம்.

இதற்கே வெக்கை தாங்க முடியவில்லை.. உடலெல்லாம் வேர்த்துக்கொட்டி எப்படா சாரு பேசி முடிப்பாரு வெளிய காத்தோட்டமா போய் நிற்கலாம் ஆக்ஸிஜனும் கார்பன் மோனாக்ஸைடும் கொஞ்சம் நிக்கோடினும் புடிக்கலாம் என்று இருந்தது அவனுக்கு. சாரு பேசிமுடிக்கவும் வெளியேறினான். சாருவை தொடர்ந்து ச.கா ஒரு கத்தை பேப்பர்களுடன் ஏற்புரை வழங்க.. அவனும் அவனுடைய சமகால வலைப்பதிவர்களோடும் இலக்கியவாதிகளோடும் வெளியே புகைவிடத்தொடங்கினர். மழைபெய்ய தொடங்கியது.

14 October 2010

...ண்ணா பார்ண்ணா சிரிக்கறான்!


கோமாளி!


நம்ம சிஷ்யன் சரியான சிடுமூஞ்சி. எப்போதும் மூஞ்சியில் எருமைசாணியை அப்பியது போலவே திரிபவன். ''மவனே நான்கண்டி செவப்பா காசோட பொர்ந்திருந்தேனு வை.. அப்படியே திரிஷா நயான்தாரானு செட்டில் ஆய்ருப்பேன்... என் நேரம் கர்ப்பா பொர்ந்து தொல்ச்சிட்டேன்..'' என்று சலித்துக்கொள்வான்.


நரசிம்மராவ் , முரசொலி மாறன் முகங்களில் கூட நீங்கள் எப்போதாவது சிரிப்பை பார்த்திருக்கலாம் ஆனால் இவன் முகத்தில் சிரிப்பை பார்க்க தலைகீழாக நின்று பரதநாட்டியம் ஆடினாலும் முடியாது. வாயில் நான்கு வார்த்தை பேசினால் நான்கில் மூன்று ''த்தா''வாகத்தான் இருக்கும். எப்போதும் சலிப்பு.. எப்போதும் வெறுப்பு.. ஒருகட்டத்தில் அவனாலேயே இன்னாடா வாழ்க்க இது , ரோதனையா பூச்சு என்று சலித்துக்கொண்டன் சாமியாரிடமே சரணடைந்தான்!


கையில் பிளாஸ்டிக் கப்பில் ஒரு கட்டிங்கை ராவாக அடித்துக்கொண்டிருந்தார் சாமியார். ஊறுகாய் கூட இல்லை.. இப்படிப்பட்ட வித்தைகளில் அசகாயசூரர் நம்ம சாமியார்.


''சாமி இன்னானே தெர்லே.. யாராப்பாத்தாலும் செரி காண்டாவுது.. யார்னா என்ன பாத்து சிர்ச்சா.. அப்டீயே செவ்னியே சேத்து நாலு அப் அப்லாம் போலக்து..'' என்றான்


சாமியார் அவனை தீர்க்கமாக பார்த்தார். எழுந்து நின்று தன் இடுப்பு லுங்கியை இறுக்கிக் கட்டிக்கொண்டார். என்ன நினைத்தாரோ? கெக்கே பிக்கே கெக்கே பிக்கே என்று விலா நோக விழுந்து விழுந்து சிரித்தார். சிரித்தபடியே கட்டிங் கப்பை பிடித்தபடி தன் அறைக்கு திரும்பி கதவை பூட்டிக்கொண்டார். சிஷ்யனுக்கு எதுவுமே புரியல... கொஞ்ச நேரம் அவர் சென்ற பாதையை தீர்க்கமாக பார்த்துவிட்டு.. கடுப்பாகி அங்கிருந்து நகர்ந்தான்.

சாமியாரின் அந்த விநோத சிரிப்பு அவனை ஏதோ செய்தது. எரிச்சலூட்டியது. கடுப்பாக்கியது. சரக்கடிச்சாலும் போதையில்லே.. தம்மடித்தாலும் திருப்தியில்லே. சோறும் இறங்கலே... பீரும இறங்கலே! என்ன செய்வதென்றே புரியலே. நாலு நாள் பைத்தியம் பிடித்தவனாய் அந்த சிரிப்பை பற்றியே சிந்தித்துக்கொண்டிருந்தான்.


ஒரு வாரம் கழித்து மீண்டும் சாமியாரைப் போய் பார்த்தான். ''சாமி என்னா சாமீ.. என் மனசு கஷ்டத்த உங்களான்டை சொன்னா நீங்க இன்னாடானா கக்கபிக்கனு விக்கிவிக்கி சிர்ச்சினு பூட்டீங்களே'' என்றான்.


சாமி மீண்டும் அவனை ஏற இறங்க பார்த்துவிட்டு.. முன்னால் செய்ததையே மீண்டும் செய்தார். யெஸ்! விழுந்துவிழுந்து சிரித்தார். இந்த முறை கடுப்பாகி.. ''யோவ் லூசாயா நீ! இப்ப இன்னாத்துக்கு இப்படி சிரிக்கற என்ன பாத்தா கோமாளி மாத்ரி இக்குதா'' என்றான் கோபக்கார சிஷ்யன்.


''டேய் பிலாக்கா பையா! நீ கோமாளியவுட கொறஞ்சவன்டா...'' என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிப்பை கன்டினியூவினார்.


''சாரி.. சாமீ டென்சானாகிச்சு.. என்ன ஏன் கோமாளியவுட கொறஞ்சவன்னு சொன்னே'' என்றான் சிஷ்யன்.


''கோமாளியாச்சும் அட்த்தவன் சிரிக்கர்த பாத்து அவன் ஹேப்பியாவான்.. நீ சுத்த வேஸ்ட்டு மச்சி, அட்த்தவன் சிர்ச்சாதான் ஒனக்கு காண்டாவுமே'' என்று கூறிய குரு.. மீண்டும் தன் அடைமழை சிரிப்பை தொடர்ந்தார்..


 

நாய்படாத பாடு!


நான்குவருட கடும் பயிற்சிகளுக்கு பிறகு சுயமாக ஒரு ஆசிரமம் அமைக்க முடிவெடுத்தான் சிஷ்யன். ஒரு நாள் சாமியாரிடம் போய் அதை நேரடியாகவே கேட்டான் ''சாமீ நான் தனியா ஒரு ஆஸ்ரமம் வச்சி.. டிவில உங்களாட்டம் வெளம்பரம் குட்து பெர்ய ஆளாவ்லாம்னுருக்கேன், உங்க பர்மிஷனும் ஆசீர்வாதமும் வோணும்'' என்றான்.


சாமியாருக்கு கிலியாகத்தான் இருந்தது. ஏற்கனவே நம்மகிட்ட டிரெயினிங் எட்த்துட்டு அவன்அவன் பிரான்ச் ஓப்பன் பண்ணி யுனிவர்சிட்டி, ஹாஸ்பிடல்,டிவி சேனல், பாரின் மனினு செட்டில் ஆகிட்டானுங்க.. இதுல இவன் வேற என்று நினைத்தவர்..


'' அடடே! ரொம்ப சந்தோசம் ராஜா! ஆமா தனியா ஆஸ்ரமம் வச்சி இன்னா பண்ணப்போற.. நம்ம ஆஸ்ரமத்துலயே மூனுவேளை சோறு போட்டு முப்பது ரூவா தரோமே பத்தாதா ஒனக்கு'' என்றார்.


''இன்னா சாமீ.. நேத்து வந்த சாமியாருங்கள்லாம், நடிகைங்க வீடியோ ஆடியோ, நியூஸ் சேனல்னு பெரிய ஆளாகிட்டானுங்க.. நான் நாலுவருஷம் உங்களான்ட குப்பை கொட்டிகினுக்றேன்.. அட்லீஸ்ட் நம்ம ரேஞ்சுக்கு ஒரு எஃப் எம் ரேடியாவாவது ஆரம்பிச்சி... ரம்பாவோ மேனகாவோனு செட்டில் ஆக வேணாமா, அதான் ராயபுரத்துல ஒரு எடம் பாத்துருக்கேன்.. செம எடம் சாமி'' என்றான் சிஷ்யன். சாமிக்கு பயம் கூடியது.


''செரி நீ முடிவு பண்ணிட்டு பேசற.. இன்னா பண்றது.. என்னமோ பண்ணு.. ஆனா நான் மூணு கேள்வி கேப்பேன் அதுக்கு நீ செரியா பதில் சொல்லிட்டா , உனக்கு பர்மிஷன் பிளஸ் ஆசீர்வாதம் எல்லாம் குடுக்கறேன்'' என்றார். சொல்லுங்கோ என்று முறைத்தபடி கைகட்டி நின்றான் சிஷ்யன். மவனே இப்போ மடக்கறேன் பாரு என்று நினைத்தவர்.. யோசித்துவிட்டு


''நீ போற எடம் ராயபுரம்.. மக்கள்லாம் செரி டெரரு , அங்க போனா உன்னை எல்லாரும் சேத்து காரித்துப்பி விரட்டி வுட்டா இன்னா பண்ணுவ''


''அதுக்கின்னா சாமி.. காரித்துப்பதான செய்றாங்கோ, தொட்ச்சு போட்னு போய்கினே இருக்க வேண்டியத்தான்.. அட்ச்சு கைய கால காவு வாங்காம வுட்டாலே போதும்'' என்றான் சிஷ்யன்


''ஒருவேளை அட்ச்சா? கைய காலல்லாம் ஒட்ச்சிட்டா இன்னா பண்ணுவ'' என்றார் சாமியார்.


''இன்னா சாமி.. அதுக்குலாம் பயந்தா ஆவுமா.. சாவடிக்காம வுட்டாலே போதும் , நான்லாம் பொழ்ச்சிப்பேன் உங்க டிரெயினிங்ல'' என்றான் சிஷ்யன்


''ம்ம்.. ஒருவேளை அட்ச்சே கொன்னுட்டா?''


''உங்களாட்டம் நாய்படாத பாடுபட்டுகினு அஞ்சுக்கும் பத்துக்கும் ஊர ஏமாத்திகினு அலையவேணாம் பாருங்க, நிம்மதியா போய் சேர்ந்துருவேன்'' என்று புன்னகைத்தபடியே சொன்னான் சிஷ்யன்!

 

 

(நன்றி ஜென்கதைகள்)

13 October 2010

இப்படியும் ஒரு வாரிசு

மீனாட்சி விஜயகுமார். வயது 47. தமிழ்நாடு தீயணைப்புத்துறையின் துடிப்பான வீராங்கனை. தென்கொரியாவில் நடைபெற்ற உலக தீயணைப்பு வீரர்களுக்கான ஒலிம்பிக் போட்டிகளில் குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவுக்காக தங்கப்பதக்கம் வென்று திரும்பியிருக்கிறார்.

1988லிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வந்தாலும் இந்தியர்கள் யாருமே இதுவரை பதக்கம் பெற்றதில்லை. இந்தியாவிலிருந்து பதக்கம் பெறுகிற முதல் வீராங்கனை நம்மூர் மீனாட்சிதான்..

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவதென்பது சாகசமும் சேவையும் இணைந்த சவாலான வேலை. இந்தியாவில் முதன்முதலாக தீயணைப்புத்துறையில் இணைந்த பெண் அதிகாரி தமிழ்நாட்டை சேர்ந்த மீனாட்சி விஜயகுமார் என்கிற செய்தியே யாருக்கும் அதிகமாய் தெரிந்திருக்காது.

டெல்லியில் உள்ள கல்லூரியில் ஆசிரியர் வேலை. மாதாமாதம் நல்ல சம்பளம். அழகான குழந்தை. அருமையான கணவர். வேறென்ன வேண்டும்! ஆனால் மீனாட்சிக்கு ஒரு தேடல் இருந்தது. கிரண் பேடியைப்போல , அன்னை தெரசாவைப்போல மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்கிற தீராத ஆர்வம் இருந்தது. அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது! அது கட்டுரையின் கடைசி வரியில்...

காக்கி உடை அணிந்து கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்யவேண்டும் என்பது படிக்கும் காலத்திலிருந்தே பசுமரத்தாணிபோல பதிந்து போன லட்சியம். அவருடைய தேடல் எப்போதும் அதை நோக்கியே இருந்தது.

2000ஆம் ஆண்டு வரைக்கும் இந்தியதீயணைப்புத்துறையில் பெண்களே கிடையாது. அந்த ஆண்டில்தான் இந்தியாவின் முதல் தீயணைப்பு வீராங்கனையாக மீனாட்சி தேர்ந்தெடுக்கப்பட்டார். ''ஆண்கள் மட்டுமே சவால்கள் நிறைந்த வேலைகளை செய்யமுடியும் பெண்களால் முடியாது என்கிற எண்ணத்தை மாற்ற நினைத்தேன் , மாற்றியும் காட்டினேன்'' என்று பெருமிதத்தோடு அந்த நாட்கள் குறித்து நினைவு கூர்கிறார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாட்டை சுனாமி தாக்கியபோது முதல் ஆளாக களத்தில் இறங்கி மீட்புப்பணிகளில் ஈடுபட்டாராம். தீயணைப்புத்துறையில் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு வயது 38!

தீயணைப்புத்துறையில் பணியாற்றுவது அவ்வளவு எளிதானதல்ல. 24 மணிநேரமும், 365 நாளும் பணியாற்ற வேண்டும். எப்போது அழைத்தாலும் உடனடியாக கிளம்பிப்போய் மக்களை காப்பாற்ற வேண்டும். உடல் உழைப்பு மிக மிக அதிகம். அதிக பயிற்சி தேவை. இதற்கெல்லாம் மேல் உயிருக்கு உத்திரவாதமே கிடையாது. விபத்துகளிலிருந்து மக்களை மீட்க களமிறங்கி தங்களுடைய இன்னுயிரை நீத்த எத்தனையோ தீயணைப்புத்துறை வீரர்களைப்பற்றி கேள்விப்பட்டிருப்போம். அப்படிப்பட்ட ஆபத்தான ஒரு பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள மீனாட்சியால் எப்படி முடிந்தது?

 13 வயதிலேயே இவருடைய தந்தை காலமாகிவிட , இவருடைய தாயார்தான் இவரையும் தங்கையையும் மிகுந்த சிரமங்களுக்கிடையே படிக்க வைத்துள்ளார். தினம் தினம் ஏதாவது பிரச்சனைகளுடனேயே வாழ்ந்து பழக்கப்பட்டதால் , அதனை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு , எப்படி அதை எதிர்கொள்வது என்கிற அந்த உத்வேகம்தான் தன்னை இப்போதும் துடிப்புடன் செயல்பட வைப்பதாகவும் கூறுகிறார்.

 ''நம்மால் முடியும், முடியாது என்பதை நாம்தான் தீர்மானிக்க வேண்டும், அதை நம்முடைய வயதோ , உடலோ தீர்மானிக்கக்கூடாது, எல்லாவற்றையும் நம்முடைய மனம்தான் முடிவு செய்ய வேண்டும். பெண்கள் உடல் அளவில் வலிமை குறைந்தவர்கள் என்று அறிவியல் கூறினாலும் மனதளவில் ஆண்களைவிடவும் வலிமையானவர்கள் , ஆண்களால் முடியாதவற்றையும் பெண்களால் சாதிக்க முடியும். பெண்கள் அதை உணர வேண்டும் '' என்று நம்பிக்கையூட்டுகிறார்.

குடிசைகள், சேரிகள் மற்றும் கடலோர பகுதிகள் தீயணைப்புத்துறைக்கு 24மணிநேரமும் வேலை காத்திருக்கும் வட சென்னை பகுதியில் நான்கு ஆண்டுகள் தீயணைப்புத்துறை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார். 200க்கும் மேற்பட்ட பேரிடர்களில் பங்கு கொண்டு மக்களை காத்துள்ளார். இதுவரை அவருக்கு கால்களில் மூன்று முறை விபத்து நேர்ந்து சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. கார்ப்ப்பை அகற்றுதல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் தொடர்ந்து தீயணைப்புத்துறையில் இயங்கி வருகிறார். இத்தனை சிரமங்களுக்கு நடுவிலும் விடாமுயற்சியும் போராட்டகுணமும்தான் தன்னை இயங்க வைப்பதாக தெரிவிக்கிறார்.

இப்படி நான்கு திசையிலும் பம்பரமாக , ஒருபக்கம் விளையாட்டு இன்னொரு பக்கமோ தீயணைப்பு பணிகள் என்று சுழலும் இவருடைய குடும்பத்தினர் இவரை எப்படி பார்க்கின்றனர்?

 ''கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் எங்கள் வீட்டில் தீபாவளி கிடையாது, பொங்கல் கிடையாது, பண்டிகளைகள் எதுவுமே கிடையாது, மகன் பிறந்தநாளில் கூட அவனோடு இருக்க முடியாது.. ஆனால் அதையெல்லாம் பொறுத்துக்கொள்ளும் அன்பான கணவரும், என்னுடைய வேலையை புரிந்துகொண்டு அன்புகாட்டும் மகனுக்கும் நன்றி சொல்லியே ஆகவேண்டும். ஆணோ பெண்ணோ வீட்டில் முழு ஒத்துழைப்பு கிடைக்காவிட்டால் யாராலும் சாதிக்கவே முடியாது. குடும்பத்தை கஷ்டப்படுத்தி நாம் சாதித்து என்ன ஆக போகுது சொல்லுங்க! வீட்டில் சமைத்துக்கொண்டிருப்பேன்... அலுவலகத்திலிருந்து அழைப்பு வரும் போட்டது போட்டபடி அப்படியே கிளம்பிவிடுவேன்.. என் கணவர் முகம் சுளிக்காமல் மீதி உணவை சமைப்பார், மகனை பார்த்துக்கொள்வார்'' என்று பெருமையாய் பேசினார். மீனாட்சியின் கணவர் விஜயகுமார் தற்போது விமான நிறுவனம் ஒன்றில் மனிதவளமேம்பாட்டு துறையில் பணியாற்றி வருகிறார்.

தென்கொரியா போட்டிகளுக்கு முன்பு விபத்தில் கால்களில் அடிபட! தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட முடியாத நிலை.. அதையும் எதிர்கொண்டு தன்னம்பிக்கையோடு வலியை பொறுத்துக்கொண்டு பயிற்சியை தொடர்ந்துள்ளார். தென்கொரியாவில் இவரோடு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கெல்லாம் வயது 30க்கும் கீழே!

அதைப்பற்றி கூறும்போது '' அங்கே போட்டிக்கு வந்திருந்தவர்கள் அனைவருமே இளம் வீரர்கள் , ஆனால் அதைக்கண்டு நான் மலைத்துவிடவில்லை, பதற்றப்படவில்லை. சவால்கள் நம்முன் வரும்போது அதை கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள வேண்டும்.. சவால்கள் சமாளிப்பதற்கு அல்ல , அவை நாம் சாதிப்பதற்கான வாய்ப்பு!

அந்தப்போட்டியிலும் எப்போதும் போலவே விளையாடினேன்.. வெற்றிபெற்றேன். சிறுவயதிலிருந்தே எந்த சவாலாக இருந்தாலும் அது வெற்றியோ தோல்வியோ அதை எதிர்கொண்டு போராடிபார்த்துவிட வேண்டும் என்கிற ஆர்வம் மட்டும் குறையவே இல்லை! ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறுகிறோமா என்பதைவிட கலந்துகொண்டு முழுமையாக ஓடவேண்டும் என்பதே முக்கியம்.. அதிலும் பெண்கள் நிச்சயம் எதையும் முடியாதென்று விலகிவிடக்கூடாது.. எந்த சவாலாக இருந்தாலும் ஒரு கைபார்த்துவிடவேண்டும்'' என்று புன்னகைக்கிறார் , எளிமைக்கும் நேர்மைக்கும் பேர் போன அரசியல் தலைவர் கக்கனின் பேத்தி மீனாட்சி விஜயகுமார். நாட்டுக்காக அர்ப்பணிப்போடு உழைக்கிற இப்படிப்பட்ட வாரிசுகளும் தமிழ்நாட்டில்தான் இருக்கின்றனர்!

-அதிஷா

நன்றி - புதியதலைமுறை

 

02 October 2010

எந்திரன் - பூம்... பூம்... ரோபோக்யா..விஞ்ஞானி ஒருவர் உருவாக்கும் ரோபோவிற்கு அறிவு முத்திப்போய் , அது அந்த விஞ்ஞானிக்கே உலைவைத்தால் என்னாகும் என்பதே எந்திரன். அது என்ன எப்படி யாரு எங்கே இத்யாதிகளை வெள்ளிதிரையிலோ 20 ரூபாய் டிவிடியிலோ காணலாம்..

தமிழுக்கு மட்டுமல்ல இந்தியாவுக்கு இப்படி ஒரு கதை மிகமிக புதியது. கதையின் துவக்கம் உலகம் சுற்றும் வாலிபனை நினைவூட்டினாலும் எடுத்துக்கொண்ட கருவும் அதை அழகாக செதுக்கித்தந்திருக்கும் திரைக்கதையும் ரொம்ப ரொம்ப புதுசு. அதற்காகவே ஷங்கருக்கு ஷல்யூட் அடிக்கலாம். இந்தியாவின் அவதார் என்று அவர்களாகவே படம் வெளிவரும் முன்பு சொல்லிக்கொண்டனர். படம் பார்க்கும் போது அது உண்மைதான் என தோன்றாமல் இல்லை. தமிழ்சினிமா அடுத்தகட்டமல்ல புலிப்பாய்ச்சலில் பல கட்டங்கள் தாண்டியிருக்கிறது. எந்திரன் அதை இந்திய சினிமாவிற்கு சாத்தியப்படுத்தியுள்ளது. இந்தியாவில் இப்படிப்பட்ட கதைகள் தோற்றுப்போகும் என்கிற அரதப்பழைய சென்டிமென்டை ஓங்கி அடித்து உடைத்தெறிந்துள்ளது எந்திரன் தி ரோபோட் திரைப்படம்.

படம் முழுக்க எங்கும் ரஜினி எதிலும் ரஜினிதான். அதிலும் ஆயிரக்கணக்கான ரஜினிகள்.. ரஜினிக்கு 60 வயதா! அடப்போங்கைய்யா! ச்சும்மா ச்சிக்குனு சிட்டுமாதிரி பறந்து பறந்து சண்டை போடுவதும் , காதல் அணுக்கள் பாடலில் பத்துவிநாடி ஸ்டைல் நடை போடுவதுமாய் இன்னும் கூட இளம் நாயகர்களுக்கு இணையாக ஆடிப்பாடுகிறார். அவருடைய சுருக்கங்களை மறைக்கும் மேக்கப் மற்றும் உடையலங்காரம் செய்தவர்களுக்கு ரஜினி சம்பளத்தில் பாதி கொடுத்தாலும் பத்தாது , கடின உழைப்பென்றால் என்னவென்று அவர்களிடம் டியூசன் எடுக்கலாம். முதல் பாதி ரஜினி - ஐஸ்க்ரீம் என்றால் இரண்டாம்பாதியில் மிளகாய் சட்னி!

மூன்றுமுகம் ரஜினியையும் உத்தம்புத்திரன் சிவாஜியையும் மிக்ஸியில் விட்டு அடித்தால் எப்படி இருக்கும் வில்லத்தனம்.. வாயை சுழித்த படி ரோபோவ் என்று ரஜினி சொல்ல தியேட்டரே அலறுகிறது. இந்த பாத்திரத்தில் ரஜினியைத்தவிர வேறு யாரையுமே நினைத்துக்கூட பார்க்கமுடியவில்லை. கமலால் இப்படி ஒரு வில்லத்தனத்தை உடலிலும் நடைஉடைபாவனையிலும் காட்டமுடியுமா என்பது சந்தேகம்தான். முதல்பாதியில் மென்மையோ மென்மையாய் பார்ப்பதும் பேசுவதும், இரண்டாம் பாதி முழுக்க... ரஜினி ராஜ்யம்தான்.

ஷங்கரின் உழைப்பு ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது. தற்போதைய தமிழ்சினிமாவில் ஸ்டோரிபோர்டெல்லாம் உபயோகித்து படமெடுக்கும் இயக்குனர் இவர்மட்டுமே என்பது என் அனுமானம். அனிமட்ரானிக்ஸ் தொழில்நுட்பத்தையெல்லாம் பயன்படுத்தியிருக்கிறார். திரைக்கதையையும் வசனத்தையும் வரிவரியாய் ரூம்போட்டு யோசித்து செதுக்கியிருப்பார் போல ஏதோ ஒரு கதாபாத்திரம் ‘ம்’ என சொல்வதாக இருந்தாலும் ஏதாவது புதுமை படைக்கலாமா என்று அஸிஸ்டென்ட்களை கூப்பிட்டு வைத்து யோசிப்பாராயிருக்கும். படம் முழுக்க ரஜினி ராஜ்ஜியமென்றால் பிண்ணனியில் ஷங்கரின் உழைப்பு பளிச்சிடுகிறது.

அதிலும் அந்த வில்லன் ரோபோட்டின் குணங்களை நிஜமாகவே உட்கார்ந்து யோசித்திருக்க வேண்டும். முதல்பாதியில் நல்லவனாக இருக்கும் ஒருவன் ஓவர் நைட்டில் கெட்டவனாக மாறுவதாக காட்டாமல் கொஞ்சம் கொஞ்சமாக காரணங்களோடு வில்லனாய் மாறுவதாக காட்சிகளை ஒன்றுகூட்டி காட்டியிருப்பது அருமை. ஸ்டேன்லி குப்ரிக்கின் படங்களில் (புல் மெட்டல் ஜாக்கட்,ஷைனிங்) இது போன்ற மாற்றத்தை சம்பவங்களின் ஊடாக அழகாக சொல்லியிருப்பார்.

ஐஸ்வர்யாராய்.. புஷ்வர்யாராய். ஒன்றும் பெரிதாய் சொல்வதற்கு எப்போதுமே இருந்ததில்லை. இந்தப்படத்திலும் அதுவே! கிளிமஞ்சாரோ பாடலில் மட்டும் பளிச்வர்யாராய். இந்த பாத்திரத்திற்கு ஏன் ஐஸ்வர்யாராய் என்பது குறித்து அண்ணாப்பல்கலைக்கழகத்தில் யாராவது ஆராய்ச்சி நடத்தலாம்!

சந்தானம்,கருணாஸ்,கலாபவன்மணி,ஹனீபா என நல்ல நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலேயே நடித்திருகின்றனர். அந்த ஹிந்தி வில்லன் அருமையாக நடித்திருக்கிறார். அவருக்கு பிண்ணனி பேசியவருக்கு நல்ல குரல், மாடுலேஷன்.

படத்தின் கிராபிக்ஸ் கிளைமாக்ஸ் தவிர்த்து எங்குமே பெரிதாய் உருத்தவில்லை. கிளைமாக்ஸ் காட்சி படு சொதப்பலாக இருந்தது. அதிலும் ரோபோக்கள் இணைந்து ராட்சசனாக நடந்து வருகிற காட்சியை ராமநாராயணன் குட்டிபிசாசு படத்தில் ஒருமுறையும், ஜகன்மோகினி படத்தில் தண்ணீராய் நமீதா நடந்துவருவதாகவும் காட்டிவிட்டார்கள். அது போக தினமும் போகோவில் ஒளிபரப்பாகும் பவர்ரேஞ்சர்ஸ் தொடரின் எல்லா எபிசோட் கிளைமாக்ஸும் அதுதானே!

படத்தின் முதல் பாக பிரமிப்பை , இடைவேளைக்கு பிறகு வரும் முதல் ஒருமணிநேர காட்சிகள் மொத்தமாய் அடித்து உடைக்கின்றன. அவ்வளவு மொக்கை. அதிலும் கொசுவைத்தேடி ரஜினி அலைவதாக காட்டப்படும் காமெடி.. கொட்டாவி அன் கம்பெனி. அதற்கு பின் வரும் கிண்டி கத்திப்பாரா சேஸிங்கும் அதே அதே! ஆனால் கடைசி 45நிமிடம் பரபரவென பறக்கிறது. ஆனாலும் படம் கொஞ்சம் நீளம்தான்.. மூன்று மணிநேரம் ஓஓஓஓஓஓடுகிறது. படத்தின் வசனங்கள் பலவும் கம்ப்யூட்டரோடு தொடர்பு படுத்தியே..ஜிகா ஹெர்ட்ஸ் டெராபைட்ஸெல்லாம் தெரியாத என்னைப்போன்ற கணினி அறியா அறிவிழிகளுக்கு.. ஙே!

படத்தின் கலை இயக்குனர் சாபுசிரிலின் மட்டையை பிதுக்கி வேலை வாங்கியிருப்பார்கள் போல! படம் முழுக்க செடி கொடி மரம் மட்டை குடி குட்டை எல்லாமே அழகு. ஒரு காட்சியில் நடித்தும் காட்டியுள்ளார். ரோபோ சப்தங்களை உருவாக்கியது யாரென்று தெரியவில்லை..ரசூலா? ரஹ்மானா? யாராக இருந்தாலும் சவ்ண்ட் அபாரம். அவருக்கு ஒரு சபாஷு. ரஹ்மானின் பாடல்களில் கிளிமஞ்சாரோ மட்டும் கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கிறது.. அவ்வளவு இனிமை.. காதல் அணுக்கள் அதற்கு அடுத்த ரேங்க். மற்றபடி கிளைமாக்ஸில் பிண்ணனியாக வரும் அரிமா அரிமா தீம்.. பச்சக் என ஒட்டிக்கொள்கிறது.

பைசென்டெனியல் மேன் திரைப்படத்தின் சாயல் இருப்பதாக சொன்னாலும்.. அப்படி ஏதும் இருப்பதாய் தெரியவில்லை. (ரோபோ மனிதனை காதலிப்பது , அந்த தோலில்லாத ரோபோவின் உருவம் தவிர). குடும்பம் குட்டிகளோடு குதூகலமாய் பார்க்கவும்.. குழுவாய் போய் குஜாலாக பார்க்கவும் சிறந்தபடம். மற்றபடி உங்களுக்கு இதுவரை ரஜினியை பிடிக்கவில்லையென்றாலும் கூட இந்தப்படத்திற்கு பிறகு நிச்சயம் ரசிகராகிவிடும் வாய்ப்பு மிகமிக அதிகம்!

ரன்னோ ரன்னென்று ரன்னுவான் இந்த எந்திரன்! DOT