Pages

13 December 2010

எங்கள காப்பத்த யாருமே இல்லையா... – விருதகிரி விமர்சனம்!



‘’எங்கள காப்பாத்த யாருமே இல்லையா’’ என ஒட்டு மொத்த தமிழகமும் கூக்குரலிட அங்கே மக்களை காக்க நீதியை காக்க நியாயத்தை காக்க தர்மத்தை காக்க புயலென தோன்றினார் தேமுதிக தலைவரும் டாக்டரும் கேப்டருமான புரட்சி கலைஞர் விஜயகாந்த். கலைஞரை எதிர்த்து அரசியல் செய்யும் ஒப்பற்ற எழில் சூரன் நம் விஜயகாந்த். அவரால் மட்டும்தான் இனி இந்தியா வல்லரசாக முடியும். அவரால் மட்டும்தான் காஷ்மீர் பிரச்சனையை தீர்க்க முடியும். அமெரிக்காவால் கூட அடக்கமுடியாத தீவிரவாதிகளை ஒற்றை ஆளாய் சிங்கம் போல் பின்னாங்காலால் உதைத்து தாக்கி அழித்துவிடும் ஆற்றல் பெற்றவர் நம்முடைய கேப்டர் விஜயகாந்த். தண்ணீர் பிரச்சனையா , மின்சாரம் இல்லையா, லஞ்சமா, ஊழலா, அநியாய வட்டி வாங்குகிறார்களா, பஞ்சாத்து பிரச்சனையா எதையும் எதிர்கொண்டு போரிட்டு நமக்கான சமநீதியை பெற்றுதர தெற்கே மதுரையில் பிறந்த செம்மல் நம் விஜயகாந்தால் மட்டும்தான் இயலும்.

இதுவரை தமிழகத்திற்காகவும் அதன் வளர்ச்சிக்காகவும் விஜயகாந்த் மேற்கொண்ட போராட்டங்களும் புரட்சிகளும் எண்ணிலடங்கா.. அதற்காக அவர் இழந்தவை சொல்லி மாளாது. தன் உயிரையும் துச்சமென நினைத்து மக்களுக்காக போராடும் ஓரே பச்சைத்தமிழன் விஜயகாந்த் மட்டும்தான். இன்னொருவர் எல்.கே.சுதீஷ். இன்னொருவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் விஜயகாந்தின் புரட்சி வரலாற்றை.. ஏழைகளின் கலங்கரை விளக்கம்.. பாதிக்கப்பட்டோரின் விடிவெள்ளி.. மக்களின் எழுச்சி.. தமிழகத்தின் புதுப்புரட்சி அவர்தான் டாக்டர்.. கேப்டர்.. என்றெல்லாம் மக்களால் அன்போடு அழைக்கப்படும் நம் தமிழின போராளி விஜயகாந்த்.

மேலே இருக்கும் வாசகங்கள் எல்லாமே உண்மை என நம்புகிற ஆளாக இருந்தால் உங்களுக்கான படம்தான் விருதகிரி. தயவு செய்து இந்த படத்தை பார்த்துவிட்டு தேமுதிகவில் உறுப்பினராக சேர்ந்து விடவும். தேமுதிக பிரச்சார டாகுமென்ட்ரியையே வாய்பிழந்து பார்க்கிறவர்களின் வாழ்வில் மிகமுக்கியமான காவியம் விருதகிரி.

மேலே உள்ளவற்றை படித்து புன்னகைத்திருந்தாலோ அல்லது சிரித்திருந்தாலோ உங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சிரிப்பான படத்தை பார்த்திருக்கவே முடியாது என்று சொல்லும் அளவிற்கு மகா காமெடியான திராபை இந்த விருதகிரி. இதற்கு முன் நரசிம்மா என்கிற மகா காவியத்திற்கு இப்படிப்பட்ட ஒரு காமெடி வரலாறுண்டு. அதையும் விஞ்சுகிறது இவ்விருதகிரி. காட்சிக்கு காட்சி சிரிக்க வைத்து வயிறுவலிக்க செய்கிறார் படத்தின் இயக்குனரும் ஹீரோவுமான விஜயகாந்த். (இப்படிப்பட்ட வித்யாசமான முயற்சிகளை டி.ராஜேந்தர் (எஸ்.டி.ஆரின் அப்பா) நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை செய்வது வழக்கம்)

பாட்டி வடை சுட்ட கதையிலிருந்தே விஜயகாந்த் நடித்த பல கதைகளும் தோன்றின. விருதகிரியின் கதையும் அப்படித்தான் தோன்றியிருக்க வேண்டும். பாட்டியாக விஜயகாந்த்.. வடையாக ஒரு இளம்நடிகை... காக்காவாக அல்பேனிய பாஷை பேசும் ஆஸ்திரேலிய தீவிரவாதிகள். விஜயகாந்த் பொத்தி பொத்தி வளர்க்கும் நாயகியை கொத்திக்கொண்டு போகின்றனர் தீவிரவாதிகள். தீவிரவாதிகளை பந்தாடுவதென்றால் நம் நாயகருக்குத்தான் ஆந்திராமீல்ஸ் மாதிரியாச்சே! விடுவாரா.. விரட்டி விரட்டி பின்னங்காலால் உதைத்து உதைத்து , சுவர் மேல் ஏறி உதைத்து கடைசியில் இந்தியா,ஆஸ்திரேலியா,பர்மா,இலங்கை,சிங்கப்பூர் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட நாடுகளை தீவிரவாதிகளிடமிருந்து மிகக்கடுமையான போராட்டத்திற்கு பிறகு காப்பாற்றுகிறார். தியேட்டரில் படம் பார்க்கும் நம்மை காப்பாற்றத்தான் ஆள் இல்லை. இதே கதையை அண்மையில் ஜக்குபாய் என்கிற பெயரில் இன்னொரு அரசியல் தலைவரும் பிரபல நடிகை ராதிகாவின் கணவரும் சமக கட்சியின் நிறுவனருமான சரத்குமார் ஜக்குபாய் என்கிற படத்தில் உபயோகித்திருந்தார்.

இந்த மொக்கை கதை ஹாலிவுட்டிலேயே கழுவி ஊற்றப்பட்டதென்பது நம்மூர் அரசியல் வாதிகளுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. டேக்கன் படம் ஹாலிவுட்டிலேயே சுமாராக ஓடியபடம். அதை ஆளாளுக்கு காப்பியடித்து படமெடுக்கத் தொடங்கினால் நாடு தாங்குமா.. அதுவும் பிரபல அரசியல் தலைவர்கள்!

மற்ற பிரபல அரசியல்வாதிகளான கார்த்திக்,விவேக்,கருணாஸ்,குண்டுமணி,வாகை சந்திரசேகர்,உதயநிதி ஸ்டாலின் ஆகியோரும் இதே கதையின் இன்னொருமுறை ஹீரோவாக நடித்து நம்மை ஹிம்சிக்காமலிருக்க வேண்டும். இதற்காகவாவது அம்மா ஆட்சிக்கு வந்து இவர்களது கொட்டத்தை அடக்க வேண்டும்.

படம் முழுக்க யாருமே சாதாரண வசனங்கள் பேசுவதில்லை. வில்லன் தொடங்கி அடிபொடிகள் வரை அனைவருமே பஞ்ச் பேசுகிறார்கள். எல்லாமே ஆளுங்கட்சி எதிர்ப்பு பஞ்சுகள். நம் காது பஞ்சராகும் வரை பஞ்ச் தொடர்கிறது. சில ஒரு காட்சியில் திருட்டு டிவிடியில் படம் பார்க்கும் போலீஸான மன்சூர் அலிகான் சொல்கிறார் ‘’அதெப்படிய்யா வாரிசுகள் படம் மட்டும் டிவிடி வரமாட்டேங்குது.. மத்தபடம்லாம் டிவிடி பக்காவா வந்துடுது’’ , இன்னொரு காட்சியில் விஜயகாந்த் சந்தையில் நடந்து வர ஒருவர் ‘’அய்யா உங்கள பார்த்தா ரொம்ப நல்லவரா இருக்கீங்க.. எங்க ஏரியால பைப் போட்டாங்க தண்ணியே வரலைங்கய்யா.. ‘’ அருகில் இருப்பவர் ‘’அய்யா கிட்ட சொல்லீட்டீங்கல்ல.. நிச்சயம் நல்லது நடக்கும்.. அவர் அரசாங்கத்துல வேலை செய்யும்போதே மக்களுக்கு இவ்ளோ நல்லது பண்றாரு.. அரசாங்கமே அவருகிட்ட வந்துடுச்சின்னா தமிழ்நாடுஎப்படி ஆய்டும்’’. இப்படி படம் முழுக்க ஆளாளுக்கு நீங்க இப்பவே இவ்ளோ பண்றீங்க ஆட்சிக்கு வந்தா என்னலாம் பண்ணுவீங்க என வாசித்துக்கொண்டேயிருப்பது படத்தின் சிறப்பு.

படம் முழுக்க ஆங்கிலேயர்களும் ஆஸ்திரேலியர்களும் அல்பேனியர்களும் பேசும்போது பிண்ணனியில் தமிழ் டப்பிங் கொடுத்திருப்பது நல்ல யுக்தி. அதிலும் விஜயகாந்த் சிலகாட்சிகளில் பேசும் ஆங்கில வசனங்கள் தியேட்டரில் சிரிப்பலைகளை கிளப்புகின்றன. குறிப்பாக நாயகியை கடத்திவிடும் வில்லன் விஜயகாந்திடம் போனில் பேச.. விஜயகாந்தோ..’’யார்ரா நீ. தீவிரவாதியா.. உன் டிமான்ட் என்ன , இந்திய ராணுவ ரகசியங்கள் வேணுமா.. குண்டு வைக்கணுமா.. யார்ரா நீ..நேர்ல வந்தேன் அவ்ளோதான்’’ என்றெல்லாம் பேசும் காட்சி தமிழ்திரையுலகம் காணாதது.

படத்தில் தேவையேயில்லாமல் நான்கு பாடல்கள் வந்துபோகின்றன. இசை சுந்தர் சி பாபுவாம். அய்யகோ இவர்தான் மிஷ்கினின் அஞ்சாதேவிற்கும் இசையென்று சொன்னால் அடிக்க வந்துவிடுவார்கள்.. கர்ணகொடூரமான இசை. படத்தின் காமெடியில் இசையும் கடந்து போகிறது.

மற்றபடி ஊழலுக்கு எதிராக வீதிக்கு வீதி மேடைபோட்டு தலையில் குல்லா போட்டு கொட்டுமழையிலும் கேப்டர் ரீவியில் முழங்கும் விஜயகாந்த் , ஹாலிவுட் படத்தின் கதையை மட்டுமல்லாமால் வசனம் உட்பட காப்பியடித்து படமெடுத்திருப்பது , வருங்காலத்தில் கலைஞர் கருணாநிதிபோல புரட்சிதலைவி ஜெயலலிதா போல மிகப்பெரிய அரசியல்வாதியாக வரப்போவதற்கான பிரகாசமான எதிர்காலத்தின் அறிகுறியாகத் தெரிகிறது.
இதற்குமேலும் தொடர்ந்து இந்தக்கட்டுரையை நீங்கள் வாசித்துக்கொண்டிருந்தால் உங்களுக்காகத்தான் காத்திருக்கிறது தேமுதிக! உடனே உறுப்பினராகிவிடுங்கள்!
விருதகிரி – உட்டாலக்கடி கிரிகிரி தேமுதிக வடைகறி!