Pages

14 December 2010

லத்தீன் அமெரிக்க சமோசா!
சில மாதங்களாக காமராஜர் அரங்கத்தில் என் புத்தக வெளியீடு.. என் புத்தக வெளியீடு.. என போகுமிடமெல்லாம் அறைகூவல் விடுத்து.. எதை எழுதினாலும் அதில் இரண்டு வரி அறிவிப்பை சேர்த்துவிட்டு ஏகத்துக்கும் எதிர்பார்ப்பை கிளப்பியிருந்தார் எழுத்தாளர் சாரு என்கிற சாருநிவேதிதா! விருதகிரியை வெளியிட விஜயகாந்த் எப்படியெல்லாம் உழைத்தாரோ அதற்கு இணையான உழைப்பை கொட்டித்தான் இவ்விழாவையும் ஒருங்கிணைத்திருக்கிறார் சாரு.

சாருவின் புத்தகவெளியீடு வெற்றிபெற நானும் தோழரும் மொட்டையடித்து ஒரு மண்டல விரதமிருந்து நாக்கில் அலகு குத்தி, பால்காவடி எடுத்து காமராஜர் அரங்கம் நோக்கி பாதயாத்திரை செல்ல முடிவெடுத்திருந்தோம். அந்த பால்காவடி பாலினை வாசலில் வைத்திருந்த கட்அவுட்டிற்கு அபிஷேகம் செய்யவும் திட்டமிட்டிருந்தோம். அவருடைய புத்தகத்தினை யானை மீது வைத்து பேண்டு வாத்தியங்கள் முழங்க எடுத்து வந்து வெளியிடவும் நினைத்திருந்தோம்.

போதிய ஸ்பான்சர்கள் கிடைக்காத காரணத்தால் அதையெல்லாம் சாதிக்க இயலவில்லை. அதனால் எப்போதும் போல அந்திப்பொழுதில் அலுவலகத்தை மட்டமடித்துவிட்டு எப்போதும் போல பைக்கிலேயே ஆராவாரமின்றி அரங்கத்தை நோக்கி செல்ல வேண்டியதாயிருந்தது. அரங்க வாயிலிலேயே சாருவின் நான்கடி கட்அவுட் வைக்கப்பட்டிருந்தது. அந்த கட்டவுட்டின் அருகிலேயே எங்கோ கல்லடிபட்ட சொறிநாய் ஒன்றும் படுத்திருந்தது. பாவம்! யார் அடிச்சாரோ ஆரடிச்சாரோ என பாடிக்கொண்டே உள்ளே நுழைந்தோம். வாசலிலேயே அவந்திகா அம்மாவும் இன்னொரு யுவதியும் எங்களை வரவேற்றனர். அரங்கத்திற்கு வலதுபுறமிறந்த முட்டுசந்தில் டீயும் சிற்றுண்டியும் வழங்குவதாக தெரிவித்தனர்.

லத்தீன் அமெரிக்காவின் சந்துபொந்துகளை கரைத்து குடித்தவரான சாருவின் நிகழ்ச்சி என்பதால் லத்தீன் அமெரிக்க சிற்றுண்டிகளும் சிலே அல்லது கூபா வொயினும் கிடைக்குமென ஆவலோடு போய்ப்பார்த்தால்.. சூடான சமோசாவும் வட்ட கப்பில் டீயும் வழங்கப்பட்டது. ச்சே.. அடுத்த ஆண்டாவது சமோசா கொடுத்தாலும் அதற்கு லவோசா , லே பிராசா என லத்தீன் அமெரிக்க பெயர் சூட்டி வழங்குங்கள் சாரு. என்னைப்போல் லத்தீன் அமெரிக்க பீட்சாபட்சினிகளின் ஏமாற்றத்தினை தடுக்கவியலும்.

சாருவின் ரசிகர் வட்டம் பத்தாண்டுகளுக்கு முன்பிருந்ததைப் போல இன்னும் சமோசா டீயோடு முடித்துக்கொள்ளும் பூட்டகேசுகள் அல்ல.. காப்பூசீனோவோடு வொயினைக்கலந்து பீட்சாவை ஒரு கடி கடித்துண்ணும் சூப்பர்மாடர்ன் இளைஞர்கள் என்பதை சாரு உணரவேண்டும். மற்றபடி யார் அந்த சமோசாவிற்கு ஸ்பான்சர் செய்திருந்தாலும் அவருக்கு நன்றி. சூடான சமோசாவும் அதிசூடான தேநீரும் குளிர்ந்த ஏசி அரங்கத்தில் நல்ல சுவை.

இணைய எழுத்தாளர் சமூகம் அங்கே குவிந்திருந்தது. யாரையும் குறிப்பிட்டு பெயர் சொல்ல முடியாத அளவிற்கு அத்தனை பேர் வந்திருந்தனர். அத்தனை பேர் வந்திருந்தனர் என்றால் அத்தனை பேர் வந்திருந்தனர். அனைவரும் நிகழ்ச்சி முடியும் வரை அமர்ந்து ரசித்துவிட்டே நகர்ந்தனர். அரங்கத்தில் சாருவிற்கு மிகப்பெரிய பேனரெல்லாம் வைத்திருந்தனர். மிகமிகப் பெரிய பிரமாண்ட பேனர் அது.

நிகழ்ச்சிக்கு குஷ்பூ வருகிறார், அவரை தரிசிக்கவேண்டும் என்பதற்காகவே திண்டுக்கல்லிலிருந்து உடன்பிறப்பு ஒருவர் மஞ்சள்பையை ஆட்டிக்கொண்டு வந்திருந்தார். அவருக்கு சாரு என்றால் யாரென்றே தெரியாது. என்ன கொடுமையான சமகால தமிழ்ச்சூழலில் வாழ்கிறோம் பாருங்கள். குஷ்பூவை தெரிகிறது சாருவை தெரியவில்லை. 90களின் இளைஞர்களான இன்றைய பெரிசுகள் சிலதும் ஜோள்ளோடு குஷ்பூவை காண கூடியிருந்தனர். இந்த விழாவிற்கு குஷ்பூ எதற்கு என அரைபக்க கட்டுரை வாசித்தார். ஏதேதோ சொல்லி சமாளித்தாலும் குஷ்பூ கவர்ச்சிக்காக சேர்க்கப்பட்ட பிற்சேர்க்கை என்பது இலக்கிய உலக பிதாமகன்கள் தொடங்கி நந்தா,சேது வரை அனைவருக்கும் தெரியும். சாருவுக்கும் ம.புவுக்கும் மட்டும் தெரியவில்லை. சாரு செய்த புண்ணியமோ என்னவோ குஷ்பூ சிலபல காரணங்களால் கடைசிவரைக்கும் வரவேயில்லை. பல குஷ்பூ ரசிகர்களும் 10.30வரைக்கும் காத்திருந்துவிட்டு வாடியமுகத்துடன் வீடுதிரும்பினர் என்கிற சோகத்தை சொல்லும்போதே என்கண்களிலும் கண்ணீர் கசிகிறதே!

ஆயிரத்திற்கும் மேல் வாசகர்கள் அமர வசதியிருந்தாலும் அதில் 75 சதவீத இருக்கைகள் நிரம்பியிருந்ததை காண முடிந்தது. சாருவின் ஜீரோ டிகிரியை ஆங்கிலத்தில் படித்த அழகான இளம்வாசகிகள் பலரும் ‘’யெஸ்,நோ,வாட்,ஓகே,ஓ மை காட்’’ என ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தனர். எனக்கு அந்த அளவுக்கு ஆங்கிலம் தெரியாது என்பதால் தமிழ்தெரிந்த பெண்களை தேடினேன்.. தமிழச்சி தங்கபாண்டியனும் கனிமொழியும் அமர்ந்திருந்தனர், நான் உட்கார்ந்த இடத்திலிருந்தே கை ஆட்டி டாட்டா காட்டினேன்.. அவர்களும் புன்னகைத்தனர். பாலகுமாரன் முன்வரிசையில் உட்கார்ந்திருக்கிறார் என்றனர் எட்டி எட்டி பார்த்தேன் அவருடைய வெள்ளை மண்டைதான் தெரிந்தது அதற்கும் ஒரு முறை ஆட்டிவைத்தேன்.

மிஷ்கின் இரவிலும் கண்ணாடி அணிந்தே மேடையில் காட்சியளித்தார். அவரை பார்க்க பார்வை குறைபாடுள்ளவர் போலவே தோன்றினாலும் அவருடைய நந்தலாலா தமிழ்சினிமாவின் மைல்கல் என்பது கிட்டானோவுக்கே தெரியும். நல்லிகுப்புசாமி செட்டியார் பட்டுமாதிரி தகதகவென மின்னினார். மதன் வாயில் வெத்தலையோ சீவலோ எதையோ அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். எஸ்ராமகிருஷ்ணன் மேடையேற நல்குணமும் பெருந்தன்மையுங்கொண்ட சாருவின் ரசிகர்கள் அவருக்கும் விசிலடித்து ஹோவென கத்தி வரவேற்பு நல்கினர். இதுமாதிரி ஒரு வரவேற்பை அவர் வாழ்நாளில் பார்த்திருக்கவியலாது. அவருக்கே ஒருமாதிரி ஆகியிருக்க வேண்டும். முகத்தில் ஒன்றரை டின் டால்டா வழிந்தது. சாரு மட்டும் ஒருபக்கம் தமிழச்சி இன்னொரு பக்கம் கனிமொழி என செட்டில் ஆகிவிட ரவிக்குமார் எம்எல்ஏ தான் பாவம், ஒருபக்கம் நல்லிகுப்புசாமி செட்டி இன்னொரு பக்கம் நடராஜன் என பாவமாய் அமர்ந்திருந்தார்.

தன்னுடைய புத்தகங்களை தனக்கு மிகநெருக்கமான நண்பர்களை கொண்டே வெளியிட்டு நண்பர்களை கௌரவித்தார் சாரு. அதில் நம்முடைய கவிஞர் நர்சிம் சாருவின் சரசம் சல்லாபம் சாமியார் புத்தகத்தை வெளியிட்டபோது பதிவர்கள் வெறியோடு விசிலடித்து அவரை கௌரவித்தனர். மற்றபடி கனிமொழி சாருவுடனான நட்புகுறித்தும் தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு பொறுப்பே இல்லை என்றும் பேசினார். ஸ்பெக்ட்ரம் ராடியா என்று கத்திவிட தோன்றினாலும் அதிமுரட்டு சாரு ரசிகர்களிடம் உதைவாங்குமளவுக்கு எனக்கு தெம்பில்லை என்பது எனக்கு மட்டும்தான் தெரியும்.

தமிழச்சி தங்கபாண்டியன் காலாவதியான சார்த்தரின் தத்துவங்கள் குறித்து பேசினார். எஸ்ரா அவருடைய கட்டுரைகளை போல புரிந்தும் புரியாமலும் நிறைய பேசினார். மதன் சிரிப்பூட்டும் வகையில் ஏதேதோ பேசினார். மிஷ்கின் நந்தலாலா திரைப்படம் உருவாக அவருடைய உழைப்பு குறித்து சுயசிலாகித்து பேசினார். ரவிக்குமார் பேசும்போது நான் தம்மடிக்க வெளியே சென்றுவிட்டேன்.

சாரு நிறைவாக பேசும்போது நிறைய பேசினார். ஏழு புத்தகங்களையும் வாங்க ஆவலோடு சென்று அந்த கடையை பார்த்தேன். இப்படியாக இரவு பத்து முப்பதுக்கு மேல் இந்த விழா இனிதே முடிவடைந்தது. அதற்கு மேல் நான் வீட்டிற்கு சென்று சேரும் போது மணி 12க்கு மேல் ஆகிவிட்டதால் மனைவியிடம் செம்ம அடிவாங்கியதோடு இரவு உணவும் கட்!

இதுதான் நடந்தது.