Pages

09 February 2011

முடிச்சுகாற்றில் உந்தன் கீதம் காணாத ஒன்றைத்தேடுதே.. நல்ல பாட்டுதான், வால்யூமை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நினைத்தான் பாஸ்கர். நினைத்தநொடி ஏனோ வால்யூம் நிஜமாகவே குறைக்கப்பட்டது. ஆச்சர்யப்பட்டுக்கொண்டான். மெல்லியதாக புன்னகைத்தான். அவனால் எப்படி இந்த நிலையிலும் புன்னகைக்க முடிகிறது என எண்ணினான். அதற்கும் புன்னகைத்தான். ஜன்னல் வழியாக ஒருமுறைக்கு இருமுறை தலையை நீட்டி ஜன்னல்வழியே எட்டிப்பார்த்தான் ராஜேஷ் பின்னால் வருகிறானா..? இல்லை. நிம்மதியாக இருந்தது. படபடப்பும் கொஞ்சம் குறைந்திருந்தது.

அவன் இதற்கு முன் எப்போதும் எதற்காகவும் திருடியதே இல்லை. பாஸ்கருக்கு நினைவு தெரிந்து இதுதான் முதல் திருட்டு. பாக்கெட்டில்தான் இருந்தது அந்த முன்னூறு ரூபாய். இரண்டு நூறு ரூபாய் நோட்டுகள் இரண்டு ஐம்பது ரூபாய் நோட்டுகள். அதில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளும் அழுக்கு படித்துபோய் செல்லுமோ செல்லாதோ என்பது போல் கிழியும் நிலையிலிருந்தது. ‘’கஷ்டப்பட்டு திருடின காசு செல்லாம போச்சின்னா’’ , மெல்லியதாக புன்னகைத்தான்.

எப்போதும் யாராவது திருடிக்கொண்டேதான் இருக்கின்றனர். திருட்டு.. திருட்டு.. திருட்டு.. ஒரு லட்சத்து எவ்வளவோ கோடி.. ஆதர்ஷ்.. கறுப்பு பணம்... நிலபேர ஊழல்.. பீரங்கி.. சுடுகாடு.. கலைஞர் ஜெயலலிதா ஆராசா கனிமொழி சசிகலா நடராசன் லாலு காங்கிரஸ் அடேங்கப்பா! எல்லா திருட்டுக்கும் அடிப்படையில் ஏதாவது இன்றிமையாத காரணங்கள் இருந்திருக்கும் என நினைத்துக்கொண்டான். அதையே அந்தப்பேருந்து கடந்து சென்ற கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த போஸ்டர்களும் தெளிவுபடுத்தின.

ஆள் அதிகமில்லா பஸ் வேகம் பிடித்தது. சூடான காற்று முகத்தில் அடித்தபடியிருந்தது. தலைமுடி மேல்நோக்கிப் பறந்தது. அவன் திருடுவதற்கான நியாயமான காரணங்கள் ஒவ்வொன்றாய் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் ஓரளவு இருந்தன. அதையெல்லாம் ஒன்றொன்றாய் பட்டியலிட்டான். எல்லாமே நேர்மையான மற்றும் உண்மையான காரணங்களாயிருந்தன. தன்னைப்போலவே மற்றவருடைய எல்லா திருட்டுக்குமே ஏதாவது ஒரு நேர்மையான நியாயமான உண்மையான காரணமும் நிச்சயம் இருந்திருக்க வேண்டும்.

இரண்டு நாள் பசியோடிருந்தபோதும் திருடியதில்லை. ஒரு டீயும் சிகரட்டும் போதும், அதை தெருமுக்கு கடை அண்ணாச்சி திட்டினாலும் கடனாக கொடுத்துவிடுவார். ஆனால் இன்று ஏன்... ம்ம்... இனி ராஜேஷின் முகத்தில் எப்படி முழிப்பேன் , சுந்தரோட ஏற்கனவே பிரச்சனை வந்தாச்சு.. இனி அவசர ஆத்திரத்துக்கு யார்கிட்ட போறது.. யாரிடம் அடைக்கலம்..?? தொடரும் சிந்தனையோடு சிந்தனைகளாக தொடர்ந்து பஸ் வேகம் பிடித்தது. கண்டக்டரின் தோள் குலுக்கலுக்கு பின் டிக்கட் வாங்கிக்கொண்டான்.

அவனுக்கு முன்னால் அமர்ந்திருந்த பெண்ணின் தலையிலிருந்த மல்லிகைப்பூ மணம்.. மூக்கிற்கு இதமாய் இருந்தது. மனதிற்கும். புதிதாய் திருமணமான பெண்ணாக இருக்க வேண்டும். அவர்கள் பேசுவது நன்றாக காதில் விழுந்தது. கழுத்தில் மஞ்சள் அப்பிய தாலி அதை உறுதிசெய்தது. அருகிலிருந்தவன் ‘’எங்கமா போறது.. திடுதிப்புனு கிளம்பிவந்துட்ட.. உன் புருஷனுக்கு உங்கப்பா என்ன பதில் சொல்லுவாரு, அவரு இனிமே எப்படி மானத்தோட வாழ்வாரு’’ என்றான். அடிக்கும் அதிவேக காற்றோடு அக்குரலும் காதில் விழுந்தது.

‘’அதப்பத்தி எனக்கு கவலையில்ல.. நாம எங்கயாவது போயிடுவோம்.. நீ என்னை உண்மையா லவ் பண்றதானே.. எனக்காக உயிரையே குடுப்பேனு சொன்ன.. இப்ப என்ன.. எங்கயாவது அழைச்சிட்டுபோ.. ப்ளீஸ்டா, என்னால அந்த கோழையோட வாழமுடியாது, நேத்து அந்தக்கடைல எவனோ எதையோ திருடினானு போட்டு அந்த அடி அடிக்கறான்.. பைத்தியக்காரன், அப்பாவுக்காகத்தான் அவன கல்யாணம் பண்ணிகிட்டேன் ஆனா இப்போ நீதான் என்னை காப்பாத்தணும்.. உனக்காக நான் என்னையே கொடுத்திருக்கேன்’’ அவன் தோளில் சாய்ந்தபடி கொஞ்சமாய் மிரட்டும் தொனியுடன் அன்பாகப் பேசினாள்.

ஏதோ கள்ளக்காதல் மேட்டர் போலருக்கு என காதை கூர்தீட்டிக்கொண்டு கேட்கத்தொடங்கினான் பாஸ்கர். இந்தப்பொண்ணோட குரல எங்கயோ கேட்டமாதிரி இருக்கே , தெரிஞ்ச பொண்ணா இருக்குமோ என அவளை பார்க்கும் ஆவலோடு சீட்டில் அமர்ந்தபடியே எட்டி எட்டிப்பார்த்தான்.. ம்ஹும் பார்க்கமுடியவில்லை. ஆனால் இவன் எட்டிப்பார்ப்பதை அவள் பார்த்துவிட்டாள். ‘’என்னங்க பின்னால ஒருத்தன் நம்மள எட்டிப்பாக்கறான்’’ என்றாள் அவள். பையன் சீட்டிலிருந்து எழுந்து பின்னால் பார்த்து ‘’ என்ன’’ என்று பாஸ்கரை நோக்கி கேட்டான்.

பாஸ்கர் ஒன்றுமில்லை என்பதைப்போல தலையை ஆட்டிவிட்டு தலைகுனிந்து அமர்ந்தான்.. ச்சே பஸ்ஸில் அனைவரும் அவனையே பார்ப்பதாக உணர்ந்தான். அனைவரும் அவனையே பார்த்தனர். சிலர் சீட்டிலிருந்து எழுந்து நின்று பார்த்தனர். தலையை குனிந்துகொண்டான்.. நல்ல வேளை அவன் அடிக்கல..உச்சந்தலையில் காற்று வேகமாக அடிக்க.. சாலை வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.

****

சாலை வேகமாக நகரத்தொடங்கியிருந்தது. டிரைவர் கிளட்ச் மிதித்து கியர் மாற்றினான். கார் மேலும் வேகம் பிடித்ததுது. துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம் போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம்.. பாடியது கார் ஸ்டீரியோ. ‘’ஏய் ஏன்டா! சவுண்ட கொறடா,’’ கடிந்தார் பெரியவர்.

‘’ஏன்டா அந்த அடி வாங்கினியே ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம்ல’’ அவனுடைய கசங்கிய சட்டையின் கீழ்முனையை மேலிருந்து கீழாக இழுத்து சரி செய்தபடி அவர் அருகில் அமர்ந்திருந்தவனிடம் கேட்டார் வெள்ளைத்தலை பெரியவர்.

அவருக்காக பேசக்காத்திருந்தவன், ‘’இல்லைங் மாமா நான் சொல்லலாம்னுதான் நினைச்சேன், அந்தாளு கஸ்டமர் மாமா.. என்னை பேசவேவுடாம காலரை புடிச்சி பளார் பளார்னு அறைஞ்சிட்டே இருந்தான்... அதுவும் நம்ம கடைல புதுசா சேர்ந்த செவத்த பையன் அவன்தான் மொதல்ல திருடன் திருடன்னு கத்தினான்.. ஓடிவந்து என் கைய புடுச்சிட்டு அடிக்கவும் ஆரம்பிச்சிட்டான்.. எனக்கு தலையெல்லாம் சுத்தி ஒருமாரி ஆகிருச்சு, இங்க பாருங்க எப்படி வீங்கிருக்கு’’ வீங்கின கன்னத்தை முகத்தை திருப்பி கன்னத்தை காட்டியபடியே பேசினான். சிகப்பு சிகப்பாக இருந்தன. வண்டி சிக்னலில் நின்றது. மிக அதிக டிராபிக்கில் பச்சை விழுந்து காரை நகர்த்தமுடியாமல் சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தான் டிரைவர்.

‘’உன்னையெல்லாம் யார்டா கடைக்கு வரசொன்னா! ஹாஸ்பிட்டல்லருந்து டிஸ்சார்ஜ் ஆகி ஒரு வாரங்கூட ஆகல.. அதுக்குள்ள உனக்கெதுக்கு இந்த வேல’’ மீண்டும் முதியவர் தோளை பிடித்து ஆறுதலாக பேசினார்.

‘’இல்லங் மாமா வீட்டுல தூக்க மாத்திரைய தின்னுட்டு தூங்கி தூங்கி எழுந்தா என்ன செய்றதுனே தெரியல.. உங்க மக வேற நொய்யி நொய்யினு திட்டிட்டே இருக்கா.. பைத்தியத்த பிடிச்சு கட்டிவச்சிட்டாங்கன்னுலாம் பேசறா மாமா.. தாங்க முடியல.. அதான் கொஞ்சம் நேரம் நம்ம கடைல வந்து உக்காந்தா ரிலாக்சா இருக்குமேனுதான் வந்தேன்’’ தொண்டையை அடைக்கும் அழுகையோடு பேசினான்.

‘’ச்சே எப்படி அடிச்சிருக்கான் பாரு’’ சிவந்த அவனுடைய கன்னத்தை பார்த்தபடியே கோபத்தோடு பேசினார் முதியவர். அவருக்கு அவன் மேல் எப்போதும் அலாதி அன்பு உண்டு. ஒரு நாள் ஊரில் இல்லையென்றால் என்னவெல்லாம் நடந்து விடுகிறது. நகரும் சாலையை தொடர்ந்து பார்த்துக்கொண்டே வந்தார் , ‘குத்து குத்து கூர்வடிவேலால்.. பற்று பற்று பகவலன் தணலெரி.. தணலெரி தணலெரி..’’ மீண்டும் அதிக சத்தத்தில் அலறியது ஸ்டீரியோ. ‘’டேய் சவுண்ட கொறைனு சொன்னேன்ல’’ கத்தினார் பெரியவர். அவன் பக்கம் திரும்பினார்.

‘’அவன் புது ஆளுடா உன்னை தெரியாது.. நம்ம சுந்தரோட ஃபிரண்டாம்!. அவனையும் அந்த சுந்தரையும் வேலைய விட்டே விரட்டிட்டேன்... பாவம் சுந்தர் , அவன் நல்லவன்தான்.. நல்லா வேலை செய்வான் , சம்பளம் எவ்ளோ குடுத்தாலும் வாங்கிப்பான். பாவம்னு அவன மட்டும் ஒழுங்கா இருனு மிரட்டிட்டு விட்டுட்டேன்’’என்றார் முதியவர்.
‘’சரி அப்படி என்னதான்டா எடுத்த.. இப்படி அடிக்கற அளவுக்கு?’’ என்றார் பெரியவர்.
‘’அதிருக்கட்டும். அந்த புதுப்பையன கூப்ட்டு ஒருவாட்டியாவது அறைஞ்சீங்களா மாமா’’ என்றான் அவன். ஈறுதெரிய சிரித்தார் பெரியவர். முறைத்தபடி அமர்ந்திருந்தான் அவன். கார்த்திகை மைந்தா கடம்பா இடும்பனை யழித்த இனியவேல் முருகா.. தணிகாசலனே.. முருகன் மெலிதாக பாடினார். முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டார் பெரியவர். அருகிலமர்ந்திருந்தவன் முறைத்தபடியிருந்தான்.

***

சுந்தர் முறைத்தாலும் பாஸ்கர் பேசிக்கொண்டேதானிருந்தான்.

‘’பாஸ், படம் மறுபடியும் எப்போ ஸ்டார்ட் ஆகுன்னே தெரியல, ஆரம்பிச்சாதான் கஞ்சி. டைரக்டர்கிட்ட பேசினேன் பாரின் போறாராம்.. திரும்பி வர மூணு நாலு மாசம் ஆகுமாம். அதுவரைக்கும் ஏதாச்சும் வேலை இருந்தா சொல்லுங்களேன்! வீட்லருந்து அக்காவேற நாலுவாட்டி போன் பண்ணிருச்சு, ஒரு ஆயிரன்ரூவா அனுப்புனு..புள்ளைக்கு காதுகுத்தாம், காசனுப்பாட்டி மாமங்கிட்ட அசிங்கமாய்டும், காசனுப்பினாதான் தாய்மாமன காதுகுத்த வுடுவேன்னுட்டாராம், நாங்குத்தாட்டி ஊருக்குள்ள அக்காவுக்கு அசிங்கமாயிடும் பாஸ்’ பேசியபடியே சுந்தரின் கையிலிருந்த சிகரட்டை வலுக்கட்டாயமாக பிடுங்கி வாயில் வைத்த்து உஸ்உஸ் என இழுத்தான் பாஸ்கர்.

சுந்தரோ கையிலிருந்து பிடுங்கப்படும் அந்த சிகரட்டில்தான் கவனமாக இருந்தார். நீளமான ரெண்டு இஸ்ப்புக்கு பிறகு, மீண்டும் தொடங்கினான் பாஸ்கர். ‘’நீங்களாச்சும் உங்க முதலாளிகிட்ட சொல்லி உங்க கடைலயாச்சும் ஒரு மூணு மாசத்துக்கு வேலை வாங்கித்தரக்கூடாதா, எனக்கும் சாப்பாட்டுக்காவது ஆகும்ல’’ என்றபடி மேலும் இரண்டு இஸ்ப்பு இழுத்துக்கொண்டான். சிகரட் வேகமாக பரபரவென தீர்ந்துகொண்டிருந்தது.
வேகமாக சிகரட்டை உறிஞ்சும் பாஸ்கரின் வாயையே பார்த்தபடி தீரும் சிகரட்டை நினைத்து வருந்தி ‘’சரிடா இன்னைக்கு பேசறேன், ஆனா ஒழுங்கா வேலை பார்க்கணும், செட்டியார் ரொம்ப மோசமானவரு..’’ என்றார் சுந்தர்.

என்ன நினைத்தாரோ அவன் கையிலிருந்த சிகரட்டை வேகமாக பிடுங்கி அவசரமாக உஸ்உஸ் என ரெண்டு பஃப் அடித்துவிட்டு பஞ்சை நெருங்கிக்கொண்டிருந்த சிகரட்டை பாஸ்கரிடமே கொடுத்துவிட்டு வேலைக்கு கிளம்பினார் சுந்தர்.

‘’சு%&... பெரிய புடுங்காளி இவன், இவனே ஒரு அல்லக்கை நாயி இவன் பேர நாங்க காப்பத்தனுமாம்.. மயிரான் பாருடா ஒரு நா இல்ல ஒருநா ஷங்கர் மாதிரி மணிரத்னம் மாதிரி பெரிய டைரக்டர் ஆனதுக்கப்பறம் பாருடா.. உன்னையெல்லாம வைக்க வேண்டிய எடத்துல வைக்கறேன், எனக்கு மட்டும் நல்ல நேரம் வரட்டும்...’’ என நினைப்படியே கையை உயர்த்தி ஆங்கில வி வடிவில் தலைக்கு முட்டுக்கொடுத்துப் படுத்தான்.

படுத்தபடியே முனை மடிந்திருந்த கிழிந்த பாயினை காலால் நகர்த்தி நீட்டிவிட்டு அருகிலிருந்த காலி பெவிகால் டப்பாவில் சிகரட்டை நசுக்கி அணைத்தவன், கையை தலைக்கு முட்டுக்குடுத்து சாவகாசமாக முட்டி நிமிர்த்தி கால்மேல் கால்போட்டுக்கொண்டு மோட்டுவளையை பார்த்தபடி சிந்திக்க தொடங்கினான். மதிய சாப்பாட்டுக்கு என்ன பண்ணலாம்! உறக்கம் வர உறங்கினான்.

****

‘’தூங்கிட்டே வண்டி ஓட்டுவீங்களா.. தூக்கி தூக்கி போடுது, குழிய பார்த்து ஓட்டுங்க’’ கண்களை சுறுக்கி, உதட்டை சுழித்தபடி அமர்ந்திருந்தாள். கடுங்கோபத்துடன் அவனுடைய புத்தம்புது வரதட்சனை பைக்கில் புத்தம் புது மனைவியுடன் சுமாரான வேகத்தில் சென்று கொண்டிருந்தான் கோபாலகிருஷ்ணன். விர்ர்ர்ரூம் விர்ர்ர்ரூம் என ஆக்சிலேட்டரில் கோபங்காட்டினான். வெறியோடு முறுக்கினான். பல்லை கடித்துக்கொண்டான். ‘’ஓசில வண்டிகிடச்சா இதுக்கு மேலயும் முறுக்குவீங்க.. யார் காசு’’ என்று கடுப்பேற்றினாள் மனைவி.

‘’இங்க வந்து நல்லா உருமுங்க.. காலைல உங்க வண்டி மேல வந்து மோதி என்னையும் கீழ சாச்சுவுட்டவன்கிட்ட , நாலு அறை வாங்கிட்டு பெரிய வீராதிவீரன் மாதிரி வண்டி ஓட்டறதுக்கு ஒன்னும் குறைச்சலில்ல.. அவன் ஓய்ங்களதுக்குள்ள பம்முறீங்க.. காலைல கிளம்பினப்பவே ரொம்ப அசிங்கமா போச்சு, அப்பயே வீட்டுக்கு திரும்பி போயிருக்கணும்.. புஸ்தக கடைக்கு போயி சும்மா இருந்தீங்களா...

பாவம் அந்த ஆளு, பாக்க லூசு மாதிரி இருந்தான், அவன் என்ன திருடினானு தெரியுமா.. அவனப்போய் காலரப்புடிச்சி அந்த அறை அறையறீங்க, எவன் எத திருடினா ஒங்களுக்கென்ன , அவங்கடைல திருட்டுப்போனா கடைக்காரன் பார்த்துக்க போறான்.. மனசுக்குள்ள பெரிய வீராதி வீரன்னு நினைப்பு. யாராச்சும் ஏமாந்தவன் கிடைச்சா அடிச்சிட்டா போதுமா.. பாவம் அவன் அப்படி என்னத்த திருடிட்டான்’’ அவள் தொடர்ந்து மூச்சுவிடும் இடைவெளியிலும் பேசியே படியே வந்தாள். பல்லைக்கடித்துக்கொண்டான்.

‘’கடைமொதலாளியோட மருமகனாம்.. ச்சே எனக்கு அசிங்கமா போச்சு. நீங்க பண்ணதுக்கு ஆளாளுக்கு என்னைய ஏதோ கெட்ட பொண்ண பாக்கறமாதிரி பாக்கறாங்க.. காரித்துப்பாத கொறைதான்.. தயவு பண்ணி இனிமே என்னை எங்கயுமே கூட்டிட்டு போய்டாதீங்க புரியுதா’’ தொன தொனவென பேசிக்கொண்டே வந்தாள்.

‘’உங்களையெல்லாம் நம்பி நாளைக்கு நான் எப்படி புள்ள பெத்து.. அத வளர்த்து.. எதுக்கும் துப்பில்ல.. என் தலைல உங்களப்போய் கட்டி வச்’’ தொடர்ந்து பேச வண்டி சாலையோரமாக இருந்த பெரிய மரத்தடியில் நின்றது.

‘’இறங்குடி கீழே..’’ என்று உரக்க கத்தினான் கிருஷ்ணன்.

அவள் கன்னம் அதிர இரண்டு அறைவிட்டான். அவள் நடுரோட்டிலேயே வீல் என்று அலறினாள். ‘’போயிரு உங்கொப்பன் வீட்டுக்கு.. வீட்டு பக்கம் வந்த மவளே கொன்னுறுவேன்’’ என்றான்.

‘’உன்னை மாதிரி ஒரு பொட்டை பையனோட என்னாலயும் குடும்பம் நடத்தமுடியாதுடா.. த்தூ, நீ ஓட்றியே இந்த வண்டி, அதுகூட எங்கப்பன் வாங்கிக்குடுத்ததுதான்..’’ என்று மீண்டும் ஒரு முறை காரித்துப்பிவிட்டு அவ்வழியாக வந்த ஆட்டோவிற்கு கைநீட்டினாள். ஏறி மந்தைவெளிப்போப்பா என்றாள்.

***

‘’டேய் ஏன்டா அவனை போட்டு அந்த அடி அடிச்ச..அவன் யாரு தெரியுமா?’’

‘’பாஸ் அவன் யாருனு தெரியாம அடிச்சிட்டேன்.. நீங்கதான சொன்னீங்க, மொதலாளிகிட்ட நல்ல பேரு வாங்கனும்னு.. அதான் அவன் திருடன்னு நினைச்சி’’

‘’அப்படி என்னதான்டா அவன் திருடினான்..’’

‘’ஆமா அந்தாளுக்காக ஏன் நீங்க இப்படி துடிக்கறீங்க.. யார் அவன்’’

‘’அவன் செட்டியாரோட மருமகன்டா.. சரி அவன் என்னதான் திருடினான்..’’

‘’அதவிடுங்க.. என்னால உங்க வேலைக்கு ஏதும் பிரச்சனையா பாஸ்’’

‘’கால்ல விழாத கொறையா கெஞ்சிட்டு வந்திருக்கேன்.. என்னைமன்னிச்சி விட்டுட்டாரு..’’

‘’அப்ப எனக்கு ஒரு வாரம் அங்க வேலை பார்த்ததுக்கு சம்பளம்..அக்கா வேற...’’

‘’உன்ன உயிரோட விட்டதே பெரிசு.. செட்டியார் அவரு மருமகன் மேல உயிரையே வச்சிருக்கார்.. அவரு பொண்ணுக்கு வாழ்க்கை குடுத்ததே அவன்தான்.. நீ இன்னும் உயிரோட இருக்கனு சந்தோசப்பட்டுக்க, அப்புறம் இன்னொன்னு தயவு செஞ்சி இனிமே என் மூஞ்சிலயே முழிக்காத! முடிஞ்சா ரூம விட்டுப்போயிடு’’

‘’டேய் என்னடா..’’

குழந்தையின் சிரிப்பொலி , பாஸ்கரின் செல்போன் அடித்தது.

***

‘’என்னய்யா சிங்கத்துக்கிட்ட செம டோஸா இன்னிக்கி.... ‘’ , முகத்தை உம்மென்று வைத்துக்கொண்டிருந்த ராஜேஷ் குனிந்த தலை நிமிராமல் கீபோர்டையே பார்த்துக்கொண்டிருந்தான். ‘’யோவ் ஃபீல் பண்ணாத.. அவா அவாளுக்கு அன்ன்ன்னைக்கு என்ன கிடைக்குமோ அதான் கிடைக்கும், அதான் பிராப்தம், உனக்கு இன்னைக்கு சந்த்ராஷ்டமா இருக்கலாம்.. என்னா நக்சத்ரம்?’’ பக்கத்து சீட்டில் மாவாவை வாயில் அதக்கிக்கொண்டு அமர்ந்திருந்த உதவி மேனேஜர் கொதப்பினார்.

‘’சார்.. தேவையே இல்லாம திட்டறார் சார்!’’ தொண்டை கம்மியபடி பேசினான் ராஜேஷ். தட்டிவிட்டால் அழுதுவிட நேரும் நிலையில் இருந்தான்.

‘’இதுக்குலாம் போய் ஃபீல் பண்ணாதே.. நீ வேலைக்கு சேர்ந்து ஒருவாரம் கூட ஆகலை மனசுல வச்சிக்கோ’’ என்றார் மாவா மேனேஜர்.

‘’இல்லைங் சார்.. நான் எந்த தப்புமே பண்ணல , பண்ணாத தப்புக்கு நான் ஏன் திட்டுவாங்கணும்.. அதுவும் மனசாட்சியே இல்லாம எனக்கு டிசிப்ளின் இல்லைனு சொல்லிட்டாரு. பழைய ஆபீஸ்ல ஒரு நா கூட லீவெடுக்காம நாலுவருஷம் ஆபீஸ்க்கு போய்ருக்கேன் சார் நான்’’

‘’அதுல பாரு! நம்ம மேனேஜர் பொண்ணுக்கு இப்பதான் கல்யாணமாச்சு.. மூணே நாள்தான் புருஷனோட நடுரோட்டுல நாய்மாதிரி சண்டை போட்டுண்டு அப்பாவீட்டுக்கே வந்துட்டா , வந்ததுமில்லாம அடுத்த நாளே எங்கயோ ஓடிட்டா.. நேத்து.. பாவம் மனுசன் அந்த கோபத்தையும் எரிச்சலையும் யாராண்டதான் காட்டுவார்.. அதான் உன்மேல எரிஞ்சு விழுந்திருக்கார்.. நீதான் இந்த ஆபீஸ்ல இப்போதைக்கு கடைக்குட்டி.. விடுரா கண்ணா, போக போக பழகிடும்’’ என்று பேசியபடியே எழுந்து பாத்ரூமை நோக்கி சென்றார், வாயில் ஊறிப்போயிருந்த மாவாவினை துப்புவதற்காக!

ராஜேஷ் மீண்டும் தன் கீபோர்டில் மூழ்கினான். க்யூ.. டபிள்யூ.. ஈ... ஆர்.. டீ..

டீ வந்தது, குடித்துவிட்டு மீண்டும் வேலையை தொடங்கினான்..

************

‘’ஏய் நில்லுடி.. எங்கடி போற புள்ளைய தூக்கிட்டு’’ பின்னாலிருந்து கையை பிடித்தபடி கேட்டான் கணவன். கண்ணை துடைத்த படி இடுப்பிலமர்ந்திருந்த பிள்ளையை இறுக்கிப்பிடித்தபடி விசுக் விசுக் என நடக்க தொடங்கினாள் மனைவி. நிறைய அழுதிருந்தாள்.

‘’கன்னியா நீ ஏன்டி போணும்.. என் வூடில்ல.. நீ வா’’ என்று பக்கத்துவீட்டு ஆயா மனைவியை அழைத்துச்சென்று அமர வைத்தாள். திண்ணையில் சாவகாசமாய் அமர்ந்து கொண்டாள். பக்கத்தில் குழந்தை, புடவை தலைப்பை எடுத்து நெற்றியை துடைத்துக்கொண்டாள். குழந்தை இரண்டு கால்களையும் பரப்பி வைத்துக்கொண்டு ஜட்டி தெரிய அமர்ந்துகொண்டு அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தது.

‘’ஆயிர்ரூவா காசுங்க்கா.. அதுக்கொசரம் என்னைய போட்டு அந்த அடி அடிக்கறான் பாவி பரப்பான்.. என் தம்பி மயிரான் காசனுப்பலே அதுக்கொசரம் இந்தப்பாடு படவேண்டியிருக்கு.. அந்தப்பையனுக்கு என்ன கஷ்டமோ என்னமோ.. குருவி தலைல பனங்காய வச்சாப்ல பாவங்க்கா அவன்.. என்னைய்ய இவனக்கு கட்டிக்குடுத்து.. கடன அடச்சு கஷ்டப்படறான்.. கொஞ்சமாச்சும் மனசாட்சி இருக்குமா இவனுக்கு. நாலுநாளா வூட்டுக்கு தூரமா வேற இருக்கேன்.. வயித்துலயே மிதிக்கறான்க்கா, காசுக்கொசரம் என்னையே கூட்டிக்குடுப்பான்க்கா’’ அழுதாள் மனைவி.

கணவன் அவனுடைய வீட்டின் வாசலில் கையை கட்டிக்கொண்டு நின்றபடி அவளையே முறைத்துப் பார்த்துக்கொண்டிருந்தவன்.. இதைக்கேட்டு மேலும் கோபம் வந்தவனாக ஓடிவந்து மீண்டும் திண்ணையிலிருந்தவளை உதைக்க அவள் அப்படியே சரிந்து வாசலில் விழ.. தலையில் அடிபட்டு மயங்கினாள். குழந்தை அழுதுகொண்டேயிருந்தது...

‘’கன்னியா.. கன்னியா’’ தட்டித்தட்டி எழுப்பினாள் ஆயா!... பாப்பா விடாமல் கத்திக்கொண்டேயிருந்தது. அருகருகே இருந்த வீடுகளில் இருந்த மேலும் சில பெண்கள் எட்டிப்பார்ப்பதும் கூடுவதுமாய் கூடிவிட.. கணவனோ விடாமல் போட்டு அவளை அடிக்க பாய்ந்தபடியிருந்தான். அவனை இரண்டு தடியர்கள் பிடித்துக்கொண்டிருந்தனர். ண்ணே விடுண்ணே இன்னைக்கு அவள... என்று தொடர்ந்து சொல்லிக்கொண்டிருந்தான். அவன் வாயிலிருந்து கெட்ட வார்த்தைகள் கொட்டியது. பாப்பா அழுதுகொண்டேயிருந்தது. மனைவி மயக்கமாகவேயிருந்தாள். அவள் புடவையில் முடிச்சுப்போட்டு வைத்திருந்த செல்போன் அடிக்கத்தொடங்கியது.


****

‘’மச்சான், ஒரு முன்னூறு ரூவா இருக்குமா.. ஊருக்கு அவசரமா போகணும்’’ இழுத்தான் பாஸ்கர். முகமெல்லாம் சிவந்து போய் இருந்த ராஜேஷ்.. மெல்லிய குரலில் ‘’இல்ல மச்சான்.. மாசக்கடேசி நானே இன்னும் நாலு நாளைக்கு எப்படி மேனேஜ் பண்றதுனு யோசிச்சிட்டு இருக்கேன், தயவு செஞ்சு கேட்காத! எங்கிட்ட பத்துபைசா கூட இல்ல’’ எரிந்து விழுந்தான்.

‘’இல்ல மச்சான், ஊர்ல அக்காவுக்கும் மாமாவுக்கும் ஏதோ சண்டையாகிருச்சாம்.. போய் பாக்கணும், அக்காவுக்கு ரூவா குடுக்கறேனு சொல்லிருந்தேன், காசு குடுக்காட்டி கூட பரவால்ல போய் பார்த்துட்டு வராட்டா பிரச்சனை ஆகிரும், ப்ளீஸ் மச்சான், ஊருக்கு போய்ட்டு வந்ததும், குடுத்துறேன், நீதான்டா ஹெல்ப் பண்ணனும், ப்ளீஸ்டா’’ கெஞ்சினான்.

‘’இல்லடா என்கிட்ட சத்தியமா காசில்ல.. நீ வேணா பாரு’’ தன் பர்ஸை நீட்டிக்காண்பித்தான்.

‘’மச்சி ப்ளீஸ்டா.. பெட்டில ஏதாச்சும் வச்சிருப்ப.. எடுத்து குடுடா.. ப்ளீஸ்டா மச்சான் அவசரம்னுதான்டா கேக்கறேன், என்னால நம்ம பெரிசுகிட்டயும் கேக்கமுடியாதுடா , பிரச்சனை ஆகிருச்சு‘’ அழுதான் பாஸ்கர்.

‘’மயிறு சொல்லிட்டே இருக்கேன்ல.. பு%%$#% மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்க, த்தா தயவு செஞ்சு போயிரு என்ன கடுப்பாக்காத நானே பயங்கர டென்ஷனா இருக்கேன்’’ விசுக்கென்று கொடியில் தொங்கிய டவலை எடுத்துக்கொண்டு பாத்ரூம் கிளம்பினான்.

குளித்தான்.

திரும்பி வந்த போது பாஸ்கர் இல்லை. அந்த மிகச்சிறிய அறையின் மேற்கு மூலையில் இருந்த தன்னுடைய சூட்கேஸ் மட்டும் திறந்திருப்பதை பார்த்தான். சாவி பாக்கெட்டில்தான் இருந்தது. எப்படித்திறந்தான்?

அருகில் போய் பணமிருக்கிறதாவென பார்த்தான். அதிலிருந்த முன்னூறு ரூபாயை காணவில்லை. கொஞ்சம் சில்லரை மிச்சமிருந்தது. மொட்டை மாடியிலிருந்த அந்த சிறிய அறையிலிருந்து வெளியே வந்து வெளியே எட்டிப்பார்த்தான். தூரத்தில் பாஸ்கர் கையில் ஒரு சின்ன பையோடு ஓடும் பஸ்ஸில் ஏறிக்கொண்டிருந்தான். ராஜேஷ் மீண்டும் அறைக்குள் வந்து நெற்றியில் விபூதி இட்டுக்கொண்டு, முருகா என கன்னத்தில் போட்டுக்கொண்டு, தன்னுடைய செல்போனில் எப்எம் கேட்கத்தொடங்கினான். காற்றில்... எந்தன் கீதம்.. காணாத ஒன்றைத்தேடுதே.. சத்தம் குறைவாக இருக்க வால்யூம் வைத்தான்.