Pages

02 March 2011

அழகிரி சிரித்தார்


மதுரையில் கால்வைத்ததுமே பூமி அதிர்ந்து பொறிகலங்கியது. வேகமாக என்னை நோக்கி ஜில்லென்று காற்றடித்தது. யாருமேயில்லாத ரயில்நிலையத்தில், எதிர்காற்றில் தலைமுடி பறக்க கையில் பெட்டியோடு காற்றை கிழித்து நான் நடந்து செல்ல.. எதிரில் கையில் அரிவாளோடு யாரையோ வெட்டுவதற்காக மதுரை முத்துப்பாண்டி (ஆமாம் அவர் ரைஸ்மில்தான் வைத்திருக்கிறார்) ஓடிவர.. இருவரும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்ளாமல் எதிர்பக்கம் விலகிச்செல்ல.. அவர் யாரையோ போய் குத்த, நான் ஹீரோயினை அவரிடமிருந்து காப்பாற்றி.. ஜின்ஜினாக்கு ஜனக்கு நான் சொல்லித்தரேன் கணக்கு என பாடிக்கொண்டிருக்க பாதி பாடலில் விடிந்தது. மதுரை ஜங்ஷன் உங்களை அன்புடன் வரவேற்கிறது என எந்திரக்குரல் என்னை வரவேற்றது. கசமுசாவென கூட்டம் அம்மியது. முத்துப்பாண்டியையும் காணோம்..

அடியேன் (அடியேன் என்றால் அடியேன்தான் சாருவல்ல) மதுரைக்கு வருவது இது எத்தனையாவதோ முறை. இம்முறை அலுவலக காரியமாக... மதுரை இன்னமும் மெகா கிராமமாகத்தான் இருக்கிறது. அதை நீருபிப்பதைப்போல மீசையில்லாத என்னிடம் தப்பு தப்பான ஹிந்தியில் பேசினர் ஆட்டோக்காரர்கள். அடப்பாவிகளா மீசையில்லாட்டி ஹிந்திக்காரனா..? க்யா பாய்சாப் கிதர் ஹை, ஆட்டோ சாஹியே.. பாய் பாய்... என அளந்து கொட்ட, ஞான் செம்மொழி தமிழில் பேசினேன். நல்ல லாட்ஜா போப்பா என்றேன். ஆட்டோகாரனோ என்னை ஏடாகூடாமாக பார்த்து , சார் அந்த மாதிரினா எனக்கு தெரியாது நல்ல மாதிரினா கேளுங்க சொல்றேன் என்றான். சார் நான் அந்த மாதிரி ஆளும் இல்ல நல்ல மாதிரிதான் கேட்டேன். தயவு பண்ணி கொஞ்சம் மீடியமான லாட்ஜூக்கு போங்க என்றேன் எரிச்சலுடன்.

மதுரையில் டாஸ்மாக்குகள் நன்றாக சுத்தமாக மெயின்டெயின் செய்யப்படுவதாக நண்பர் சொல்லியனுப்பியிருந்தார். அதை சோதிக்க ரவுண்டு ரவுண்டாக டாஸ்மாக்குகளை சோதனை செய்தேன். அப்படியொன்றும் பிரமாதமில்லை. எல்லா டாஸ்மாக்களிலும் அழகு தமிழில் ‘அரசு பார்’ என்று எழுதப்பட்டிருந்தது. சென்னை கோவை மாதிரியான பெருநகரங்களை ஓப்பிடும்போது அங்கே நல்ல சுத்தமான மற்றும் சுவையான சைட்டிஷ்கள் கிடைப்பதை அறிந்து வியந்தேன். அதிலும் மீன் மற்றும் மட்டன் நன்றாக இருக்கின்றன. முட்டைப்பொறியல் சுமார்தான். பிரேம் நிவாஸ் என்று ஒரு பார் இருக்கிறது. நல்ல பார். 140ரூபாய்க்கு நிறைய சைடிஷுடன் சுவையான குளிர்ந்த பீர் கிடைக்கிறது.

ஊர் முழுக்க பல இடங்களில் கீஸ்டு கானம் என்கிற கடையை கண்டேன். இசைத்தட்டுகள் விற்குமிடமாம். இன்னுமா பாட்டெல்லாம் சிடிவாங்கி கேக்கறாங்க.. நிறைய பழைய படங்களின் டிவிடிகள் கிடைத்தன. ஒரு கூடை அள்ளிக்கொண்டேன். (அதில் ஒன்று பாக்யராஜின் விடியும்வரை காத்திரு). ரயில்நிலையத்திற்கு மிக அருகில் பாண்டிபஜார் என்று ஒரு புது இடம் உருவாகியிருந்ததை கண்டேன். சென்னை பர்மாபாஜாரின் சின்னத்தம்பியை போல செல்போன் , உலக சினிமா டிவிடி மட்டுமே விற்றுக்கொண்டிருந்தனர். பாண்டிபஜாரில் நிறைய பள்ளிமாணவர்கள் நின்றுகொண்டு பிட்டுப்பட டிவிடி வாங்கிக்கொண்டிருந்தனர். சிலர் மொபைலில் பிட்டுகள் ஏற்றிக்கொண்டிருந்தனர். மதுரை ஒளிர்கிறது.

எங்கு பார்த்தாலும் அழகிரியோ அல்லது தயாநிதி அழகிரியோ சிரித்துக்கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு மத்தியிலோ மேலோ கீழோ ஜெ போஸ்டரில் எம்ஜியாரைப்போல கலைஞர் சிரிக்கிறார். பிளக்ஸ் பேனர்கள் கண்டுபிடிக்கப்பட்டதே அழகிரிக்காகத்தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஊர் முழுக்க அழகிரி. மதுரையை சுற்றினால் ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை அழகிரி படம் போட்ட அருமையான பிளக்ஸ் பேனர் கண்ணில் படுகிறது. இதனால் இரவில் தூங்கும்போது கூட அழகிரி சிரித்து பயமுறுத்துகிறார். ரொம்ப பயமாருக்கு யுவர் ஆனர்!

பிளக்ஸ் பேனர்கள் குறித்து திட்டினாலும், மதுரைக்காரர்களின் கிரியேட்டிவிட்டியை அடித்துக்கொள்ள தமிழ்நாட்டிலேயே ஆள்கிடையாது. எந்த பேனரும் ஒன்றைப்போல இன்னொன்று இருப்பதில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரி ஒரு பேனரில் சச்சனின் முகத்தை மட்டும் வெட்டி அழகிரி படத்தை ஒட்டி இந்தியாவுக்கு அஞ்சாநெஞ்சனின் வாழ்த்துகள் என பிளக்ஸ் அடித்து பயமுறுத்தினர். பாசக்கார பயல்களின் சேட்டைக்கு எல்லையே இல்லை. அழகிரியின் அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்கு இந்த ஆண்டே பேனர் வைத்துவிடுவார்களாம்!

ரயில்நிலையத்திற்கு மிக அருகில் குமார் மெஸ் என்னும் சின்ன உணவு விடுதி உள்ளது. அங்கே தோசையிலேயே வித்தியாசமாக கறிதோசை கிடைக்கிறது. பீஸாவில் சிக்கன் டாப்பிங்ஸ் வைத்ததுபோல மட்டன் டாப்பிங்ஸ் போட்டு மொருகலான தோசை கிடைக்கிறது. விலை கொஞ்சம் அதிகம் 90ரூபாய். ஆனால் 90ரூபாய் அந்த அற்புதமான பதார்த்த்திற்கு மிக குறைவு. இன்னும் ஐம்பதுரூபாயே கூட வைத்து விற்றாலும் தகும். அப்படி ஒரு சுவை. ஐ லவ்வ்விட். எத்தனையோ விதமான பீசா தின்றிருக்கிறேன். இந்த தோசாவிற்கு ஈடுஇணையான ஒன்று இந்தியாவில் மட்டுமல்ல சாருநிவேதிதாவைப்போல பல நூறு எழுத்தாளர்களை கொண்ட லத்தீன் அமெரிக்காவிலும் கிடையாது. இரண்டு சாப்பிட்டேன. இன்னும் ஒன்று பார்சல் வாங்கிக்கொண்டேன்.

மீனாட்சி அம்மன் கோவில் வெகுவாக மாற்றமடைந்துவிட்டிருக்கிறது. தெப்பக்குளத்தை சுற்றி பூங்காவெல்லாம் வைத்து சினிமா செட்டுபோல மாற்றியிருக்கின்றனர். தெப்பக்குளம் போன்ற உணர்வே இல்லை. அது தெப்பகுளம் மாதிரியும் இல்லை. குட்டையைப்போல் மொக்கையாக மாற்றி வைத்திருக்கின்றனர். சுற்றிசுற்றி நிறைய காதலர்கள் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அவ்வளவுதான் தெப்பக்குளம். முன்னெப்போதோ மீனாட்சி அம்மன் கோவிலில் உளவாரப்பணிகள் மேற்கொண்டிருக்கிறேன். அப்போது பார்த்த தெப்பக்குளம் எளிமையாக தெய்வீகம் என்கிற வார்த்தைக்கு ஏற்றதாக இருந்தது. இது ஏதோ சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் அமர்ந்திருக்கிற உணர்வையே அளிக்கிறது. கோபுரங்கள் புதிய பெயிண்டில் பக்காவாக பளபளவென பளிச் பளிச்! கோயிலின் உள்ளேயும் எல்லா சிலைகளும் மெழுகுபூசி மொழுமொழுவென அழகாகவே இருந்தன. பிடித்திருந்தது.

கோயில் உஜாலாவிற்கு மாறிவிட்டதைப்போல் உணர்ந்தேன். கோயிலை சுற்றி வெளியே பளபளகற்கள் பதித்த ரோடு அமைக்கப்பட்டுள்ளது. அதில் குட்டிகார் சில சுற்றிக்கொண்டேயிருக்கின்றன. பத்துரூபாயில் மொத்த கோயிலையும் சுற்றிவிடலாம். பாதுகாப்பும் பலமாக இருந்தது. என்னுடைய பையை கால்மணிநேரம் சோதித்து மறைத்து வைத்திருந்த சிகரட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து வைத்துக்கொண்டனர். போகும்போது கேட்க மனமின்றி வந்துவிட்டேன். கோயிலில் நிறைய வெளிநாட்டினரும் வடநாட்டினரும் நிறைந்திருந்தனர். அம்மன் சந்நிதியை நெருங்குமிடத்தில் ஒருவர் மிகப்பெரிய மயிலிறகு சாமரத்தால் அடித்து அடித்து ஆசிர்வதித்துக்கொண்டிருந்தார். அவரைப்பற்றி ஆனந்த விகடனில் செய்தி வந்திருப்பதாக க்யூவில் சிலர் பேசிக்கொண்டிருந்தனர். நான் இன்னும் படிக்கவில்லை. பிரசாத ஸ்டாலில் வாங்கிய லட்டு அவ்வளவு சுவையில்லை. இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டு சுவைகூட்டி விற்கலாம்.

கோபுரங்களை ஒவ்வொன்றாக பொறுமையாக கண்டு ரசித்தேன். இப்போது புதிய பெயின்ட் என்பதால் எல்லா சிலைகளும் பளிச்சென தெரிகின்றன. அதில் பல அஜால்குஜாலாகவும் இருந்தது. என்னிடம் நல்ல லென்ஸ் கொண்ட கேமரா இல்லையே என்று வருந்தினேன்.

தங்கையின் குழந்தைகளுக்காக தொட்டில் கட்டை தேடிக்கொண்டிருந்தேன். பல கடைகளில் தொட்டில்கட்டையென்றால் என்னவென்றே தெரியாதது போல் விழித்தனர். கடைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. எல்லா கடைகளிலும் தாழம்பூ குங்குமம் பத்துரூபாய்க்கு கிடைத்தது. கடைகடையாக தேடிக்கண்டுபிடித்து இரண்டு கட்டைகள் வாங்கினேன். ஒன்று நூறு ரூபாயாம்.. மணியெல்லாம் வைத்து பெயின்ட் அடித்து கிளி வைத்து அழகாகவே இருந்தது. எனக்கு மரப்பாச்சி பொம்மைகளின் மேல் அதீத பிரியமுண்டு. தமிழகத்தின் பார்பீ அது. இரண்டு பொம்மை வாங்கிக்கொண்டேன். பனைஓலை பைகள்,தொப்பிகள் கிடைத்தன.

மீனாட்சி அம்மன் கோவிலின் உள்ளேயே இருக்கும் ஆயிரங்கால் மண்டபம் பார்க்க ஐந்து ரூபாய் கட்டணம். உள்ளே நுழைந்தால் நிறைய தூண்கள் இருந்தன. முன்னர் வைத்திருந்த ஓவியங்கள்,சிலைகள்,சங்கதிகள் அடங்கிய பலகைகள் என பல விஷயங்களை காணவில்லை. எல்லாமே அல்ட்ரா மாடர்னாக மாற்றிக்கொண்டிருக்கின்றனர். புதிதாக காதிகிராப்டில் வாங்கிய சிலைகளை சுற்றி அலங்கார விளக்குகளுடன் வைத்திருந்தனர்.
அங்கே கைட் ஒருவரோடு பேசிக்கொண்டிருந்தேன். அண்மைக்காலங்களில் வெளிநாட்டிலிருந்து சுற்றுலா வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்திருப்பதாகவும், இங்கே சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் ஊரில் தோட்டவேலை,வீட்டுவேலை பார்க்கிற ஏழைகள் என்றார். வெள்ளையாய் இருக்கறவன் பொய்சொல்லமாட்டான் என்பதைப்போல வெள்ளையாய் இருப்பவன் பணக்காரனாய் இருப்பான் என்கிற என்னுடைய பல வருட எண்ணத்தை மாற்றிக்கொண்டேன். சிலர் இங்கே வந்து வேலைபார்த்து சம்பாதிப்பதும் உண்டாம்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மதுரையில் புத்தக கடைகளுக்கு விடுமுறை போல ரயில் நிலையத்துக்கு அருகிலிருக்கும் புத்தக கடைகள் மூடப்பட்டிருந்தன. பிரபல எழுத்தாளரின் புத்தகம் வாங்க ஆசையோடு கடை தேடினேன். குரு தியேட்டரில் இப்போதும் படம் ஓடுகிறதா தெரியவில்லை. எனக்கு பிடித்த தியேட்டர். நான்கைந்து பிட்டுப்படங்கள் பார்த்ததாய் நினைவு.

மதுரை எழுத்தாளர் ஒருவர் யாளி என்று ஒருவர் நாவல் எழுதியிருக்கிறாராம். மதுரை முழுக்க பல போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. தமிழகத்தில் நாவல்களுக்கு கூட போஸ்டர் அடித்து விளம்பரம் செய்கிற கலச்சாராம் உண்டு என்பதை தெரிந்துகொண்டேன். யாளி என்பது டைனோசர் காலத்திற்கு முந்தைய விலங்கு என்கிற அடிப்படையில் இந்நாவல் எழுதப்பட்டுள்ளதாய் அந்த போஸ்டரில் விளம்பரத்திருந்தார்கள். வாங்கிப்படித்துப்பார்க்க வேண்டும். மீனாட்சி அம்மன் கோவில் முழுக்கவே எங்கு திரும்பினாலும் இந்த யாளியின் பிரமாண்ட சிலைகளை காணலாம். எனக்கு பல நாளாய் அது தன் வாயில் வைத்திருப்பது என்னவென்கிற ‘ஏ’டாகூடமான சந்தேகம் உண்டு. நண்பர்கள் விளக்கலாம்.

மதுரையில் தாவணிப்போட்ட பெண்களை காணமுடியாதது வருத்தமாக இருந்தாலும்.. அக்கலாச்சாரம் இன்னும் அழியாமல் இருக்கும் என்றே நம்புகிறேன். மீனாட்சி காலேஜ் பக்கமாக போக நினைத்து நேரமின்மையால் ஊர் கிளம்ப வேண்டியதாகிவிட்டது. ஜீன்ஸ் அணிந்த பெண்கள் சிலரை கண்டேன். இன்னமும் ஆதிகாலத்து பெல்பாட்டம் ஜீன்ஸ்தான்!

மதுரையில் ஒரு மின்னல் பயணத்தை முடித்துக்கொண்டு ரயிலில் திரும்பிக்கொண்டிருந்தேன். ரயிலில் டிக்கட் பரிசோதகர் வந்தார். என் டிக்கட்டை வாங்கி பார்த்துவிட்டு ஒரிஜினில் ஐடி கேட்டார். என்னுடைய ஆதிகாலத்து பான்கார்டை நீட்டினேன். அது பல ஆண்டுகளுக்கு முன் வாங்கியதென்பதால் அதில் அரசு முத்திரை அழிந்துபோயிருந்தது. டிடிஆர் இதெல்லாம் வேண்டாங்க.. வேற ஐடி குடுங்க என்று கடுப்படிக்க.. என்னிடம் வேறு எந்த ஐடியும் இல்லை.. இதோ இந்த ஆபீஸ் ஐடிகார்டுதான் இருக்கிறது என காட்டினேன். ஒரு நிமிடம் ஐடி கார்டை பார்த்தவர்.. சார் நீங்க அதிஷாதானே என்றார்!

மதுரை இனித்தது. இதயம் பனித்தது. பயணம் முடிந்தது.