Pages

09 May 2011

அதிரடி ஆட்டம் ஆரம்பம்!
பள்ளி நாட்களில் வெயிலிலும் மழையிலும் மாங்கு மாங்கென்று விளையாடிய கிரிக்கெட், வெறும் நினைவுகளாக மட்டுமே இப்போது எஞ்சியிருக்கின்றன. சாலைகளில் தெருமுனைகளில் சின்ன சின்ன கிரவுண்டுகளில் கொத்து பால் போட்டு விளையாடிய காலங்கள் சொர்க்கம். ஒரு பந்தும் ஒரு பேட்டும் சிறிய கரிக்கட்டை போதும்.. சுவரில் ஸ்டம்புவரைந்து விளையாடிய நாட்களை திரும்ப பெறவே முடியாது. காலயந்திரம் இருந்தால் அதில் ஏறி நான் என்னுடைய கிரிக்கெட் காலங்களுக்கே முதலில் செல்லுவேன். நம்மில் பலருக்கும் அதைவிட மகிழ்ச்சியும் துடிப்பும் ஒன்றாய்க் கலந்த உன்னதமான அனுபவங்கள் எப்போதும் கிடைக்காது. அதை மீட்டெடுக்க மீண்டும் நண்பர்களை திரட்டி கிரிக்கெட் ஆடுவதை தவிர வேறு வழியேயில்லை என நினைத்தேன்.

அப்படிப்பட்ட ஒரு முயற்சியாக ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பிருந்தே நானும் நண்பன் கார்க்கியும் இணைய நண்பர்களை திரட்டி ஒரு கிரிக்கெட் டீமை உருவாக்க முயற்சி செய்து வந்தோம். அது இந்த வாரம்தான் டுவிட்டரின் உதவியோடு பலித்தது. ஏற்கனவே கடந்த செப்டம்பரில் வலைப்பதிவர்களை திரட்டி ஒரு அணியை உருவாக்கியிருந்தோம். விளையாடப்போகிற நாளில் அதிகாலை பெய்த பேய்மழையில் எங்களுடைய அணியும் அதன் கனவுகளும் கனத்த இதயத்தோடு கரைந்தது.

கிரிக்கெட் ஆடிய பழைய நினைவுகளை மீட்டெடுக்கும் முயற்சி மட்டும் ஒயவேயில்லை. சில வாரங்களுக்கு முன்பு நண்பர் உருப்படாதது நாராயணனோடு பேசிக்கொண்டிருக்கும்போது இந்த யோசனை மீண்டும் துளிர்த்தது. இம்முறை டுவிட்டர்களை ஒன்றுதிரட்ட முடிவு செய்தோம். கார்க்கியிடம் பேசினோம். யுவகிருஷ்ணா,கார்க்கி,நான் மற்றும் நாராயணன் என நால்வர் அணி உதயமானது. மழைபெய்தாலும் வெயிலடித்தாலும் ஆட்கள் வந்தாலும் வராவிட்டாலும் நான்கு பேர் போதும் கிரிக்கெட் ஆடியே தீருவோம் என சபதமேற்றோம். ஒரு பவுலர் ஒரு பேட்ஸ்மென் கீப்பர் மற்றும் ஒரு பீல்டர் போதாதா கிரிக்கெட் ஆட!

இந்த நால்வர் அணி டுவிட்டரில் இதுகுறித்து விவாதிக்கத் தொடங்க மேலும் சிலர் ஆர்வத்துடன் எங்களோடு இணைவதாக சொன்னது இன்னும் உற்சாகமாக இருந்தது. ஒருமாதிரி ஐந்து ஆறாகி ஆறு ஏழானது. பந்து பேட் ஸ்டம்ப் என எதுவுமேயில்லை. கார்க்கி பேட் மற்றும் ஸ்டம்ப் ஏற்பாடு செய்வதாக சொல்லியிருந்தார். ராஜேஷ் பத்மன் தன் பையன்களுடைய ஸ்டம்புகள் இருப்பதாக சொன்னார். பேட் பால் ஸ்டம்பை விட பெரிய பிரச்சனையாக மைதானம்தான் இருந்தது. சென்னையில் கிரிக்கெட் ஆட அழகான பீச் ஒன்று இருந்தது. அதில் இப்போதெல்லாம் கிரிக்கெட்டுக்கு தடை. மைதானங்களே இல்லை.

எங்கே கிரிக்கெட் ஆடுவது. நாராயணனும் நானும் மைதானத்தை தேடுகிற பொறுப்பை ஏற்றோம். ஈக்காட்டுத்தாங்கலில் பல காலியிடங்கள் இருந்தாலும் எங்கும் புதர்மண்டிப்போய் விளையாட முடியாத சூழலில் இருந்தன. இன்னும் கொஞ்சம் போய் கிண்டி ஐடிஐயின் விடுதி ஒன்றிலிருந்து சிறிய மைதானத்தை தேர்வு செய்து அறிவித்தோம். அங்கே பலரும் வாக்கிங் செல்வதை பார்த்துவிட்டு அனுமதியெல்லாம் தேவையில்லை என கருதினோம். அப்படி அங்கே விளையாட விடாவிட்டால் ரோட்டிலாவது விளையாடிவிடுவோம் என தீர்மானித்தோம். டுவிட்டரில் இடம் மற்றும் நேரம் அறிவிக்கப்பட்டது.

சனக்கிழமை இரவெல்லாம் உறக்கமேயில்லை. ஓடி ஓடி பந்துவீசி விக்கெட் எடுத்தும் ஒவ்வொரு ரன்னையும் ஓடி எடுத்த உன்னதமான நாட்கள் கண்களுக்குள் வந்து வந்து போனது. அதிகாலை ஐந்து மணிக்கே என்னைவிட உற்சாகமாக யுவகிருஷ்ணா போனில் அழைத்து பாஸ் இன்னுமா எழுந்திருக்கல என்று அதட்டி எழுப்பினார். கிழக்குபதிப்பகம் நாகராஜன் இன்னைக்கு வரமுடியாது பாஸ்.. ஆனாலும் போய் ஜாலியா விளையாடுங்க நான் அப்புறம் ஜாய்ன் பண்ணிக்கறேன் என போனில் அழைத்து வாழ்த்தினார்.

அப்படி இப்படியென மைதானத்திற்கு கிளம்ப ஆறுமணிக்கு மேல் ஆகிவிட்டது. நான் போய்ச்சேர எனக்கு முன்னரே வந்திருந்த டுவிட்டர் நண்பர்கள் கூட்டம் மைதானத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். சோகமான முகத்தோடு அங்கிருந்து திரும்பிவந்துகொண்டிருந்தனர். பாஸ் அங்க ஏதோ லோக்கல் பசங்க பிரச்சனையாம் அதனால கிரவுண்ட்ல யாரையுமே விளையாட அனுமதிக்கறதில்லையாம் என கார்க்கி அழும் தொணியில் சொன்னார். மற்றவர்களும் அதே நிலையில்தான் இருந்தனர். அனைவரும் பேட் ஸ்டம்புகளோடு இன்று கிரிக்கெட் ஆடப்போகிறோம் என்கிற உற்சாக கனவோடு வந்திருந்தனர். ரோட்டில் விளையாடவும் மனமொப்பவில்லை.

நான் வீட்டிலிருந்து கிளம்பும்போதே வழியெங்கும் பல இளைஞர்களும் கையில் பேட்டோடு பைக்கில் படையெடுத்து சென்றதை பார்த்துக்கொண்டேதான் வந்தேன். அதில் சிலர் கல்கி வார இதழ் அலுவலகத்திற்கு பக்கத்து சந்தில் செல்வதை பார்த்ததால் அந்த பக்கம் ஏதோ மைதானம் இருக்கும் என்பதை யூகிக்க முடிந்தது. விஜயகுமார் மஞ்சுளா , தனுஷ் வீடெல்லாம் அந்தப்பக்கம்தான் இருக்கிறது. நம்ம டீம் நண்பர்களிடம் அதை சொன்னதும்.. கிளம்புங்க அங்க கிரவுண்ட் இருக்கானு பார்த்துருவோம் என்று புறப்பட்டோம்.

கல்கி அலுவலகத்திற்கு பின்புறமுள்ள சாலைகளில் புகுந்து நந்தம்பாக்கம் அடைந்தோம்.. தூரத்தில் ஒரு மைதானம் தெரிய.. நண்பர்கள் திடீரென குழந்தைகளை போல ஓஓஓ வென கத்தி உற்சாக குரல் கொடுத்தது ஆச்சர்யமாக இருந்தது. என்னதான் வளர்ந்தாலும் நமக்குள்ளேயிருக்கும் குழந்தை எப்போதும் மரணிப்பதேயில்லை. எங்களுடைய பைக்குகளை பார்க் செய்துவிட்டு, பெரிய கிரவுண்டிற்கு பக்கத்திலிருந்த சிறிய கிரவுண்டில் ஸ்டம்பை நட்டு விளையாடத்தொடங்கினோம். என்னுடைய அபார பந்துவீச்சு குறித்து நண்பர்களுக்கு ஏற்கனவே தெரியும்போல.. கொத்து பால் போட்டு விளையாடலாம் என்றனர். எனக்கும் அதுதான் நல்லதென்று தோன்றியது.

நான்,நாராயணன்,யுவகிருஷ்ணா,கார்க்கி,பச்சைதமிழன்,முரளீதரன்,ராஜேஷ்,விக்கிதமிழ் என எட்டு பேரை பாதி பாதியாக்கி அணிக்கு நால்வர் என டீம் பிரித்தோம். இரண்டு பக்கமும் ரன் வைத்து ஆல் ஃபீல்டிங் முறையில் விளையாடினோம். ஜாலியாக இருந்தாலும் கீப்பருக்கு பின்னாலிருந்து காவாக்கரை சாக்கடைதான் பிரச்சனையாக இருந்தது. பந்து அடிக்கடி அதில் விழ அதை கை விட்டு எடுத்து கழுவாமல் மண்ணி தேய்த்து விளையாடியது நிஜமாகவே பால்யகாலத்திற்கே அழைத்து சென்றது. டுவிட்டர் நண்பர் மதன் கார்க்கி தன் ஜூனியரோடு திடீரென கிரவுண்டிற்கே விசிட் அடித்து எங்களை உற்சாகப்படுத்தினார்.

கார்க்கியும் நாராயணனும் பேட்டிங்கில் பின்னி எடுத்தனர். சிக்ஸர் மழைதான். பந்து அருகிலிருந்து அரசு பம்ப் ஹவுஸில் விழுந்து விட ராஜேஷ் எட்டடி சுவரில் அநாயாசமாக ஏறி எடுத்து கொடுத்தது மறக்கமுடியாதது. விருதுபெற்ற பதிவர் யுவகிருஷ்ணாவும் டுவிட்டர் புகழ் முரளீதரனும் தன் சூழ்ச்சி பவுலிங்கில் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். விளையாடும்போதே மைதானத்திலேயே ஒருவர் சைக்கிளில் வைத்து லெமன் ஜூஸும் மோரும் விற்றார். வேண்டிய அளவு குடித்து மகிழ்ந்தோம். கார்க்கி என்னுடைய பந்தில் சிக்ஸர்களை அடித்து கடுப்பேற்றினார். அடுத்த வாரம் அவரை பழிவாங்க வேண்டும்.

நான்கு மேட்ச்கள் விளையாடினோம். இரண்டு ஆட்டங்கள் எட்டெட்டு ஓவர்களும் இரண்டு ஆட்டங்கள் ஆறு ஓவர்களுமாக! ஏழு மணிக்கு தொடங்கிய ஆட்டம் ஓய மணி பத்தானது. களைப்போடு கரையேறி மீண்டும் மோரோடு லெமன்ஜூஸை மிக்ஸ் பண்ணி குடித்தோம்.

அடுத்த வாரங்களில் மீண்டும் தொடர்ந்து விளையாட திட்டமிட்டிருக்கிறோம். ஞாயிறு காலை ஆறுமணி, இடம் நந்தம்பாக்கம் ஆத்தோர அய்யனார் கோயில் கிரவுன்ட் அல்லது டிபன்ஸ் காலனி கிரவுண்ட் (மிலிட்டரி ஆஸ்பிட்டல் பின்புறம்). கிரிக்கெட் விளையாடும் ஆர்வமுள்ள யாரும் எங்களோடு இணைந்து கொள்ளலாம். விளையாட விருப்பமில்லாதவர்கள் முடியாதவர்கள் பணமோ பொருளோ டிஷர்ட்டோ எதுவேண்டுமானாலும் ஸ்பான்ஸர் செய்யலாம். இப்போதைக்கு எங்கள் அணியின் இலக்கு இரண்டு பேட்டுகள் வாங்க வேண்டும், நான்கு ஸ்டம்புகள் அவ்வளவுதான்!