Pages

30 May 2011

செங்கல் சுமக்கிறார் ஒரு ஸ்டேட் ஃபஸ்ட்!

அதிகாலை இரண்டு மணிக்கு எழுந்தால்தான் நான்கு மணிக்கு சமையலை முடிக்க முடியும். அம்மாவும் அப்பாவும் கூலி வேலைக்கு பழனியிலிருந்து தாராபுரம் வரை செல்பவர்கள். அவர்களுக்கான மதிய உணவை தயார் செய்து தூக்குபோசியில் கட்டிக்கொடுக்கும் பொறுப்பு இருளாயியுடையது. நான்கு மணிக்குள் வேலைகளை முடித்துவிட்டு , ஆறு மணி வரை உறக்கம். அதற்கு பிறகு தம்பி தங்கையை பள்ளிக்கு தயார் செய்ய வேண்டும். அது முடித்த பின் அவர்களுக்கான உணவை தயாரிக்க வேண்டும். வீட்டில் கேஸ் அடுப்பெல்லாம் கிடையாது. விறகு அடுப்புதான். ஊதாங்குழலால் ஊதி ஊதி சமையலை முடிப்பதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். இத்தனையையும் முடித்து விட்டு பள்ளிக்கு பல மைல் தூரம் சைக்கிளில் செல்ல வேண்டும்.

பள்ளி முடித்து வீட்டுக்கு வந்து மீண்டும் சமையல், துணி துவைத்தல், பாத்திரங்கழுவுதல் என வீட்டு வேலைகள் மொத்தமும் முடித்துவிட்டு, தம்பிக்கு பாடம் கற்றுக்கொடுத்துவிட்டு ஆயாசம் அடைவதற்குள் மணி பத்தாகிவிடும். அதற்கு மேல்தான் படிக்க முடியும். வீட்டிலிருக்கும் ஒரே ஒரு குண்டு பல்பு பத்து மணிக்கு மேல் எரிந்துகொண்டிருந்தால் தம்பி தங்கையும் பெற்றோரும் தூங்க முடியாது. விளக்கை அணைத்துவிட்டு தெருவிளக்கிருக்கும் இடத்திற்கு வருவார். அர்த்தராத்திரியில் படிக்கத்தொடங்குவார். இரண்டு மணி வரை படிப்பு தொடரும்!

ஒரு நாளில் இரண்டு மணிநேரம் தூங்கி, வீட்டு வேலைகள் அனைத்தையும் பார்த்துக்கொண்டு, தெருவிளக்கில் படித்த இருளாயி இன்று நர்சிங் பாடத்தில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி. ஆனால் அவருடைய வறுமை அவரை மேற்படிப்பை தொடரவிடாமல் செங்கல் சுமக்க வைத்திருக்கிறது.

இந்த ஆண்டு பிளஸ்டூ தேர்வில் நர்சிங் பாடத்தில் 200க்கு 181 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருக்கிறார் இருளாயி. இவர் பழனிக்கு அருகிலிருக்கும் கோதைமங்கலம் என்னும் மிகச்சிறிய கிராமத்தை சேர்ந்தவர். விவசாய கூலி வேலை பார்க்கும் பெற்றொர். பத்து ரூபாய் கூட பார்த்து பார்த்து செலவழிக்க வேண்டிய வறுமையான சூழல். இவரை படிக்கவைக்கவோ பெற்றோருக்கு விருப்பமில்லை. வீட்டில் போராடி சண்டைப்போட்டு படிக்க வேண்டிய சூழ்நிலை. தனக்கு வேண்டிய பாட புத்தகங்களுக்காக பகுதிநேரமாக செங்கல் சூளையில் செங்கல் சுமக்கிறார்.

பனிரென்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான தினம். அவர் பணியாற்றி வந்த நூற்பாலையில் விடுமுறை கேட்டிருகிகறார். முதலாளியோ அதெல்லாம் தேவையில்ல நீ எடுக்கபோற நாலு மார்க்குக்கு லீவுதான் முக்கியம் என திட்டி அனுப்பிவிட்டாராம். அதனால் மனமுடைந்து எப்போதும் போல வேலைக்கு சென்றிருந்தார்.

தேர்ச்சி பெற்றோமா, எத்தனை மதிப்பெண் பெற்றோம் என தமிழகம் முழுக்க ஒவ்வொரு மாணவரும் பரபரப்பாய் சுற்றிக்கொண்டிருக்க, இவரோ நூற்பாலையில் பணியாற்றிக்கொண்டிருந்தார். தேர்ச்சி முடிவுகளும் மார்க் விபரங்களும் வெளியாக, நர்சிங் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்றவர் என்பதை கேள்விப்பட்டு பத்திரிகைகளின் வழக்கப்படி பேட்டியெடுப்பதற்காக நிருபர்கள் சிலர் கோதை மங்கலத்திலிருக்கும் அவருடைய சிறிய குடிசைக்கு படையெடுக்க, இருளாயி வீட்டில் இல்லை. பக்கத்து வீடுகளில் விசாரிக்க , வேலை சென்றிருப்பது தெரிந்தது. அங்கிருந்து நேராக அவர் பணியாற்றும் நூற்பாலைக்கே சென்றனர்.

எப்படியோ பத்திரிகையாளர்கள் நூற்பாலைக்குள் நுழைந்து இருளாயியிடம் பேட்டியும் போட்டோவும் மாறி மாறி எடுத்துக்கொண்டிருக்க நூற்பாலை முதலாளி கடுப்பாகிவிட்டார். அன்றைய தினமே இருளாயியை வேலையை விட்டு நீக்கினார். பள்ளி விடுமுறையில் கிடைத்துக்கொண்டிருந்த சொற்ப வருமானமும் போனது. முதல் முதலாக ஏன்தான் மாநில அளவில் முதல் மதிப்பெண் எடுத்தோமோ என்று அன்றைக்கு இரவெல்லாம் அழுதிருக்கிறார்.

‘’இனி இதற்கு மேல் படிக்க முடியாது. வேறு ஏதாவது வேலை தேட வேண்டும். உதவிகள் ஏதாவது கிடைக்குமென எதிர்பார்த்து காத்திருந்ததுதான் மிச்சம். அதனால் நல்ல வேலை கிடைக்கும் வரை வீட்டிற்கு அருகிலுள்ள செங்கல்சூளையில் வேலைக்கு சேர்ந்தேன். தினக்கூலிதான்.. பரவாயில்லை’’ என அதைப்பற்றி சொல்லும்போதே கண்கலங்குகிறார். சோகமிருந்தாலும் எதையும் எதிர்த்து போராடுகிற மனநிலையும் போராட்ட குணமும் அவருடைய பேச்சில் தெறிக்கின்றன.

‘’நிச்சயமா மேலே படிப்பேன்ங்க இப்ப இல்லாட்டியும், நானே சம்பாதிச்சாவது படிப்பேன். நர்சிங் படிக்கணுங்கறதுதான் என்னோட ஒரே லட்சியம் , டிப்ளமோ இன் நர்சிங் படிச்சா கூட போதும். ஏன்னா நான் சீக்கிரம் படிச்சி முடிச்சாதான், சீக்கிரமா ஒரு நல்ல வேலைக்கு போய் என் தம்பி தங்கைகளை படிக்க வைக்க முடியும், அப்புறம் பாருங்க இந்த வீடு , சின்ன மழை பெஞ்சாலும் வீட்டுக்குள்ள மேலே கீழே எல்லா பக்கமும் தண்ணி வந்திடும், நைட்டெல்லாம் தூங்க முடியாது, அப்புறம் வீட்டுல குண்டுபல்புதான் இருக்கு , ஒரு டியூப்லைட் வாங்கி மாட்டணும்’’ என தன்னுடைய சின்ன சின்ன லட்சியங்களை அடுக்கிக்கொண்டே போகிறார்.

எங்களோடு பேசிக்கொண்டிருந்தவர், சட்டென்று ‘’சார் வேலைக்கு டைம் ஆச்சு.. கிளம்பணும்’’ என அவசரமாக தன் சைக்கிளை எடுத்துக்கொண்டு செங்கல் சூளையை நோக்கி தன் கனவுகளையும் லட்சியங்களையும் சுமந்தபடி படுவேகமாக கிளம்புகிறார் செங்கல் சுமக்க!


(நன்றி புதியதலைமுறை)

(இந்த பெண்ணுக்கு உதவி செய்ய விரும்புபவர்கள் - feedback@puthiyathalaimurai.com என்கிற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளலாம்)