Pages

15 June 2011

ஒரு ஊர்ல ஒரு தாதாவாம் - ஆரண்ய காண்டம்ஒரு ஊர்ல ஒரு தாதாவாம் இன்னொரு தாதா சோதாவாம். அதுல ஒரு ஹீரோவாம் அவனுக்கு ஒரு தாராவாம்.. படம் முழுக்க யுத்தமாம் அதுல வந்தது ரத்தமாம். கிளைமாக்ஸ்ல சண்டையாம்.. உடைஞ்சது வில்லன் மண்டையாம். தமிழில் வெளியான எல்லா கேங்ஸ்டர் திரைப்படங்களுக்குமே இதுதான் அடிப்படை கதை. மாதம் ஒரு படமாவது இதுபோல வெளியாவது சமகாலத்தில் தவிர்க்க முடியாதது. அவ்வகையில் இன்னொன்று ஆரண்யகாண்டம்.

இனி படம் குறித்து...

‘ஆரண்யகாண்டம்’ படம் வெளிவருவதற்கு முன்பிருந்தே இது நல்லபடம் உலகபடம் விருதுபெற்ற படமென செய்திகளும் பேட்டிகளும் தொடர்ந்து வெளியாயின. படமும் வெளியானது. இது ஏதோ நியோ நாயர் வகை படமென்று படத்தின் குழுவினரே சொல்லிக்கொண்டனர். பலரும் ஆகா இதுதான் தமிழ்சினிமாவின் மைல்கல் , வைரக்கல், கோமேதகக்கல் என பாராட்டித்தொலைத்தனர். பத்திரிகைகளும்... பாராட்டின. எல்லோரும் பாராட்டினால் அது நிச்சயம் நல்லதாகத்தானே இருக்கவேண்டும். அப்பாடா அறிவுஜீவிகள் முதல் ஆட்டோக்காரர்கள் வரைக்கும் கொண்டாடும் ஒரு நல்ல தமிழ்சினிமா தமிழில் வெளியாகிவிட்டது போலிருக்கிறதே என்கிற ஆர்வம் மேலிட படத்திற்கு சென்றோம்.

வடசென்னையை பின்புலமாக கொண்டு வெளியான தாதா தமிழ்ப்படங்களின் எண்ணிக்கை மூன்றிலக்க எண்களில் இருக்கலாம். இரண்டு தாதா கோஷ்டி அதில் சில ரவுடிகள் , அதில் ஒருவன் அதாவது கதையின் நாயகன் தனியாக பிரிந்துசெல்வதால் தாதாக்களிடையே ஹீரோவை மையமாக்கி உருவாகும் சிக்கல்கள்... டமால் டுமீல் பட் படார் வெட்டு குத்து கிளைமாக்ஸ். சுபம். இந்த தாதா கும்பல் கதையொன்றும் தமிழுக்கு புதிதில்லை. அண்மையில் வெளியான சுந்தர்சி நடித்த நகரம் மற்றும் தலைநகரம் படங்களின் கதையுங்கூட இதைப்போன்ற பின்னணியிலேயே அமைந்திருக்கும். கொடுமையாக ஆரண்யகாண்டம் படத்திலும் இதே மாதிரியான கதையே! கதையில் எந்த புதுமையும் கிடையாது. சொல்லப்போனால் படத்தில் கதையே கிடையாது. திரைக்கதை மட்டும்தான். திரைக்கதையிலும் புதுமையொன்றும் கிடையாது.

படம் முழுக்க லாஜிக் ஓட்டைகள். அதாவது மற்ற தாதா படங்களில் நாம் காணுகிற அதே மாதிரியான மொக்கை லாஜிக் ஓட்டைகள்! அவை தெரிந்தே பகடிக்காக செய்யப்பட்டிருந்தால் அடடாவென கைத்தட்டி வரவேற்றிருக்கலாம்.. குவான்டின் டாரன்டினோவின் படங்கள் அதைத்தான் செய்ன. ஆனால் இதிலோ அவை திரைக்கதையின் ஒருபகுதி என்பதை உணரும்போது இதுவும் ஒரு சாதாரண படமே , இதில் நியோ நாயரும் இல்லை திவ்யா நாயரும் இல்லை என்கிற முடிவுக்கு வரவேண்டியிருக்கிறது.

படத்தின் முதல் காட்சியிலேயே ஒரு பெண்ணோடு உறவு கொள்ள முயன்று தோற்றுப்போகிறான் வில்லன். உடனே அவளை அடிக்கிறான். ஷகிலா படங்களில் இதுபோன்ற காட்சிகள் ஏராளமாக பார்த்திருக்கிறேன். அதற்கு பிறகு வில்லன் பல்விளக்கிக்கொண்டே கொர கொர குரலில் (வேலு நாயக்கர் போல பேசுகிறார்). தமிழ்சினிமா இதுவரை கண்டிராத புதுமையான காட்சி. பிறகு ஒருகாட்சியில் நல்லவன் ஒருவனை போட்டு அடித்துவிட்டு வெளியே வந்து ஏதோ பாட்டுக்கு ரத்தம் வழியும் சட்டையோடு உற்சாக நடனமாடுகிறான் வில்லன். இதுவும் தமிழ்சினிமா கண்டிராத புதுமையான காட்சியில்லையா?

போலீஸில் மாட்டிக்கொள்ளும் ஹீரோ ஜீப்பில் ரகளை செய்து தப்பிப்பது, அதற்கு பிறகு போலீஸும் அவரை ஒன்றுமே செய்யாமல் விட்டுவிடுவது, மனைவியை கடத்தப்போகிறார்கள் என்பது தெரிந்தவுடன் போலீஸிடமிருந்து தப்பிக்கும் ஹீரோ, போகும் வழியில் ஒரு போன் பண்ணி மனைவியை தப்பிக்க சொல்லக்கூடவா அவனுக்கு சிந்தனையிருக்காது.. இத்தனைக்கும் அதற்கு முந்தைய காட்சியில் அவன் செல்போனில் மனைவியோடுதான் பேசிக்கொண்டிருப்பான்!

இதுதவிர வில்லன்கள் கூட்டம் ஹீரோவை துரத்தும்.. டுப்பாக்கியோடு மாய்ந்து மாய்ந்து சுட்டாலும் ஹீரோ மேல் ஒரு குண்டு கூட பாயாது.. கிளைமாக்ஸில் நூறு பேர் மோதும் ஒரு பெரிய சண்டையில் முக்கிய வில்லனை குறிவைத்து கொன்றுவிடுவார் ஹீரோ.. அதுவும் எப்படி அவர் கையை சுழற்றினால் பத்து பேர் பறந்துபோய் விழுவார்களாம்.. ரத்தம் வேறு கிராபிக்ஸில் பல் இளிக்கிறது! இதற்கு நடுவில் தேவையே இல்லாமல் ஆங்காங்கே திணிக்கப்பட்ட சூப்பர் ஸ்லோ மோஷனும் படுத்துகிறது. இவையெல்லாம் பகடி நக்கல் நையாண்டி என்கிற வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தால் வாவ் என்று சொல்லியிருக்கலாம்!

முதல் பகுதியில் பொறுமையாக நீளும் திரைக்கதை.. இடைவேளைக்கு பிறகு வேகம் பிடித்தாலும்.. முடிவை நோக்கி நீண்டுகொண்டே போவது சலிப்பை உண்டாக்கி விடுகிறது.
மணிரத்னமே கைவிட்டுவிட்ட இருட்டில் படமெடுக்கும் புராதன யுக்தியை இயக்குனர் கையாண்டிருக்கிறார். ஒருவேளை பிளாக் காமெடி வகை படமென்பதால் இருட்டிலேயே படமெடுத்திருக்க கூடும் என நினைக்கிறேன். அதற்காக இப்படியா? அதற்காக ஒட்டுமொத்தமாக ஒளிப்பதிவை நிரகாரிக்கவும் இயலவில்லை. சில இடங்களில் கேமரா நன்றாகவே இருக்கிறது.

இசை யுவன்ஷங்கர் ராஜாவென்பது படத்தின் பெரிய பலம். பல இடங்களில் பலமுறை கேட்ட ஹாலிவுட் படங்களின் பிண்ணனி இசை சாயலை கேட்க முடிந்தாலும், குட்டிப்பையன் ஒருவன் கையில் போதைப்பொருளை எடுத்துக்கொண்டு ஓடுவான்.. அதை மறைத்துவைக்க.. அருமையாக படம்பிடிக்கப்பட்ட காட்சி மற்றும் பின்னணி இசை. நெகிழ்ச்சியாக உணர்ந்தேன். ஏனோ படத்தில் வருகிற சிறுவன் மற்றும் அவனுடைய அப்பா தொடர்பான காட்சிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. ‘’பைசைக்கிள்தீவ்ஸ்’’ படத்தின் காட்சிகளை நினைவூட்டினாலும் மிகமிக பிடித்திருந்தது!

படத்தில் பாராட்டப்படவேண்டிய அம்சங்களில் ஒன்று அவ்வப்போது கேமரா, எப்போதும் இசை, அருமையான நடிகர் தேர்வு. ஒவ்வொரு பாத்திரத்திற்கும் ஏற்ற நடிகர்களை தேர்வு செய்தது, அதற்கு உதாரணம் சப்பையாக வருகிற ரவிகிருஷ்ணா. ஜாக்கி ஷெராப் பாத்திரத்தின் பாத்திரம் விளக்கப்படவில்லையென்றாலும் அவருடைய நடிப்பு கச்சிதம் (வேலுநாயக்கரை நினைவூட்டினாலும்)

இவைதவிர இயக்குனரின் முயற்சி பாராட்டுதலுக்குரியது. ஏற்கனவே முதல் அடி சறுக்கலாக இருந்தாலும் முயற்சி முக்கியமானது. அதற்காகவேனும் பாராட்டலாம். குவான்டின் டாரன்டினோவின் பல்ப் ஃபிக்சன் படத்தினை நூறுமுறையாவது பார்த்திருப்பேன்.. அப்படியொரு படம் தமிழில் வராதா என்கிற ஏக்கம் எப்போதுமிருந்தாலும்.. இது அம்மாதிரியான ஜஸ்ட் பாஸ் முயற்சி என்பதே மகிழ்ச்சிதான்.

நாலைந்து கெட்டவார்த்தைகள், முகத்திலடிக்கும் நிறைய ரத்தம், ஆர்ப்பாட்டமில்லாத வன்முறை, புத்திசாலித்தனமான வசனங்கள் மட்டுமே போதும் என இயக்குனர் நினைத்திருக்கலாம். அதற்கும் மேல் ஒரு முழுமையான திரைப்பட அனுபவத்தில் ஏதோ மிஸ்ஸிங்.

சென்னையில் ஆங்கில நாடகங்கள் அடிக்கடி அரங்கேற்றப்படும். கதை சென்னையின் பின்புலத்தில் அமைந்திருந்தால் சொல்லவே வேண்டாம் நம் பீட்டர்வாழ்தமிழர்கள் சேரிகளை பற்றிய காட்சிகளில் மிகுந்த உற்சாகத்தோடு கலாய்க்கும் வேலையை செவ்வனே செய்வதை பார்த்திருக்கிறேன். அது எனக்கு எப்போதுமே எரிச்சலையே உண்டுபண்ணும். சேரிகளின் மீதான பீட்டர்களின் பார்வை எப்போதுமே ஒரே மாதிரியாகவே மேலோட்டமாகவே இருந்துதொலைக்கும். இப்படமும் அதே வேலையை செய்வதாக உணர்ந்தேன்.

கெட்ட வார்த்தைகள் நிறையவருவதாலும், படத்தின் நிர்வாணத்தன்மையினாலும் பலரையும் குறிப்பாக ஆண்களை கவரலாம்... கெட்டவார்த்தைகளும் நிர்வாணத்தன்மையும்தான் ஒரு படத்தை சிறந்ததாக மாற்றுகிறது என நான் நினைக்கவில்லை. இப்படம் எனக்கு பிடிக்கவில்லை.