Pages

06 July 2011

ஆண்கள் ஜாக்கிரதை




அது ஒரு யாகூ காலம். யாகூ மெசேஞ்சர் பலராலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்ட நாட்கள் அவை. யாகூவில் நிறைய குழுக்கள் இருக்கும் ஏதேதோ டாப்பிக்கில். குரூப் சாட்டிங்கூட நடக்கும். மகா மொக்கையான வெட்டி அரட்டைகள்தான். எங்களுடைய ஆர்வமெல்லாம் அங்கே ஏதாவது ஃபிகர் மடியாதா.. நம்மையும் திரும்பிப் பார்த்திடாதா என்பதுதான்..

அதற்கேற்ப பல நண்பர்களும் சொல்லும் காமங்கலந்த அஜால்குஜால் கதைகள் ஏராளமாக எங்கள் நட்புவட்டத்திற்குள் சுற்றிக்கொண்டிருக்கும்.. மச்சான் அவன் ஏதோ ஒருபொண்ணை சாட்டிங்லயே புடிச்சி போன வாரம் மருதமலைக்கு கூட்டிட்டு போயி ஒரே ஜாலியாம், நேத்து ஒரு ஃபிகரு வெப்காமரால ஒரே நாக்ரதினா தீரனானா.. மச்சி பாரின்லருந்து ஒரு பொண்ணு கட்டிகிட்டா உங்களத்தான் மாமா கட்டிக்குவேனு ஒரே அடம் என்று இவர்கள் சொல்கிற கதைகள் எங்களை வெறியேற்றும்.

விடலைப்பையனான எனக்கு அந்தகதைகளே உணர்ச்சிகளை தூண்டுவதற்கு போதுமானதாக இருந்தன. இதற்காக கஷ்டப்பட்டு காசு சேர்த்து இன்டர்நெட் சென்டர் போய் கிடைக்கிற ஒருமணிநேரத்தில் எப்படியாவது ஒரு ஃபிகரை மடக்கிவிடவேண்டும் என்கிற வெறியோடு திரிந்த காலங்கள் உண்டு.

மெய்யுலகில்தான் எதுவுமே சிக்கவில்லை என்கிற பூர்வஜென்ம கர்மா.. மெய்நிகர்உலகிலும் தொடர்ந்தது. இவர்கள் சொல்லுகிற கதைகளெல்லாம் கட்டுக்கதைகளோ என நினைக்கவும் வைத்தது. இணையம் முழுக்க வெறும் ஆண்களே நிரம்பிவழிந்தனர். சரி பெண்பெயரில் சிலகாலம் நல்ல பிள்ளையாக உலவுவோம் என யாகூ மெசேஞ்சரில் ஒரு ஐடி உருவாக்கி சுற்றிக்கொண்டிருப்பேன். சில பெண்களோடு நல்ல பிள்ளையாக பேசுவேன்.. என்னுடைய கருமாந்திர கிரகம் அந்த ஐடியும் ஏதோ ஒரு பையனுடையதாக இருந்து தொலைக்கும்..

இது பல நாள் நீடித்த கதைதான். இருந்தாலும் அதில் ஒரு சுவாரஸ்யம் இருந்தது. சில பையன்கள் அல்லது ஆண்கள், பெண் என்று நினைத்து என்னோடு பேச ஆரம்பித்த போதுதான்.. அட ஃபிகர் உஷார் பண்றதவிட இந்த கேம் நல்லாருக்கே என தோன்றியது. பேச ஆரம்பித்தேன். எத்தனை ஆண்கள்.. இந்த இணையவெளியில் ஏதாவது ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற வெறியோடு சுற்றித்திரிவதை உணர முடிந்தது.

உன் அட்ரஸ்குடுடா செல்லம்.. உனக்கு மொபைல் போன் வாங்கி அனுப்பறேன்.. பட்டுபுடவை வேணுமா.. அமெரிக்கன் சாக்லேட்ஸ் என்றெல்லாம் பேசுகிற ஆண்களும் உண்டு. அட்ரஸ் கொடுத்து ஆட்டையை போட்டவர்கள் கதைகளும் உண்டு. சிலர் மிகவும் மோசமானவர்கள்.. தன்னுடைய வெப்கேமராவை ஆன் செய்து ஏடாகூடமாக எதையாவது காட்டி கடுப்பேத்துவார்கள். அதையெல்லாம் பார்த்து தொலைக்க வேண்டிய கொடுமைகளும் அரங்கேறும். சிலர் பேங்க் அக்கவுன்ட் நம்பர் குடு எவ்ளோ பணம் வேணும்னாலும் போடறேன்.. ஆனா ஒரே ஒருமுறை என்னோட போன்ல பேசு போதும் என கெஞ்சுவதையும் பார்த்திருக்கிறேன்.

கடந்த பதினைந்து ஆண்டுகளில் யாகூ மெசேஞ்சர் பயன்படுத்துபவர்கள் மாறிவிட்டனர். ஆர்குட் கூட அழிந்துவிட்டது. ஃபேஸ்புக்கும் டுவிட்டரும் இணையத்தை தன் பிடியில் வைத்திருக்கின்றன. ஆனால் இன்னமும் ஒரே ஒரு பெண் கிடைக்கமாட்டாளா என்கிற ஏக்கத்தோடு.. இல்லை இல்லை... வெறியோடு அலைகிற ஆண்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. இப்போதும் அது கணிசமாக அதிகரித்துக்கொண்டேதானிருக்கிறது.

சொல்லப்போனால் அப்போதிருந்த நிலையை காட்டிலும் இப்போது ஐடித்துறையின் வளர்ச்சியோ என்ன கருமாந்திரமோ முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு காமவெறியோடு கையில் நிறைய பணத்தை வைத்துக்கொண்டும் அலைகின்றனர் இணைய ஆண்கள்! விடலைப்பையன்கள் கூட அறியாத வயசு புரியாத மனசு பரவாயில்லை.. விட்டுத்தொலைக்கலாம். ஆனால் திருமணமான ஆட்களும் வயசான பெரிசுகளும் கூட இதுமாதிரியான லீலைகளில் ஈடுபடுவது சமயத்தில் கடும் எரிச்சலை கிளப்பிவிடுகின்றன. இணையத்துக்கு வெளியே எவ்வளவு பெரிய உலகமிருக்கிறது. எத்தனை கோடி பெண்கள் இருக்கிறார்கள். அதையெல்லாம் விட்டுவிட்டு முகந்தெரியாத மெய்நிகர் உலகத்தில் ஏதாவது சிக்குமா என நாக்கைத்தொங்கப்போட்டுக்கொண்டு அலைவதைப்பற்றி என்னதான் சொல்வது!

இதையே சாதகமாக பயன்படுத்திக்கொண்டு ஏமாற்றுகிறவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்திருப்பது ஆரோக்யமானதா அல்லது ஆபத்தானதா என்று தெரியவில்லை. போலியான ஐடியை கிரியேட் செய்ய வேண்டியது. யாராவது ஏமாந்த சோனகிரி கிடைத்தால் ஆசைவார்த்தை பேசி மயக்க வேண்டியது.. ஓசியில் கிடைத்தால் யாருக்குத்தான் கசக்கும்! மிஸ்டர் சோனகிரியும் ஆசைவார்த்தைக்கு மறுவார்த்தைகளை கொட்டி வைப்பார். பிரபலமானவர்கள் என்றால் சாட் ஹிஸ்டரியை வெளியிட்டு அவருடைய கேரக்டரை டேமேஜ் செய்து அசிங்கப்படுத்தலாம். பிரபலமில்லாதவர் என்றால் காதல் மொழி பேசி.. செல்போனில் அழைத்து பேசி (இப்போதெல்லாம் கொரியன் மொபைலிருந்தால் எந்த குரலிலும் எதிர்முனையில் இருப்பவரிடம் பேசமுடியுமாம்).. எனக்கு கொண்டைல ஆப்பரேசன் தொண்டைல ஆப்பரேசன் என்று சொல்லி பணம் கறக்கலாம்.

ஃபேஸ்புக்கில் இதுமாதிரியான கதைகள் மெகாசீரியல்கள் போல தினமும் ஒன்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவன் என்னை கையபுடிச்சி இழுத்திட்டான்.. அவ என்னை ஏமாத்திட்டா.. காசு புடுங்கிட்டாங்க.. பிளாக்மெயில் பண்றாங்க, கொலைமுயற்சி என தொடர்கிறது இக்கதைகள். நேற்றும் கூட ஒரு பெண் ஆசைவார்த்தை பேசியே ஒருகோடி ரூபாய் வரை உஷார் பண்ணியதாக இணையதள செய்தியொன்று சொல்கிறது!

ஒருபக்கம் இந்த மோசடிபேர்வழிகளால் இணைய மன்மதன்களுக்கு ஆப்புவிழுந்தாலும்.. இன்னொரு பக்கம் என்னைப்போல உங்களைப்போல அப்பாவிகளும் இதனால் பாதிக்கப்படுகிற அபாயமுண்டு. என்னதான் நாம் ஏகப்பத்தினி விரதர்களாகவும் மகாத்மாக்களாகவும் இருந்தாலும் ஒரு பெண்ணே வலிய வந்து பேசினால் யாருக்குத்தான் சறுக்காது.. விசுவாமித்திரருக்கே சறுக்குச்சே? அதனால் இந்த இணையபெருவழியில் ஆண்கள் தங்களுடைய கற்பையும் பர்சையும் பாதுகாத்துக்கொள்ள ஒரே வழி சர்வ ஜாக்கிரதையாக இருப்பதுதான். யாரிடம் பேசுவதாக இருந்தாலும் ஒருதடவைக்கு நான்கு முறை சிந்தித்து செயல்படுவது அவசியம்.

பெண்களை பாதுகாக்க பல பாதுகாவலர் இணையத்தில் உலவுவதால், ஆண்களுக்கான பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருக்கிறது. அவர்களுக்கான எச்சரிக்கை குரலாக பொதுநலன் கருதி இப்பதிவு இங்கே எழுதப்பட்டுள்ளது. ஏனென்றால் நாளைவரும் இணைய ஆடவர்சந்ததிகள் இதைபடித்து தெளிவாக நடந்துகொள்ள ஏதுவாக இருக்குமில்லையா?