Pages

14 July 2011

ஆட்டோ பிக்சன் 1.0
வலைப்பதிவர்களைப் போலவே உலகில் எது நடந்தாலும் அதைப்பற்றி ஒரு கருத்தும் விஸ்தீரமான வியாக்கியானமும் வைத்திருப்பவர்கள் ஆட்டோக்காரர்கள். சில சமயங்களில் நம் தமிழ் வலைப்பதிவர்களையும் விஞ்சுகிற கருத்துகளை அவர்களிடமிருந்து நாம் எதிர்பார்க்கலாம். அது உண்மைத்தமிழனையும் யுவகிருஷ்ணாவையும் ஜாக்கிசேகரையுங்கூட அதிர்ச்சியடைய வைக்க வல்லவை.

லஞ்ச ஊழல் பற்றி பேசினால் தீப்பொறி பறக்கும். அரசின் அடாவடி பற்றி சொன்னால் எரிமலை வெடிக்கும். காவல்துறையின் அட்டுழியங்கள் பற்றி சொல்லவே வேண்டாம்.. அவர்களே கதைகளாக கொட்டுவார்கள். ‘’நாடு ரொம்ப கெட்டு போயிடுச்சி சார்.. மக்களே ஊழல்வாதிங்களா ஆகிட்டாங்க..சுயநலவாதி ஆகிட்டாங்க, லஞ்சம் குடுக்கறது ஏதோ ஃபேஷன் ஆகிட்ச்சு, பெட்ரோல் விலை ஏறிடுச்சி எவனுக்குமே அதுபத்தி கவலையில்ல’’ என்றெல்லாம் உதார் வுடுவதில் ஆட்டோ ஓட்டுனர்கள் பிரசித்தி பெற்றவர்கள்.

வேண்டுமானால் ஆட்டோவில் போகும்போது ‘’சார் இந்த பத்மநாபசாமி கோயில்ல.. ஜெயலலிதா பங்கு கேட்டாக்க என்ன?‘’ என்று ஆரம்பித்து வைத்தால் போதும், சாலையை பார்க்காமல் கழுத்து சுளுக்குமளவுக்கு திரும்பி திரும்பி.. ஆமா சார் எல்லா நம்ம சொத்து. தமிழ்நாட்டு நகை.. அத்தனையும் இந்தியாவுக்கு குடுத்தா.. நாட்டுல பஞ்சம் போயிடும்.. சீனாவையே தோற்கடிச்சிரலாம் ரயில் வுடலாம் பிளைட் உடலாம் , உலக வங்கி கடனை அடைச்சிரலாம் , தமிழ்நாட்டுக்கும் அதில பங்கிருக்கு என்கிற ரேஞ்சில் பல கருத்துகளை கொட்டுவதில் வல்லவர்கள் நம்மூர் ஆட்டோக்காரர்கள்.

உலக உத்தமர்கள் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில்தான் ஆட்டோ ஓட்டுகிறார்களோ என்கிற ஐயம் கூட எனக்கு அவ்வப்போது எழுவதுண்டு!

ஆனா பாருங்க.. இவர்களுடைய ஆட்டோக்கள் எதிலும் மீட்டர் என்கிற வஸ்து நிச்சயமாக இருக்காது. அரைக்கிலோமீட்டர் தூரம் போகவேண்டுமென்றாலும் , தலையை சொறிந்துகொண்டு நாணிக்கோணியெல்லாம் கேட்காமல் மனசாட்சியே இல்லாமல் நெஞ்சம் நிமிர்த்து அச்சம் தவிர்த்து அநியாயமாக காசு கேட்பதில் மட்டும் சளைப்பதில்லை. குறிப்பாக ஆட்டோக்களுக்கு பின்னால் இவர்கள் போடுகிற கருத்து சிதறல்கள் உலக ஃபேமஸ். ஊழலை ஒழிப்போம்.. லஞ்சத்தை ஒழிப்போம் என்று தொடங்கி மரம்வளர்ப்போம் பயிர்வளர்ப்போம் ஒசாமா ஓழிக வரை விதவிதமான சுவாரஸ்யங்களுக்கு மட்டும் பஞ்சமிருக்காது.

அப்படித்தான் அண்மையில் திநகர் பகுதியில் ஒரு கருத்து குவியலை கண்டு மிரண்டு போனேன். ‘’ராமசந்திரா மருத்துவமனை ஊழியர்களுக்கு அன்பான வேண்டுகோள்! ஆண்டவனை கண்டதில்லை நாங்கள்.. ரஜினிதான் எங்கள் கண் கண்ட கடவுள், ஆண்டவனுக்கே மருத்துவம் பார்க்கிற பாக்கியம் உங்களுக்கு கிடைத்திருக்கிறது. அவரை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை..’’ என இன்னும் நிறைய எழுதி பிளக்ஸ் பேனரில் பிரிண்ட் அவுட் எடுத்து ஒட்டியிருந்தனர். அதை சிலமுறை கண்டு கடுப்பாகி புகைப்படமெடுக்க முயன்றும் முடியவில்லை. இப்போதும் திநகரில் அந்த போஸ்டர் ஒட்டிய ஆட்டோக்களை அடிக்கடி காணமுடியும்.

இவர்கள் பெரும்பாலும் ஸ்டான்டில் அமர்ந்துகொண்டு அன்றைய செய்தித்தாளையோ ஜூவியோ நக்கீரனோ ரிப்போர்ட்டரோ கையில் வைத்துக்கொண்டு மினி நீயா நானா.. அரட்டை அரங்கமெல்லாம் நடத்துவதை பார்க்கலாம். அதில் பல கம்யூனிச தோழர்களும் இருப்பதை காண முடியும். இதுபோல வேறெந்த தொழில் செய்பவர்களும் கூட்டாக அமர்ந்து கொண்டு உலக விஷயங்களை பற்றி விவாதிப்பதை பார்க்க முடியாது. அதுவே அவர்களுக்குள் இருக்கிற கருத்து கந்தசாமிகளை உசுப்பிவிடுபவையாக இருக்கலாம்.

நம் அன்றாட வாழ்வில் எதிலும் அரசியல் கலந்துபோன சூழலில் இப்போதும் எதிலும் இருக்கிற அரசியல் குறித்து ஆராய்கிற மனமும் அதைப்பற்றி பொதுவில் பேசுகிற ஞானமும் நேரமும் ஆட்டோக்கார்ர்களுக்கு வாய்த்திருக்கிறது. மிடில்கிளாஸ் மோரன்களுக்கு சம்பாதிப்பதற்கே நேரமில்லை.

ஒரு ஆட்டோக்கார நண்பரிடமே என்ன தலைவா ஊர்ல இருக்கற எல்லா நொனநாட்டியமும் பேசறீங்க ஆனா அநியாயமா காசு கேக்கறீங்களே என்று கேட்டேன். சென்னை மாதிரியான நகரங்களில் ஓடுகிற ஆட்டோக்களில் முக்கால்வாசி வாடகைக்கு ஓடுபவை.. ஒருநாள் வாடகை எழுநூறு ரூபாயிலிருந்து தொடங்குமாம். அது தவிர அவ்வப்போது டிராபிக் போலீஸிடம் சிக்கினால் தண்டச்செலவு நூறு இருநூறு.. நாள்முழுக்க மாங்கு மாங்குனு ஆட்டோ ஓட்டி அதில் எழுநூறுக்கு மேல் கிடைக்கிற வருமானத்தில்தான் குவாட்டர் கட்டிங் குடும்பம் குட்டியெல்லாம்... எல்லாரையும்போல அவர்களுடைய தவறுகளுக்கும் ஒரு காரணம் இருந்தது. இருந்துவிட்டு போகட்டுமே..

இதில் கவனிக்க வேண்டிய விஷயமொன்றுள்ளது. ஆட்டோவில் செல்லும்போது ஆட்டோகாரரிடம் வாயை கொடுத்துவிடக்கூடாது. அவர் சாலையில் கவனமில்லாமல் ஆர்வமிகுதியில் கருத்து சொல்ல முயன்று எங்காவது எதிலாவது முட்டி மோதிவிட வாய்ப்புண்டு! அரைநிமிட மகிழ்ச்சி ஆபத்தில் முடியலாம்.

இது ஒருபுறம் இப்படியிருக்க ஆட்டோக்காரர்களைப் போன்ற அற்புதமான நண்பர்கள் எங்குதேடினாலும் கிடைக்கமாட்டார்கள். அண்ணே.. என்றழைத்தால் உங்களுக்காக உயிரையும் கொடுக்க தயங்காதவர்கள் இந்த ஆட்டோ ஓட்டுனர்கள். அன்போ கோபமோ எதுவாக இருந்தாலும் டிப்பர் லாரியில் அன்பை கொட்டுபவர்கள் இந்த ஆட்டோக்காரர்கள்.

மற்றபடி இந்த பதிவின் மூலம் நான் சொல்லவரும் கருத்தென்று ஒன்றுமில்லை. மேலே இருக்கிற படத்தில் நீங்கள் காணுகிற ஆட்டோக்காரர் எஸ்.பூபதியின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன்.