Pages

01 October 2011

முரண்
இந்தப்படமும் சுட்டதுதான். ஆல்ப்ரட் ஹிட்ச்காக்கின் ஸ்ட்ரேன்சர்ஸ் ஆன் ஏ டிரெயின் திரைப்படத்தின் கதையை தழுவி அல்லது திருடி எடுக்கப்பட்ட படம்தான். படத்தில் எந்த இடத்திலும் கிரெடிட் கொடுக்கவில்லை. இருந்துவிட்டு போகட்டும். சலிப்பாக இருக்கிறது கிரெடிட் கொடுக்காமல் உலக சினிமாக்களை காப்பியடிப்பது தமிழ்சினிமாவில் புதிய டிரெண்டாகி ‘அது ஒன்னும் தப்பில்லே பாஸு’ என்கிற மனநிலையும் உண்டாகி ஒரு மாமாங்கமாகிவிட்டதால் காப்பி பேஸ்ட் கருமாந்திரங்கள் குறித்து கோபம் கொள்ளாமல் ‘’அடப்போங்கப்பா போரடிக்குது’’ என இத்திரைப்படம் குறித்த பார்வையை மட்டுமே எழுதிவிடுவோம்.

எதிர் எதிர் மனோபாவங்கள் கொண்ட இரண்டுபேர் ஒரு பயணத்தில் இணைகின்றனர். இரண்டு பாத்திரங்களுக்காகவும் பெரிதாக மெனக்கெடாமல் மௌனராகம் கார்த்திக், மோகன் இரண்டு பாத்திரங்களின் அச்சினை எடுத்துக்கொண்டிருக்கிறார் இயக்குனர். ஒருவன் எப்போதும் துறுதுறு இன்னொருவன் எப்போதும் அமைதி. இருவருக்கும் இரண்டு விதமான பிரச்சனைகள். ஒருவனுக்கு காதல் மற்றவனுக்கு கல்யாணம் (இதுவும் ஆல்மோஸ்ட் மௌனராகம்தான்). அதை தீர்க்க ஒரே வழிதான். அது கொலை!.

உனக்காக நான் கொலை பண்றேன்..? எனக்காக நீ கொலை பண்றீயா? டீலா நோடீலா என பேரம் பேசுகிறான் துறுதுறு. மற்றவன் மறுக்கிறான். டீல்னா டீல்தான், கொலை பண்ணியே தீருவேன் என அடம்பிடிக்கும் துறுதுறு இளைஞன்.. போடா என மறுத்துவிட்டு போகிறான் இன்னொருவன். அதற்கு பிறகு என்ன நடந்தது என்பதையெல்லாம் சொன்னால் ஸ்பாய்லர் பாவம் சும்மாவிடாதென்பதால் மீதி கதையை வேறு விமர்சனங்களில் படித்து தெரிந்துகொள்ளவும்.

பிரசன்னாவின் நடிப்புதான் படத்தின் ஒரே பெரிய பலம். பல இடங்களில் கார்த்திக் போலவே நடித்திருப்பதை தவிர்த்திருக்கலாம். குரலும் சரி உடல்மொழியிலும் சரி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சேரனும் நிறைவாகவே நடித்திருக்கிறார். கையறு நிலையிலிருப்பவன், அழுமூஞ்சி, உம்மனாமூஞ்சி என்றாலே இனி சேரன்தான். இந்தபடத்தில் அவருடைய பாத்திரத்தில் வேறு யாரையும் இட்டு நிரப்ப முடியுமா தெரியவில்லை.

படம் முழுக்க நிறைய பெண்கள் கலர்கலராக தழுக்கு மொழுக்குவென வந்துபோனாலும் யாருமே மனதில் ஒட்டவில்லை. அதுதான் படத்தின் சறுக்கலோ என்னவோ? எல்லோருமே நுனிநாக்கு தமிழ் பேசுவதும், வெள்ளையடித்த அந்நியமான முகங்களும் சலிப்பூட்டுகிறது. படத்தின் குறையும் அதுதானோ என்னவோ? கவர்ச்சி கும்மிக்கு நிறைய வாய்ப்பிருந்தும்.. அதை தவிர்த்தமைக்காக இயக்குனருக்கு பாராட்டுகள். கேமரா கோணங்களில் சில இடங்கள் நன்றாக இருந்தாலும்.. பல இடங்களில் மிஷ்கின் வாசனை! (ஒன்னு காலு இல்லாட்டி காஞ்சபுல்லு)

படத்தின் இசை, முதல் ஒரு மணிநேரங்களும் இம்சை. தேவையில்லாத இரைச்சல். மோட்டுவளைய பாத்துகினே மூசிக் போட்டுருக்காப்ளயோனு தோணிச்சி.. அதுபோக படத்தின் முதல் ஒருமணிநேரம் தேவையில்லாமல் ஜவ்வாய் இழுத்து நீட்டி முழக்கி சொல்லப்பட்டதாகவே தோன்றியது. பட்டி டிங்கரிங் பார்த்து எடிட் பண்ணியிருந்தால் விறுவிறுப்பு கூடியிருக்கும். இரண்டாம் பாதி செம ஸ்பீடு. நிறைய டுவிஸ்டுகள். அவ்வளவு டுவிஸ்டுகள் வைத்துவிட்டு கிளைமாக்ஸ் மட்டும் பக்கத்து சீட்டு குட்டி பாப்பாக்கள் கூட யூகிக்கிற மாதிரி அமைத்திருக்க வேண்டாம். முதல் பாதி இம்சைகளை கஷ்டபட்டு கடந்துவிட்டால் இரண்டாம்பாதி காலில் வெந்நீரை கொட்டியதுபோல ஒரே பதட்டமும் பரபரப்பும்தான்!.

முரண் – முதல் பாதி ஜவ்வு , இரண்டாம் பாதி ஜிவ்வு!