Pages

01 December 2011

மாவுத்து, காவடி மற்றும் ஷங்கர்
யானைகுறித்த ஆராய்ச்சிக்காக முதுமலைக்கு சென்றிருந்தபோதுதான் மாதவன் பழக்கமானார். அவர் ஒரு மாவுத்து. மாவுத்து என்றால் யானைப்பாகன் என்று அர்த்தம். மிக இனிமையான மனிதர். முதுமலையில் யானைகளோடு யானைகளாக வாழ்பவர். யானைகள் குறித்து பல அரிய தகவல்களை பகிர்ந்துகொண்டார். அவரோடு ஒருநாள் முழுக்க சுற்றிக்கொண்டிருந்தேன். அவர் சொன்ன யானைக்கதைகள் ஏராளம். பாகன்களுக்கும் யானைகளுக்குமான உறவு அலாதியானது. ஒரு நாவலே எழுதலாம்.

மாவுத்து மாதவனுக்கு எல்லாமே ஷங்கர்தான்! தினமும் அதிகாலையிலேயே எழுந்துவிடுவார். கையை தூக்கி கொட்டாவி விட்டபடி வாசலுக்கு வந்தால்.. அப்படியும் இப்படியும் வாலை ஆட்டிக்கொண்டு இலைதளைகளை தின்றபடி காத்திருப்பான் ஷங்கர்! தினமும் கண்விழிப்பது அவன் முகத்தில்தான். ஒருநாள் கூட அவனைவிட்டு பிரியமாட்டார். மாதவனை கண்டதும் உற்சாகமாகி வ்ர்ர்ர்ராங் என தும்பிக்கை உயர்த்தி கத்தி கூச்சலிடுவான் ஷங்கர். புன்னகைத்தபடி அவனருகில் சென்று அவனுடைய காது மடல்களை தடவிக்கொடுத்தால்.. குழைவான்.

அவனை கட்டியிருக்கும் சங்கிலிகளை கழட்டிப்போட்டுவிட்டு.. இருவரும் அங்கிருந்து கிளம்பினால் அடுத்து காட்டுவழிச்சாலை. காட்டிலிருந்து வேப்பங்குச்சியை உடைத்து பல்லு விலக்கியபடி நகர, பெரிய மரத்தில் நல்ல பசுங்கொம்பாய் ஷங்கரும் உடைத்து மென்றபடியே நடைபோடுவான். அருகிலே ஓடும் ஆற்றில் இரண்டுபேருமாக குத்தாட்டம் போட்டு குளித்து எழுந்து.. கால்மணிநேரம் காலார நடந்தால் முதுமலையிலிருக்கிற யானைகள் கேம்ப் வந்துவிடும்! அங்கே ஷங்கருக்கான ‘’டயட் பிரேக் ஃபாஸ்ட்’’ பக்காவாக தயார் செய்து வைத்திருப்பான் ‘’காவடி’’ கணேஷ்!


வேகவைத்த கொள்ளு நான்கு கட்டிகள், ராகி களி இரண்டு கட்டி, அரிசி சோறு மூன்று கட்டி, ஒரு கைப்புடி உப்பு, சர்க்கரை, கொஞ்சம் புரதச்சத்து பவுடர் என எல்லாமே வரிசையில் காத்திருக்கும். ஹாயாக போய் அதன் ‘’பார்க்கிங் ஸ்டான்டில்’’ நின்றுகொண்டால் மேலே சொன்ன அனைத்தையும் மொத்தமாக போட்டு பிசைந்து உருண்டையாக்கி கொண்டுபோய் குட்டிப்பாப்பாவுக்கு ஊட்டுவது போல ஊட்டிவிடுவார் மாதவன்! பொறுமையாக மென்று தின்றபின் அடுத்த உருண்டை.. ம்ம் வேண்டாம் என்று தலையை ஆட்டி அடம்பிடித்தால்.. சாப்பிடு கண்ணா என பிரமாண்ட காதை பிடித்து திருகி.. சாப்பிடவைக்கிறார். சாப்பிட்டு முடித்ததும் ஜாலியாக காட்டுக்குள் கிளம்பினால் மாலைவரை காடு காடு காடுதான்!

காட்டுக்குள் சுற்றும்போதே வேண்டிய அளவு இளைதளைகளை பறித்து ஒன்றாக கட்டி தந்தங்களுக்குள் சொருகி வைத்துக்கொண்டு, ஆற்றுப்பக்கமாக மதியநேர குளியலை முடித்துவிட்டால் ஸ்ட்ரைட்டா முகாம்தான்! முகாமில் கொஞ்சம் ஓய்வு. பிறகு மீண்டும் இருவருமாக வீடு நோக்கி பயணிக்கத்தொடங்கிவிடுவார்கள்.

‘’இதோ இந்த யானைக்கு நான்ன்னா அவ்ளோ இஷ்டம்ங்க.. அப்படியே தும்பிக்கையால கட்டிப்புடிச்சிக்குவான். ஒருமணிநேரம் கூட பிரிஞ்சி இருக்கமாட்டான். கண்ணெதிர்லயே இருக்கணும். குழந்தைமாதிரி.. ஒருவயசு குட்டிலருந்து இவனோடதான் வாழறேன். இவனுக்கு நான்தான் அம்மா,அப்பா,அண்ணன்,தம்பி,காதலி எல்லாமே!’’ என சிரிக்கிறார் ஒரு மாவுத்து. இவர் மட்டுமல்ல முதுமலையில் இருக்கிற 24யானைகளுக்கும் ஒரு மாவூத்து.. ஒவ்வொருவரும் தன் உயிராக இந்த யானைகளை நேசிக்கின்றனர்.

முதுமலை யானைகள் முகாமில் ஒவ்வொரு யானைக்கும் ஒவ்வொரு பாகன்கள். பாகன்களை மாவுத்து என்றே அழைக்கின்றனர். லாரி டிரைவருக்கு ஒரு க்ளீனர் போல ஒவ்வொரு மாவுத்துக்கும் ஒவ்வொரு காவடி! யானையை குளிப்பாட்டுவதில் தொடங்கி அதற்கு சாப்பாடு தயார் செய்வது வரை எல்லாமே காவடிகளின் வேலை. யானையை கட்டுப்படுத்துவது அதற்கு உணவூட்டுவது அதை கவனமாக பார்த்துக்கொள்வது மாவுத்தின் வேலை. குக்கா புக்கா என்று ஏதோ புதுமாதிரியான பாஷையில் யானைகளோடு எப்போதும் பேசிக்கொண்டிருக்கின்றனர் இந்த மாவுத்துகள்.

அதுவும் நாய்க்குட்டி போல இவர்களுடைய பேச்சினை அப்படியே கேட்கின்றன. நில் என்றால் நிற்பதும் உட்காரென்றால் உட்காருவதும்.. குதி என்றால் குதிப்பதில்லை.. யானைகள் குதிக்காது. ஆனால் மனிதர்களின் அன்புக்கு எப்போதுமே கட்டுப்பட்டிருக்கின்றனர்.
‘’இதோ இங்கே ரெண்டு பேர் இருக்கானுங்க பாருங்க ஒருத்தன் பேரு விஜய் இன்னொருத்தன் சுஜய், இரட்டை பயலுக சரியான முரட்டு பசங்க.. நம்ம பேச்சை மட்டும்தான் கேப்பானுங்க’’ என்று அறிமுகப்படுத்துகிறார் இன்னொரு மாவுத்து. இவர்கள் யானைகளுடன் பேசுகிற இந்த மொழி மிகவும் வித்தியசமானதாகவும் ஆனால் தெரிந்த மாதிரியும் இருந்ததால் அதுகுறித்து விசாரித்தோம்.

‘’இதுங்களா, உருது,மலையாளம்,தமிழ்னு குறிப்பிட்டு இதானு சொல்லமுடியாத அளவுக்கு நிறைய பாஷைகள் கலந்த பாஷைங்க. பரம்பரையா இதை கத்துக்குறோம். காவடிங்களுக்கு கத்துக்குடுக்கறோம்’’ என்கின்றனர். ஒரு குக்கா புக்கா கட்டளைகள்தான் என்றாலும் யானை தன்னுடைய பாகன் சொன்னால் மட்டும்தான் கேட்டு நடக்கின்றன. மற்றவர்களுக்கு பெப்பேதான்!

ஒரு காலத்தில் பெரிய மரங்களை தூக்கிச்செல்லவும் சுமைகளை ஏற்றிச்செல்லவும் இந்த யானைகள் பயன்படுத்தப்பட்டாலும் அண்மைக்காலங்களில் இவை குமுகியாக மட்டுமே பயன்படுகின்றனர். அதென்ன குமுகி! போலீஸ் யானைனு சொல்லலாம்.

‘’ஊருக்குள் எங்கேயாவது காட்டுயானைகள் நுழைந்தாலோ, வயலுக்குள் புகுந்துகொண்டு வெளியேறாமல் இருந்தாலோ, தன் கூட்டத்தை விட்டு சாலைகளுக்கும் முக்கிய பகுதிகளுக்கும் வந்துவிடுகிற யானைகளை விரட்ட மனிதர்களால் முடியவே முடியாது. அதிலும் சில குறும்புக்கார காட்டு யானைகள் உண்டு. என்ன செய்தாலும் நகராது. அந்த நேரத்தில்தான் நம்ம ஸ்பெஷல் கும்கி யானை டீம் அங்கே களமிறங்கி மொத்தமா விரட்டுவாங்க.. இவங்க போயிட்டா வேலை முடிஞ்சா மாதிரிதான்!’’ என்று சிரிக்கிறார் வன அலுவலர்.

முதுமலை சரணாலயத்தில் இருக்கிற இந்த போலீஸ் யானைகளுக்கு டியூட்டி காடுகளுக்குள்தான். வேட்டைத்தடுப்பு காவலர்களோடு காட்டுக்குள் ரோந்து சுற்றும். எல்லைதாண்டும் காட்டு யானைகளை கட்டுப்படுத்தும். டியூட்டி நேரம் போக மற்ற நேரங்களில் ஓய்வு மட்டும்தான். இந்த குமுகி யானைகளை கண்டால் காட்டுயானைகள் தெறித்து ஓடுமாம்!

‘’இங்கே இருக்கிற ஒவ்வொரு யானையும் எங்களுக்கு நண்பர்களைப்போல அதனால் அவர்களுடைய நலனில் மிகுந்த அக்கறையுண்டு எங்களுக்கு! ஒவ்வொரு யானையும் காலையில் என்ன சாப்பிடவேண்டும். எவ்வளவு சாப்பிட வேண்டும் என்கிற டயட் பிளானை இங்கேயே இருக்கிற மருத்துவர் அளித்துவிடுவார், அந்த அளவு உணவுதான் தரப்படும், நோய்வாய்ப்பட்டால் உடனடியாக மருந்துகளும் சிகிச்சையும் அளிக்கப்படும். மற்றபடி எங்க டிபார்ட்மென்ட்டில் எங்களோடு பணியாற்றுகிற சகபணியாளராக நண்பராகவே இவர்களும் இருக்கின்றனர்! இவங்கள யானைனு சொல்லவே மாட்டோம்.. பேர் சொல்லிதான் அழைப்போம், உலகில் யானைகளை விடவும் மனிதர்களுக்கு நெருக்கமான அன்பை பகிர்ந்துகொள்கிற விலங்கு எதுவுமே கிடையாது!’’ என அடித்துச்சொல்கிறார் வனஅலுவலர்!

அதை ஆமோதிப்பது போல தலையை ஆட்டுகின்றனர் விஜயும் சுஜயும்!
செம்மொழியான்!இங்கே புதிதாக இணைந்தவர் மிஸ்டர்.செம்மொழியான் என்கிற வேது! வயது ஒன்று. காட்டில் எப்படியோ தாயை பிரிந்த இந்த குட்டி யானை முதுமலை முகாமில் பத்திரமாக வளர்க்கப்படுகிறது. செம்மொழி மாநாடு நேரத்தில் கிடைத்ததால் செம்மொழியான் என பெயர் வைத்துவிட்டனராம்! இவருக்கு மூன்று வேலையும் லேக்டஜன் 2 கொடுக்கின்றனர். ஆறுமாதம் வரை ட்யூப் மூலமாக லேக்டஜன் ஒன்று கொடுக்கப்பட்டதாம். ஒன்றரை வயதுக்குமேல்தான் சாதாரண உணவுகள் கொடுக்கப்படுமாம். நாம் கையை நீட்ட பாசத்தோடு நம் கைகளை பற்றிக்கொள்ள பிரிந்து வர மனமேயில்லாமல் கிளம்பினேன். என்னதான் தமிழ்ப்பெயர் சூட்டினாலும் ஷார்ட்நேம் முக்கியமென்பதால் வேது என அழைக்கின்றனர்.

இவருக்கு துணையாக இன்னொரு குட்டியும் இருக்கிறாள் அவள் பெயர் வேதா. அவளுக்கு வயது ஆறுமாதம்தான். இன்னும் ரொம்ப குட்டியாக இருக்கிறாள். கிருமித்தொற்று உண்டாகும் என யாரும் அவளை பார்க்க அனுமதிப்பதில்லை. நான் மட்டும் சிறப்பு அனுமதியில் பார்த்தேன். தூங்கிக்கொண்டிருந்தாள். படமெடுக்க மனமில்லாமல் கிளம்பினேன்.